தன்னலமற்ற அன்பு
அன்புக்கும் தன்னலத்திற்கும் தொடர்பு உண்டு.
அன்பு குறையக் குறைய தன்னலம் பெருகும். அன்பு பெருகப் பெருகத் தன்னலம் தேயும். தன்னலமற்றவர்கள்
தம் உயிர் வாழ்க்கைக்குக் காரணமான உடம்பில் உள்ள எலும்பும் பிறர் நன்மைக்காக இருப்பதாகவே
கருதுவார்கள். இவர்கள் ‘தாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ என்ற கொள்கைகளைக் கடைபிடிப்பவர்கள்.
”அன்பிலார் எல்லாம் தமக்குரியவர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு” (குறள், 72)
என்பது வள்ளுவம்.
பற்றற்ற வாழ்க்கைப் பண்புக்கு வாழை மரத்தைச்
சிறந்த சான்றாகக் கொள்ளலாம். வாழைமரம் குலை விடுகின்றவரை வாழ்கின்றது. பின்பு வீழ்கின்றது.
அஃது அடுக்கடுக்காய் இலை விட்டு வளர்ந்து வருகின்றது. அந்த நோக்கம் நிறைவேறியவுடன்
தன் கடமை தீர்ந்ததாகவும் தான் தோன்றி வளர்ந்த முயற்சி வெற்றியுற்றதாகவும் துணிந்து
தன் வாழ்க்கையை முடித்துக் கொள்கின்றது. இந்த ஒரே குலையையும் தனக்காகவோ தன் கன்றுகளுக்காகவோ
ஒரு சிறிதும் வைக்காமல் முழுதும் பிறர்க்காகவே வழங்கி விடுகின்றது. தன் உடலின் நடுத்தண்டையும்
பிறர்க்கு உரியதாக்கி மறைந்து விடுகின்றது.
இந்நிலையில் ஆண்டவனும் அன்பு வலைக்குள் அகப்படுவான்
என்பதை வள்ளற் பெருமான்,
”அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையே!
அன்பெனம் குடில்புகும் அரசே!
அன்பெனும் வலைக்குள் படும்பரம் பொருளே!
அன்பெனும் கரத்தமர அமுதே!
அன்பெனும் கடத்துள் அடங்கிடும் கடலே!
அன்பெனும் உயிர்ஒளிர் அறிவே!
அன்பெனும் அணுவுள் அமைந்தபேர் ஒளியே!
அன்புரு வாம்பர சிவமே” (ஆறாம் திருமுறை – பரசிவ
வணக்கம்)
என்று பாடுவர்.
அன்பினால் வளர்வது விருப்பம். அது நட்பு
என்னும் அருஞ்சிறப்பைத் தேடித் தரும். அதனால் உலகில் தனித்து வாழ்ந்து துன்புறும் நிலைமை
நீங்கும்.
”அன்பீனும் ஆர்வ முடைமை அதுஈனும்
நண்பென்னும்
நாடாச் சிறப்பு” (குறள், 74)
”அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து
இன்புற்றார்
எய்தும் சிறப்பு” (குறள், 75)
நெஞ்சம் நெகிழ்ந்து
வாழ்வதற்கு அன்பு துணையாக அமையும் என்பதைக்
காண்கிறோம்.
அன்பு ஒரு சிலர் மீது பகை கொண்டு ஒருவன்
செய்யும் வீர செயல்கட்கும் அன்பே காரணம் ஆகின்றது. மனைவியிடம் உள்ளம் கலந்து வாழ்கின்ற
அன்புடையவன் அவளைக் காப்பதற்காகக் கொடியவர்களை அஞ்சாமல் எதிர்க்கின்றான். குழந்தையிடம்
அன்புடன் கொஞ்சும் தாய் கொடிய விலங்கினிடமிருந்தும் அதனைக் காக்க அஞ்சாமல் போரிடுகின்றாள்.
வண்ணச் சீரடி மண்மகள் அறிந்திராமல் மெல்லியலாய வாழ்ந்த கண்ணகி கணவனுடைய புகழைக் காப்பதற்காக
நாடாளும் வேந்தனையும் சீறி வழக்குரைக்கின்றாள். இங்ஙனம் நெகிழ்விக்கும் அன்பே நெஞ்சை
வன்மையுறச் செய்து இரும்பாகி பகைக்கவும் எதிர்க்கவும் அழிக்கவும் ஆற்றல் அளிக்கின்றது.
இதனால் அன்பு என்பது அறத்திற்கு மட்டும் துணை என்று சொல்வது அறியாமை; மறத்திற்கும்
அதுவே துணையாகும்.
”அறத்திற்கே அன்புசார்பு என்ப அறியார்;
மறத்திற்கும் அஃதே துணை” (குறள்,76)
என்பது பொய்யா
மொழி.
பார்வை நூல்
1.
சுப்புரெட்டியார்.என்
டாக்டர் – தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை, மணி புத்தக நிலையம், நல்லாமூர் கிராமம்,
விழுப்புரம் மாவட்டம் – 604 001, முதல் பதிப்பு- 2012.
Comments
Post a Comment