Skip to main content

பெண்ணின் பெருமை அல்லது வாழ்க்கைத் துணை என்னும் நூலில் பெண்ணியச் சிந்தனைகள்

  பெண்ணின் பெருமை அல்லது வாழ்க்கைத் துணை என்னும் நூலில் பெண்ணியச் சிந்தனைகள்             ஆண் , பெண் என்ற இருவரில் உயர்வு தாழ்வு இல்லை . பெண்களுக்கு முதன்மை வழங்கவேண்டும் என்பது அறிவும் அன்பும் வாய்ந்தோர் கருத்து . பெண்களுக்கு இயல்பாக அமைந்துள்ள குணம் , தொண்டு , கடமை முதலியவற்றை நோக்கும் போது   முதன்மை பெற்று விளங்குவது நன்கு புலனாகும் . ஆண்களின் பேற்றிற்கும் , வளத்துக்கும் , நலத்துக்கும் , பிற ஆக்கத்திற்கும் நிலைக்களனாயிருப்பது பெண்ணுலகம் என்பது எவரும் அறிந்த ஒன்று . ஆகையால் முதன்மை வழங்கினால் நேரும் இழுக்கென்ன ? நமது நாடும் பெண்மையும்             நம் முன்னோர்கள் கல்வியைக் ‘ கலைமகள் ’ என்றும் , திருவைத் ‘ திருமகள் ’ என்றும் , ஞானத்தைப் ‘ பரை ’ என்றும் கொண்டது ஆராயத்தக்கது . நாட்டைப் பலவழிகளிலும் காட்டைக் காக்கும் காட்டுக் கன்னியை ‘ வனதேவதை ’ என்று வாழ்த்துவதும் , பல்லுயிர்களைத் தாங்கும் நாட்டைத் ‘ தாய் நாடு ’ என்றும் வாழ்த்துவதும் எண்ணவேண்டும் . மாணிக்கவாசகரு...

இலக்கியமும் இசைக்கலையும்

 

இலக்கியமும் இசைக்கலையும்

          ஓவியமும் சிற்பமும் தனித்தனி ஊடகங்களாக இருந்து மனக் கருத்தாடல்களை நிகழ்த்துகின்றன. ஆனால் இசை, தனி ஊடகமாக இல்லாது வாய்ப்பாட்டோடு சேர்ந்தும் மெய்ப்பாடுகளுடன் கூடிய நடனத்தோடு இணைந்தும் பல்முனை ஊடகமாக ஆற்றல் பெற்றுத் திகழ்கிறது. இதனால் இசையை இலக்கியமாகவும், இலக்கியத்தை இசையாகவும் பார்க்கும் பார்வை செல்வாக்குப் பெற்றுள்ளது.

             சங்க இலக்கியங்களில் இசை தலையாய இடத்தைப் பெறுகிறது. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகிய ஒவ்வொரு நிலத்திற்கும் ஒவ்வொரு பண் வகுக்கப்பட்டிருந்தது. காலையில் பாடும் பண், மாலையில் பாடும் பண் என்று வேறுபடுத்தப்பட்டிருந்தது. மணவிழாவில் பாடும் பண், பிற சடங்குகளில் பாடப்படும் பண் பற்றிய குறிப்புகளும் உண்டு. யாழில் சிறிய யாழ் (சீறியாழ்) பெரிய யாழ் (பேரியாழ்) என்ற பகுப்பு இருந்தது. யாழின் அடிப்படையில் சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை என்று ஆற்றுப்படை இலக்கியங்கள் பகுக்கப்பட்டிருந்தன. இசைக்கருவிகளைப் பற்றிய ஞானம் தமிழர்களின் சிறப்பியல்பு என்பதை வீ..கா.சுந்தரனாரின் தமிழிசைக் கலைக் களஞ்சியம் வெளிப்படுத்துகிறது.

