இலக்கியமும் ஓவியமும்
ஓவு, ஓவம் என்பன
ஓவியம் என்ற பொருளுடையன. இச்சொற்கள்
சங்க இலக்கியத்தில் பெருவழக்கின. ஒப்பு, உவமை என்ற அடிப்படையில் ஒன்றன் வடிவை அவ்வாறே வரைதல் பற்றிய பொருண்மையில் இச்சொற்கள்
தோன்றின எனலாம். `ஓவுறழ் நெடுஞ்சுவர்’ என்ற இடத்து ‘ஓ’ என்ற ஓரெழுத்து
மொழியே ஓவியத்தைக் குறித்தது. பழைய கற்காலத்தில்
இருந்தே ஓவியக்கலை வரலாறு தோன்றிவிடுகிறது.
ஓவியம் என்பது ஒரு பொருளோடும் காட்சியோடும் ஒப்பிக்கும் வகையில்
புனைந்து காட்டும் கலையாகும். கலைகள் எல்லாம்
உண்மையின் நிழல்கள். கண்கண்ட காட்சிகளையும், பொருள்களையும் சிறிய உருவத்தைப் பெரியதாய் புனைந்து காட்டும் படைப்புத்திறங்கள். அளவில் செய்யப்படும் மாற்றங்களை உணராதவாறு மலையெனவும், கடலெனவும், வானெனவும் அப்படியே ஒப்பு கொள்ளுமாறு தக்க அளவுக் குறுக்கங்களாலும், சமன்பாடுகளாலும் ஓவியன் இயற்கையைப் படி செய்கிறான். இயற்கை கலைஞனின் கண் வழியே மனத்திற் புகுந்து கற்பனையைத் தக்க அளவில் பொருத்திக்
கொண்டு அவன் கை வழியே தூரிகையில் இறங்கி உருக்கொள்கிறது. அழகுணர்ச்சியே ஓவியக்கலையின் தொடக்க காலப் பிறப்பு அடிப்படையாகும்.
ஓவியத்திற்கும் இந்தியப் பண்பாட்டிற்கும் நிரம்பத் தொடர்பு
உண்டு. ஓவியத்தின் சாயல் இலக்கியத்தில் படிந்தது. இலக்கியத்தின் சாயல் ஓவியத்தில் படிந்தது. ஓவியத்தின் சாயல் இலக்கியத்தில் படிந்தமைக்கு எடுத்துக்காட்டாக நெடுநல்வாடையை ‘ஓவியப்பாட்டு’ எனக் குறிப்பிடுவதைக் காணலாம்.
”..... ..... துணை துறந்து
நல்நுதல் உலறிய சில்மெல் ஓதி
நெடுநீர் வார்குழை களைந்தென குறுங்கண்
வாயுறை அழுத்திய வறிதுவீழ் காதின்
பொலந்தொடி நின்ற மயிர்வார் முன்கை
வலம்புரி வளையொடு கடிகைநூல் யாத்து
வாளைப் பகுவாய் கடுப்ப வணக்குறுத்து
செவ்விரல் கொளீஇய செங்கேழ் விளக்கத்து
பூந்துகில் மரீஇய ஏந்துகோட்டு அல்குல்
அம்மாசு ஊர்ந்த அவிர்நூற் கலிங்கமொடு
புனையா ஓவியம் கடுப்ப” (நெடுநல்வாடை, 137-147)
எனும்
அடிகளில் அரசமாதேவியின் வாடிய உள்ளத்திற்கேற்ப வடிக்கப்பெற்ற ஓவியக் காட்சியைக் காணலாம்.
இயற்கைத் துய்ப்பும், அதனைக் கலையுருப் படுத்தலும் தமிழர்க்கு மட்டுமன்று, உலகில் எங்கும் வாழ்ந்த மனிதர்களின் இயல்பாகும். தமிழன் அதில் கைத்தேர்ந்தவன். செடியும் கொடியும்
பறவையும் விலங்கும் ஆறும் கடலும் கதிர்த் தோற்றமும் மறைவும் எனக் கட்புலன் விருந்தானவற்றை
இற்றைக்கும் கலையுருவாக்கி வீட்டில் அழகுக் கலைப் பொருளாக வைத்துக் கொள்ளக் காண்கிறோம். இந்நிலையில் சங்க கால வாழ்வியலில் முதல் நிலையில் இயற்கையின் பல கூறுகளே ஓவியப்பட்டன
எனலாம்.
”வெள்ளி யன்ன விளக்குஞ் சுதையரீஇ
மணிகண் டன்ன மாத்திரட டிண்காழ்ச்
செம்பியன் றன்ன செய்வுறு வளைஇக்
உருவப் பல்பூ ஒருகொடி வளைஇக்
கருவொடு பெயரிய காண்பின் நல்லில்”
எனச் சாந்து
கொண்டு சமைத்துப் பூசிய இல்லத்துச் சுவர்களில் ‘வல்லி சாதியாகிய ஒப்பில்லாத கொடியை யெழுதி’ அழகுபடுத்தியமை அறியப்பெறும்.
