நாட்டுப்புற இலக்கியத்தில் சந்தை மேலாண்மை
நாட்டுப்புற பாடல்களில் பலவகையான சந்தைகளில் என்னென்ன பொருள்கள்
எவ்விடங்களில் விற்கப்படுகின்றன என்றும் என்னென்ன பொருள்கள் ஏற்றுமதி, இறக்குமதி செய்யப்படுகின்றன
என்ற செய்திகளையும் அறிந்து கொள்ளலாம். கிராமத்துச் சந்தைகளில் மொத்த விற்பனையும் நடைபெறும். இவை பெரும்பாலும்
வாரச் சந்தைகளாகும். இன்றும் கிராமங்களில் நம் நாட்டுப் பாடல்களைப் போல வாரச்
சந்தைகளும் வாழ்ந்து வருகின்றன.
வாரச் சந்தை முறையில் வாரத்தில் ஒரு குறிப்பிட்ட நாளில் சந்தை
கூடுகிறது. சிறிய பெரிய
வியாபராங்கள் இங்கே நடைபெறும். குறிப்பாக விவசாயப் பொருள்களும், ஆடு மாடுகளும் இங்கே விற்கப்படும்.
நகர்ப்புற அங்காடிகள்
சிலப்பதிகாரத்தில் வருகின்ற அழகிய அங்காடிகள் தொன்று தொட்டே
நம் நாட்டில் இருந்துவந்தன. பகல் நேரத்தில் செயல்படுவன ‘நாளங்காடி’ என்றும், இரவு நேர அங்காடிகளுக்கு ‘அல்லங்காடி’ என்றும் கூறுவர்.
நாட்டுப் பாடல்களில் பாடப்படுகின்ற நகர் அங்காடிகள் பெரும்பாலும்
கிராமங்களுக்கு அருகாமையில் அமைந்துள்ள நகரத்து அங்காடிகளை மட்டும் குறிக்கும். காரணம் போக்குவரத்து
வளர்ச்சியில்லாத காலத்தில் வண்டியில் செல்லுமளவிற்கு அருகாமையில் உள்ள அங்காடிகளைக்
குறிக்கின்றன. இந்நகரத்து
அங்காடிகள் கிராமத்து விளை பொருட்களை விற்பதற்கு மட்டுமே பயன்பட்டன. வண்டிப் பொதி
ஏற்றிக் கொண்டு நகரத்திற்குச் செல்லும்போது ஏற்றிச் செல்லும் பொருளைப் பற்றியும், எங்குச் செல்கிறான்
என்பதையும், என்ன விலைக்கு
விற்று அந்தக் காசில் என்னென்ன வாங்கி வரவேண்டும் என்று வீட்டை விட்டுப் புறப்படும்போதும், சாலையில் போகும்
போதும் பாடிக் கொண்டு செல்கிறான்.
”பருப்பு பிடிக்கும் வண்டி – இது
பட்டணந்தான் போகும் வண்டி
பருப்பு விலை ஆகட்டுண்டி தங்க ரத்தினமே
பதக்கம் பண்ணிப் போடுறேன்டி பொன்னு ரத்தினமே
அரிசி பிடிக்கும் வண்டி
அவினாசி போகும் வண்டி
அரிசி விலையாகட்டுண்டி தங்க ரத்தினமே
அட்டி பண்ணிப் போடுறேண்டி பொன்னு ரத்தினமே
வாழப் பொறந்த வண்டி
வாழ வகை செய்யும் வண்டி
மாளாப் பிறவியல்ல தங்க ரத்தினமே
மனுசப் பிறவியல்லோ பொன்னு ரத்தினமே!
இப்பாடல் கோவை மாவட்டத்துப்
பாடல் என்று ஊர்ப் பெயர்களிலிருந்து தெரிகிறது. அழகான சொல் நயத்தோடு ஆழமான பொருள்பட பாடுவதால் பாட்டு சிறப்பு
பெறுகிறது.
பாடலில்
கடைசி வரிகள் பாடல்களின் நெஞ்சின் அழற்சியைக் காட்டிலும் நம் இதயங்களை நெகிழ வைத்து
விடுகின்றன. ‘மாளாப் பிறவியல்லோ
நான் மனுஷப் பிறவியடி’ என்று பாடித் தன் உள்ளத்தில் உள்ள பூட்டி வைத்திருந்த சுமையை
இறக்கி வைத்து விடுகிறான்.
உணவும் வர்த்தகமும்
விவசாயப் பொருட்களில் இருவகை உண்டு. ஒன்று உணவுப்
பொருள். மற்றொன்று வணிகப்
பொருள். நெல், கம்பு, கேழ்வரகு போன்றவை
உணவுப் பொருட்கள். கரும்பு, நிலக்கடலை, காய்கறி, வாழை, தென்னை போன்றவை வணிகப் பொருட்கள். இவை விவசாயின்
உபயோத்திற்கு மட்டுமல்லாமல் விற்பனை செய்தற்கு என்றே உற்பத்தி செய்யப்படுகின்றன. உணவுப் பொருள்களை
பெரும்பாலும் சிறுவிவசாயிகள் உற்பத்தி செய்வார்கள். பெரும் விவசாயிகள் வணிக நோக்கத்தோடு இவற்றை உற்பத்திச் செய்வதுண்டு. இரண்டிலும்
வணிகப் பொருட்கள் அதிக வருவாயைக் கொடுக்கும். மேலும் தொழிற்சாலைக்குத் தேவைப்படும் கச்சாப் பொருள்களை நல்ல
விலை கொடுத்து வாங்க பெரிய தொழிலதிபர்கள் தயாராக இருந்தால் இது போன்று விளைச்சலுக்கென
நிலம் உபயோகிக்கும் விவசாயிகளின் எண்ணிக்கை உயர்ந்துவிடும்.
