வீரத்தாயின் செயல்
ஔவையார்,
அதியமானின் வீரத்தைப் புகழ்ந்து பாடியதோடு நில்லாமல், நாடு காக்கப்போரிடும் படைவீரர்களின் வீரமாண்பையும், அவர்களைப் பெற்ற வீரத்தாயாரின் மனநிலையையும்
புகழ்ந்து பாடியுள்ளார். வேந்தரிடையே போர் நிகழும் போது, போர்க் களத்தில் அருஞ்செயல்
பல செய்து, பல எதிரிகளை வீழ்த்தி விழுப்புண் பல ஏற்று வெற்றியுடன் திரும்பிய வீரன்
ஒருவனைக் கண்ட தாய் வீரங்கண்டு மகிழ்ந்தாலும், அவள் உள்ளத்தில் ஒரு பெருங்குறை இருந்தது.
அதையறிந்த ஔவையார் அவ்வீரத்தாயாரிடம் ‘உன் மனக்குறை யாது? என்று கேட்டார். அதற்கு அவ்வீரத்தாய்
கூறிய பதில்,
”வெள்ளை வெள்யாட்டுச் செச்சை போலத்
தன்னோ ரன்ன இளையர் இருப்பப்
பலர்மீது நீட்டிய மண்டைஎன் சிறுவனைக்
கால்கழி கட்டிலில் கிடப்பித்
தூவெள் அறுவை போர்ப்பித் திலதே!” புறம்
286
‘போர்க்களத்தில் வீரமரணமடைந்து பாடையில் கிடத்தி வெள்ளாடை
போர்த்தப்படும் வாய்ப்பு என் மகனுக்குக் கிடைக்கவில்லையே’ என்று வருந்துகிறாள்.
”புறந்தார்கண் நீர்மல்கச் சாகின்பின் சாக்காடு
இரந்துகோள் தக்கது உடைத்து”4
என்னும் வள்ளுவர் வாய்மொழிக்கேற்ப தலைவன் கண்ணீர் வடிக்கும்படியாக
வீரமரணம் அடையும் வாய்ப்பு கிடைக்கவில்லையே என வருந்துகிறாள். இத்தகைய வீரத்தாயரும்,
வீரரும் வாழ்ந்த தமிழகம் சங்க காலத் தமிழகம்!
Comments
Post a Comment