Skip to main content

கற்றல் நன்றே! கற்றல் நன்றே!

 

கற்றல் நன்றே! கற்றல் நன்றே!

 

புறநானூறு, பாடல் எண் -183

பாடியவர் – பாண்டியன் ஆரியப்படைக் கடந்த நெடுஞ்செழியன் கல்வியின் மேன்மை குறித்துப் பாடிய பாடல்.

துறை – பொதுவியல்

  மூத்தோன் அரசு கட்டில் ஏறுதல் என்ற முறைமையை நீக்கி அறிவுடையவனுக்குத்தான் அத்தகுதி உண்டு என்று குறிப்பிடப் பெற்றிருப்பதைக் காணலாம்.

        ”உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்    

        பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே

        பிறப்போ ரன்ன உடன்வயிற் றுள்ளும்

        சிறப்பின் பாலால் தாயும்மனம் திரியும்

        ஒருகுடிப் பிறந்த பல்லோ ருள்ளும்

 

         மூத்தோன் வருக என்னாது அவருள்

        அறிவுடை யோன்ஆறு அரசும் செல்லும்

        வேற்றுமை தெரிந்த நாற்பால் உள்ளும்

        கீழ்ப்பால் ஒருவன் கற்பின்

        மேற்பால் ஒருவனும் அவன்கட் படுமே”

 

          கற்பிக்கும் ஆசிரியருக்குத் தேவைப்படும் போது வேண்டிய உதவிகள் செய்தும், வேண்டும் பொருளைத் தந்தும் (கற்றுச் சிறந்தோங்கி வாழும்) பின்னாளில், இப்படி இருந்த நிலைமைகளை எண்ணி வருந்தாமலும், வெறுப்படையாமலும் கற்பது நன்றாகும். ஒரு தாய் வயிற்றில் பிறந்த பல பிள்ளைகளுள், கல்விச் சிறப்பால் உயர்ந்தவனைத் தாய் மனம் விரும்பும். கல்லாத பிள்ளையை எண்ணித் தாயுள்ளம் கூட வேறுபடக் கூடும். வீட்டில் மட்டுமல்ல, வெளியில் பொது இடங்களிலும் ஒரு குடும்பத்தில் உள்ளவர்களில் மூத்த பிள்ளையை வருக என்றழைத்துச் சிறப்புச் செய்யாமல், அந்தக் குடும்பத்தில் உள்ள கற்றறிந்த பிள்ளையையே அரசனும் விரும்புவான். அந்தப் பிள்ளை செல்வதையே அரசனும் கேட்பான். இதுமட்டுமா? வேறு வேறு வகையாக உள்ள நான்கு குல மக்களுக்குள்ளும், கீழ்ச் சாதிக்காரன் ஒருவன் கற்றறிவு உடையவனாக இருந்தால், மேல் சாதியான அவனிடம் சென்று பணிந்து கற்க வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாகின்றான். எனவே இத்தகைய சிறப்புடைய கல்வியை எப்படியேனும் கற்றுத் தெளிதல் அவசியம்.

          வீரத்தைப் போற்றும் புறநானூற்றில் கல்வியின் மேம்பாடு குறித்து ஒரு மன்னன் பாடிய கவிதையாகும். இக்கவிதையின் கரு பொன்போன்று போற்றத்தக்கது.

Comments

Popular posts from this blog

எண்ணம் போல் வாழ்வு

                                                                        எண்ணம் போல் வாழ்வு             நினைவுகளே பழக்கவழக்கங்களாக மாறுகின்றன. எனவே தான் எண்ணம் போல் வாழ்வு அனைவருக்கும் அமைகிறது. வெற்றி பெற்ற அனைவரும் பிறரைத் தன் நடத்தையால் மகிழ்விக்க நினைத்தவர்களே என்பதை நாம் நினைவில் நிறுத்த வேண்டும். ·         வங்கியில் பணத்தைச் சேமிப்பதைவிட இதயத்தில் இனிய எண்ணங்களைச் சேமிப்பது மகிழ்ச்சியான வாழ்விற்கு உதவும் வைப்பு நிதியாகும். ·      மனம் - மகிழ்ச்சி அளிக்காத நிகழ்வுகளை மறந்து விடும் இயல்புடையது. ·         வெறுப்பு - மனத்தையும், உணர்வையும் பற்றிக் கொண்டுள்ள தொற்று நோய். எனவே வெறுப்பிற்கு விடுதலை தரும்வரை மகிழ்ச்சி நம்மை அணுகாது. ·   ...

பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்

திருக்குறளில் எனது சிறு முயற்சியாக… .  " பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்"  என்ற இத்தலைப்பில் அமைந்த 133 வரிகள் கொண்ட இப்படைப்பு முருகனின் ” கந்த சஷ்டி  கவசம் ” போன்று உருவாக்கப்பட்டது. இப்பகுதி அறத்துப்பால் 38  அதிகாரங்கள், பொருட்பால் 70  அதிகாரங்களிலிருந்து மட்டும் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்ற முறையில், திருக்குறளின் சாராக அமைத்து வழங்கியுள்ளேன். அறமும், பொருளும் ஒருவருக்கு அமைந்தால் இன்பம் தானாகக் கிட்டும் என்ற நோக்கத்தில் அமைக்கப்பட்டது. ”பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்” காக்க காக்க அறத்தைக் காக்க (1) காக்க காக்கக் குறளைக் காக்க உலக மொழிகளில் ஒப்பற்ற நூலாம், நோக்க நோக்க பெயா்த்து நோக்க மனிதன் கற்று மனிதம் காக்க ஐம்பொறி உணா்வை காக்க காக்க புகழுடன் வாழ ஒழுக்கம் காக்க அறநெறி வாழ்வை இறைவழி காக்க வானம் பொய்யா வளத்தைக் காக்க பசிப்பிணி யில்லா உலகைக் காக்க பற்றற்ற வாழ்வை பரிவுடன் காக்க அறத்தைக் காக்க அன்பைக் காக்க (2) குறையிலா வாழ்வை குணமுடன் காக்க இல்லற வாழ்வுடன் நல்லறம் காக்க பண்பொடு பயனும் அறத்துடன் காக்க வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க வாழ்க...

மனிதனாக வாழ ...

  மனிதனாக வாழ ... ·         பிறர் உன்னை தூற்றும் பொழுது தலை நிமிர்ந்து நில். ·         பொறாமை, கோபம், வீண் மயக்கம் போன்ற குணங்களை விரோதிகளாக எண்ணுதல். ·         வெற்றி -   தோல்வி,   இன்பம் – துன்பம் இரண்டையும் சமமாக பாவித்தல். ·         உண்மைக்குப் புறம்பானவற்றைச் செய்யாதிருத்தல். ·         நண்பர்கள் இல்லையென்றாலும் பரவாயில்லை. பகைவர்கள் இல்லாமல் வாழ முயற்சி செய்தல். ·         மனத்திடத்தோடு வாழ்தல். ·         ஏற்றத் தாழ்வு இல்லா மனநிலையுடன் இருத்தல். ·         மனிதனுக்கு உரியது - கலங்காத அறிவு, அன்பு நிறைந்த மனம், ஆரோக்கியமான   உடல். ·         எதற்கும் அஞ்சாதே -   பயம் நம்மை கோழையாக்கி விடும்.      யாரையும் வெறுக்காதே ...