Skip to main content

வாழ்க்கையின் வெற்றியில் தன்னம்பிக்கை (புத்தக மதிப்புரை)

  வாழ்க்கையின் வெற்றியில் தன்னம்பிக்கை ( புத்தக மதிப்புரை )               புத்தக மதிப்புரையில் முனைவர் சி . இலட்சுமணன் அவர்கள் எழுதிய ‘ வாழ்க்கையின் வெற்றியில் தன்னம்பிக்கை ’ என்ற   புத்தகத்தைப் பார்ப்போம் . இந்நூல்   2023 - ஆம் ஆண்டு ,   குமரி மாவட்டம் , தமிழ்ச் செம்மொழி வரலாற்று ஆய்வு மையம் வெளியிட்டுள்ளார்கள். பக்கங்கள் 205,   விலை 1 50 ரூபாய்.             முனைவர் சி . இலட்சுமணன் அவர்கள் , தமிழ்ச் செம்மொழி வரலாற்று ஆய்வு மையத்தின் விடிவெள்ளி ; சுயமுன்னேற்றத்திற்கான நூல்களை எழுதி வருகின்ற சமுதாயச் சிற்பி ; தமிழாய்வுக் களஞ்சியம் என்னும் இதழின் ஆசிரியராக இருந்து சிறப்புடன் நடத்தி வருகிறார் . பத்துக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார் .             நூலாசிரியர் அவர்கள் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் ஓலைச் சுவடித் துறையின் தலைவராக ,   பணியாற்றிய பொழுது பல்வேறு ஊர்களுக்குப் பயணம் ...

செட்டிநாட்டு உணவு வகைகள்

 

செட்டிநாட்டு உணவு வகைகள் 

          செட்டி நாட்டு உணவு என்பது செட்டியார் அல்லது செட்டி என்று அழைக்கப்படும் ஒரு சாதியினரின் உணவாக அறியப்பட்ட பெயராக இருந்தாலும் அந்தச் சாதி சார்ந்த பொதுப் பெயர் என்றே சொல்லலாம்.

          செட்டிநாட்டு உணவு என்று பரவலாகப் பேசப்படுவதும், சந்தையில் கூறப்படுவதும் நாட்டுக்கோட்டைச் செட்டியார்களைக் குறிக்கிறது. இதற்கு முக்கியக் காரணமாகப் பொருளாதாரத்திலும் அரசியலிலும் இவர்களின் பங்கு கணிசமாக இருந்ததுதான். இந்தச் சூழ்நிலை காலனி ஆட்சியிலும் காலனிக்கு பிந்தைய ஆட்சியிலும் நிலவியது.

          தமிழகத்தில் திராவிட இயக்கம் சார்ந்த அரசியலிலும் காங்கிரஸ் சார்ந்த அரசியலிலும் இயக்கி வந்தனர். இதனால் சமூக அளவில் உயர்வாக மதிக்கப்பட்டதோடு, அவர்களுடைய கலாச்சாரமும் உணவுமுறைகளும் சமூகத்தில் பேசு பொருளாக மாறுவதற்குக் காரணமாயின என்று கூறலாம். தமிழகத்தில் செட்டிநாடு என்று அழைக்கப்படும் நிலப்பகுதியைச் சேர்ந்த நாட்டுக்கோட்டைச் செட்டியார்கள் அல்லது நகரத்தார்கள் என அழைப்பர்.

          பொது சமூகத்தில் வணிகர்கள் என்றே அழைக்கிறார்கள். தமிழில் முக்கியக் காப்பியங்களான சிலப்பதிகாரம், சீவக சிந்தாமணி வணிகர்களைப் பற்றிக் கூறப்பட்டுள்ளன. இவர்கள் அரசருக்கு அடுத்த படியாக மதிக்கப்பட்டாலும் வருண வரிசையில் பிராமணர், அரசர், வேளாளருக்கு அடுத்தப்படியாக தான் வைசிகர் வைக்கப்பட்டுள்ளன. இவர்கள் உற்பத்திச் சக்திகளுக்கும், உற்பத்தி உறவுகளுக்கும் நேரடிகாகத் தொடர்பு இல்லாமல் இருந்தன.

செட்டிநாட்டு உணவு வகைகள்

          செட்டிநாட்டு உணவுகளில் பணியாரம் முக்கிய இடம் வகிக்கிறது. கந்தரப்பம், பாசிப்பயிறு பணியாரம், கருப்பட்டிப் பணியாரம், குழிப்பணியாரம், வெள்ளைப் பணியாரம், சீனிப் பணியாரம், மசலா சீயம், இனிப்புச் சீயம், பால் பணியாரம் ஆகிய வகைகள் உண்டு.

