மாணவர்கள் வாழ்வில் வளம் பெற ...
பழங்காலத்தில் குருவைச் சார்ந்து அவர் வாழ்வோடு ஒன்றி கலந்து மாணாக்கர் கல்விக்
கற்று வந்தனர். சேரர் பரம்பரையில் வாழ்ந்த செங்குட்டுவன் தன்னைச் சிறப்பித்துப் பாடிய
பரணருக்குப் பரிசுத் தொகையுடன் தன்மகனையும் ஒப்படைத்து, அவர் காட்டிய வழியில் வாழ்வது
அவனுக்கு உரியன என்பதை விளக்கி விட்டுச் சென்றான். கண்ணனும் குசேலனும் ஒன்று சேர்ந்து
பயின்ற கதை நாடறிந்த ஒன்றாகும். மாணாக்கர் புலனக்கம் கொண்டு ஆசிரியரை வழிபடுவோராக இருந்தனர்.
அறிவு வளர்ச்சியில் உண்மையான விருப்பமும், விடாமுயற்சியும், உள்ளத் தூய்மையும் கொண்டு
‘அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்’ என்ற கருத்திற்கேற்ப ஆசிரியரை வழிபட்டு
வந்தனர்.
ஒழுக்கம்
மாணாக்கர்களுக்குத் தேவையானது ஒழுக்கம். கல்வி அறிவிற்கு அடிப்படை ஒழுக்கத்தால் 'ஓரைந்துங்காக்கும் உரன்' பெறலாம். வாழ்வின் முக்கியக் குறிக்கோளை அடைய ஒழுக்கம்
இன்றியமையாதது. ஒவ்வொரு தனிமனிதனும் சமூகத்தில் பிறருடன் கூடி வாழ்வதற்கேற்ற இயல்புகளைப்
பெறுவதற்கு ஒழுக்கம் முக்கியமாகும். ஒழுக்கம் இருந்தால் அடக்கம் தானே அமையும். மாணவர்கள்
கற்கும் போது காமம், வெகுளி, மயக்கம் ஒழித்து ஒழுக்கத்துடன் செயல்படவேண்டும்.
மாணாக்கர் இளமைப்பருவத்தில் கல்வியைக் கற்று,
பின்னர் அக்கல்வியால் தந்தையையும், தாயையும் வழிபட்டு வருதல் சிறந்த ஒழுக்கமாகும்.
அவ்வாறு செயல்படும்போது பெரியவர்களின் நெறிகளைக் கடைப்பிடித்து வாழ்ந்தால் வாழ்வில்
முன்னேற முடியும் என்பதை,
”முந்தை எழுத்தின் வரவுணர்ந்து பிற்பாடு
தந்தையும்
தாயும் வழிபட்டு – வந்த
ஒழுக்கம்
பெருநெறி சேர்தல் இம்மூன்றும்
விழுப்ப
நெறிதூரா வாறு” (திரிகடு,58)
என்று திரிகடுகம்
எடுத்துரைக்கின்றது.
மெய்யுணர்தல்
”எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள்
காண்பது அறிவு” (குறள், 423)
என்று வள்ளுவர்
குறிப்பிடுகின்றார். இதற்குப் பரிமேலழகர் குணங்கள் மூன்றும் மாறி மாறி வருதல் யாவர்க்கும்
உண்மையின் உயர்ந்த பொருள் இழிந்தோர் வாயினும், இழிந்த பொருள் உயர்ந்தோர் வாயினும்,
கெடுபொருள் நட்டார் வாயினம் ஒரே வழி கேட்கப்படுதலான். எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும்
என்றார். மாணாக்கர் எப்பொருளை யார் யார் கூறக் கேட்டாலும் அப்பொருளின் உண்மைத் தன்மை
அறிந்து செயல்படவேண்டும். உண்மைத் தன்மை அறிந்து
செயல்படும் பொழுது குழப்பங்களும், சச்சரவுகளும், வீண் விரயங்களும் தவிர்க்கப்பட்டுச்
சமுதாயம் உயர்வடைய வழி ஏற்படுகின்றது.