தொழிற்சாலைகள் நம் நாட்டில் அதிகம் பெருகாத காலத்தில் இங்கிலாந்திலுள்ள
தொழிசாலைகளுக்கு இங்கு விளையும் கச்சாப் பொருட்கள் தேவைப்பட்டன. எடுத்துக்காட்டாக, பஞ்சு நம் நாட்டிலிருந்து
ஏற்றுமதியாயிற்று. நெய்த துணி அதற்கு மாற்றாக ஏற்றுமதி செய்யப்பட்டது. பஞ்சு துணியாகிப்
பத்து மடங்கு விலையில் இங்கே இறக்குமதி செய்யப்பட்டது.
புல் விற்பனை
அக்காலத்தில்
புல் விற்பனை செய்யப்பட்டது என்பதை,
”ஆத்தோரம் அருகம் புல்லு
அறுக்கப் போவோமா?
அதைக் கொணர்ந்து கடைவீதியில்
விற்கப் போவோமா?
புல் விற்க ஒரு இனமும் அதனை
வாங்க ஒரு இனமும் இருந்தன என்பதைப் பாடல் வரிகள் வரைந்து காட்டுகின்றன.
தாலாட்டுப்
பாட்டில்...
தாலாட்டுப்
பாடல்களில் கூட தாய்மார்கள் தங்கள் பாடல்களில் தங்கள் அண்ணன், அப்பா, அம்மா பற்றியும்
அவர்கள் வியாபாரம் காரணமாக வந்த செல்வச் செழிப்பும் பற்றியும் பாடுவதுண்டு.
”மாமன்
கொத்துமல்லி வித்தவுடன் – கண்ணே
கொலுசு செஞ்சிவருவாரு
மல்லிகைப்பூ வித்தவுடன் – உன்மாமன்
மாட்டல் செஞ்சி வருவாரு
கடுகுமணி வித்தவுடன் – உனக்கு
காசு பண்ணிப் போட்டுவார்”
தன் அண்ணன் தன் பிள்ளைக்கு
என்னவெல்லாம் செய்து போடுவார் என்று தன் அன்பையும் ஆதங்கத்தையும் வெளிப்டுத்துகின்றாள்
தாய். இப்படி குழந்தைகளுக்கு
அந்த பொருட்களின் மீது ஆசையை வளர்த்து விட்ட பெருமையும் தாய்க்குலத்தையே சாரும்.
குழந்தைப் பாட்டில்,
குழந்தைப் பாடல்களில் அபூர்வமாகக் கிடைக்கும் பொருட்களை எங்கு கிடைக்கும் என்பது
பற்றிய குறிப்பு வருகிறது. திருவிழாக் கடை பற்றிய ஒரு பாடலில் வீராம்பட்டினம் என்று
கோயிற்பட்டினம் புதுச் சேரிக்குப் பக்கத்தில் உண்டு. அங்குள்ள செங்கழு நீர் அம்மன்
புகழ் பெற்ற அம்மன். இக்கோயிலில் ஆடி மாதந்தோறும் ஐந்து வெள்ளிக்கிழமைகளில் கோயில்
திருவிழாக்கோலம் பூண்டிருக்கும். இக்கோயில் திருவிழாவிற்கு புதுச்சேரி தென்னார்க்காடு
மாவட்ட மக்கள் அதிக அளவில் வந்து கூடுவார்கள். சில குழந்தைகள் பாடுகின்றன.
”கொட்டடி கொட்டடி தாழம் பூ
குனிஞ்சு
கொட்டடி தாழம் பூ
வீராம்
பட்டணம் போகலாம்
வெள்ளை இட்டிலி வாங்கலாம்”
இப்பாடலில்
வெள்ளையான நல்ல இட்லி திருவிழாக் கடைகளில் மட்டுமே கிடைத்தது. இப்போது போல் இட்லி கிராமங்களில்
சாதாரணமாக சமைப்படும் பொருள் அல்ல எனும் உண்மை தெரிகிறது.
நிறைவாக
இந்தியா கிராமங்களில் வாழ்கிறது என்று மகாத்மா காந்தியின்
கூற்றிற்கேற்ப எழுபது சதவீதம் மக்கள் இன்றும் கிராமங்களில் தான் வாழ்கிறார்கள். விவசாயம்
தான் அவர்களின் வாழ்க்கையாகும். இதனால்தான் இந்த நாட்டை விவசாய நாடு எனவும் அழைக்கிறார்கள்.
சந்தை –
உள் நாட்டுச் சந்தை, பன்னாட்டுச் சந்தை என இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டுச்
சந்தையை மீண்டும் – கிராமச் சந்தை திருவிழாக் கடைகள், நகரத்து அங்காடிகள் எனவும் பன்னாட்டுச்
சந்தையை ஏற்றுமதி இறக்குமதி எனவும் பிரிக்கலாம்.
பார்வை நூல்
1. எ.மு.ராஜன், - நாட்டுப்
பாடல்களில் பொருளாதாரம், வெற்றி அச்சகம், இராயப்பேட்டை, சென்னை -14, முதல் பதிப்பு,
1987.
Comments
Post a Comment