Skip to main content

சீரழிக்கும் சினம்

 

 சீரழிக்கும் சினம்

 

        விழுமிய அறிவுடையவர்கள் சினம் கொள்ள மாட்டார்கள். சினத்தால் உண்டாகும் துன்பங்கள் எவை எவை என்பதையும், அவற்றின் தன்மைகளையும் அவர்கள் நன்கு அறிந்தவர்கள். சினம் அவர்களிடம் வந்தாலும் ஒரு நொடிப் பொழுதில் மறைந்து விடும் சினத்திற்குத் தம்மை அடிமையாக்கிக் கொள்ள மாட்டார்கள்.

          வெகுளுதல், கோபப்படுதல், சினத்தல், சீறல் என்பன ஒருபொருட் சொற்கள் என்றாலும் உள்ளார்ந்து இவற்றைப் பார்க்குமிடத்து அக்கோபத்திற்குள்ள இயல்புகளை அச்சொற்கள் ஒவ்வொன்றின் மூலம் அறியலாம்.

          வெகுளுதல் – உள்ளத்தால் உள்ளுதலால் வெளிப்படுவது வெகுளுதலாகும்.

        கோபப்படுதல் – குற்றங்களைச் சுட்டிக்காட்டுவதால் குற்றங்கள் மிகுதலைக் காணுவதால் வருவது கோபப்படுத்தலாகும்.

        சினத்தல் – சிறுமைக்குணத்தால் ஏற்படுதலாகும். விம்மி வரும் தன்மையது.

        சீறல் – என்பது கட்டுக்கடங்காத பெருங்கோபம் என்பதைக் காட்டும்.

          சீற்றம் என்றும் இதனைக் கூறுவர். சீற்றம் பொங்கினால் சீர்மை எல்லாம் அழிந்துவிடும்.

          இங்ஙனம் சினத்தின் பண்புகளை நோக்கும் பொழுது, அத்தீய தன்மைகளை நாம் அணுகாமலும், அவற்றிற்கு இடங்கொடாமலும், அவற்றின் பிடிகளுக்கு அகப்படாமலும், ஆளாகாமலும் நம்மை காத்துக்கொள்ளுதல் வேண்டும் என்பது புலனாகும்.

சினத்தால் உண்டாகும் தீமைகள்

          கோபத்தால் அழிந்த குடும்பங்கள் கணக்கில. கோபம் குடியைக் கெடுக்கும். ‘கோபம் பாவம் சண்டாளம்’ என்பார்கள். இதன் பொருள் என்னவெனில், பாவச் செயல்களைச் செய்யவும், கொலைகளைப் புரியவும் கோபமானது தூண்டிவிடும். அது நல்ல மதியைக் குலைத்துவிடும். அத்துடன் நில்லாது உடல் நலத்தையும் கெடுத்துவிடும். அஞ்சுதல் என்ற அடக்கத்தையும் சாய்த்துவிடும்.

          கோபம் சீற்றமாகும் பொழுது கை கால்களின் இயக்கம் தளர்வுற்று நின்று விடுவதும், நாக்கின் நரம்பு உள் இழுக்கப்பட்டு பேச்சு அற்றுப் போவதும், செவிப்புலன் செயலற்றுப் போவதும், இதயம் நின்று விடுவதும், சாக்காடு வந்து விடுவதும் உண்டு.

·        ‘ஆறுவது சினம்’ என்ற ஔவையாரின் வாக்கும் சினத்தை ஆறவைக்க வேண்டும் என்று கூறுகின்றது.

·        கோபக்காரன் உலகத்தில் இழிந்தவனாகக் கருதப்படுவான்.

கோபம் கீழ்மையான செயல்

நேர்த்து நிகரல்லார் நீரல்ல சொல்லியக்கால் 

வேர்த்து வெகுளார் விழுமியோர்- ஓர்த்ததனை

யுள்ளத்தா னுள்ளி யுரைத்தூரா யூர்கேட்பத் 

துள்ளித்தூண் முட்டுமாங் கீழ்” (நாலடியார், பா.64)

          தமக்கு நிகர் என்று சொல்லத் தகாதவர்கள் இனிமையற்ற கடுஞ்சொற்களைச் சொல்லுங்கால் அறிவுடையோர் உடலெல்லாம் வியர்க்க வெகுண்டு எழமாட்டார்கள். அறிவற்ற கீழ்மதியோர் அச்சொற்களை உணர்ந்து ஆராய்ந்து மனத்தால் எண்ணிப் பார்க்காமல் துடித்து ஊரெல்லாம் அவற்றைச் சொல்லி, உரக்கச் சத்தமிட்டு சுவற்றிலும் தூணிலும் முட்டி மோதிக் கொள்வர்.

