Skip to main content

மின்னூல்கள்

 

மின்னூல்கள்

 

நூல்களை மின் வடிவில் பதிப்பிப்பதன் வழி உயர்ந்த, தரமான நூல்களைக் குறைந்த விலையிலும் குறுகிய காலத்திலும் அனைத்துலக நிலையில் வெளியிடலாம். எழுத்து (வெற்று உரை – text) மற்றும் படங்கள் (pictures) இவற்றோடு அச்சு வடிவ புத்தகங்கள் அமைந்து விடுகின்றன. ஆனால் மின்னூல்கள் நகர்படம் (video), அனிமேஷன் (animation), ஒலி (audio) முதலிய பல்லூடகங்களையும் கொண்டிருக்கும் அளவிற்கு தொழில்நுட்பம் வாய்ப்பளிக்கின்றது. இதுபோன்ற வசதிகள் மின்னூலின் ஈர்ப்புத் தன்மையை உருவாக்கி மாணவர்கள் நூலின் மேல் வைத்துள்ள ஈடுபாட்டை  அதிகப்படுத்துகிறது.

          மின்னூல்கள் பல்வேறு அமைப்பில் வெளியிடப்படுகின்றன.

·        கையாவண நூல்     -  Pdf Book

·        மீயுரை நூல்             -  HTML Book

·        புரட்டு நுல்              -  Flip Book

·        மென்னூல்               -  Equp Book

·        கிண்ணூல்               -   Mobi Book

இந்த ஐந்து அமைப்புகளும் கணினி, இணையம் மற்றும் கையடக்கக் கருவிகளிலும் இயக்கப்படக் கூடிய அமைப்புகள் ஆகும். பிடிஎஃப் அமைப்பில் உள்ள மின்னூலை வாசிப்பதற்கு பிடிஎஃப் ரீடர் எனும் வகையிலான வாசிப்புச் செயலி தேவையாகிறது. இணைய அமைப்பில் மின்னூலை வாசிப்பதற்கு உலாவி மற்றும் இபப் அமைப்பில் மின்னூலை வாசிப்பதற்கு இபப் ரீடர் என்னும் வாசிப்புச் செயலிகள் தேவையாகின்றன.

கையாவண நூல் (Pdf Book)

        தாளில் அச்சிட்டு வெளியிடுவதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு நூலை அச்சுக் கருவியில் அச்சிடுவதற்குப் பதிலாக மின்வடிவில் சேமிப்பதே பிடிஎஃப் அமைப்பாகும். ஊடகத்தில் மாற்றம் உண்டே தவிர நூல் வடிவமைப்பில் மாற்றம் ஏதும் இல்லை. அட்டைப்படம், உள்ளடக்கம், பக்க எண்கள், பின்னூட்டம் முதலிய நூற்கூறுகள் அனைத்தும் அச்சுவடிவ நூலில் எவ்வாறு  பதிக்கப்படுகின்றனவோ அவ்வாறு பிடிஎஃப் நூலிலும் காணப்படுகின்றன. விரலைக் கொண்டு தாளில் அச்சிடப்பட்ட பக்கங்களைப் புரட்டுவதற்குப் பதிலாகச் சுட்டியைக் கொண்டு திரையில் பக்கங்களைப் புரட்டுகின்றனர்.

          பிடிஎஃப் வாசிப்புக் கருவியில் தோன்றும் பக்கத்தைப் பெரிதாகவோ, சிறிதாகவோ காணலாம். ஆனால் பக்கத்தின் அமைப்பு அவ்வாறே இருக்கும். எழுத்துக்களைப் பெரிதாக்கலாம் அல்லது சிறிதாக்கலாம். அதற்கேற்றாற்போல் படங்களின் அளவும் பக்கத்தின் அளவும் மாற்றப்படும். ஆனால் பக்கத்தின் தோற்றம் மாறாது. ஒரு பக்கத்தில் பத்துவரிகளும், இருபடங்களும் இருந்தால் எத்தனை அளவு மாற்றம் செய்தாலும் அதே பக்கத்தில் தோன்றும். அடுத்த பக்கத்தில் உள்ள வரிகள் இந்தப்பக்கத்தில் வராது. அதுபோல அந்தப் பக்கத்தில் உள்ள வரிகள் அடுத்தப் பக்கத்திற்குப் போகாது.