பண்டைக் காலத்து அழகிய மகளிர் வடிவினை ஓவியமாக எழுதிப் பொதுவிடங்களில்
பேணல் உண்டென்பது மணிமேகலைக் காப்பியத்தின் வழி அறியலாம். ”உதயகுமாரனைத் தவிர்க்க மணிமேகலை பளிக்கறை புகவும், ஆண்டுப் பளிக்கறையில் தோன்றும் அவளை ஓவியப்பாவை என உதயகுமரன் எண்ணிய செயலைச்
சாத்தனார் கூறக் காணலாம்” ப.218
”ஓவியன் உள்ளத் துள்ளியது வியப்போன்
காவியங் கண்ணி யாடுதல் தெரிந்து
மேவிய பளிங்கின் விருந்திற் பாவையிஃது
ஓவியச் செய்தியென் றொழிவேன் முன்னர்”
என்ற பகுதிகளால்
உண்மைத் தோற்றமென்றே நினைக்கும் வகையில் சமைத்த பண்டைக் கலைத்திறன் அறியப்பெறும். சிலப்பதிகாரத்தில் கூறப்பெற்ற சித்திரசேனன் என்னும் ஓவிய வல்லோனாகிய கந்தருவனின்
நண்பன் துவதிகன் என்பவன் கந்திற் பாவையில் நிலைப் பெற்றுறையும் செய்தியை மணிமேகலை குறிக்கின்றது. ஆடல் மகிளிர்க்கு ஓவியக்கல்வி இன்றியமையாதென்பது மணிமேகலையால் தெறிவுறக் காட்டப்
பெறுகிறது.
”நாடக மகளிர்க்கு நன்கனம் வகுத்த
ஓவியச் செந்நூல் உரைநூற் கிடக்கையும்”
என்பதால்
ஒற்றுமையுடைய பல்கலைக் கூறுகளின் தேர்ச்சியே பண்டு கல்வியெனப் பட்டது என விளங்கும். பரத்தையர் என்ற சொற்குப் பரந்துபட்ட ஒழுக்கத்தினர் எனப் பொதுநிலையில் பொருள்
கூறும் பரதம். பரவை என்ற பொருளில் பரவையாகிய அலையென ஆடல் சான்ற மகளிர் என்ற
பொருளமைதி அச்சொற்கு உண்டென நவில்வோர் சிலர். இவையன்றிப் பல்வேறு கலைப்புலங்களில் பரந்துப்பட்ட தேர்ச்சியுடையவர் என இச்சொற்குப்
பொருளுரை காணலாம்.
”பண்ணும் கலையும் பழித்த தீஞ்சொல்
எண்ணென் கலையோர் இருபெரு வீதியும்
எண்ணான் கிரட்டி யிருங்கலை பயின்ற
பண்ணியன் மடந்தையர் பயங்கெழு வீதி
யாழ்முத லாக வறுபத் தொருநான்கு
ஓரின மகளிர்க் கியற்கையென் றெண்ணிக்
கலையுற வகுத்த காமக் கேள்வி”
என்ற இலக்கியப்
பகுதிகளால் இன்னோர் கலைத் தேர்ச்சியறியப் பெறும். தொழில் சாரா நூற்கல்வி மட்டும் கல்வியாகாது என்பதைப் பண்டைக் கல்விமுறை உணர்த்துவதனை
இப்பகுதிகளால் நன்கறியலாம். மண்ணோவியம், சுவரோவியம், புடைப்போவியம் எனப் பல்வகை ஓவியங்கள் மணிமேகலையால் உரைப்பெறுகின்றன.
சக்கரவாளக் கோட்டம் பற்றிய செய்திகளில் மிகையிருப்பினும்
கலைநலம் பற்றி அப்பகுதி கூறியன அக்கால் நிலவிய கலைத்திறன் காட்டுவனவாகும்.
”ஈமப் புறங்கா டீங்கிதன் அயலது
ஊரா நற்றேர் ஓவியப் படுத்துத்
தேவர் புகுதரூஉம் செழுங்கொடி வாயினும்
நெல்லும் கரும்பும் நீரும் சோலையும்
நல்வழி எழுதிய நலங்கிளர் வாயிலும்
வெள்ளி வெண்சுதை யிழுகிய மாடத்து
உள்ளுரு எழுதா வெள்ளிடை வாயிலும்
அடித்த செவ்வாய்க் கடுத்த நோக்கிற்
றொடுத்த பாசத்துப் பிடித்த சூலத்து
நெடுநிலை மண்ணீடு நின்ற வாயிலும்” ப.220
என்ற பகுதி
இதனைத் தெளிவுறுத்தும். மணிமேகலைக்குப் பின் தமிழக ஆட்சி களப்பிரர் வயப்பட்டமையால்
தமிழ்மொழி, இலக்கியம் கலைசார்ந்த வளர்ச்சிகள் குன்றிவிட்டன. களப்பிர்ர்க்குப் பின் பல்லவர் காலத்திலேயே மீண்டும் கலையெழுச்சி ஏற்பட்டது. எனினும் சங்ககாலக் கலைத் தன்மைக்கும் பல்லவர் காலக் கலைத்தன்மைக்கும் வேறுபாடுகள்
உள்ளன. கலை முழுவதும் சமயச் சார்புறத் திருத்தப்பட்ட நிலையைச் சங்க
காலத்திற்குப் பிறகு தெளிவுறக் காண இயலும்
ஓவியத்தைப் பழைய இலக்கியங்கள் ‘படம்’ என்றும் உரைக்கின்றன. படாம் என்பது சித்திரம் எழுதப்பட்ட துணிச்சீலையைக் குறித்த்தென்பர் மயிலை சீனி
வேங்கடசாமி.
