பாபா
சாகேப் அம்பேத்கார் அவர்களின் பொன்மொழிகள்
அணைகளை உருவாக்கியது முதல் இந்திய ரூபாயின் பிரச்சனைகளை ஆராய்ந்தது வரை அம்பேத்காருக்குப்
பல முகங்கள் இருந்தாலும், தலித் மக்களின் உரிமைகளுக்காகப் பாடுபட்டவர்.
இந்தியாவில் நிலவி வந்த சாதீயக் கொடுமைகளுக்கு எதிராகப் தனது இறுதி மூச்சு வரைப்
போராடியவர் புரட்சியாளர் பாபா சாகேப் அம்பேத்கர் ஆவார். அவர் சட்ட மாமேதை மட்டுமல்ல.
அரசியல் வித்தகர், பொருளாதார மாமேதை, தத்துவ ஞானி, சட்ட வல்லுநர், தலைசிறந்த எழுத்தாளர், சமூக நீதிச் சிந்தனையாளர் மற்றும் புரட்சியாளர்
எனப் பன்முகத் தன்மை கொண்ட மாமேதை எனலாம். ஆங்கிலம், இந்தி, சமஸ்கிருதம், மராத்தி,
குஜராத்தி, பிரெஞ்சு, பெர்ஷியன், ஜெர்மன், பாலி எனப் பல மொழிகளும் கற்றறிந்த வித்தகர்.
கல்வியே ஒருவருக்கு மதிப்பையும் வளத்தையும்
அளிக்கும் என்று உறுதியாக அம்பேத்கர் கொண்ட எண்ணமே, ஒன்பது வெளிநாட்டு, பன்னிரண்டு
இந்திய பட்டங்களை அவர் பெறக் காரணமாக இருந்தது.
·
கடவுளுக்குத்
தரும் காணிக்கையை விட ஒரு ஏழைக்குத் தரும் கல்வி மேன்மையானது.
·
சுயமரியாதையே
ஒரு மனிதனின் அடையாளம். அதை இழந்து வாழ்வது மிகப் பெரிய அவமானம்.
·
தன்னை உயர்ந்த
சாதியாகவும், பிறதொரு மனிதனைத் தாழ்ந்த சாதியாகவும் கருதுபவன், ஒரு மனநோயாளி.
·
நமது திறமையும்,
நேர்மையும் வெளிப்படும்போது பகைவன் கூட நம்மை மதிப்புடன் பார்ப்பான்.
கல்வி தான் தனது ஆயுதம் எனச் சிறு வயதிலேயே உணர்ந்த அம்பேத்கர், தனக்குக் கல்வி கற்கக் கிடைத்த வாயப்புகள் அனைத்தையும் பயன்படுத்திக் கொண்டார். கல்விதான் ஒருவனின் சுயத்தை முன்னேற்றும் என்றும் வலியுறுத்தினார்.
மண்ணை விட்டு அவர் உயிரும் உடலும் மறைந்தாலும் இப்போதும் ஒரு கையில் புத்தகமும்
முன்னோக்கி சுட்டிக் காட்டும் ஆள்காட்டி விரலும் கொண்ட ஒரு உயர்ந்த சிலையாக நிற்கிறார்.
Comments
Post a Comment