        பிடிஎஃப் மின்னூல்களை உருவாக்குவது மிகவும் எளிதாகும். அச்சிடுவதற்கான நூலை வடிவமைக்கும் அதே செயலில் இருந்து பிடிஎஃப் மின்னூல்களைச் சேமிக்கலாம். மைக்ரோசாப்ட், அடோபி இன்டிசைன் முதலிய செயலிகள் பொருத்தமானவை. கோப்புகளை பிடிஎஃப் ஆக சேமிப்பதற்கு பிடிஎஃப் ரைடர் என்னும் செயலி தேவை. இவ்வகைச் செயலிகள் இலவசமாகக் கிடைக்கின்றன.

          பிடிஎஃப் அமைப்பில் சேமிக்கப்பட்ட மின்னூலில் ஒருசில வசதிகளை மட்டுமே சேர்க்கலாம். அடோபி அக்ரோபட் போன்ற செயலிகளைக் கொண்டு உள்ளடக்கப் பக்கத்தில் உள்ள தலைப்புகளை நூலில் உள்ள பக்கங்களோடு இணைக்கலாம். இதுபோன்று சிறுசிறு முன்னேற்றங்களைத் தவிர பிடிஎஃப் மின்னூல்களில் வேறு எந்தப் புதுமையையும் செய்ய முடியாது.

மீயுரை நூல் () இணைய அமைப்பு (HTML Book)

          இணைய அமைப்பில் உருவாக்கப்படும் மின்னூல் மீயுரை குறியீட்டு மொழியில் வடிவமைக்கப்பட்ட நூலாகும். ஓர் இணைய தள உருவாக்கத்திற்குப் பயன்படும் அதே தொழில் நுட்பங்களைக் கொண்டே இந்த வகை மின்னூல்களைப் பதிவேற்றும் திட்டங்கள் பல ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கப்பட்டன. மதுரைத் திட்டம், நூலகத்திட்டம், சென்னை நூலக திட்டம் முதலியவை நூற்றுக்கணக்கான தமிழ் நூல்களை இணையத்தில் பதிப்பித்து வருகின்றன. கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவை ஒரு பெரிய மின்னூல் களஞ்சியமாகக் கருதலாம்.

          இணையத் தொழில் நுட்பம் என்பதால் எந்தவிதக் கணினிகளிலும் இந்த மின்னூல்களை வாசிக்கலாம். ஒருங்குறி எழுத்துரு தரத்திலான தமிழ் எழுத்துரு மற்றும் உலாவி இருந்தாலே போதும். விண்டோஸ், லினக்ஸ், கணினிகளில் இந்த இரண்டும் உள்ளன. தமிழ் மின்னூல்களைப் படிக்கும் வாய்ப்பு இந்தக் கணினிகளில் இயல்காகவே உள்ளது. சி.எஸ்.எஸ். மற்றும் ஜாவார்ஸக்ரிப்ட் ஆகிய கணினிமொழிகளின் துணைக்கொண்டு நூலோடு வாசகர்கள் ஊடாடுவதற்கான வசதிகளைச் சேர்க்கலாம். தாளில் அச்சிடப்பட்ட புத்தகத்தைப் புரட்டுவதைப் போன்ற உணர்வு, படங்களையும், எழுத்துவரிகளையும், ஓரிடத்தில் இருந்து மற்றோர் இடத்திற்கு நகர்த்துதல், அருஞ்சொற்களைத் தேர்வுசெய்து அவற்றிற்கான பொருளை இன்னொரு கட்டத்தில் காணுதல், குறிப்பிட்ட சொற்கள் வரும் பக்கங்களைத் தேடுதல் முதலிய பலவசதிகளை இணைய அமைப்பிலான மின்னூல்களில் சேர்க்கலாம்.

