மாணாக்கர்களின்
தன்மை அன்றும் – இன்றும்
உலகில் வாழக்கூடி மக்கள் அனைவரும் வாழ்வாங்கு
வாழ அடிப்படைக் காரணியாக விளங்குவது கல்வி. இளந் தலைமுறையினரை வேற்றுமையில் ஒற்றுமை காணக்கூடிய எதிர்கால சமுதாயத்தின்
பொறுப்புள்ள உறுப்பினராக உருவாக்குவதே கல்வியின்
முக்கிய நோக்கமாகும். தனி மனிதனின் உடல், உள்ளம், அறநெறி, ஆன்மீகம், நம்பிக்கை ஆகியவற்றின்
வளர்ச்சிக்குக் கல்வி உறுதுணையாக இருக்கின்றது.
அன்றைய மாணாக்கரின் தன்மை
மாணாக்கர் பணிவுடைமை பெற்றவராக, அன்பு உள்ளத்தோடு
ஆசிரியரின் நற்குண வழியைத் தமக்கு வழிகாட்டியாகக் கொண்டனர். மாணாக்கர் கடன், பணி செய்து
கிடப்பதும், ஆசிரியரின் கடன்களைச் சரிவரச் செய்வதும் அவர்களைத் தாங்குதலுமாக அமைந்திருந்தது.
மாணாக்கர் தங்கள் வாழ்க்கையையே குருவிடம் படைக்கக் கடமைப்பட்டிருந்தனர். எளிய வாழ்வும்,
உயர்ந்த இலட்சியமும் கொண்டு திகழ்ந்தனர். அதனைத் திருக்குறளில்,
”உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றும்
கற்றார்” (குறள், 395)
என்ற குறள்
குருகுல முறைக்குச் சிறந்தச் சான்றாகும். குருகுலக் கல்வியில் ஆசிரியர் கூறும் ஒவ்வொரு
கருத்தையும் செல்வர் முன் வறியவர் கைகட்டித் தாழ்ந்து பணிவுடன் நிற்பது போல, ஆசிரியர்
முன் மாணாக்கர் நின்றும், கைகட்டியும் கல்வியியைக் கற்றனர்.
குருகுலக் கல்வியில் சான்றோர், ஆராய்ந்து
உயர்ந்திருப்பவன், கடவுள் என்று உணர்ந்து அறிவு நூல்களைக் கற்று அடங்கி, அரிய தவங்களைச்
செய்வானாயின் அவனுக்கு வீடுபேறு கிடைக்கும் என்று அறிவுறுத்தப்பட்டது. இதனை,
”உயர்ந்தோன் தலைவனென்று ஒப்புடைத்தான் நோக்கி
உயர்ந்தான்நூல்
ஓதி ஒடுங்கி – உயர்ந்தான்
அருந்தவம்
ஆற்றச் செயின்வீடாம் என்றார்
பெருந்தவம்
செய்தார் பெரிது” (ஏலாதி, 64)
என்பதால் உணரமுடிகிறது.
கல்வியைக் கற்பிக்கும் ஆசிரியர் இல்லாத ஊரில் வாழ்வதும், முரண்பாட்டைப் போக்கித் தெளிவிக்கும்
கல்விக் கேள்விகளில் முதிர்ந்தவர் இல்லாத அவையில் இருப்பதும் மாணாக்கர் இழிவாகக் கருதினர்.
மாணாக்கர் ஆசிரியரைக் குருவாகக் கொண்டும், கல்விக் கேள்விகளில் வல்லவர்களுடனும் இருந்து
செயல்படுவதே குருகுலக் கல்வியில் சிறப்பெனக் கருதினர். இதனை,
”கணக்காயர் இல்லாத ஊரும் பிணக்கறுக்கும்
மூத்தோரை
இல்லா அவைக்களனும் – பாத்துண்ணும்
தன்மையி லாளர் அயலிருப்பம் இம்மூன்றும்
நன்மை பயத்தல் இல” (திரிகடுகம், 10)
என்பதால் அறியலாம்.
எனவே, குருகுலக் கல்விமுறையில் மாணாக்கரின் தன்மைகள் போற்றத்தக்க வகையில் அமைந்திருந்தன
என்பதை இலக்கியங்களின் வழி அறிய முடிகிறது.
