‘நடைபயிலும்
செல்வம்’
யாரிடத்திலும் செல்வம் நிலையாக நிற்காது.
அதன் செயல் நடந்து கொண்டே இருப்பது தான். ஓரிடம் விட்டு ஓரிடம் சென்று கொண்டே இருக்கும்.
அதன் நடை மெல்லிய நடையல்ல. விரைவு நடையே ஆக்கத்திற்கு இயல்பு.
நாணயச் சீட்டை எவர் சில்லரையாக்கி வைத்திருந்தாலும்,
அது பிறரிடம் நண்ணாது இருக்காது. விரைந்து செலவாகும். கைப்பொருள் உண்டாயின் கடைப்பொருள் கைக்கு வரும்.
கடைப்பொருள் விற்போரும் கைப்பொருளை ஓரிடத்து
ஈந்துதான் பலபொருட்களைப் பெற்றுக் கடைவிரிக்கின்றார்கள். அவர்களும் பொருள் பெற்றே மற்றவர்
விரும்பும் பொருட்களைத் தருவார்கள்.
உடை, உணவு, பாத்திரங்கள், வாகனங்கள், அலங்காரப்
பொருட்கள், அணிவண்ணங்கள், மின் இயக்க இயந்திரங்கள் என இவ்வாறாக எப்பொருள் வேண்டுமாயினும்,
இறுதியாக ஒரு குண்டூசி தேவைப்படினும் பொருள் கொடுத்தே பெற்றாக வேண்டும்.
மனிதர்களும் ஒருவரை ஒருவர் மதித்து நடந்தாலன்றி
மேன்மை என்னும் உயர்வைப் பெற முடியாது. ‘பொருள் இல்லார்க்கு இவ்வுலகமில்லை’
என்பார் திருவள்ளுவர்.
‘பொருள்தனைப் போற்றி வாழ்’ என்பார்
ஓளவையார். பொருளுக்கு அத்தனை முதலிடம் கொடுத்தலால்
தான் புவியினர் மகிழ்ந்து வாழ்கின்றனர். அப்பொருள் வரும் வகை துகளற்றதாக இருத்தல் வேண்டும்.
‘துகள்’ என்பது குற்றம் ஆகும். தேடும் செல்வம்
குறுக்குவழியில், புறநெறியில், தீய முறையில் இருத்தல் ஆகாது.
நன்னெறி, நேரிய அறம் வாய்ந்த முறையில் முயன்று
ஈட்டிய செல்வமே சீரிய செல்வமாகும்.
‘செல்வம் சகடக்கால் போல வரும்’ அதாவது செல்வமும்
அத்தகையதே எனும் உட்கருத்தும் இனிமையாகும். சகடம் செல்லும் பொழுது பாதையின் நிலைமைக்கேற்ப
அதன் பதிதலால் சுவடு காணும். அதுவும் சூழ்நிலைக்கேற்ப மாறி மறைதலும் உண்டு. சேற்றுப்
பாதையானால் சகடம் சிக்கத் தவிக்கும். மணல்
வழியாயினும் தன் நிலையில் மிகத் தடுமாறும். அவ்வாறே செல்வம் வந்துற்ற போது சார்ந்த
இடத்தின் இயல்பால் நடக்கும் என்பதும் நுண்ணிய பொருளாகும்.
‘பல்லாரோடு
உண்க’ என்பது செல்வம் நிலையில்லாமல் ஓடிக் கொண்டே இருக்கும். ஆதலால் பொருள் வந்துற்ற
போது அறம் செய்து அனைவருடனும் கலந்து இன்புறுங்கள் என்பதாகும்.
Comments
Post a Comment