வெள்ளைப் பணியாரம்

          விசேஷ நாட்களில் வீட்டிற்கு யார் வந்தாலும் வெள்ளைப் பணியாரம் கண்டிப்பாக உண்டு. இந்த வெள்ளைப் பணியாரம் செய்வதற்கு அரை படிப் பச்சரிசியைப் படி அளவுக்கு மட்டமாக எடுத்துக் கொண்டு, அதன் மேல் கோபுரமாக உளுந்தம் பருப்பை அளந்து எடுத்து ஊறவைத்து, அரைத்துத் தோசை மாவு பதத்தில் தேவையான அளவு உப்பைச் சேர்த்து, லேசாகத் தீயை எரியவிட்டுக் காய்ந்த எண்ணெயில் மாவை ஊற்றி, வெந்த பிறகு திருப்பி வேக வைத்து எடுக்கிறார்கள். இதற்குத் தொட்டுக் கொள்ள டாபர் சட்னி வைக்கிறார்கள். டாபர் சட்னி என்பது தக்காளியும் வரமிளகாயும் சேர்த்து அரைப்பதாகும்.

இனிப்பு வகைகள்

          இனிப்பு வகைகள் என்பது உக்ரா, மணக்கோலம், அதிரசம், காப்பரிசி, மாவு உருண்டை, ஆடிக்கூழ் (கும்மாயம்), கவனி அரிசி, சத்துமா (வேங்கை அரிசி மாவு, திரட்டுப்பால் ஆகியவை ஆகும்.

          இவர்கள் பல வெளிநாடுகளுக்குச் சென்றாலும், பர்மாவிலிருந்து கொண்டு வந்த உணவு கவனி அரிசி நேரடியாக கிடைக்கிறது. சென்னையில் கருப்பு அரிசி என்று விற்கப்படுகிறது. அந்த காலத்தில் இந்த அரிசி காரைக்குடியைச் சுற்றியுள்ள பகுதியில் கிடைக்கிறது. இந்த அரிசியை நாட்டு கவனி அரிசி என்று அழைக்கப்படுகிறது. இந்த அரிசி காபிப் பொடிக் கலரில் இருக்கும்.

·        கவனி அரிசியை நான்கு மணி நேரம் நன்றாக ஊறவைத்து, வேகவைத்த பிறகு தேங்காயையும், சீனியையும் சேர்த்துச் சாப்பிடுகிறார்கள்.

·        ஆடிக்கூழ் (அல்லது) கும்மாயம் என்றும் அழைக்கும் இந்த கூழுக்கு பச்சை அரிசி 1 கிலோ, உளுந்தம் பருப்பு ½ கிலோவும் எடுத்து வறுத்து அரைத்துக் கொள்ள வேண்டும். அரைத்த மாவை நெய்யில் வறுக்க வேண்டும். அதன் பிறகு கருப்பட்டி 200 கிராம், வெல்லம் 800 கிராம் சேர்த்துப் பாகாகக் காய்ச்சி வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த பாகில் மாவைக் கரைத்துக் கொண்டு இரும்புச் சட்டியில் கொஞ்சம் கொஞ்சமாக நெய்விட்டு கட்டிவிடாமல் சட்டியில் பிடிக்காமல் கிண்டி பின் இறக்கி வைத்து விடவேண்டும்.

முறுக்கு வகைகள்

          தேன் குழல், மசாலா தேன்குழல், அச்சுமுறுக்கு, கை முறுக்கு (ஐந்து சுற்று, ஏழு சுற்று, ஒன்பது சுற்று என்ற வகைகள்), ஆகியவை. தேன்குழலை முக்கால் வேக்காட்டில் வேவைத்த பதத்தில் எடுத்துப் பச்சைத் தேன்குழல் என்று சாப்பிடுவார்கள்.

குழம்பு வகைகள்

          புளி மண்டி, புளிக்கரைசல், சும்மா குழம்பு, கெட்டிக் குழம்பு, இளங்குழம்பு, திறக்கல், கோஸ்மல்லி ஆகியவை ஆகும்.