        இணைய அமைப்பிலான மின்னூல்களில் பல புதுமைகளைச் செய்வதற்கான வாய்ப்பு இருந்தாலும் சில குறைகள் உள்ளன. பிடிஎஃப் நூலில் எல்லாப் பக்கங்களும் ஒரே கோப்பில் அடங்குவது போல் இணைய அமைப்பிலான நூலில் உள்ள பக்கங்கள் அடங்குவதில்லை. இந்த நூலில் பயன்படுத்தப்படும் படங்கள் தனித்தனியே வெவ்வேறு கோப்புகளில் சேமிக்கப்படுகின்றன. நகர்படங்கள், ஒலிபதிவுகள் அனைத்தும் தனித்தனிக் கோப்புகளில் சேமிக்கப்பட வேண்டும். இணைய தொடர்பு இல்லாத போது இந்த நூலை வாசிப்பதாக இருந்தால் இந்த நூலுக்குத் தேவைப்படும் அனைத்துக் கோப்புகளும் கணினியில் பதிவிறக்கம் செய்யப்பட வேண்டும்.

     இணைய அமைப்பில் இது போன்று குறைகளைத் தீர்ப்பதற்காகவும் மின்னூலுக்கு என்றே சில சிறப்பு அம்சங்களைச் சேர்ப்பதற்காகவும் உருவாக்கப்பட்டது தான் இபப் என்னும் புதிய மின்னூல் தரம் ஆகும்.

புரட்டு நூல்  (Flip Book)

          இணைய அமைப்பு முறையிலான மீயுரை குறியீட்டு மொழியில் (Hyper Text  Markup Language) உருவாக்கப்பட்ட நூலை மீயுரை மின்னூல் என அழைக்கின்றோம்.

மென்னூல் ( Equp Book)

          இபப் என்பது நவீன மின்னூல்களை வெளியிடுவதற்காக idpe எனப்படும் அனைத்துலக மின்பதிப்புக் குழுமத்தால் உருவாக்கப்பட்ட ஓர் இலவச கட்டற்ற திறந்தவெளி மின்தரம் என்று குறிப்பிடுகின்றனர்.

          இணைய அமைப்பில் இருக்கும் அனைத்து வசதிகளையும் பயன்படுத்தி மின்னூலுக்கென்றே சில புதிய வசதிகளைச் சேர்த்து ஒரே கோப்பில் பதிக்கும் வாய்ப்பை இந்த இபப் அமைப்பு அமைந்துள்ளது.

          மின்னூல்களைக் கணினிகளில் மட்டும் இன்றி கையடக்கக் கருவிகளிலும் வாசிக்கும் வாய்ப்பை இபப் ஏற்படுத்தியுள்ளது. மின்னூல்களை வாசிப்பதற்காகவே சில கருவிகள் சிறப்பாகத் தயாரிக்கப்பட்டுள்ளன.

கிண்ணூல் (Mobi Book)

          முபி அமைப்பானது இபப் போன்றதே ஆகும். ஆனால் திறந்தநிலைக் கோப்பு அல்லாமல் அமேசான் நிறுவனத்தின் கிண்டில் கருவியில் மட்டும் படிக்க முடியும் இதனை நாம் முபி அமைப்பு என்கிறோம்.

       மேற்குறிப்பிட்ட எல்லா அமைப்புகளிலும் தமிழ் மின்னூல்களைத் தயாரிக்கலாம். வின்டோஸ், மெகிண்டஷ், லினக்ஸ் போன்ற கணினிகளில் தமிழ் ஒருங்குறி எழுத்துருக்கள் இயல்பாக இருப்பதால் அனைத்துக் கணினிகளிலும் இந்த நூல்களைப் படிக்கும் வாய்ப்பு உள்ளது. ஆனால் எல்லாக் கணினிகளிலும் அதே எழுத்துரு அமைந்திருக்கும் என்பதற்கு உத்தரவாதம் கிடையாது. எல்லாக் கணினிகளிலும் நூலை படிக்கும் வாய்ப்பு மட்டும் இருக்கின்றது. ஒவ்வொரு அமைப்பில் உள்ள எழுத்துருவைக் கொண்டு கோப்புகள் தோன்றும்.

