கல்வி
வளர்ச்சியே நாட்டின் வளர்ச்சி!
கல்வி சமுதாயத்தில் இளைஞர்களிடையே பெரிய
மாற்றத்தை உண்டாக்குகிறது. குழந்தைகளைக் கல்வி கற்க அனுப்பாது இருந்தால், அவை அறியாமை
இருளில் மூழ்கிக் கிடப்பதோடு அதன் அறிவு தானாக அறியக் கூடியவற்றோடு முடிந்துவிடும்.
ஆனால் தகைமையுடைய ஆசிரியரிடத்தில் அக்குழந்தையை ஒப்படைத்தால் கலைகளையும், விஞ்ஞானத்தையும்
அறியக்கூடும். வழி தவழிச் செல்பவர்களுக்குக் கல்வி சரியான வழியைக் காட்டும். குருடருக்குக்
கண்ணாகவும், மடையருக்கு நிதான புத்தியையும், பயனற்ற வாழ்க்கை நடத்துபவர்களுக்கு பயனுள்ளதாகவும்
ஆக்கச் செய்வது கல்வியே என்பதை அனைவரும் உணரவேண்டும்.
குடிமக்களுக்குக் கல்வி வசதி செய்து தரவேண்டியது
ஒவ்வொரு அரசின் முக்கிய கடமையாகும். கல்வியறிவு இல்லாதவர்கள் மிகுந்தால் அந்நாடு முன்னேற்றம்
அடையாது. எனவே நாட்டின் முன்னேற்றம் கருதி மக்கள் கல்வியறிவு பெறும் பொருட்டு அரசு
தொடக்கநிலை, உயர்நிலை, மேனிலைப் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகம் போன்றவற்றைத் தோற்றுவித்துக்
கல்வி வசதி செய்து தருவதே தலையாய பணியாகும். அறிவியல், மானிடவியல், நிர்வாகவியல், விவசாயம்,
தொழில்நுட்பம் ஆகியவற்றில் ஆய்வுப் பணிகளை மேற்கொள்வது அரசின் கடமையாகும்.
கல்வியின் முக்கியத்துவம்
இன்றைய உலகில் மக்களுக்கு அனைத்துச் செல்வத்திலும்
கல்விச் செல்வமே முதன்மையானதாகக் கருதப்படுகின்றது. இக்கல்வி பிறவிக் குணத்தை விருத்தி
செய்து, அறியாமையை நீக்கி அறிவைக் கொடுப்பதாகும். மக்களிடம் காணப்படும் தீய குணம்,
தீய நடத்தை, முதலியவற்றை நீக்கி, நற்குணம், நன்னடத்தை முதலியவற்றை உண்டாக்குகிறது.
உண்மை எது? பொய் எது? என்பதைப் பகுத்தறிய செய்து வாழ்வில் உயர்வு பெறச் செய்வது கல்வியே
உயிரினும் சிறந்த கல்வியாகும்.
இவ்வுலகில் தம் பிள்ளைகளுக்குக் கல்வியைக்
கற்பிக்காமல் உயர்வகையான ஆடைகளையும், அணிகலன்களையும் செல்வத்தையும் கொடுத்துச் செல்லமாக
வளர்த்தல் கூடாது. அவ்வாறு வளர்த்தால் பிற்காலத்தில் தாய் தந்தையராகிய தங்களுக்குத்
துன்பம் செய்ய ஓர் எமனை வளர்ப்பதற்குச் சமமாகும் என்பதை,
”மாலினால் இருவரும் மருவி மாசிலாப்
பாலனைப்
பயந்தபின் படிப்பி லாதுஉயர்
தாலமேல்
செல்வமா வளர்த்தல் தங்கட்கு ஓர்
காலனை
வளர்க்கின்ற காட்சி போலுமால்” (விவேக சிந்தாமணி,3)
என்றும், சமுதாயத்தில்
கீழ்க்குடியில் பிறந்த ஒருவனை மேல்நிலைக்கு உயரச் செய்வதும் கல்வியே, இதனை,
”மேற்பிறந்தார் ஆயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும்
கற்றார் அனைத்திலர் பாடு” (குறள், 409)
என்ற குறளில்
உடலோடு ஒழியும் சாதி உயர்விலும், உயிரோடு செல்லும் கல்வி உயர்வுடையது என உணர்த்தப்
பெறுகின்றது. இந்தக் கருத்தை நாலடியாரிலும்,
”தோணி இயக்குவான் தொல்லை வருணத்து
காணிற்
கடைப்பட்டான் என்றிகழார் – காணாய்
அவன்துணையா
ஆறு போயற்றே நூல்கற்ற
மகன்துணையா
நல்ல கொளல்” (நாலடி, 136)
என்ற பாடல்
எடுத்துரைக்கின்றது. தோணி இயக்குபவன், நால்வகைச் சாதியில் கடைப்பட்டவனாக இருந்தாலும்,
அதைக் கருத்தில் கொள்ளாமல் ஆற்றினைக் கடந்து செல்கின்றனர். அதுபோல், கல்வி கற்றவன்
கீழ்க்குடியில் பிறந்தவனாக இருந்தாலும், அவனை இகழாமல் அவனிடத்திலிருந்து நூலறிவினைக்
கற்றுக் கொள்ளவேண்டுமென்று வலியுறுத்துகின்றது.