·        தோசைக்குத் தொட்டுக் கொள்ள புளிக்கரைசல் செய்வார்கள். இதற்கு இரண்டு டம்ளர் தண்ணீர், கொஞ்சம் புளியை ஊறவைத்துக் கரைத்த பிறகு இரண்டு சின்ன வெங்காயத்தை வெட்டிப்போட்டு, ஒரு வறமிளகாயைக் கிள்ளிப் போட்டு உப்புச் சேர்த்தால் புளிக்கரைசல் ரெடி. இதில் எந்த வேகவைத்த பொருட்களையும் சேர்ப்பதில்லை.

·        கோஸ் மல்லியை இட்லிக்கும் தாளித்த இடியாப்பத்திற்கும் ஊற்றிக் கொள்வார்கள். கோஸ் மல்லி என்பது கத்திரிக்காயை அவித்து, அதன் தோலை உரித்து அவித்த கத்திரிக்காயைப் பிசைந்து புளியைக் கரைத்துச் சேர்த்து வெங்காயத்துடன் தாளித்துத் தயாரிக்கப்படுகிறது.

·        புளி மண்டியை இட்லிக்குத் தொட்டுக் கொள்கிறார்கள். அரிசி களைந்த நீரை எடுத்து அதில் புளியைக் கரைத்து அதில் வறுத்த காய்கறிகளைப் போட்டுக் கொதிக்க வைத்தால் புளிமண்டி தயார்.

சீடை வகைகள்

          சீப்புச் சீடை, உப்புச் சீடை என்னும் இரு வகைகள் உண்டு.

·        உப்பு சீடை என்பது புழுங்கல் அரிசியை ஒரு மணி நேரம் ஊறவைத்து நன்கு நைஸாக அரைத்துக் கொண்டு, பொட்டுக் கடலையை மாவாக அரைத்து, தேங்காய்ப் பூவையும் அரைத்துச் சேர்த்து, சீரகமும் சேர்த்து மாவைப் பிசைந்து சிறிய சிறிய உருண்டையாக உருட்டிக் காய வைத்த எண்ணெயில் போட்டு வேக வைத்து எடுக்க வேண்டும். மாவில் நைஸாக இல்லையென்றால் வெடிக்கும்.

அடை தோசைகள்

          இரண்டு வகைகள் உண்டு. அடை, அடை தோசை என்று அழைப்பர். அடைக்குப் புழுங்கல் அரிசியும் அடைத்தோசைக்குப் பச்சை அரிசியும் பயன்படுத்துகிறார்கள்.

கொழுக்கட்டை வகைகள்

·        பதநி கொழுக்கட்டை, எருக்களம் கொழுக்கட்டை, மோதகம் ஆகிய வகைகள் உண்டு.

·         வெங்காய மருந்து, புள்ள மருந்து, எண்ணெய்க் களி போன்ற மருந்து உணவுப் பொருட்களும் உண்டு.

·        வத்தல் வகைகளில் கூழு வத்தல், கறி வடகம் என்ற வகைகள் உண்டு.

·        ஊறுகாயில் வெள்ள மிளகாய் மற்றும் சுண்டைக் காயும் பூண்டும் கலந்து தயாரிக்கப்படும்.

இவர்கள் சாப்பிடுகறி தட்டை வட்டில் என்று கூறுவர். வட்டியில் சாப்பிடும் பொழுது காய்கறி வைக்கும் தட்டைக் கிண்ணி என்றும் கூறுவர். கொஞ்சம் வயதானவர்கள் கும்பாவில் சாப்பிடுவார்கள். கும்பா என்பது கோப்பை மாதிரியில் பெரிய வடிவத்தில் இருக்கும். கும்பாவில் சாப்பிடும் பொழுது வெஞ்சனம் வைக்க கும்பாவிற்கு இணையான சிறிய பாத்திரம் இருக்கும். வட்டிலும் கும்பாவும் வெள்ளியில் செய்யப்பட்டிருக்கும்.

பார்வை நூல்

1.  தொகுப்பாசிரியர் பக்தவத்சல பாரதி, தமிழர் உணவு, காலச் சுவடு பதிப்பகம், 669 கே.பி.சாலை, நாகர்கோயில் -629 001. முதல் பதிப்பு 2011.

