நாட்டுப்புறப்
பாடல்களில் சடங்குகள்
நாட்டுப்புற
இலக்கியம் என்பது கண்ணில் படும் அனைத்து நிகழ்வுகளையும் ஒளிவு மறைவில்லாமல் உள்ளதை
உள்ளவாறு எடுத்துக்காட்டும் வரலாற்று நிகழ்வுகளின் தொகுப்பாகும். மக்களின் சமுதாயம்
வளர வளரப் பழக்க வழக்கங்களாக வளர்ந்து வருகின்றன. காலங் கடந்து வளர்ந்து வரும் பழக்கவழக்கங்கள் காலப் போக்கில்
மக்களின் வாழ்க்கைக்கேற்பச் சடங்குகளாக மாற்றம் பெற்றும் திகழ்கின்றன. பிறப்பு முதல்
இறப்பு வரை பலவகையான சடங்குகள் இடம்பெறுகின்றன. சடங்குகள் மக்கள் வசதிக்கேற்பவும் தரத்திற்கேற்பவும் வளர்ந்தும்
மாறியும் அமைகின்றன. மக்கள் வாழ்க்கையில் பல்லாயிரக்கணக்கான சடங்குகள உண்டென்றாலும்
இலக்கியத்தில் இடம் பெறுபவை மிகச் சிலவே. சடங்குகள் மக்களின் மனவளத்தையும் இறைவழிபாட்டையும் எடுத்துக்காட்டும்
மானிடவியல் கருவூலமாகும். நாகரிகம் வளர்ந்துள்ள இக்காலத்திலும் பல்வகையான சடங்குகளை
மக்கள் போற்றிவரக் காண்கின்றோம்.
பிறப்பின் போது
செய்யும் சடங்குகள்
குழந்தி
பிறப்பின் போது தாயும் சேயும் தனியிடத்தில் இருப்பார்கள். 15 நாள் கழித்துத் தீட்டுக்கழித்தல் என்னும் சடங்கு நிகழும். தாயையும் சேயையும்
நன்னீரில் குளிப்பாட்டிப் புதிய உடையை அணிவிப்பார்கள். வீடெங்கும் சாணம் கொண்டு மெழுகிக் கோலம் போட்டு அலங்கரிப்பார்கள். கைராசியுள்ள
ஒருவரை அழைத்து குழந்தையின் நாவின் விளக்கெண்ணையைத் தடவச் செய்வார்கள். வருங்காலத்தில்
குழந்தை பெரியவனாக வளரந்து அவனுடைய குடும்பத்திற்கும் சமுதாயத்திற்கும் புகழ்சேர்க்க
வேண்டும் என்னும் வளமான எண்ணத்திற்கு வளமூட்ட அச்சடங்கு செய்யப்படுகிறது.
தொட்டிலிடுதல்
குழந்தைக்குப்
பின் தொட்டிலில் இடுவார்கள். தொட்டிலிடுதல் என்ற இச்சடங்கு செய்து மகிழ்வார்கள். தொட்டிலுக்கு
வேண்டிய மரங்களைக் குழந்தையின் அம்மாமன்கார்கள் கொண்டு வரவேண்டும் என்பது மரபாகும். குழந்தைக்குத்
தாராளமாகத் தாய்ப்பால் கிடைக்க வேண்டுமென்பதால் இலுப்பைக் கிளையை வெட்டிக் கொண்டு வந்து
தொட்டில் அமைப்பார்கள்.
”பச்சமலை ஓரத்திலே – என்கண்மணியே
பாங்கான இலுப்பை வெட்டிக்
கச்சிதமாத் தொட்டில் கட்டி – உன்மாமன்
கனிவாகப் பார்த்திருந்தார்”
என்னும் பாட்டின் வழி நாட்டுப்புற
இலக்கியம் காட்டும் சடங்கினை அறிய முடிகிறது.
காது குத்தல்
ஒரு
வயது முடிந்ததும் குழந்தைக்கு முடியிறக்கல்
என்னும் சடங்கும் காது குத்தல் என்னும் சடங்கும் ஒரு சேர நடைபெறும். பிறந்த குழந்தை
அப்படியே வளர்த்தால் எமனால் ஆபத்து வருமென்று அஞ்சிய நாட்டுப்புறத்து மக்கள் காது குத்தல் சடங்கை செய்வார்கள்.
உடலில் பின்னமிருந்தால் எமன் தொடமாட்டான் என்னும் நம்பிக்கையின் காரணமாக இச்சடங்கு
நடைபெறுகின்றது.
