நீர் வளமும், நிலவளமும்
உலக மக்களின் அடிப்படைத் தேவைகளில் நீர்
வளமும், உணவுப் பொருள்களை உற்பத்தி செய்திடும் நிலவளமும் முக்கியமானது. நீரின் மிகையினை
வீணாக்காமற் பாதுகாத்து உரிய காலத்தில் நிலப் பகுதிகளுக்கு அளிக்கும் போது நிலம் செழிக்கின்றது.
மக்களும் செழிக்கின்றனர். ஒரு நாடு உணவு உற்பத்தியில் தன்னிறைவு எய்த முடியும். சங்க
இலக்கியத்தில் குடபுலவியனார் புறநானூற்றுப் பாடலில் நீர் வளத்தையும், நிலவளத்தையும்
இணைத்துக் கூறுகின்றார்.
நீரின் றமையா யாக்கைக் கெல்லாம்
உண்டி கொடுத்தோ ருயிர் கொடுத்தோரே
உண்டி முதற்றே உணவின் பிண்டம்
உணவெனப்படுவது நிலத்தோடு நீரே
நீரும் நிலனும் புணரியோர் ஈண்டு
உடம்பும் உயிரும் படைத்திசினோரே” (புறம்,18)
என்று மனித
உடலுக்கு உயிரினை வளர்க்கும் உணவினை நீருமு நிலமும் சேர்ந்து வழங்குவதாகக் கூறுகின்றார்.
நீரையும் நிலத்தையும் இணைத்து வேளாண்மைத் தொழிலைச் செழிக்கச் செய்திடல் வேண்டும் என்றும்
வலியுறுத்துகின்றார்.
நிலவளம் குன்றிய பகுதியில் நீரைப் பாய்ச்சி
வேளாண்மை புரிவது வீணாகும். இத்தகைய திரிந்த களர் நிலங்களில் நீரும் திரிந்துவிடுவதாக
வள்ளுவர் கூறுகின்றார்.
”நிலத்தின் இயல்பான் நீர்திரிந் தற்றாகும்
மாந்தர்க்கு
இனத்தினியல்ப தாகும் அறிவு” (குறள், 452)
என்கின்றார்.
இத்தகைய களர்நிலங்கள் பற்றி உரையாசிரியர் பரிமேலழகர் ‘களம் தானும் பேணற்பாடு அழிந்து
உயிர்கட்கும் உணவு முதலிய உதவாதது’ என்றுரைக்கின்றார். நல்ல நிலத்தில் பாய்ச்சப்படும்
நீரினாலே உணவுப் பொருள்களை விளைவிக்க முடியும். களர் நிலங்களுக்கு நீர் பாய்ச்சுவது
விழலுக்கு இறைத்த நீராகும் என்னும் இக்குறளில் உணர்த்தப்படுகின்றது. நல்ல நிலங்களில்
பாய்ச்சப்படும் நீரினாலே மக்களின் உயிர் காக்கும் உணவுப் பொருள்களை உற்பத்தி செய்ய
முடியும். களர் நிலங்களில் நீரைப் பாய்ச்சினால் அந்நீரும் திரிந்துவிடும் உயிர்களுக்கு
உணவுப் பொருள்களும் உற்பத்தி செய்ய உதவாது.
Comments
Post a Comment