நில வளம் காக்க, நீர் வளம் பெருக்கு!
நூல் – புறநானூறு, பாடல் எண் - 18
பாடியவர் – குடப் புலவியனார்
திணை – பொதுவியல் திணை
பாடப்பட்டவன் – தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டின் நெடுஞ்செழியன்.
(தலையாலங்கானம் என்னுமிடத்தே முடிவேந்தரையும் வேளிர்களையும்
வென்றதால், தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் என்று சிறப்பிக்கப்படும் நெடுஞ்செழியன்
பால், நாட்டில் நீர் வளம் மிக வேண்டும் என்னும் கருத்தை வலியுறுத்த, குடநாட்டைச் சேர்ந்த
புலவியனார் என்னும் புலவர் பாடியது.)
”முழங்கு முந்நீர் முழுவதும் வளைஇப்
பரந்துபட்ட வியன்ஞாலம்
தாளின் தந்து தம்புகழ் நிறீஇ:
ஒருதாம் ஆகிய உரவோர் உம்பல்!
ஒன்றுபத்து அடுக்கிய கோடிகடை இரீஇய
பெருமைத்து ஆகநின் ஆயுள் தானே!
நீர்த் தாழ்ந்த குறுங் காஞ்சிப்
பூக் கதூஉம் இன வாளை
நுண் ஆரல், பரு வரால்
குரூஉக் கெடிற்ற குண்டு அகழி;
வான் உட்கும் வடிநீள் மதில்
மல்லன் மூதூர் வய வேந்தே!
செல்லும் உலகத்துச் செல்வம் வேண்டினும்
ஞாலம் காவலர் தோள்வலி முருக்கி
ஒருநீ ஆகல் வேண்டினும் சிறந்த
நல்இசை நிறுத்தல் வேண்டினும் மற்றதன்
தகுதி கேள் இனி மிகுதியான
நீரின்று அமையா யாக்கைக்கு எல்லாம்
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத் தோரே!
உண்டி முதற்றே உணவின் பிண்டம்
உணவெனப் படுவது நிலத்தொடு நீரே
நீரும் நிலனும் புணரியோர் ஈண்டு
உடம்பும் உயிரும் படைத்திசி னோரே;
வித்திவான் நோக்கும் புன்புலம் கண்ணகன்
வைப்பிற்று ஆயினும் நண்ணி ஆளும்
இறைவன் தாட்குஉதவாதே அதனால்
அடுபோர்ச் செழிய! இகழாது வல்லே
நிலன்நெளி மருங்கின் நீர்நிலை பெருகத்
தட்டோர் அம்ம இவண்தட் டோரே;
தள்ளா தோர்இவண் தள்ளா தோரே.
ஒலி முழங்கும் கடல் சூழ்ந்த இவ்வுலகத்தைத் தம் முயற்சியால் வென்று புகழ் கொள்ள
அரசாண்ட வீரர் மரபில் வந்தவனே! ஒன்று பத்து எனத் தொடங்கும் எண்ணிக்கையில் இறுதி எண்ணாகிய
கோடி இலட்சங் கோடி எனும் பேரெண்ணிக்கை உடையதாக நீ வாழ்க! நின் வாழ்நாள் வாழ்க! நீரின்
மேல் படரந்த சிறு காஞ்சிப் பூக் கண்டு மயங்கும்,
வாளையும், சிறு ஆரலும், பெரிய வராலும், கரிய கெளிறும் ஆகிய மீன்கள் நிறைந்த ஆழமான அகழியும்,
வானம் வரை உயர்ந்த நெடிய மதிற் சுவரும் உடைய வளமிக்க பழம் பதிக்கு அரசே! பாண்டியனே!
வானுலகில், மறுமையில் அடைய விரும்பும் செல்வத்தை நீ வேண்டினாலும், இவ்வுலகத்தைக் காத்து
நின்று அரசாளும் மன்னர் பலரை வென்று, வேந்தர் வேந்தனாக நீ ஒருவனே இவ்வுலகம் முழுவதையும்
அரசாள நினைத்தாலும், மிக்க புகழுடனே இவ்வுலகில் வாழ விரும்பினாலும், உன் ஆசை நிறைவேறுவதற்கான
வழிகளைச் சொல்லுகிறேன், கேட்பாயாக! பெருமைக் குரியவனே! நீரின்றி வாழ முடியாக இவ்வுயிர்
உடலின் பசி நீங்க உணவு கொடுப்பவர்கள், அவ்வுடலுக்கு உயிர் கொடுத்தவர்கள் ஆவார்கள்!
எனவே உடலுக்கு உயிர் போன்றதாகும் உணவு. உணவெனப்படுவது நிலத்தோடு சேர்ந்த நீர் ஆகும்.
எனவே தான், நீரும் நிலமும் திருத்தி விளைவுக்கு உதவியவர்கள், உயிரும் உடலும் படைத்தளித்துக்
காப்போர் என்னும் புகழுக்குரியவர் ஆகின்றனர்.
பரப்பளவில் உயர்ந்த தென்றாலும், (நெல் முதலியவற்றை
விளைத்து விட்டு) வான் மழையை எதிர்ப்பார்த்துக் கிடக்கும் வறண்ட பூமியால், அதனை யாளும்
மன்னவனுக்கு ஒரு பயனும் உண்டாகாது. ஆகவே, போரில் வல்ல பாண்டியன் நெடுஞ்செழியனே!
நான் கூறிய இவற்றை மறவாது கைக் கொள்க. பள்ளத்தாக்குகளிலே நீரினைத் தேக்கி நீர் நிலைகளை
உண்டாக்கியவர்களே, தாம் செல்லும் வானுலக இன்பங்களையும், புகழையும் இவ்வுலகில் பெற்று
மகிழ்வோர் ஆவார்கள். அப்படி நீரினைத் தேக்கி விளைவுக்கு உதவார்கள், இவ்வுலகில் தம்
புகழை நிலை நிறுத்த முடியாதவர் ஆவார்கள்.
(நீரைத் தேக்கி
நிலவளம் காக்க வேண்டும் என்ற இன்றைய நீர் விஞ்ஞானம் அன்றே நினைவு படுத்தப்பட்டுள்ளது)
Comments
Post a Comment