”போற்றி வளர்த்தார்கள் புதுமையுள்ள
மைந்தனையும்
காதுகுத்தி வாளியிட்டுக் கைக்கு வெள்ளிக்காப்பு
மிட்டுக்
காலுக்குத் தண்டையிட்டுக் கண்ணுக்கு
மையிட்டுத்
தூங்குமஞ்சத் தொட்டில்தனில் சுகமாய்
வளர்த்தார்கள்”
என்றும்,
”மாம்பிஞ்சு கொண்டு மதுரைச்சிமிக்கி
கொண்டு
காதுகுத்த வாராங்க கனகமுடி உய்களம்மான்”
என்றும் காதுகுத்தும்
சடங்கை நாட்டுப்புற இலக்கியம் எடுத்துரைக்கின்றது.
பூச்சடங்கு
பெண் பருவம் எய்துவதைத் பூப்பூச் சடங்காகக்
கொண்டாடுகிறார்கள். பெண் திருமணத்திற்குத் தயார் ஆகிவிட்டாள் என்பதைச் சமுதாயத்திற்கு
அறிவிக்க இந்தப் பூப்பூச் சடங்கு செய்கிறார்கள். சாதிக்குச் சாதி வேறுபடும். பொது எல்லா
மக்களும் பூப்பூச் சடங்கை மகிழ்ச்சியான சடங்காகவே விழாப் போல் கொண்டாடுகிறார்கள். ஒரு
பெண்ணின் வாழ்வின் முதல் சடங்கு பொன்னான நாளாகும்.
பெண் பெரியவளாதும் பெண்ணின் முறைமாமன் தென்னங்கீற்றைப்
பின்னிக் குடிசை ஒன்றைக் கட்டிக் கொடுப்பான். பூப்பெய்திய பெண்ணை அந்த குடிசையில்
15 நாட்கள் தங்க வைத்து நல்ல ஊட்டச் சத்துள்ள உணவுகளை ஒவ்வொரு நாளும் கொடுத்து வருவார்கள்.
உறவினர்கள் அனைவரும் முறை வைத்து உணவுகளைக் கொண்டு வந்து தருவார்கள். உச்சி முதல் உள்ளங்கால்
வரை நீரால் குளிப்பாட்டிப் புத்தாடை உடுத்தி மனையில் உட்கார வைத்து ஆரத்தி எடுப்பார்கள்.
உறவினரும் முறை வீட்டாரும் பெண்ணுக்குப் பரிசுப் பொருட்கள் அளிப்பார்கள். இந்த சடங்கின்
போது ‘பிட்டுச் சுற்றல்’ என்னும் சடங்கு மிக மிக முக்கியமானதாகக் கருதப்படும். சிற்றூர்களில்
இச்சடங்குகள் இன்றும் நடைபெற்று வருகின்றது. ஆனால் நகர வாழ்வில் இச்சடங்கு முறைகள்
யாருக்கும் அறிவிக்கப்படாமல் வீட்டுக்குள்ளே செய்து முடிக்கப்படுகின்றன.
பெண் எந்த மாதத்தில் பூப்பெய்துகிறாள் என்பதை,
”சித்திரை மாதம் சிறுமுருங்கை
பூத்தது போல்
வைகாசி மாதம் வாழைமரம் பூத்தது போல்
ஆனி மாதம் அவரைகள் பூத்தது போல்
ஆடி மாதம் அல்லிமலர் பூத்தது போல்
ஆவணி மாதம் அரளிப்பூ பூத்தது போல்”
என மாதத்தின்
பெயரையும் அந்த மாத்த்தின் சிறப்பாகவும் வளமாகவும் பூத்துக்குலுங்கும் பூவையும் இணைத்துப்
பாடிப் புதுப் பெண்ணின் வளத்தை வாழ்த்தி மகிழ்கிறார்.
தென்னங்கீற்றுக் குடிசையில் இருக்கும் பெண்ணுக்குச்
சிறப்பான பலகாரம் தயாரித்துக் கொடுப்பார்கள். இதை ஒரு பாடல் வழியாக அறிந்து கொள்ள முடிகிறது.
”உழக்கு எண்ணெய் உரலிலே ஊற்றி
அதற்குத் தகுந்த வெல்லத்தைப் போட்டு
அழகான தேங்காய மூடியையும் போட்டு
குத்தவாடி சிம்மிலி குத்தவாடி சிம்மிலி”
என்று பாடும்
பாடலில் அந்தப் பலகாரத்தின் பெயர் சிம்மலி என அறிகிறோம்.
திருமணச் சடங்கு
திருமணத்தின் போது அரசாணிக்கால் நடுவது தலையாயச்
சடங்காக மதிக்கப்படுகிறது. உறவினர்களையும், பங்காளிகளையும் அழைத்து புதிய மூங்கிலைக்
கொண்டு வந்து அரசாணிக்கால் நடுவார்கள். அந்த நாட்டு வேந்தன் முன்னிலையில் திருமணம்
நடைபெற வேண்டுமென்பது அக்கால மக்களின் நம்பிக்கை. மன்னனின் பிரதிநிதியாக மூங்கில் கருதப்படுகிறது.
