நீராகாரம்
நீராகாராம் என்று சொல்லப்படும் பழையசோற்று
நீர் வண்டல் நிலமக்களின் விடியல் குடி உணவாகிறது. இதை நில உடைமையாளர்கள் நீர் உணவாக
அருந்துகிறார்கள். உழைக்கும் மக்கள் இரவில் சமைத்து சோற்றில் மிஞ்சியிருப்பதில் தண்ணீர்
ஊற்றி வைத்திருந்து விடியலில் அந்நீரோடு கொஞ்சம் சோற்றைப் போட்டுக் கரைத்து, உப்புக்
கலந்து குடித்துவிட்டு வேலைக்குச் செல்வார்கள். உயர்சாதிச் சாகுபடியாளர்களும் நில உடைமையாளர்களும்
பழைய சோற்று நீருக்கென்று தனித்தே மண்பானையில் ஆக்கி இளஞ்சூடு பக்குவத்தில் நீர் ஊற்றி
வேடுகட்டி வைத்து விடுவார்கள். இப்படித் தனியாகச் சோறு ஆக்குவதற்குப் பயன்படுத்தும்
அரிசி கார் அரிசி என்று அழைக்கின்றார்கள்.
இந்த நெல் அரிசி வழக்கமாக நெல் விளையும்
நஞ்சைக் காணியில் விளைவதில்லை. நீரோடைகளிலும் குட்டைகளிலும் நீர் தேங்குவதற்கு முன்
மழை பெய்ததும் கருஞ்சிவப்பு நிறம் கொண்டு சற்று நீளமாகவும் பருமனாகவும் இருக்கும் கார்
நெல் விதையை விதைத்து விடுவார்கள். அது முளைத்து வளர்ந்து நீர்மட்டம் உயர உயர அந்தப்
பயிரும் சட்டென்று உயர்ந்து வளரும் தன்மை கொண்டது. ஓடைகளிலோ குட்டைகளிலோ குறிப்பிட்ட
உயரத்திற்கு மேல் நீர் தங்காது. அதன் நீர்மட்டத்திற்கு மேல் வளர்ந்த அந்தக் கார் நெல்
பயிரில் கதிர் விடும். முற்றிய கதிர், தொங்கல் விட்டதும் கதிரை மட்டும் அறுத்து நெல்லைச்
சேகரித்து விடுவார்கள். இந்த நெற்பயிர் பத்துநாள் பதினைந்து நாள் வரை நீரில் மூழ்கியிருந்தாலும்
முளை கண்டு விடாது. நிறமும் குணமும் மங்கிடாது.
இந்தக் கார் அரிசியைக் கொண்டு தனித்து வடித்து
நீர் ஊற்றி வைத்து விடுவார்கள். காலையில் நீராகாரமாகப் பயன்படுத்துகிறார்கள். நான்கு
ஐந்து நாட்கள் வரை அப்படி கெடாமல் நொதித்து நூலாகப் போகாது. சோறு முழிப்பு முழிப்பாக
இருக்கும். அந்தச் சோற்றிலிருந்து இறங்கு சாறுதான் நீராகாரமாகிறது. குறிப்பிட்ட நாட்களுக்குப்
பின்னர் அந்தச் சோற்றை உண்பார்கள். அவ்வாறு உண்ணும் போது மீன் கொதியைப் பயன்படுத்துவார்கள்.
குறிப்பாக வரால், குரவை மீன் கொதிகளை இந்தப் பழைய சோற்று உணவுக்குத் துணையாக வைத்துக்
கொள்வார்கள். மீன் கொதியும் வறுவலும் போதையைக் கூட்டவும் வரம்பு மீறி அந்தச் சோற்றைத்
தின்னவும் துணை புரிகிறது என்று சொன்னால் மிகையில்லை.
பார்வை நூல்
1.
தொகுப்பாசிரியர்
பக்தவத்சலபாரதி – தமிழர் உணவு, காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில் – 629 001, முதல்
பதிப்பு டிசம்பர் 2011.
Comments
Post a Comment