கேட்குந்திறன்
மாணாக்கர் தேர்வுக் காலங்களில் குழுமுறைக்
கல்வி சிறப்பானதாகப் போற்றப்படுகின்றது. குழுமுறைக் கற்றலில் ஒவ்வொருவரும் ஒரு குறிப்பிட்டத்
தலைப்பைப் பற்றி உரையாடும் பொழுது மற்றவர்கள் அக்கருத்துக்களை எளிதில் மனத்தில் இருத்திக்
கொள்ள முடிகிறது. இதனை,
”கற்றிலன் ஆயினும் கேட்க அஃதொருவற்கு
ஒற்கத்தின்
ஊற்றாந் துணை” (குறள், 414)
என்று வள்ளுவர்
குறிப்பிடுகின்றார். கற்கவில்லை என்றாலும் கேட்டு அறியும் கேள்வி அறிவானது ஒருவனுக்குத்
தளர்ந்த காலத்தில் பற்றுக் கோடாக அமையும். ‘பத்து வருடம் படித்துக் கொண்டிருப்பதை விட
ஒரு கல்விமானோடு ஒரு மணி நேரம் உரையாடிக் கொண்டிருப்பது மேல்’ என்ற சான்றோரின் கூற்று
கேட்டலின் இன்றியமையாமையை வலியுறுத்துகின்றது. வள்ளுவர் யார் சொற்களைக் கேட்க வேண்டும்
என்பதை,
”இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே
ஒழுக்கம்
உடையார்வாய்ச் சொல்” (குறள், 415)
என்ற குறளின்
வழி ஒழுக்கமுடையவர் வாய்ச்சொற்களை மட்டுமே கேட்க வேண்டும் என்கிறார். மேலும் செவிக்குச்
சுவையாகிய கேள்வியை உணராமல் வாய்க்கு ருசியான உணவை மட்டும் உண்டு வாழும் மாந்தர்கள்
இருந்தாலும், இறந்தாலும் எந்த பயனும் இல்லை. உணவை மட்டும் உண்டு நாட்களைப் போக்கிக்
கொண்டிருக்காமல் சமுதாயத்தில் நடைபெறும் செயல்களையும் மாணாக்கர் கேட்டறிய வேண்டும்.
இதனை,
”செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்
அவியினும் வாழினும் என்” (குறள்,420)
என்ற குறள்
வழி அறிய முடிகின்றது.
அவைக்கு அஞ்சாமை
மாணாக்கர் தாம் கற்ற கல்வியினைச் சமுதாயத்திற்குப்
பயன்படும் வகையில் செயல்பட வேண்டும். நூல்களில் காணப்படும் அரிய கருத்துக்களை மற்றவர்
மனம் கொள்ளுமாறு எடுத்துக் கூறும் வல்லமை வேண்டும். சான்றோர் கூடிய அவையிலும், மாணாக்கர்
கூடிய அவையிலும் தாம் கற்ற நூல்களை எடுத்துக் கூற அஞ்சுதல் கூடாது. அவையைக் கண்டு அஞ்சுபவன்
சமுதாயத்தில் இருந்தும் பயனில்லை.
”பகையகத்துப் பேடிகை ஒள்வாள் அவையகத்து
அஞ்சும்
அவன்கற்ற நூல்” (குறள், 727)
என்ற குறட்பாவில்
அவைக்கு அஞ்சுபவன் கற்ற நூல், பகைவர் படையைக் கண்டு அஞ்சும் பேடி பிடித்த கூர்வாளை
ஒக்கும். வாளானது கூர்மையாக இருந்தாலும் அதன் செயல்பாடு ஒன்றுமில்லாத காரணத்தினால்
அவ்வாளினால் பயனில்லை. அதுபோல் கற்றவர்கள் அவையைக் கண்டு அஞ்சினால் மற்றவர்களால் தூற்றப்படுவர்.
நிறைவாக,
இன்றைய காலத்தில் மாணவர்களிடம் குறிக்கோள்
இல்லாத வாழ்க்கையும், நம்பிக்கையற்ற தன்மையும் தான் காணப்படுகின்றன. இளைஞர்களிடைய பண்பாட்டில்,
நாகரிகத்தில் பரம்பரையாக இருந்து வரும் மதிப்புகளும், நம்பிக்கைகளும் இல்லாமல் போய்விட்டன.
கல்விக் கூடத்தில் வேலை நிறுத்தம், வகுப்பறை மற்றும் தேர்வறையிலிருந்து வெளிநடப்பு,
கல்விச் சாலைகளுக்குச் சேதம் விளைவித்தல், போக்குவரத்துக்கு இடையூறு செய்தல் போன்ற
வன்முறைச் செயல்களில் மாணவர்கள் சமீப காலமாக ஈடுபட்டு வருவதைக் கண்கூடாகக் காண முடிகின்றது.
இந்நிலை மாறி எதிர் காலத்தில் மாணவர்கள் ஒழுக்கத்துடனும், மனம், மொழி, மெய்களைக் காத்து
நுண்பொருள் காணக்கூடிய வகையில் செயல்பட்டு வாழ்வில் முன்னேற வேண்டும் என்பதே ஒவ்வொரு
பெற்றோர்கள், ஆசிரியர்களின் ஆசையும், கனவுமாகும்.
Comments
Post a Comment