Comments

Popular posts from this blog

பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்

திருக்குறளில் எனது சிறு முயற்சியாக… .  " பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்"  என்ற இத்தலைப்பில் அமைந்த 133 வரிகள் கொண்ட இப்படைப்பு முருகனின் ” கந்த சஷ்டி  கவசம் ” போன்று உருவாக்கப்பட்டது. இப்பகுதி அறத்துப்பால் 38  அதிகாரங்கள், பொருட்பால் 70  அதிகாரங்களிலிருந்து மட்டும் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்ற முறையில், திருக்குறளின் சாராக அமைத்து வழங்கியுள்ளேன். அறமும், பொருளும் ஒருவருக்கு அமைந்தால் இன்பம் தானாகக் கிட்டும் என்ற நோக்கத்தில் அமைக்கப்பட்டது. ”பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்” காக்க காக்க அறத்தைக் காக்க (1) காக்க காக்கக் குறளைக் காக்க உலக மொழிகளில் ஒப்பற்ற நூலாம், நோக்க நோக்க பெயா்த்து நோக்க மனிதன் கற்று மனிதம் காக்க ஐம்பொறி உணா்வை காக்க காக்க புகழுடன் வாழ ஒழுக்கம் காக்க அறநெறி வாழ்வை இறைவழி காக்க வானம் பொய்யா வளத்தைக் காக்க பசிப்பிணி யில்லா உலகைக் காக்க பற்றற்ற வாழ்வை பரிவுடன் காக்க அறத்தைக் காக்க அன்பைக் காக்க (2) குறையிலா வாழ்வை குணமுடன் காக்க இல்லற வாழ்வுடன் நல்லறம் காக்க பண்பொடு பயனும் அறத்துடன் காக்க வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க வாழ்க...

எண்ணம் போல் வாழ்வு

                                   எண்ணம் போல் வாழ்வு   நினைவுகளே பழக்கவழக்கங்களாக மாறுகின்றன. எனவே தான் எண்ணம் போல் வாழ்வு அனைவருக்கும் அமைகிறது. வெற்றி பெற்ற அனைவரும் பிறரைத் தன் நடத்தையால் மகிழ்விக்க நினைத்தவர்களே என்பதை நாம் நினைவில் நிறுத்த வேண்டும். ·         வங்கியில் பணத்தைச் சேமிப்பதைவிட இதயத்தில் இனிய எண்ணங்களைச் சேமிப்பது மகிழ்ச்சியான வாழ்விற்கு உதவும் வைப்பு நிதியாகும். ·                    மனம் - மகிழ்ச்சி அளிக்காத நிகழ்வுகளை மறந்து விடும் இயல்புடையது. ·                      வெறுப்பு - மனத்தையும், உணர்வையும் பற்றிக் கொண்டுள்ள தொற்று நோய். எனவே வெறுப்பிற்கு விடுதலை தரும்வரை மகிழ்ச்சி நம்மை அணுகாது. ·         கடமையைச் செய்யுங்கள், மகிழ்ச்சியை அறுவடை செய்யலாம். நன்மை, தீமை என்று எது நடந்...

கோப்பெருஞ்சோழன் – பிசிராந்தையார் நட்பு

  கோப்பெருஞ்சோழன் – பிசிராந்தையார் நட்பு   வடக்கிருத்தல் தமிழரின் நம்பிக்கை சார்ந்த பழக்கவழக்கங்களில் வடக்கிருத்தலை ஆடவர் மேற்கொண்டனர். ஊருக்கு வடபால் ஓரிடத்தில் வடக்குத் திசை நோக்கி அமர்ந்த வண்ணம் உண்ணாநோன்பிருந்து உயிர்த்துறப்பதை ‘ வடக்கிருத்தல் ’ எனக் கொண்டனர். வடக்கிருக்க அடிப்படைக் காரணியாக அமைவன மானம் , வீரம் , நட்பு , தன்நோக்கம் நிறைவேறாமை எனலாம். வீரர் , புலவர் , மன்னர் ஆகியோர் வடக்கிருந்தமையை இலக்கியங்கள் வாயிலாக அறிய முடிகிறது. அவ்வாறு உயிர் துறப்பவர் துறக்கம் பெறுவர் என நம்பினர்.       கலைக்களஞ்சியம் , வடக்கிருத்தலை ‘ உத்ரக மனம் ’ என்றும் ‘ மகாப் பிரத்தானம் ’ என்றும் கூறும். ‘ நாணத்தகு நிலை ’ நேர்ந்ததனாற் சிலர் வடக்கிருந்ததாகத் தமிழ் நூல்கள் கூறுகின்றன என்று கூறுகிறது.           கோப்பெருஞ்சோழன் வடக்கிருந்து உயிர் விட்டான். அவன் உயிர்விட்டப் பிறகு அவனை பார்க்காமலே நட்புக் கொண்டிருந்தப் பிசிராந்தையாரும், சோழனுடன் இருந்த பொத்தியார் என்ற புலவரும் அவன் வடக்கிருந்த இடத்தின் அருகில் வடக்கிருந்து உயிர்...