தமிழ் இலக்கியங்களில் மழை நீரின் முக்கியத்துவம்
தமிழ்
நாட்டின் இயற்கை அமைப்புப் பெரும்பாலும் மழை நீரினை நம்பி உள்ளது. மழை நீர் இல்லையேல்
இயற்கை வளம் இல்லை. உயிர்களும் இல்லை. தமிழ் இலக்கியங்கள் மழைநீரின் முக்கியத்துவத்தைத் தொடர்ந்து
உணர்த்தி வருகின்றன. நீரின் சிறப்பையும் வானத்தில் இருந்து பெய்யும் மழையின் இயக்கத்தையும்
முல்லைப்பாட்டில்,
”நனந்தலை உலகம் வளைஇ நேமியோடு
வலம்புரி
பொறித்த மாதாங்கு தடக்கை
நீர்செல நிமிர்ந்த மாஅல் போலப்
பாடிமிழ் பனிக்கடல் பருகி வலன்ஏர்பு
கோடு கொண்டெழுந்த கொடுஞ்செலவு எழிலி
பெரும்பெயல் பொழிந்த சிறுபுன்மாலை”
(முல்லைப் பாட்டு,6)
என்னும் பாடலடிகள்
பனிக்கடல் வலப்புறமாக எழுந்த மேகமானது வான்பரப்பிற்குச் செல்கின்றது. குளிர்ந்த காற்று
பட்டதும் வானத்திலிருந்து மழையாகப் பொழிகின்றது. முல்லைப்பாட்டின் கார்கால வருணனையில்
மழை மேகத்தின் இயக்கம் தெரிவிக்கப்படுகின்றது. ஒரு காலத்தில் மாபலிச் சக்கரவர்த்தியை
அழித்திட வாமன அவதாரம் எடுத்த திருமாலின் உயர்வு போன்று மேகங்களின் எழுச்சி அமைவதாக
நப்பூதனார் காட்டுகின்றார்.
தமிழ்நாடு வடகிழக்குப் பருவமழையால் அதிகம்
மழை பெறும் மாநிலம் ஆகும். இதனை சங்க இலக்கியப் புலவர்கள் கோள்களின் இயக்கம் மூலம்
தெரிவிக்கின்றனர். வானத்தில் உள்ள வெள்ளி என்ற கோள் வடக்குத் திசை நோக்கிச் சென்றால்
மழை வளம் அதிகம் இருக்கும் என்றும், தென்திசை நோக்கிப் பெயர்ந்தால் மழைவளம் குறையும்
என்றும் உரைக்கின்றனர்.
புறநானூற்றில் வெள்ளக்குடி நாகனார் ‘இலங்குகதிர்
வெள்ளி தென்புலம் படரினும்’ (புறம்,35:7) என்றும், ‘தென்திசை மருங்கின் வெள்ளி ஓடினும்’
என்று கபிலரும் பாடியுள்ளனர். பட்டினப்பாலையில் கடியலூர் உருத்திரங்கண்ணனார் வெள்ளி
மீனின் பயணத்தைப் பின்வருமாறு தெரிவிக்கின்றார்.
”வசையில் புகழ் வயங்கு வெண்மீன்
திசை திரிந்து தெற்கு ஏகினும்
தற்பாடிய தளி உணவில்
புள் தேம்பப் புயன்மாறி
வான்பொய்ப்பினும் தான்பொய்யா
மலைத் தலைய கடற்காவிரி” (பட்டினப், 6)
என்று வெள்ளிக்
கோளின் தெற்குத்திசை நோக்கிய பயணத்தால் மழை வளம் குறைந்தாலும் காவிரியில் நீர் குறையாது
என்கிறார். வள்ளுவர் திருக்குறளில் கடவுள்
வாழ்த்து அதிகாரத்தை அடுத்து வான்சிறப்பு என்னும் அதிகாரத்தை வைத்திருப்பது மழைநீரின்
முக்கியத்துவம் கருதியே ஆகும். வள்ளுவர் மழைநீரை உயிர்களுக்குச் சாகா வரமளிக்கக் கூடிய
அமிழ்தம் என்றும் உலக உயிர்களை நிலைநிறுத்துகின்ற உயிர்நீர் என்றும் எடுத்துரைக்கின்றார்.
”வானின் றுலகம் வழங்கி வருதலால்
தானமிழ்தம் என்றுணரற் பாற்று” (குறள்,
11)
மேலும்,வான்மழை
இல்லையேல் உலக வாழ்வு இயக்கம் நின்று விடும் என்றும், நீர் வளம் இல்லையென்றால் உணவுச்
சங்கிலியில் பெரும் பாதிப்புகள் உருவாகும் என்றும் வலியுறுத்துகின்றார். மழையின்றி
பசும்புல் இல்லை. பசும்புல் இன்றி மானுடச் சமூக இயக்கமும் இல்லை. அதுமட்டுமன்றி வற்றாத
நெடுங்கடலும் தன் நிலையிலிருந்து தாழ்ந்து பாலையாகிவிடும்.
”விசும்பின்
துளிவீழின் அல்லால் மற்றாங்கே
பசும்புல் தலைகாண் பரிது” (குறள்,16)
”நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும்
தடிந்தெழிலி
தான்நல்கா தாகி விடின்” (குறள், 17)
என்னும் இரு
திருக்குறள்களும் உலக உயிர்கள் தழைப்பதற்கும் உயிர் வாழ்வதற்கும் மழையே முதற்காரணமாய்
அமைந்திருப்பதையும், கடலுக்கும் வான்மழையின் தேவை என்பதையும் வலியுறுத்துகின்றன. தமிழின்
முதற் காப்பியமான சிலப்பதிகாரமும் மழையின் சிறப்பையும், மழை இல்லையென்றால் ஏற்படும்
பஞ்சத்தினையும் சுட்டுகின்றது.
”மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்
நாமநீர் வேலி உலகிற்கு அவன் அளிபோல்
மேல் நின்று தான் காத்தலான்” (சிலம்பு,
5-7)
என்று வானிலிருந்து
பொழிகின்ற மாமழையை வாழ்த்துகின்றார். இந்த வானத்து மழைநீர் உரிய காலத்துப் பெய்யவில்லையென்றால்
உருவாகும் பஞ்சத்தால் மக்கள் அரசினைக் குறைகூறுவார் என்ற செய்தியும் கூறப்படுகின்றது.
”மழைவளம் சுரப்பின் வான் பேரச்சம்”
(சிலம்பு, காட்சிக், 100)
என்னும் அடிகள்
மூலம் பருவமழை பொய்த்தால் விளையும் பெருந்துன்பம் எடுத்துரைக்கின்றது.
நிறைவாக,
வானத்து மழைநீரின் முக்கிய வளம், மழை பொழியும்
தன்மை, மழை பொழியும் வானியல் சூழல், மழையின்றி உயிர்கள் படும் துன்பங்கள் ஆகியவற்றை
மேற்காட்டிய பாடல்கள் உணர்த்துகின்றன. மழைநீரை உயிர்நீராகக் கருதிச் சான்றோர்கள் செய்யுள்களைப்
படைத்திருப்பதும் தெளிவாகின்றன.
Comments
Post a Comment