அருந்ததி
திருமணத்தின் போது புரோகிதர் சொற்படி மாப்பிள்ளை
மணப்பெண்ணைப் பார்த்து, ‘அருந்ததியைப் பார்த்தாயா? என்று வானில் கை காட்டுகிறான். அவள்
பார்த்ததாகத் தலையசைக்கிறாள்.
அருந்ததி யார்? ஆகாயத்தில் நட்சத்திரமாய்
பிரகாசிக்க அவள் செய்தது என்ன? அவளை ஏன் பார்க்க
வேண்டும்? என்று வினாக்கள் எழுகின்றன.
அருந்ததி கந்தர்வக் கன்னியல்ல, உயர்குடி
மகளுமல்ல, குணத்தால், கற்பால், பக்தியால், நட்சத்திரமாய் உயர்ந்து ஒளி வீசுகிறாள்.
தோல் உறித்துப் பதனிட்டு, செருப்புத் தைக்கும் சக்கிலியின் மகள்தான் அருந்ததி. சிவபெருமானிடம்
அளவற்ற பக்திக் கொண்டவள். தினமும் லிங்கத்திற்குப் பூஜை முடித்த பின்பே உணவருந்துவாள்.
வசிஷ்ட மகாமுனிவரும் சிறந்த சிவபக்தர். மனம்,
மொழி, மெய் மூன்றினாலும் தூய்மையான பெண் தனக்குப் பத்தினியாக வேண்டுமென்று சிவனைத்
தியானித்தார். கொஞ்சம் மணலைத் துணியில் முடிந்து கொண்டு இதை அமுதாகச் சமைப்பவளே தனக்கு
மனைவியாக வேண்டுமென்றும், அதுவரை தான் சாப்பிடுவதில்லை என்றும் விரதம் கொண்டார். பல
நாட்கள் அன்ன ஆகாரமின்றி ஊர் ஊராய்ச் சுற்றினார். பல பெண்களிடம் கேட்டுப் பார்த்தார்.
ஒருவரும் மணலைச் சமைக்க முடியாது என்று கையை விரித்துவிட்டார்கள்.
வசிஷ்டர் பசியால் வாடினார். அருந்ததியின்
குடிலருகே வந்தார். அவளிடமும் தன் கோரிக்கையைக் கூறினார். அவள் ‘மகரிஷி! தாங்களோ பிராமணர்.
நானோ சக்கிலிப் பெண். நான் சமைத்தால் தாங்கள் சாப்பிடுவீர்களா? என்று கேட்டாள். ‘பரவாயில்லை,
குலத்தை விடக் குணம் உயர்ந்தது. உன்னால் சமைக்க முடியுமானால் நான் சாப்பிடத் தடையில்லை.
என்று மணலை கொடுத்தார் முனிவர்.
அடுப்பைப் பற்ற வைத்து, உலையில் மணலைப் போட்டாள்
அருந்ததி. சிவபெருமானைத் தியானித்தாள். ‘உமது திருவுளப்படி நடக்கட்டும்’ என்று உலையை
மூடினாள். சற்று நேரத்தில் தட்டுத் தூக்கி அடிக்கப்பட்டது. முத்து முத்தான சோறு பொங்கி
வந்தது. அருந்ததிக்கு பரம ஆனந்தம். பதமாகச் சமைத்து வசிஷ்டரைச் சாப்பிட அழைத்தாள்.
வசிஷ்டர் தன் சபதத்தைச் சொல்லி அவளை மணக்கும்படி
வேண்டினார். அருந்ததி சிவபெருமானின் உத்திரவு வேண்டுமென்று சொல்லிவிட்டாள். வசிஷ்டர்
சிவனை வேண்டினார். சிவன் பார்வதியோடு எழுந்தருளி, இருவருக்கும் மணமுடித்து வைத்தார்.
ஒரு தடவை அக்கினி தேவன் சப்த ரிஷிகளின் பத்தினிகளின்
மேல் மோகங்கொண்டான். அக்கினியின் மனைவியாகிய சுவாஹா, அவனைத் திருப்தி செய்ய, தன் கற்பு
வலிமையினால் சப்த ரிஷிகள் மனைவியர் வடிவில் ஒவ்வொருவராக உருமாறினாள். ஆனால் அருந்ததியின் உருவத்தை மட்டும் எத்தனை முறை முயற்சி
செய்தும் அவளால் எடுக்க முடியவில்லை. அவள் அதற்காக முயற்சி செய்யும் போதெல்லாம் அக்னிக்கே
உடம்பெல்லாம் தகித்தது. தாங்கமாட்டாமல் அவள் அந்த முயற்சியை விட்டு விடும்படி மனைவியை
வேண்டிக் கொண்டான்.
இப்படி நெருப்பையே அவள் நினைப்பு வேகவைத்த
பெருமை அருந்ததிக்கு உண்டு. அதற்காகச் சிவன் அளித்த வரத்தால் வானில் தாரகையாய் பிரகாசித்தாள்.
அவளைப் போல் வாழவேண்டும் என்ற ஆசையால் தான் நம்பிக்கையோடு மணப்பெண்ணுக்கு அருந்ததியைச்
சுட்டிக் காட்டுகிறார்கள்.
பார்வை நூல்
1.
தெய்வீகத் திருமணங்கள்
– வித்துவான் M. நாராயணவேலுப் பிள்ளை, சேது பப்ளிகேஷன், சென்னை-600 035, முதற் பதிப்பு,
1988.
Comments
Post a Comment