Skip to main content

தமிழரின் அருங்குணங்கள்

 

தமிழரின்  அருங்குணங்கள்

 

          ஒவ்வொரு பொருளுக்கும் ஒவ்வொரு பண்பு உண்டு. பாலுக்கு உரிய பண்பு, இனிமை; தேனுக்கு உரிய பண்பு, தீஞ்சுவை; தீயின் பண்பு, வெம்மை; நீரின் பண்பு, தண்மை, இவ்வாறு இயற்கையிலேயே ஒவ்வொன்றும் ஒவ்வொரு பண்பைப் பெற்றிருக்கின்றன. அன்றேல் மக்கட் பண்பு என்பது,

          ”அரம்போலும் கூர்மை ரேனும் மரம்போல்வர்

           மக்கட்பண் பில்லா தவர்” (குறள், 997)

என்கிறார் திருவள்ளுவர். அவர் குறிக்கும் மக்கட்பண்பு என்பது அன்புடைமை என்பதையும், அப்பண்பு உயர்குடிப் பிறந்தாரிடத்துக் காணப்படும் சிறந்த இயல்பு என்பதையும் தெளிவாகக் குறிக்கின்றார்.

          ”அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் இவ்விரண்டும்

           பண்புடைமை என்னும் வழக்கு” (குறள்,992)

          அன்பில்லாத உயிர் உலகத்தில் வாழ்வது, பாலை வனத்தில் பட்டமரம் தளிர்த்தற்கு ஒப்பானது என வள்ளுவர் கூறும் கருத்து சிந்தனைக்கு உரியது.  அன்பற்ற மனிதன் உயிரற்ற பிணம் போன்றவன் என்பதை, மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர் என அவர் கூறும் சொற்கள் உணர்த்துகின்றன.

          உலகம் நிலை பெற்றிருப்பதற்குக் காரணம், பண்புடைய சான்றோர்கள் வாழ்வதுதான். அவர்கள் இல்லாவிடில் உலகம் எப்போதோ அழிந்திருக்கும் என்பது வள்ளுவரின் பண்புடைமைக் கொள்கை,

          ”பண்புடையார்ப் பட்டுண்டு உலகம் அதுவின்றேல்

           மண்புக்கு மாய்வது மன்”

என்ற குறள் இக்கருத்தைத் தெளிவாக்குகிறது. சான்றோர்களின் பண்புடைமையின் தன்மைகள் என்பதற்குப் புறநானூற்றுப் பாடலில்,

         ”உண்டா லம்மஇவ் வுலகம் இந்திரர்

        அமிழ்தம் இயைவ தாயினும் இனிதெனத்

         தமியர் உண்டலும் இலரே; முனிவிலர்;

        துஞ்சலும் இலர்பிறர் அஞ்சுவ தஞ்சிப்

        புகழ்எனின் உயிரும் கொடுக்குவர்; பழிஎனின்

        உலகுடன் பெறினும் கொள்ளலர்; அயர்விலர்

        அன்ன மாட்சி அனைய ராகித்

        தமக்கென முயலா நோன்தாள்

        பிறர்க்கென முயலுநர் உண்மை யானே” (புறம், 182)

”இந்திரர் உண்பதற்குரிய அமுத்மே கிடைத்த போதிலும் தாம் மட்டும் அதனைத் தனித்து உண்ணாமை, பிறர் மாட்டு வெறுப்புக் கொள்ளாமை, பிறர் பாவங்கட்குத் தானும் அஞ்சும் நாணமுடைமை, புகழ் வருமாயின் உயிரையும் கொடுக்கத் தயங்காத துணிவுடைமை, பழி வருவதாயின் உலகுடன் தரினும் கொள்ளாமை, அயர்வின்மை, தமக்கென வாழாது பிறர்க்கெனவே வாழும் பெருந்தகைமை  என பண்புகளாகக் கூறுகின்றது.

     நண்பராக இருந்து உயிருக்குயிராகப் பழகியவர்கள் நஞ்சைக் கலந்து கொண்டு வந்து கொடுத்தாலும் அதை மறுக்காமல் வாங்கிக் குடிப்பது தமிழ்ப்பண்பாட்டின் உயர் நிலை. வேறு எந்த நாட்டிலும் காண்பதற்குரிய பண்பாட்டின் சிகரம் இது!

          ”பெயக்கண்டும் நஞ்சுண் டமைவர் நயத்தக்க

          நாகரிகம் வேண்டு பவர்”

என்பது வள்ளுவன் வகுத்தரைத்த நாகரிகப் பண்பாடு.

          ”முந்தை இருந்து நட்டோர் கொடுப்பின்

           நஞ்சும் உண்பர் நனிநா கரிகர்”

என்பது சங்க இலக்கியக் கொள்கை.

          ”நஞ்சை வாயி லேகொணர்ந்து

                நண்ப ரூட்டு போதினும்

         அச்ச மில்லை அச்ச மில்லை

                அச்ச மென்ப தில்லையே!

என்பது பாரதியின் முழக்கம்.

          அன்புடைமை மட்டுமன்று; நாண், ஒப்புரவு, கண்ணோட்டம், வாய்மை என்ற ஐந்தையும் சால்புடைமையின் தூண்களாகக் கண்டதும் தமிழ்ப் பண்பாடாகும்.