            மனிதர்களை மட்டுமன்றி விலங்குகளையும் இசை கட்டுப்படுத்தவல்லது என்பதைத் தமிழர்கள் கவிதைகளின் வாயிலாக உணர்த்தியுள்ளனர். இசை, கொலைஞர்களைக் கூட நல்லவர்களாக மாற்றிவிடும் ஆற்றல் உடையது என்ற உண்மையை,

            ஆறலைக் கள்வர் படைவிட அருளின்

1.                              மாறுதலைப் பெயர்க்கும் மருவுஇன் பாலை(பொருந.21-22)

என்ற பாடலடிகள் வழி அறியலாம்.

            இயற்கையில் திளைத்தத் தமிழர்கள் காதில் விழும் கானகத்து ஓசையை எல்லாம் இசையென மகிழ்ந்ததை,

          ஆடமைக் குயின்ற அவிர்துளை மருங்கில்

          கோடை யவ்வளி குழலிசை யாகப்

          பாடின் அருவிப் பனிநீர் இன்னிசை

          தோடமை முழவின் துதைகுர லாகக்

          கணக்கலை இகுக்கும் கடுங்குரல் தூம்பொடு

          மலைப்பூஞ் சாரல் வண்டுயா ழாக

          இன்பல் இமிழிசை கேட்டுக் கலிசிறந்து” (அகநானூறு, 82:1-7)

இப்பாடல் சான்றாகும். (அசையும் மூங்கிலின் மேல்காற்று புகுந்து எழுந்த ஒலி குழல் இசையாக, அருவியின் குளிர்ந்த நீரின் இனிய இசை தொகுதியாக முழங்கும் முழுவிசையாக, கூட்டமான கலை மான்கள் தாழ்ந்து ஒலிக்கும் நெடுங்குரல் பெருவங்கிய இசையாக, மலைச்சரிவிலுள்ள பூக்களில் மொய்க்கும் வண்டுகளின் ஒலி யாழிசையாக இவ்வாறு இனிய பல இசைகளைக் கேட்டு மகிழ்ந்து)

            பண்ணத்தி என்ற பகுதியில் பண்வகைகளைப் பற்றித் தொல்காப்பியர் விரிவாக விளக்குகிறார். வண்ணங்கள் இசையை மிகுவிக்கும் சந்தங்கள் பற்றிப் பேசுகின்றன. கலிப்பாட்டும், பரிபாட்டும் இசைப்பாட்டு வகையைச் சார்ந்தவை என்று தொல்காப்பிய உரையாசிரியர் பேராசிரியர் கருதுகிறார். இசைநூல்கள் பல தமிழில் இருந்தன என்று அறிகிறோம். பெருநாரை, பெருங்குருகு எனும் நூல்களை அடியார்க்கு நல்லார் தம்முடைய சிலப்பதிகார உரையில் குறிப்பிடுகிறார். சிறுநாரை, முதுகுருகு ஆகியவற்றை இறையனார் களவியல் உரைக்காரர் குறிக்கிறார். இந்திரகாளியம், பரதசேனாபதியம் எனும் பெயர்களில் இசைநூல்கள் இருந்ததை அறிகிறோம். குரவைப்பாட்டு, வள்ளைப்பாட்டு பற்றிய செய்திகளையும் சங்கப்பாடல்கள் வழி அறியலாம்.

இசையொடு தமிழ்ப்பாடல் மறந்தறியேன்” (இராசா.கி.முனைவர், ஒப்பிலக்கியம், .44) என்று பக்தி இயக்கக் காலத்திலும் இசையின் தலைமை இலக்கியத்தில் தொடர்ந்ததை அப்பரடிகளின் வாக்கினால் அறியலாம்.  ஏழிசையாய் இசைப்பயனாய்என்று இறைவனை வாழ்த்துவதும் இதனை உறுதிசெய்யும். இதனுடைய வளர்ச்சியே இன்று திருவாசகமும் மேற்கத்திய சிம்பொனி இசையாக அறியப்படுகிறது.

துணை நின்ற நூல்கள்

1.    பாலசுப்பிரமணியன்.கு.வெ.முனைவர், சங்க இலக்கியத்தில் கலையும் கலைக்கோட்பாடும், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., சென்னை-600 098, பதிப்பு-2016.

2.    இராசா.கி.முனைவர், ஒப்பிலக்கியம், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., சென்னை-600 098, பதிப்பு-ஆகஸ்டு  2016.

 

 

Comments

Popular posts from this blog