எனவே தான் அரசாணைக்கால் என மருவி விட்டது. இந்தச் சடங்கு முடிந்தவுடன் பந்தல் போடும்
நிகழ்ச்சி நடைபெறும். எவ்வாறெல்லாம் பந்தலிட்டார்கள் என்பதை நாட்டுப்புறப் பாடல் ஒன்று
எடுத்துரைப்பதைக் காண்போம்.
”முத்தைப் பிளந்தார்கள் மூன்றாங்கால்
இட்டார்கள்
பவளம் பிளந்தார்கள் பந்தக்கால் நட்டார்கள்
வெள்ளியால் கால்நிறுத்தி வெற்றிலையால்
பந்தலிட்டார்
கரும்பாலே கால் நிறுத்தி அரும்பாலே
பந்தலிட்டார்
ஈர்க்குப் பிளந்தார்கள் இருகாதம் பந்தலிட்டார்
மூங்கில் பிளந்தார்கள் முக்காதம் பந்தலிட்டார்
நாணல் பிளந்தார்கள் நாற்காதம் பந்தலிட்டார்”
திருமண நிகழ்ச்சி
பற்றி ஒரு நாட்டுப்புறப் பாடல்,
அம்மி வலமாக அரசாணி முன்பாக
ஆயிரம் பெருந்திரி அதற்கும் வலமாகப்
போயிருந்தார் பெருமையுடன் வாழ்ந்திடுவார்
மங்கல நாண் பூட்ட மகிழ்ந்தார்கள் எல்லோரும்
எனத் திருமணச்
சடங்குகளை அழகுற விளக்குகிறது.
இறப்புச் சடங்கு
வாழ்க்கை முழுவதும் மங்களகரமான சடங்குகளே
இடம்பெறும் என்று சொல்ல முடியாது. இன்பமும் துன்பமும் மாறி மாறித் தான் வரும். மனிதன்
என்றும் நின்று வாழ்வதில்லை. என்றாவது ஒருநாள் மரணத்தை எதிர்கொள்ள நொடுவது இயற்கையே.
இறந்த ஒருவரைக் குளிப்பாட்டிப் படுக்க வைப்பார்கள். பின்னர் கால் பெருவிரலையும் கைப்
பெருவிரல்களையும் நூலால் கட்டிவிடுவார்கள். மூடிய இமையின் மீது ரூபாய் நாணயங்கள் வைப்பார்கள்.
உறவினர் அனைவரும் அழுது புலம்புவார்கள். பின்னர் தேர் அல்லது பாடையில் வைத்துச் சுடுகாட்டுக்குக்
கொண்டு போய்ப் புதைப்பார்கள் அல்லது எரிப்பார்கள். உரிமை மகன் கொள்ளி வைப்பான். கொள்ளச்
சட்டி ஒன்றை உரிமை மகன் சுமந்து குழியைச் சுற்றி மூன்று முறை வலம் வந்து உடைப்பது மிக
மிக முக்கியமான சடங்காகும். வந்தவர்கள் எல்லாரும் வாய்க்கரிசியிட்டு மண்ணுமிடுவார்கள்.
பின்னர் பால் வைத்தல் என்ற சடங்கும் மறுநாள் நடைபெறும். 16 வது நாள் கருமாதி என்னும்
நிறைசடங்கு நடக்கும்.
நிறைவாக,
வற்றாத ஜீவநதி போன்றது நாட்டுப்புற இலக்கியமாகும்.
நாட்டுப்புற இலக்கியத்தின் வாயிலாக அக்கால மக்களின் பழக்க வழக்கங்கள், பண்பாட்டுக்
கூறுகள், எண்ணப் போக்குகள், போற்றி வளர்த்த சடங்குகள், நம்பிக்கைகள் போன்றவற்றை அறிந்து
கொள்ள முடியும். நாட்டுப்புற இலக்கியம் கண்ணில் தென்படும் அனைத்து நிகழ்வுகளையும் ஒளிவு
மறைவில்லாமல் உள்ளதை உள்ளவாறே காட்டும் உன்னதமான வரலாற்று நிகழ்வுகளின் தொகுப்பெனலாம்.
குறை-மிகை யில்லாத மெய்யான அப்பட்டமான செய்திகளின் படப்பிடிப்பே நாட்டுப்புற இலக்கியமாகும்.
பார்வை நூல்
1.
கோதண்டராமன்,
டாக்டர்.மா, நாட்டுப்புவியலும் பண்பாடும், பாரதி புத்தகாலயம், G-7, அமுதம் குடியிருப்பு,
தியாகராய நகர், சென்னை – 600 017. பதிப்பு டிசம்பர் 2003.
Comments
Post a Comment