மின்னூல் வெளியீட்டாளர்கள்:

        மின்னூல் வெளியீட்டில் தமிழக அரசின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. நூற்றுக்கும் மேற்பட்ட தமிழறிஞர்களின் நூல்களை நாட்டுடைமையாக்கும் திட்டத்தின் மூலம், அவர்களின் பலநூறு நூல்களை தமிழ் இணையக் கல்விக்கழகம்’ (http://www.tamilvu.org/library/libindex.htm) வழியாக 2001 - ஆண்டு முதல் செயல்படுத்தி வருகிறது.  தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் நூலகம் பகுதியில் நாட்டுடைமையாக்கப்பட்ட தமிழறிஞர்களின் நூல்கள் பல உருப்பட வடிவம்’ (PDF), ‘தட்டச்சு வடிவம்’ (text) போன்ற வகைகளில் படிக்கக் கிடைப்பது தமிழ் ஆர்வலர்களுக்கும் தமிழ் ஆய்வாளர்களுக்கும் பெருமளவு உதவியாக அமைந்துள்ளது.

   மேலும் வணிக நோக்கின்றி, பல தன்னார்வலர்களும் களமிறங்கி அரும்பணியாற்றி வருகிறார்கள். இவர்களில் முன்னோடிமதுரை தமிழ் இலக்கிய மின்தொகுப்புத் திட்டம்(http://www.projectmadurai.org/pmworks.html) ஆகும். மதுரைத் திட்டத்தின் தன்னார்வக் குழுவினர் 1998 – ஆம் ஆண்டு முதல் இப்பணியில் ஈடுபட்டு 500 க்கும் மேற்பட்ட மின்னூல்களை ஒருங்குறி எழுத்துருவிலான வலைத்தளம், உருப்படம், மின்பலகையில் படிக்க ஆறு அங்குல அளவிலான உருப்படம் (html site in Unicode, PDF, Kindle (6-inch PDF) வகையில் மின்னூல்களை வழங்குகிறார்கள்.

ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட உருப்படவடிவம் நூல்களை 2005 – ஆம் ஆண்டில்நூலகம்(http://www.noolaham.org) என்ற அமைப்பும், தமிழ் மரபு அறக்கட்டளை நூலகம் (http://www.tamilheritage.org/old/text/ebook/ebook.html) தமிழம்.வலை http://www.thamizham.net/) ஆகியன மின்னூல் வெளியீட்டில் முன்னணியில் உள்ளன. உலகின் பல நூலகங்களில் இருந்தும் தமிழ்நூல்களை மின்னூலாக்கி வழங்குவதில் கூகுளின் பணியும் சிறப்பானது (https://books.google.com/). இவர்கள் யாவரும் காப்புரிமை காலம் முடிந்துவிட்ட நூல்களையும், காப்புரிமை விலக்கு அளிக்கப்பட்ட நூல்களையும் மின்னூல் வடிவத்தில் அளிப்பதில் கவனம் செலுத்தி வருகின்றனர். காப்புரிமை உள்ள மின்னூல்களை வணிக நோக்கில் விற்பனை செய்யும் பல பதிப்பகத்தாலும் இப்பொழுது உருவாக்கியுள்ளனர்.

ஃப்ரீடமில்இபுக்ஸ்.காம்’ (http://freetamilebooks.com) தன்னார்வக் குழுவினர், எழுத்தாளர்களை அணுகி அவர்களது நூல்களைக் காப்புரிமையை நீக்கி அளிக்கும்படி ஊக்குவித்துக் கடந்த நான்கு ஆண்டுகளாக 300 க்கும் மேற்பட்ட மின்னூல்களை உருவாக்கி வெளியிட்டுள்ளார்கள். இவர்களால் வாரம் ஒரு மின்னூல் வெளியீடு என்ற கணக்கில் தற்பொழுது மின்னூல்கள் வெளியிடப்படுகின்றன. நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ் எழுத்தாளர்கள் தங்கள் நூல்களின் காப்புரிமையை நீக்கி அளித்துள்ளார்கள். இவ்வாறு இவர்கள் உருவாக்கிய நூல்கள் 48 லட்சத்துக்கும் மேற்பட்ட முறை பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது.

ஃப்ரீடமில்இபுக்ஸ்.காம், ஆன்ட்ராய்டு (FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க “epub” வகை நூல்களும், புது கிண்டில் கருவிகளில் படிக்க “mobi” வகை நூல்களும், குனூ/லினக்ஸ் விண்டோஸ் கணினிகளில் படிக்க – “A4  அளவு PDF” வகை நூல்களும்; பழைய கிண்டில், நூக் கருவிகளில் படிக்க – “6 அங்குல அளவு  PDF” வகை நூல்களும்  வெளியிட்டு வருகிறார்கள்.

