பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ‘காலம்’
சூரிய நாள் என்பது தலை உச்சியில் காணப்படும்
சூரியன் மீண்டும் தலை உச்சிக்கு வர எடுத்துக் கொள்ளும் 24 மணி நேர காலம். உண்மையில்
பூமி 23 மணி 56 நிமிடம் 4 வினாடியில் தன்னைத் தானே சுற்றிக் கொண்டு வருகிறது. சூரியப்
பாதையில் சூரியன் அதிகபட்ச வடக்குப் புள்ளிக்குச் செல்லும் நாள் (ஜீன் 21) கோடைக் கதிர்
திருப்பநாள் (Summer Solstice) எனவும் தென்கோடிப் புள்ளிக்குச் செல்லும் நாள் டிசம்பர்
23 குளிர்காலக் காலக் கதிர் திருப்ப நாள் (winter Solstice) எனவும் வழங்கப்படுகின்றன. (ப.ஐயம்பெருமாள்;
2006: 104) புவியில் மக்கள் வாழும் நாட்டைப் பொறுத்துப் பருவக் காலங்கள் மாறுகின்றன.
பழந்தமிழர்கள் பருவக் காலங்களை ஆறு பிரிவுகளாகப் பிரித்துள்ளனர். வானியலை ஆய்வு
செய்து மக்கள் நல்வாழ்வை மேற்கொண்டனர். பொழுதினைக் கணக்கிடும்போது பெரும்பொழுது,
சிறுபொழுது என இரண்டாகப் பகுத்தனர். பெரும்பொழுது என்பதில் ஓராண்டிற்கு ஆறு பருவங்களையும்
சிறுபொழுது என்பதில் ஒரு நாளிற்கு ஆறு பிரிவுகளையும் பகுத்து தங்கள் அன்றாட வாழ்வை
வகுத்தனர்.
பெரும்பொழுது
கார்காலம் - ஆவணி, புரட்டாசி
கூதிர்காலம் - ஐப்பசி, கார்த்திகை
முன்பனி காலம் – மார்கழி, தை
பின்பனி காலம் - மாசி, பங்குனி
இளவேனிற் காலம் - சித்திரை, வைகாசி
சிறுபொழுது
வைகறை
- 2 மணி முதல் 6 மணி வரை
காலை - 6 மணி முதல் 10 மணி வரை
நண்பகல் - 10 மணி முதல் 2 மணி வரை
எற்பாடு -
2 மணி முதல் 6 மணி வரை
மாலை - 6 மணி முதல் 10 மணி வரை
யாமம் -
10 மணி முதல் 2 மணி வரை
இவ்வாறு பெரும்பொழுது,
சிறுபொழுதுகளை வானியல் அறிவு இன்றி வகுக்க இயலாது. எனவே பழந்தமிழர்கள் காலத்தை கணிப்பதில்
வல்லமை வாய்ந்தவர்களாக இருந்துள்ளனர். முன்னோர்கள் உற்று நோக்கியதோடு ஞாயிற்றின் தோற்றத்தையும்
வானியல் மாறுபாடுகளையும் உணர்ந்து விண்ணில் ஞாயிற்றின் தோற்றப் பாதையைக் கண்டறிந்து
அதற்குத் தீர்வு கண்டனர்.
பண்டைத் தமிழர் வானத்தில் உள்ள நாட்கள்,
நட்சத்திரங்கள் இருப்பதேழு எனவும் கோள்கள் ஏழு எனவும் ஓரைகள் பன்னிரண்டு எனவும் கண்டறிந்தனர்.
எழு கோள்களின் பெயரால் ஏழு கிழமைகளின் பெயர்களை வகுத்துக் கொண்டனர். தமிழர் வகுத்துரைத்த
ஏழுநாட் கிழமைகளின் பெயர்களையே வடமொழியினர் சிறிது மாற்றத்துடன் பயன்படுத்திக் கொண்டனர்.
ஞாயிறு, திங்கள், செவ்வாய், அறிவன், வியாழன், வெள்ளி, காரி என்பது கிழமைகளின்
பெயர்கள். காலப்போக்கில் அறிவன், காரி என்ற இரண்டும் வழக்கொழிந்து வழமொழிப்
பெயர்களாகிய புதன், சனி என்ற பெயர்களில் வழங்கப்படுகின்றன.
பண்டையத் தமிழர்கள் ஏழு நாட்களை வகுத்துக்
கொண்டதைப் போன்று பன்னிரண்டு மாதங்கள் என்னும் கால அளவை வகுத்துள்ளனர். கதிரவன் பன்னிரு
ஓரைக்குள்ளும் புகுவது பன்னிரு மாதம் எனவும் அதன் ஒரு வடசெலவும், தென் செலவும் சேர்ந்து
ஒரு ஆண்டு எனவும் கணக்கிட்டனர்.
”காரும் மாலையும் முல்லை குறிஞ்சி
கூதிர் யாமம் என்மனார் புலவர்” (தொல்.பொருள்.6)
பெரும்பொழுதாகிய கார்காலமும் சிறுபொழுதின் மாலை காலமும் முல்லைத் திணைக்கு உரியன. மேலும் குறிஞ்சித் திணைக்கு கூதிர்காலமும், யாமமும் உரிய காலமாகக் காலத்தைக் கணித்து கூறியுள்ளனர். பொழுதுகளை கணக்கிடும் போது ஞாயிற்றின் செயல்பாட்டை துல்லியமாகக் கணித்து அதன் மூலம் விளக்கியுள்ளனர்.
”தோற்றம் சால் ஞாயிறு நாழியா வைகலும்
கூற்றம் அளந்து நும்நாள் உண்ணும்” (நாலடி.7)
என்னும் பாடல் வரிகளின் மூலம் ஞாயிற்றை அடித்தளமாகக் கொண்டு நாழியை கணித்தனர் என்ற அறிவியல் உண்மையைக் காண முடிகின்றது.
பார்வை நூல்
1.
சுப்பிரமணியன்.ச.வே.,
- பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள், மணிவாசகர் பதிப்பகம், சென்னை, 2010.
Comments
Post a Comment