இன்றைய மாணாக்கர்களின்
தன்மை
இன்றைய கல்விமுறையால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளைக் கட்டாயப்படுத்தி இதைத்தான்
நீ படிக்கவேண்டும் என்றும், இதைப் படித்தால் தான் வாழ்வில் உயர்வைப் பெற முடியும் என்றும்
கூறி அவர்களின் சுயசிந்தனைகளை முடமாக்கி வைக்கின்றனர். ”எழுத்தாளனாகவோ, ஓவியம் வரைபவனாகவோ,
ஆசிரியனாகவோ வந்தால் உனக்குக் கிடைக்கும் குறைந்த வருமானத்தைக் கொண்டு நீ வசதியாக வாழ
முடியாது. நீ டாக்டராக, எஞ்சியனராக வரவேண்டும்” என்று பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளைக் கட்டாயப்படுத்தி
அவர்கள் விரும்பும் ஒரு வார்ப்பாக உருவெடுக்கும் படி செய்து வருகிறார்கள்.
கல்வி தனியார் மயமானதால் குழந்தைகளுக்குப்
பாடச் சுமைகள் அதிகமாகின்றன. எப்போதும் வீட்டுப்பாடம், டியூசன், கோச்சிங்கிளாஸ் என்று
குழந்தைகள் இருப்பதால், குழந்தைகளுக்கு உறவு முறைகளும் தெரிய வாய்ப்பில்லாமல் போகிறது.
ஆகவே பாரதி,
”காலை எழுந்தவுடன் படிப்பு – பின்பு
கனிவு
கொடுக்கும் நல்லபாட்டு
மாலை
முழுவதும் விளையாட்டு – என்று
வழக்கப்
படுத்திக் கொள்ளு பாப்பா”
என்று பாடிச்
சென்றார். இவ்வாறு வழக்கப்படுத்திக் கொண்டால் பிள்ளைகளின் உள்ளம் சிறக்கும்.
இன்றைய இளைய சமுதாயத்தினர் கல்வி கற்பதைவிட
நாகரிக முறையில் தங்கள் வாழ்வை அமைத்துக் கொள்ளவே விரும்புகின்றனர். மேலை நாட்டுத்
தாக்கத்தாலும், தொலைத் தொடர்பு ஊடகங்களாலும்
தலையில் அதிகமான முடியினை வளர்ப்பதும், அழகிய புதுப்புது ஆடைகளை உடுத்துவதும், அழகுப்
பொருட்களையும், வாசனைத் திரவியங்களைப் பூசிக் கொள்வதும் போன்ற செயல்களிலேயே நாட்டம்
கொள்கின்றனர். தொலைத் தொடர்புக் கருவிகள் மாணவர்களின் அதிக நேரத்தைத் தனதாக்கிக் கொள்கின்றது.
ஆகையால் சக மனிதர்களிடம் நேருக்கு நேர் பேசுவதும், குடும்பங்கள் தங்களுக்குள் பேசிக்
கொள்வதும், குழந்தைகளுடன் நேரத்தை செலவிடுவதும் குறைத்து மாணவர்களின் முன்னேற்றத்திற்கும்,
சுயமாகச் சிந்திக்கும் மூளை வளர்ச்சிக்கும், கண்பார்வைக்கும் நவீனக் கருவிகளான தொலைத்
தொடர்புக் கருவிகளான கைப்பேசி, தொலைக்காட்சி, மடிக்கணினி போன்றவை கெடுதலாக அமைகின்றது.
நிறைவாக,
மாணாக்கர்க்குக் கொடுக்கும் கல்வி எப்பொழுது முழுமை பெறும் என்றால் வாழ்க்கை சம்பந்தப்பட்ட அனைத்து எண்ணங்களையும் கற்றுக் கொடுக்க வேண்டும். இயற்கையுடன் இணைந்ததாக இருத்தல் வேண்டும். கல்வி சுற்றுப்புறத்தின் அழகை ரசிக்கும் மனநிலையை உருவாக்க வேண்டும். கைக்கு எட்டும் தூரத்தில் இருக்கும் அழகைப் பார்ப்பது, கலைவண்ணத்தைக் கண்டு மகிழ்வது, தொட்டு ஆனந்தம் காண்பது போன்றவைகளை மாணவர்களுக்குச் சொல்லித் தரவேண்டும்.
மணவாழ்க்கை, குழந்தை வளர்ப்பு, மகிழ்ச்சியுடன் வாழ்தல், ஊக்கத்துடன் செயல்படுதல்,
ஆழமாக சிந்தித்தல், அமைதியோடு செயல்படுதல், சகோதரத்துவத்தைப் பேணுதல் போன்ற அனைத்தையும்
சொல்லிக் கொடுக்கும் பொழுதுதான் கல்வி முழுமை பெறும்.
Comments
Post a Comment