பெண்மை வெளிப்படுத்தும்
சீற்றம்
”பெண்ணொளியாள் நலம்பெற்றும்
பேசுவதோ சிறுமைமொழி
கண்ணொளியை இழித்துரைத்தல்
கயமையன்றிப் பிறிதென்னே”
என்று திரு.வி.க பெண்ணடிமையின்
இழிவையும், பெண்ணுரிமையின்
பெருமையையும் போற்றிப் புகழ்கிறார்.
”உரிமையாவது உயிர்கட்குக் கடவுளால் அளிக்கப்பட்ட ஒரு பெரும் இயற்கைக் கொடை” என்று கூறுகிறார்
அறிஞர் பிராட்வே. உரிமை என்பது ஒருவர் கொடுப்பதும், மற்றொருவர்
வாங்குவதும் அன்று. அஃது எவரிடத்திலும் எல்லாவிடத்திலும் இயல்பாய் கிடைப்பது. சிலர் தமக்குள்ள
வன்மையால் பிறர் உரிமையை அழித்தும் பறித்தும் வருகின்றனர்.
ஆறறிவு பெற்ற நாம் இருபாலருக்கும் வேறுபட்ட முறைகளைக் கற்பிக்கின்றோம். அதற்கேற்பக் கம்பர் இராமாயணத்தில் ‘அண்ணலும் நோக்கினான், அவளும் நோக்கினாள்’ என்ற காட்சியை
அமைத்திருக்கிறார். மெய்ப்பாடுகளுள் ஒன்றான சிரிப்பையும்,
”ஒருத்தி
சிரிக்கக்
கூடாத இடத்தில்
சிரித்துத்
தொலைத்தாள்
அதுதான் பாரதம்”
எனும் வைரமுத்து கவிதை வரிகளிலிருந்து பெண்களுக்குப் பிற்போக்குக் குணங்களைக் கற்பிக்கும்
விதமாக அமைத்துள்ளது.
”அச்சமும் மடமையும்
இல்லாத பெண்கள்
அழகிய தமிழ்நாட்டின்
கண்கள்!”
என்ற பாரதிதாசனின்
கவிதை வரிகளுக்கேற்ப நவீனப் பெண்களின் நிலை மாறவேண்டும்.
பெண்ணிய பிரச்சினைகள்
·
இரண்டாம்
இடத்தில் இருக்கும் தாய், மகள், மனைவி
போன்ற பதவிகளில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள்.
·
இளம்பெண்களுக்கு
எதிரான பாலியல் வன்கொடுமைகள்.
·
'கற்பு' காரணமாக சமூகத்தில் பெண்கள் பாதிக்கப்படும் நிலை.
·
பாரம்பரிய சிந்தனையிலிருந்து பெண்கள் விலகித் தனக்கென ஒரு புதிய உலகத்தை
உருவாக்குதல்.
·
பெண்களின் உழைப்பு சுரண்டப்படுதல்.
·
உரிமைகளும், உணர்வுகளும் ஒடுக்கப்படுதல்.
போன்ற உணர்வுகள் தற்கால பெண்களின் நிலையாக
உள்ளது.
பெண்ணியம் – பெண்ணுரிமை
பெண்ணியம் என்ற சொல் தமிழுக்குப் புது வரவாகும். 1889 – ஆம் ஆண்டு பெண்களின் உரிமைகளையும், போராட்டங்களையும்
குறிப்பதற்கு உமனிசம் (Womanism) என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. 1890 – ஆம் ஆண்டு இச்சொல் ‘பெமினிசம்’ என்று மாற்றம்
பெற்றது. ‘பெமினிசம்’ என்ற சொல்லின்
மூலச்சொல் ‘பெமினா’ என்ற இலத்தீன்
மொழிச் சொல்லாக விளங்குகிறது.
‘பெண்ணியம்’ - என்ற சொல் உரிமைகளையும், சிக்கல்களையும்
முன்னிலைப்படுத்தும் அமைப்பின் பெயராக விளங்குகிறது.