          கோபம் வந்தால் கல்மண் தெரியால் கண்மூடித்தனமாகத் துள்ளதலை இப்பாடல் விளக்குகிறது.

          சினம் நட்பை, ஒற்றுமையை, உறவை, பிளந்து விடும் கீழ்மையான கூற்றாகும். ஆகையினால் கீழ்மையான சினத்தைப் புறந்தள்ளி இனிமையான நற்பண்புகளுடன் வாழ்வோமாக.

Comments

Popular posts from this blog

எண்ணம் போல் வாழ்வு

                                                                        எண்ணம் போல் வாழ்வு             நினைவுகளே பழக்கவழக்கங்களாக மாறுகின்றன. எனவே தான் எண்ணம் போல் வாழ்வு அனைவருக்கும் அமைகிறது. வெற்றி பெற்ற அனைவரும் பிறரைத் தன் நடத்தையால் மகிழ்விக்க நினைத்தவர்களே என்பதை நாம் நினைவில் நிறுத்த வேண்டும். ·         வங்கியில் பணத்தைச் சேமிப்பதைவிட இதயத்தில் இனிய எண்ணங்களைச் சேமிப்பது மகிழ்ச்சியான வாழ்விற்கு உதவும் வைப்பு நிதியாகும். ·      மனம் - மகிழ்ச்சி அளிக்காத நிகழ்வுகளை மறந்து விடும் இயல்புடையது. ·         வெறுப்பு - மனத்தையும், உணர்வையும் பற்றிக் கொண்டுள்ள தொற்று நோய். எனவே வெறுப்பிற்கு விடுதலை தரும்வரை மகிழ்ச்சி நம்மை அணுகாது. ·   ...

பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்

திருக்குறளில் எனது சிறு முயற்சியாக… .  " பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்"  என்ற இத்தலைப்பில் அமைந்த 133 வரிகள் கொண்ட இப்படைப்பு முருகனின் ” கந்த சஷ்டி  கவசம் ” போன்று உருவாக்கப்பட்டது. இப்பகுதி அறத்துப்பால் 38  அதிகாரங்கள், பொருட்பால் 70  அதிகாரங்களிலிருந்து மட்டும் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்ற முறையில், திருக்குறளின் சாராக அமைத்து வழங்கியுள்ளேன். அறமும், பொருளும் ஒருவருக்கு அமைந்தால் இன்பம் தானாகக் கிட்டும் என்ற நோக்கத்தில் அமைக்கப்பட்டது. ”பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்” காக்க காக்க அறத்தைக் காக்க (1) காக்க காக்கக் குறளைக் காக்க உலக மொழிகளில் ஒப்பற்ற நூலாம், நோக்க நோக்க பெயா்த்து நோக்க மனிதன் கற்று மனிதம் காக்க ஐம்பொறி உணா்வை காக்க காக்க புகழுடன் வாழ ஒழுக்கம் காக்க அறநெறி வாழ்வை இறைவழி காக்க வானம் பொய்யா வளத்தைக் காக்க பசிப்பிணி யில்லா உலகைக் காக்க பற்றற்ற வாழ்வை பரிவுடன் காக்க அறத்தைக் காக்க அன்பைக் காக்க (2) குறையிலா வாழ்வை குணமுடன் காக்க இல்லற வாழ்வுடன் நல்லறம் காக்க பண்பொடு பயனும் அறத்துடன் காக்க வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க வாழ்க...

மனிதனாக வாழ ...

  மனிதனாக வாழ ... ·         பிறர் உன்னை தூற்றும் பொழுது தலை நிமிர்ந்து நில். ·         பொறாமை, கோபம், வீண் மயக்கம் போன்ற குணங்களை விரோதிகளாக எண்ணுதல். ·         வெற்றி -   தோல்வி,   இன்பம் – துன்பம் இரண்டையும் சமமாக பாவித்தல். ·         உண்மைக்குப் புறம்பானவற்றைச் செய்யாதிருத்தல். ·         நண்பர்கள் இல்லையென்றாலும் பரவாயில்லை. பகைவர்கள் இல்லாமல் வாழ முயற்சி செய்தல். ·         மனத்திடத்தோடு வாழ்தல். ·         ஏற்றத் தாழ்வு இல்லா மனநிலையுடன் இருத்தல். ·         மனிதனுக்கு உரியது - கலங்காத அறிவு, அன்பு நிறைந்த மனம், ஆரோக்கியமான   உடல். ·         எதற்கும் அஞ்சாதே -   பயம் நம்மை கோழையாக்கி விடும்.      யாரையும் வெறுக்காதே ...