யாதும்
ஊரே, யாவரும் கேளிர்
பழந்தமிழர் பண்பாடு மிக உயர்ந்தது. உலகமெல்லாம்
பாராட்டிப் பின்பற்றக் கூடியது. தமிழ் மக்கள் உலகத்தை ஒன்றென்று கருதினர். உலக மக்களை
ஒரே குலத்தவராக எண்ணினர். இத்தகைய உயர்ந்த – பரந்த நோக்கம் தமிழர்களின் ஒப்பற்ற பண்பாட்டுக்குச்
சிறந்த எடுத்துக்காட்டாகும்.
”யாதும் ஊரே, யாவரும் கேளிர்
தீதும்
நன்றும் பிறர்தர வாரா
நோதலும் தணிதலும் அவற்றோர் அன்ன
சாதலும் புதுவது அன்றே வாழ்தல்
இனிதுஎன மகிழ்ந்தன்றும் இலமே முனிவின்
இன்னாது என்றலும் இலமே மின்னொடு
வானம் தண்துளி தலைஇ ஆனாது
கல்பொருது இரங்கும் மல்லல் பேர்யாற்று
நீர்வழிப் படூஉம் என்பது திறவோர்
காட்சியில் தெளிந்தனம் ஆகலின் மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே” (புறம்,
192)
கணியன் பூங்குன்றனார்
பாடிய பாடலாகும். எல்லாமே எமக்கு ஊர்தான். எல்லோரும் எம் உறவினர் தான். கெடுதலோ, நல்லதோ
நமக்குப் பிறரால் உண்டாகாது. வருத்தமும், அது தணிந்த மகிழ்வும், மேலும் இது போன்ற நிகழ்வுகள்
தாமே வருவன – பிறர் தருவன அல்ல. இறப்பு உலகுக்குப் புதிதல்ல. மனிதன் தோன்றிய நாள் தொட்டு
மரணம் தொடர்ந்தே வருகிறது. அதே போல் வாழ்வு இனிமை மிக உடையது என்று எண்ணி மகிழ்வதுமில்லை.
துன்பம் மிக உடையது என்று சொல்லித் துடிப்பதுமில்லை. மின்னல் முழங்க இடி இடித்து வானம்
துளித் துளியாய் பெய்யும் மழைநீர் அருவியாய்ப் பாய்ந்து பெரிய ஆறாகப் பெருக்கெடுத்து
ஓடும்போது, அதில் மிதந்து செல்லும் தெப்பம் போல் உயிர்க்குலம் செல்லும் என்ற உண்மையைக்
கற்றறிந்து அறிவிற் சிறந்த பெரியோர்கள் உணர்ந்திருந்தனர். ஆகையால் நாங்கள் பெருமைக்குரிய
பெரியோரைக் கண்டு அதிசியப்படுவது இல்லை. அதற்காகச் சிறியவர்களைப் பழிப்பதும் செய்ய
மாட்டோம்.
இப்பாடல் கணியன் பூங்குன்றனார் பாடல். இப்பாடல்
தமிழர்களின் தனித்தப் பண்பாட்டை விளக்கப் போதுமானதாகும்.
‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற இந்த வரியின்
உண்மைக் கருத்தை உலக மக்கள் பின்பற்றினார்கள் என்றால் இவ்வுலகில் எத்தகைய குழப்பமும்
வராது. உலகத்தை உருக்குலைக்கும் போர் வெறி ஒழிய வேண்டுமானால் – சாதி வெறி சாக வேண்டுமானால்
– மதவெறி மாளவேண்டுமானால் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற பொன்மொழி உலகமெலாம் பரவ வேண்டும்.
இது உலக சமாதானத்தை நிலைநாட்டும் உயர்த்த குறிக்கோளுடைய ஒப்பற்ற மொழியாகும். இதுபோன்ற
சிறந்த கருத்துள்ள செந்தமிழ் செய்யுட்களை வேறு எந்த நூலினும் காண முடியாது.
Comments
Post a Comment