          இப்பண்பாடுகள் இன்றும் தமிழகத்தில் நிலவி வருவதைக் காணலாம். பண்பாடு என்பது அதன் பொருளை அறிவது அருமை. கரடுமுரடான நிலத்தை உழும் வயலாகச் சரி செய்வதைப் பண்படுத்துதல் என்று கூறுகின்றோம். பண்பாடு என்பது பண்பட்ட மனத்தைத்தான் குறிக்கும். ஒரு தனிமனிதன் சிறப்பைப் பண்பாடு என்று கூறுவதில்லை. ஒரு நாட்டின் பண்பாடு, ஓர் இனத்தின் பண்பாடு என்று கூறுவது தான் மரபு.

பார்வை நூல்

1.  அழகப்பன். ஆறு.முனைவர், தமிழ்ப் பேழை, திருவரசு புத்தக நிலையம், சென்னை – 600 017, இரண்டாம் பதிப்பு – 2001.

Comments

Popular posts from this blog

எண்ணம் போல் வாழ்வு

                                                                        எண்ணம் போல் வாழ்வு             நினைவுகளே பழக்கவழக்கங்களாக மாறுகின்றன. எனவே தான் எண்ணம் போல் வாழ்வு அனைவருக்கும் அமைகிறது. வெற்றி பெற்ற அனைவரும் பிறரைத் தன் நடத்தையால் மகிழ்விக்க நினைத்தவர்களே என்பதை நாம் நினைவில் நிறுத்த வேண்டும். ·         வங்கியில் பணத்தைச் சேமிப்பதைவிட இதயத்தில் இனிய எண்ணங்களைச் சேமிப்பது மகிழ்ச்சியான வாழ்விற்கு உதவும் வைப்பு நிதியாகும். ·      மனம் - மகிழ்ச்சி அளிக்காத நிகழ்வுகளை மறந்து விடும் இயல்புடையது. ·         வெறுப்பு - மனத்தையும், உணர்வையும் பற்றிக் கொண்டுள்ள தொற்று நோய். எனவே வெறுப்பிற்கு விடுதலை தரும்வரை மகிழ்ச்சி நம்மை அணுகாது. ·   ...

பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்

திருக்குறளில் எனது சிறு முயற்சியாக… .  " பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்"  என்ற இத்தலைப்பில் அமைந்த 133 வரிகள் கொண்ட இப்படைப்பு முருகனின் ” கந்த சஷ்டி  கவசம் ” போன்று உருவாக்கப்பட்டது. இப்பகுதி அறத்துப்பால் 38  அதிகாரங்கள், பொருட்பால் 70  அதிகாரங்களிலிருந்து மட்டும் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்ற முறையில், திருக்குறளின் சாராக அமைத்து வழங்கியுள்ளேன். அறமும், பொருளும் ஒருவருக்கு அமைந்தால் இன்பம் தானாகக் கிட்டும் என்ற நோக்கத்தில் அமைக்கப்பட்டது. ”பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்” காக்க காக்க அறத்தைக் காக்க (1) காக்க காக்கக் குறளைக் காக்க உலக மொழிகளில் ஒப்பற்ற நூலாம், நோக்க நோக்க பெயா்த்து நோக்க மனிதன் கற்று மனிதம் காக்க ஐம்பொறி உணா்வை காக்க காக்க புகழுடன் வாழ ஒழுக்கம் காக்க அறநெறி வாழ்வை இறைவழி காக்க வானம் பொய்யா வளத்தைக் காக்க பசிப்பிணி யில்லா உலகைக் காக்க பற்றற்ற வாழ்வை பரிவுடன் காக்க அறத்தைக் காக்க அன்பைக் காக்க (2) குறையிலா வாழ்வை குணமுடன் காக்க இல்லற வாழ்வுடன் நல்லறம் காக்க பண்பொடு பயனும் அறத்துடன் காக்க வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க வாழ்க...

மனிதனாக வாழ ...

  மனிதனாக வாழ ... ·         பிறர் உன்னை தூற்றும் பொழுது தலை நிமிர்ந்து நில். ·         பொறாமை, கோபம், வீண் மயக்கம் போன்ற குணங்களை விரோதிகளாக எண்ணுதல். ·         வெற்றி -   தோல்வி,   இன்பம் – துன்பம் இரண்டையும் சமமாக பாவித்தல். ·         உண்மைக்குப் புறம்பானவற்றைச் செய்யாதிருத்தல். ·         நண்பர்கள் இல்லையென்றாலும் பரவாயில்லை. பகைவர்கள் இல்லாமல் வாழ முயற்சி செய்தல். ·         மனத்திடத்தோடு வாழ்தல். ·         ஏற்றத் தாழ்வு இல்லா மனநிலையுடன் இருத்தல். ·         மனிதனுக்கு உரியது - கலங்காத அறிவு, அன்பு நிறைந்த மனம், ஆரோக்கியமான   உடல். ·         எதற்கும் அஞ்சாதே -   பயம் நம்மை கோழையாக்கி விடும்.      யாரையும் வெறுக்காதே ...