மின்நூல்களின் பயன்பாடுகள்

·        கட்டுமான நூல்களில் வண்ணப் புகைப்படங்களைக் கொண்டு அதிகப் பக்கங்களை இணைக்க முடியாது. ஏனெனில் அதிகப் பொருட்செலவு ஏற்பட வாய்ப்புள்ளது. ஆனால் மின் நூல்களில் அதிக அளவில் வண்ணப் புகைப்படங்களை இணைத்து வெளியிட முடியும்.

·        அதிகப் பக்கங்கள் கொண்ட நூல் பகுதிகளைக் கைடக்க வடிவில் சுருக்கி விட முடியும். எளிதில் எங்கும் எடுத்துச் சென்று பயன்படுத்த முடியும்.

·        மின்நூல்களில் உள்ள பக்கங்களைத் தேவைக்கேற்ப பெரிதாக்கிப் பயன்படுத்த முடியும். ஆனால் சாதாரண நூல்களை அவ்வாறு பயன்படுத்த முடியாது.

·        உலகின் எப்பகுதியிலும் எந்த நேரத்திலும் தேவையான பகுதிகளை இணையத்தில் தேடுபொறிகளைக் கொண்டு எளிதாக தேடிப் பார்த்துப் பயன்படுத்த முடியும்.

·        தேவையான மின் நூல்களை மின் வணிகம் (E – Commerce) வழியாக வாங்கிப் பயன்படுத்த முடியும்.

·        அச்சிடப்பட்ட நூல்கள் அச்சுப் பிரதிகள் (Out of Print) இல்லாத சூழ்நிலை ஏற்பட வாய்ப்புள்ளது. ஆனால் மின் புத்தகங்களைத் தேவையான நேரங்களில் உடனே தரவிறக்கம் செய்து கொள்ள முடியும்.

·        மின் புத்தகங்களில் உள்ள தகவல்களை ஆவணமாக நீண்ட காலம் பயன்படுத்த முடியும். அச்சிடப்பட்ட நூல்கள் குறிப்பட்ட காலத்திற்குப் பிறகு சிதைந்து விடுகின்றன. ஆனால் மின் புத்தகங்களின் ஆயுள் காலம் பன்மடங்கு நீடிக்கக்கூடியன.

வெளியிடப்பட்ட ஒரு புத்தகத்தின் கருத்துக்கள் ஒரு மாநிலமோ, அல்லது ஒரு நாடோ மட்டும் தான் சென்றடையும். ஆனால் மின்னூல்கள் பதிப்புச் செய்யும் பொழுது உலகளாவிய நிலையில் பரவி எல்லோரும் படித்து இன்புறும் அளவிற்கு மின்னூல்கள் பயன்படுகின்றன.

நிறைவாக,

மின்னூல் புத்தகங்களை,

  •         அதிகமான வகைகள்

·        எளிமை

·        விலை குறைவு

என இக்காரணங்களால் மக்கள் அதிகம் வாங்குகிறார்கள். மேலும் மின்னூலில் படிக்கும் போது அதிலேயே குறிப்புகள் எடுத்துக்கொள்ள இயலும்புதினம் (இலக்கியம்) சார்ந்த மற்றும் புதினம் (இலக்கியம்) சாராத புத்தகங்கள் இதில் கிடைக்கின்றன இப்பொழுது கணினி வழி படிப்பதையும் கடந்து கைபேசி, அமேசான், கிண்டில் அல்லது ஆன்ட்ராய்டு மின்பலகை போன்றவை வழியாகவும் மின்நூல்களை பதிவிறக்கிப் படிக்கும் நிலை வந்துவிட்டது.

துணை நின்ற நூல்கள்

1.   பிரகாஷ் . -  இணையமும் இலக்கியமும், அய்யா நிலையம், தஞ்சாவூர், பதிப்பு டிசம்பர் 2016.

2.   இராதா செல்லப்பன்தமிழும் கணினியும், கவிதை அமுதம் வெளியீடு, திருச்சி, நவம்பர் 2011.

