இடித்துரைக்கும் பண்பு
ஒரு சமயம்
குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் பகைவரைப் போரில் வென்றான். பண்டைய மரபுப்படி வெற்றி
வெறியில் பகையரசன் பதுங்கியிருக்கும் அந்நாட்டைத் தீயிட்டு கொளுத்தி அழிக்க முயன்றான்.
அக்கொடுமையை விரும்பாத நப்பசலையார், வெறிகொண்ட மன்னன் அஞ்சாது சென்று புறாவின் துயர்
தீர்த்த சிபியாகிய முன்னோன் அருட்பண்பை நினைவூட்டி அக்கொடுமையைத் தடுத்தார். அப்பொழுது
பாடிய பாடல்,
”இமயம் சூட்டிய ஏமவிற் பொறி
மாண்வினை நெடுந்தேர் வானவன் தொலைய
வாடா வஞ்சி வாட்டும் நின்
மீடுகெடு நோன்தாள் பாடுங்காலே” (புறம்,39)
என்று கூறுகிறார். கிள்ளிவளவனுக்குத் தனிச்சிறப்பில்லை என்று
பழிப்பது போல் முன்னோரின் பண்புகளாகிய ஈகை, மறம், அறம் ஆகிய அனைத்துப் பண்புகளும் ஒன்று
திரண்டவன் எனப் போற்றப்படுதலால், வஞ்சப்புகழ்ச்சி அணிநயம் இப்பாடலுக்குச் சுவையூட்டுகிறது.
இமயத்தில்
வில்பொறித்த இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் வரலாற்றுக் குறிப்பும் உள்ளதால் இப்பாடல் வரலாற்றுக்
களஞ்சியமாகவும் திகழ்கிறது. பகை நாட்டையழிக்கும் போர் வெறியைத் தவிர்த்து நயமாகப் புகழ்ந்து
உள்ளத்தைக் குளிர்விக்கும் நப்பசலையாரின் மாண்பும், புலமையும் வியந்து வியந்து போற்றற்குரியனவாகும்.
Comments
Post a Comment