‘பெண்மை’ – என்ற தமிழ்ச்
சொல் பெண்ணியம் என்ற சொல்லின் பொருளோடு வேறுபட்டு விளங்குகிறது. பண்பாடு, மரபு இவற்றின்
அடிப்படையில் பேணும் பெண்ணின் இலக்கணங்களைக் குறிக்கவே பயன்பட்டு வருகிறது.
பெண்களின் நிலை (சங்க காலம் – சமகாலம் வரை)
சங்க காலத்தை வீரயுகக் காலம் என்பர். ‘ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே’ என்று பெண்
குறுக்கப்பட்ட எல்லையை ஏற்றுக் கொண்டு வாழ்ந்த காலம். பெண்களுக்கு இரண்டாம் நிலை என்பது வழக்கத்தில் வந்த காலம். இக்காலத்தில்
ஆண்களுக்கு வீரமும், பெண்களுக்குக் காதலும் விதிக்கப்பட்டன. கற்பு, குழந்தை மணம், கைம்மை, பரத்தமை, உடன்கட்டை ஏறுதல், ஆண் மகவைப்
போற்றுதல் முதலானவை புகுத்தப்பட்டன. எனவே, சங்க காலத்தில் பெண்ணடிமைக் கூறுகள் பெருமளவு இடம்பெற தொடங்கிவிட்டன
எனலாம்.
முதற்காப்பியமான சிலப்பதிகாரத்தில் கணவனைக் கேள்வி கேட்காமல் பின்பற்றும் மனைவியைப்
படைத்து, பெண்களுக்கு
முன்மாதிரியாக்கிக் காட்டுகிறது. மணிமேகலை, பெண்களுக்கு விதிக்கப்பட்ட கற்பைப் பாகுபடுத்தி நுணுக்கம்
கூறுகிறது. ‘கல்லானாலும்
கணவன்’ என்னும் கொள்கைக்கு
மாறானதால் குண்டலகேசி வழக்கிழந்து போயிற்று. அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு முதலான குணங்கள் பெண்களின் சுயசிந்தனைக்குக் கடிவாளமாகப்
புகுத்தப்பட்டன. இவ்வாறு அடிமை
நிலையில் ஆழ்த்தத் தொடங்கிய சமுதாயமே வீரயுகக் காலத்து இலக்கியங்களில் காணக்கிடைக்கிறது.
இடைக்கால இலக்கியங்கள் பெரும்பான்மையும் பெண்களை இடையூறாகக் கருதிப் பேசும்
நோக்கினைக் கொண்டு அமைந்துள்ளது. பெண்ணாசை, பொன்னாசை, மண்ணாசை என்று பேசுவதன் மூலம் பெண்ணை இழிவுப்படுத்தும் போக்கே
தலைத்தூக்கி நிற்கிறது. மற்ற இரு உடைமைப் பொருளோடு பெண்ணையும் ஓர் உடைமைப் பொருளாகவே
மதிக்கும் போக்கு இதன் மூலம் தெரிய வருகிறது.
மேலை நாட்டுத் தாக்கத்தால் தமிழில் உரைநடை இலக்கியம் வளரத் தொடங்கியதும் நாவல்
இலக்கிய அறிமுகமும் சமூக மாற்றத்திற்குக் காரணங்களாக அமைந்தன எனலாம். தமிழில் முதல்
நாவல் எழுதிய வேதநாயகம் பிள்ளை
(1826-1889) கவிதை எழுதுவதில் தொடங்கி நாவலாசிரியராக மலர்ந்தவர். பெண் கல்வியின்
இன்றியமையாமையைப் ‘பெண்மதி மாலை’ என்ற கவிதை நூலில் வெளிப்படுத்தினார். மேலும் பெண்
கல்வி, பெண் மானம்
ஆகிய உரைநடை நூல்களையும் எழுதினார்.