 

 

 

Comments

Popular posts from this blog

எண்ணம் போல் வாழ்வு

                                                                        எண்ணம் போல் வாழ்வு             நினைவுகளே பழக்கவழக்கங்களாக மாறுகின்றன. எனவே தான் எண்ணம் போல் வாழ்வு அனைவருக்கும் அமைகிறது. வெற்றி பெற்ற அனைவரும் பிறரைத் தன் நடத்தையால் மகிழ்விக்க நினைத்தவர்களே என்பதை நாம் நினைவில் நிறுத்த வேண்டும். ·         வங்கியில் பணத்தைச் சேமிப்பதைவிட இதயத்தில் இனிய எண்ணங்களைச் சேமிப்பது மகிழ்ச்சியான வாழ்விற்கு உதவும் வைப்பு நிதியாகும். ·      மனம் - மகிழ்ச்சி அளிக்காத நிகழ்வுகளை மறந்து விடும் இயல்புடையது. ·         வெறுப்பு - மனத்தையும், உணர்வையும் பற்றிக் கொண்டுள்ள தொற்று நோய். எனவே வெறுப்பிற்கு விடுதலை தரும்வரை மகிழ்ச்சி நம்மை அணுகாது. ·   ...

பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்

திருக்குறளில் எனது சிறு முயற்சியாக… .  " பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்"  என்ற இத்தலைப்பில் அமைந்த 133 வரிகள் கொண்ட இப்படைப்பு முருகனின் ” கந்த சஷ்டி  கவசம் ” போன்று உருவாக்கப்பட்டது. இப்பகுதி அறத்துப்பால் 38  அதிகாரங்கள், பொருட்பால் 70  அதிகாரங்களிலிருந்து மட்டும் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்ற முறையில், திருக்குறளின் சாராக அமைத்து வழங்கியுள்ளேன். அறமும், பொருளும் ஒருவருக்கு அமைந்தால் இன்பம் தானாகக் கிட்டும் என்ற நோக்கத்தில் அமைக்கப்பட்டது. ”பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்” காக்க காக்க அறத்தைக் காக்க (1) காக்க காக்கக் குறளைக் காக்க உலக மொழிகளில் ஒப்பற்ற நூலாம், நோக்க நோக்க பெயா்த்து நோக்க மனிதன் கற்று மனிதம் காக்க ஐம்பொறி உணா்வை காக்க காக்க புகழுடன் வாழ ஒழுக்கம் காக்க அறநெறி வாழ்வை இறைவழி காக்க வானம் பொய்யா வளத்தைக் காக்க பசிப்பிணி யில்லா உலகைக் காக்க பற்றற்ற வாழ்வை பரிவுடன் காக்க அறத்தைக் காக்க அன்பைக் காக்க (2) குறையிலா வாழ்வை குணமுடன் காக்க இல்லற வாழ்வுடன் நல்லறம் காக்க பண்பொடு பயனும் அறத்துடன் காக்க வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க வாழ்க...

மனிதனாக வாழ ...

  மனிதனாக வாழ ... ·         பிறர் உன்னை தூற்றும் பொழுது தலை நிமிர்ந்து நில். ·         பொறாமை, கோபம், வீண் மயக்கம் போன்ற குணங்களை விரோதிகளாக எண்ணுதல். ·         வெற்றி -   தோல்வி,   இன்பம் – துன்பம் இரண்டையும் சமமாக பாவித்தல். ·         உண்மைக்குப் புறம்பானவற்றைச் செய்யாதிருத்தல். ·         நண்பர்கள் இல்லையென்றாலும் பரவாயில்லை. பகைவர்கள் இல்லாமல் வாழ முயற்சி செய்தல். ·         மனத்திடத்தோடு வாழ்தல். ·         ஏற்றத் தாழ்வு இல்லா மனநிலையுடன் இருத்தல். ·         மனிதனுக்கு உரியது - கலங்காத அறிவு, அன்பு நிறைந்த மனம், ஆரோக்கியமான   உடல். ·         எதற்கும் அஞ்சாதே -   பயம் நம்மை கோழையாக்கி விடும்.      யாரையும் வெறுக்காதே ...