கல்வியும் ஆளுமையும்
ஒருவன் சமுதயத்தில் கண்டோர் போற்றும் வண்ணம்
ஆளுமையுடன் செயல்பட வேண்டுமானால் கல்வி இன்றியமையாதது. பழங்காலத்தில் சிறந்த ஆளுமையைக் கொண்டிருந்த அரசனையே
உயிர் என்று எண்ணி மக்கள் வாழ்ந்து வந்தனர் என்பதை,
”நெல்லும் உயிரன்று, நீரும் உயிரன்று
மன்னர்
உயிர்த்தே மலர்தலை உலகம்” (புறம், 186)
என்று புறநானூறு
சுட்டுகின்றது. அரசர்களுக்கான ஆலோசனைகளை வழங்குவதற்கு அமைச்சர்கள் நியமிக்கப்படும்
போது பல்துறை அறிவு கொண்டவர்களாக இருக்க வேண்டுமென்று எதிர்பார்ப்பட்டது. இன்றும் சமுதாயத்தில்
ஒருவர் உயர்பதவி பெற வேண்டுமானால் அவர்கள் சில தகுதிகளைக் கொண்டிருத்தல் வேண்டும்.
அவை ஒருவனிடம் தளராத இயல்பு, குடிகளைக் காத்தல், முயற்சி என்று மட்டும் இருந்தால் போதாது.
அவற்றுடன் கல்வியறிவும் இணைதல் வேண்டும். இதனை வள்ளுவர், ஒருவன் அமைச்சராக இருக்க வேண்டுமென்றால்
தளராத இயல்பு, குடிமகனைக் காத்தல், கல்வி, அறிவு, முயற்சி என்ற ஐந்தினையும் கொண்டிருக்க
வேண்டும் என்கிறார். இதனை,
”வன்கண் குடிகாத்தல் கற்றறிதல் ஆள்வினையோடு
ஐந்துடன்
மாண்டது அமைச்சு” (குறள், 632)
என்ற குறள்
மூலம் அறியலாம்.
நிறைவாக,
ஒரு நாடோ அல்லது ஒரு சமுதாயமோ மகிழ்ச்சியுடன்
வாழ வேண்டுமானால், அந்நாட்டில் உள்ள மக்கள் கல்வி கற்ற அறிவுடையவர்களாக இருத்தல் வேண்டும்.
அவ்வாறு இருந்தால் அந்நாடும், சமுதாயமும் மகிழ்ச்சியுடன் இருக்கும். இதை இனியவை நாற்பது
என்னும் நூலில் ”ஊர் மன்றத்தின்கண் அறிவுடையோர் வாழ்கின்ற ஊர் இனிது” என்றும்,
”நூல் விதிப்படி வாழ்கின்ற தவத்தோரது மாட்சிமையும் இனிது” என்றும் சுட்டிக்காட்டுகின்றது.
பார்வை நூல்
1.
சையத் ஜாகீர்
ஹசன். முனைவர். அ, - நீதி நூல்களில் கல்வி, இராஜா வெளியீடு, திருச்சி. முதல் பதிப்பு,
2010.
Comments
Post a Comment