கவிதை இலக்கியங்கள், உரைநடை இலக்கியங்கள் மூலமாகவும் பெண்விடுதலை கருத்துக்களைப்
பேரிகை கொட்டி முழங்கிய மற்றொருவர் பாரதியார் ஆவார். கற்பு இருபாலாருக்கும் பொதுவானது என்றார். இயக்க அடிப்படையில் 1920 – ஆம் ஆண்டு, தொடங்கித் தமிழகத்தில்
செயல்பட்ட பெரியாரின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது. ‘பெண் ஏன் அடிமையானாள்?’ என்ற நூலை எழுதியவர். பெரியாரின் சமூகப் பங்களிப்புக்குப் பெருமை சேர்க்கும் விதமாகப்
பெண்களால் இவருக்குக் கொடுக்கப்பட்ட பட்டமே ‘பெரியார்’ என்பதாகும்.
பெண்களின் உள்ளத்தில் அடிமை எண்ணம் நீங்க வேண்டுமானால், அவர்களது நடை
உடையிலும் மாற்றம் தேவை எனக் கருதினார். ஆண்கள் எளிமையான உடையணிவது போல பெண்களையும் உடையணியக் கோரினார். தாலி அணிவது
அடிமைச் சின்னம் என்று ஆணித்தரமாகக் கூறினார். இவ்வகையில் பெண் உரிமைக்காக இயக்க அளவில் அவர் ஆற்றிய பங்கு
இந்திய பெண்ணிய வரலாற்றில் தனியிடமும், தமிழகப் பெண்ணுரிமை வரலாற்றில் தலையாய இடமும் பெற்று விளங்குகிறது
எனக் கூறலாம்.
பெண் விடுதலைக்கு வழிவகுக்கும் வகைகளில் பலரும் கவிதைகள்
படைத்துள்ளனர்.
”என்ன குற்றம் புரிந்தாய் நீ
தலைகுனிந்து
நடப்பதற்கு?
நேராகச்
சீராகப் பார்
நேசனைத்
தேர்ந்தெடு
நீசரைப்
பார்வையால் சுட்டெரி
தேவைப்பட்டால்
துப்பாக்கி
ஏந்துவதற்கும்
தயங்காதே” (இ.சு.துரைசாமி)
என்று கூறுவதிலிருந்து பெண்களின் பழைய மரபுக் குணங்கள் தகர்க்கப்பட வேண்டும்
என்பதோடு அவற்றுக்காகப் போராடும் சூழ்நிலை வந்தால் துப்பாக்கி ஏந்தவும் தயங்கக் கூடாது
என்கிறது இக்கவிதை. இவ்வகையில் பெண் உரிமைக்காக இயக்க அளவில் பெண் விடுதலை கருத்துக்களும், பெண்ணுரிமை
முழக்கங்களும் தமிழ்க் கவிதைகளில் பரவலாக இடம் பிடித்தன எனலாம்.
நிறைவாக,
திரிசங்கு
நிலையில் இருக்கும் பெண்களின் நிலை மாறவேண்டும்.
”ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால்
அறிவி லோங்கியிவ்
வையந் தழைக்குமாம்”
என்று பாரதியின்
கூற்றிற்கிணங்க
‘பெண்ணியம்’ என்பது பெண்களுக்கு மட்டும் சமத்துவம்
வேண்டும் என்பதல்ல. ஆண்களுக்கும் பெண்களுக்கும் பொதுவான நேர்மையான
சமத்துவம் உருவாக வேண்டும் என்பதே பெண்ணியத்தின் அணுகுமுறை. அதில்
ஆணும் பெண்ணும் பாலினப் பாகுபாடின்றி மனிதர்களாக மதிக்கப்பெறுதல் வேண்டும்.
இந்நிலை மாறவேண்டும் என்றால் வருங்கால சந்ததியினரின் வாழ்க்கை சிறகொடிந்த
பறவையாக இல்லாமல் சிறகை விரித்துப் பறக்கும் சுதந்திர பறவைகளாக வாழவேண்டும் என்பதே
என்னுடைய விருப்பமும் நீங்கா ஆசையும்….
அனைத்து சகோதரிகளுக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள்
Comments
Post a Comment