”மடத்தகை மாமயில் பனிக்குமென் றருளிப்
படாஅம் ஈத்த கெடாஅ நல்லிசைக்
கடாஅ யானைக் கலிமான் பேக”
எனப் பரணர்
ஓவிய வேலைப்பாடு மிக்கப் போர்வையைக் குளிக்கின்றனர். யானையின் முகப்படாம் இவ்வனைய வேலைப்பாடுகள் உடையது. இதனை உருவாக்கும் ஓவியர் முன்வரைவு கொண்டனர் . பண்டைய காலத்தில் சுவரோவியமே மிகுதியும் இருந்தது. மரத்தை மறைந்தது மாமத யானை என்றாற் போல சுவர் நினைவில் தோன்றா வண்ணம் இவ்வோவியங்கள்
உண்மைக் காட்சியென்றே பொலிந்தன. பிற்காலத்தில்
இச்சிறப்பைப் பட்டினத்தார் உணர்ந்து,
”யானையும் எனக்குப் பொய்யெனத் தோன்றி
மேவரு நீயே மெய்யெனத் தோன்றினை
ஓவியப் புலவன் சாயல்பெற எழுதிய
சிற்ப விகற்பம் எல்லாம் ஒன்றில்
தவிராது தடவினர் தமக்குச்
சுவராய்த் தோன்றும் துணிவுபோன் றனவே”
என்று
இறைக்காட்சியோடு உவமித்துத் திருக்கழுமல மும்மணிக் கோவையிற் பாடுவர்.
ஓவியக்கலை அழகுணர்ச்சியாலும் அடிமன உந்துதலாலும் பட்டறிவை
வெளிப்படுத்தும் ஆர்வத்தாலும் தோன்றியது. ஆனால் ஓவியம்
தோன்றிய நிலைக் குறித்துப் புராணக் கதைகள் வேறுவகையாக வழங்குகின்றன. பயஜித் என்ற மன்னன், அந்தணன் ஒருவனின்
மகளைக் காலனுடைய உலகிருந்து மீட்டுக் கொடுக்கும் முயற்சியில் இறங்குகிறான். காலனை வென்று நான்முகன் முன் நிற்கிறான். நான்முகன் மன்ன்னிடம் இறந்த சிறுமியின் படத்தைத் தீட்டுமாறு கூற அவனும் அப்பெண்ணின்
ஓவியம் தீட்டிப் பின் விசுவகருமனின் மாணவனுமாகின்றான் என்றும் இதுவே ஓவியம் பிறந்த
கதையென்றும் சிற்பத்தினம் என்னும் நூல் கூறுகின்றது.
இந்திய ஓவிய நூல்கள் தேவ மானிட வடிவங்களை வரைகின்றபோது நாற்கோண
வடிவு கொண்ட முகத்தன ஆகவும், அழகும் ஒளியும்
புலப்படுவன ஆகவும் இருக்க வேண்டும் என்று கூறுகின்றன. எளிய மனிதர் முகம் அமைதி வாய்ந்த்தாகவும், உயர்த்தில் இவர்கள் மன்னர்களை விடக் குறைந்தவர்களாகவும் தீட்டப்பட வேண்டுமென்கின்றன.
பொதுவாக ஓவியங்கள் இலக்கிய, புராணக் காட்சிகளை அடிப்படையாக வைத்து வரையப்படுகின்றன என்ற கருத்து உண்டு இதன்படி
எளிதில் விளக்க இயலாத கனவு, பிறப்பு, இறப்பு, தவம், துறவு, வழிபாடு, உருவமாற்றம், முக்தி ஆகியவை
தொடர்பான தொன்மங்கள் ஓவியத்தில் விளக்கம் பெறுகின்றன என்பர். இதனால் இலக்கியங்களைக் காட்டிலும் ஓவியங்கள் ஆற்றல்மிக்க ஊடகம் எனலாம். அதனால்தான் ”ஆயிரம் சொற்கள்
விளக்குவதை ஓவியத் தூரிகையின் ஒரு இழுப்புச் சொல்லிவிடுகிறது” என்ற சீனப்
பழமொழி கூறுகிறது.
பார்வை நூல்
1.
பாலசுப்பிரமணியன்.கு.வெ.முனைவர், சங்க இலக்கியத்தில்
கலையும்
கலைக்கோட்பாடும்,
நியூ
செஞ்சுரி
புக்
ஹவுஸ்
(பி)
லிட்.,
சென்னை-600
098, பதிப்பு-2016.
Comments
Post a Comment