பொங்கலோ பொங்கல்!
தமிழ்நாட்டில் பல சாதிகள் உண்டு. பல சமயங்கள் உண்டு. ஆயினும் தமிழர் அனைவருக்கும்
பொங்கல் தான் ஒரு புனித நாள். அந்த நாளில், வீடுதோறும் சுதையின் விளக்கம்; வீதி தோறும்
மங்கல முழக்கம்; ”பொங்கலோ பொங்கல்” என்பதே எங்கும் பேச்சு.
பொங்கல்
விழா நடைபெறும் காலம் கார் உலாவும் காலம். இயற்கை அன்னை பசுமையான புடவை உடுத்தி பன்னிறப் பூக்களைச் சூடி, இனிய காயும், கனியும், கரும்பும் அணிந்து
இன்பக் காட்சிகள் கொண்டக் காலம்.
பொங்கலுக்குத் தலைநாள் போகி பண்டிகை. போகி என்றால் இந்திரன். அவன் மேகங்களை இயக்கும் இறைவன். தமிழ்நாட்டார் பழங்காலத்தில் விளைநிலங்களின் இறைவனாக வைத்து
வணங்கினார்கள். சோழவள நாட்டில்
இந்திர விழா இருபத்தெட்டு நாள் கோலாகலமாக நடைபெற்றது.
”பசியும் பிணியும் பகையும் நீங்கி
வசியும்
வளனும் சுரக்க”
என வானவரை
வழிப்பட்டார்கள். அக்காலத்தில் சிறப்பாக நடைபெற்ற அத்திருநாள், இப்பொழுது குன்றிக்
குறுகி ஒரு நாள் பண்டிகையாக நடைபெறுகின்றது.
பொங்கல் புதுநாள்
போகிப் பண்டிகையை அடுத்து வருவது பொங்கல் புதுநாள்; அந்நாளில் ‘பழையன கழிதலும் புதியன புகுதலும்’ நிகழும்; வீட்டிலுள்ள பழம் பானைகள் விடைபெறும்; புதுப் பானைகளில் பொங்கல் வைத்துப் பால் பொங்கும் பொழுது, ”பொங்கலோ பொங்கல்” என்னும் மங்கல ஒலி எங்கும் ஒலிக்கும். அப்பொழுது பெண்கள் குரவையாடுவர்; பிறகு ”பூவும் புகையும் பொங்கலும்” கொண்டு இல்லுறைத் தெய்வத்தை வணங்குவர். அனைவரும் வயிரார உண்டு மகிழ்வர். மாட்டுப் பொங்கல்
பொங்கலுக்கு அடுத்த நாள் நிகழ்வது மாட்டுப் பொங்கல். நாட்டுப் புறங்களில்
மிக்க சிறப்பாக கொண்டாடுவர். முற்காலத்தில் மாடே செல்வமாக மதிக்கப்பட்டது. மாடு என்ற
சொல்லுக்கே செல்வம் என்னும் பொருள் உண்டு. நமக்காக நிலத்தில் ஏர் இழுப்பது மாடு;
பரம்பு அடிப்பது மாடு; அறுவடை காலத்தில் களத்து நெல்லைக் களஞ்சியத்தில்
சேர்ப்பது மாடு. மாடு இல்லையென்றால் பண்ணையும் இல்லை. பயிர்த் தொழிலும் இல்லை.
‘அறந்தரு நெஞ்சொடு அருள் சுரந்து ஊட்டும்’ பசுக்களை ஆதரிக்கவேண்டும்
என்பது தமிழர் கொள்கை. கழனியில் பணி செய்யும் காளை மாடுகளும் காலையும் மாலையும் இனிய
பால் அளிக்கும் கறவை மாடுகளும் நோயின்றிச் செழித்து வளர்வதற்காக நிகழ்வது மாட்டுப்
பொங்கல்.
மாடுகளை ஆற்றிலும் குளத்திலும் நீராட்டுவர்; கொம்பிலே பூவும் தழையும்
சூட்டுவர்; மணிகளைக் கழுத்தில் மாட்டுவர்;
பொங்கல் முடிந்தவுடன் அந்தி மாலையில் வீதியில்
விரட்டுவர். அவை குதித்துப் பாய்ந்து கும்மாளம் போடுவது இனிய காட்சியாகும்.
இனி வரும் காலங்களில் விவசாயம் பெருக வேண்டும்.
விளைநிலங்களை வீட்டு மனைகளாக மாற்றாமல் உழவுத் தொழிலை போற்ற வேண்டும். நம் நாட்டின்
இயற்கை கொடுத்த மண்வளம், மலை வளம், கனிம வளம்
ஆகியவற்றைப் பாதுகாத்து வருங்கால சந்ததியினர்களின் ஒப்படைக்க வேண்டும்.
Comments
Post a Comment