Skip to main content

நாட்டுப்புற மக்களின் வழிபாடுகள்

 

நாட்டுப்புற மக்களின் வழிபாடுகள்

 

          வழிபாடு என்னும் சொல்வழியில் செல்லுகைஎன்னும் பொருளில் தொடங்கியது. பிறகாலத்தில் வணங்குதல் என்ற பொருளில் நிலைபெற்றது. பல பொருள்களில் வளர்ச்சி அடைந்த வழிபாடு என்னும் சொல் முழுக்க முழுக்க சமயக் கோட்பாட்டு அடிப்படைகளில் ஒன்றான வழிபட்டு நிற்றல் என்பதில் பொருள் கொண்டது. உள உடல் செயல்பாட்டையே தன் பொருளைக் கொண்டு வழிபாடு விளங்குகிறது. மக்கள் தங்களின் தெய்வங்களை வழிபடும் முறைகளைக் குறிக்க வழிபாடு என்ற சொல் உலக வழக்கில் கையாளப் பெறுகிறது. நாட்டுப்புற மக்களின் வழிபாட்டில் இயற்கை வழிபாடு, ஆவிகள் வழிபாடு, குலக்குறி வழிபாடு, புனிதப் போலிப் பொருள் வழிபாடு, முன்னோர் வழிபாடு ஆகியவை சிறப்பிடம் பெறுகின்றன.

1.  இயற்கை வழிபாடு

          நாட்டுப்புற மக்கள் ஞாயிறு, சந்திரன், மழை, மரம், விலங்குகள் என்று வழிபடுகின்றனர். இவ்வழிபாடு இன்றும் தொடர்ந்து நிலைபெற்றுள்ளது. இயற்கையின் மீது கொண்ட அச்சம் வழிபாடாக மலர்ந்தது என்று மானுடவியலாரும், உளவியலாரும் கருதுகின்றனர். அச்சத்தின் அடிப்படையில் நன்றியின் வெளிப்பாடாக இந்த வழிபாட்டினை மக்கள் மேற்கொள்கின்றனர்.

ஞாயிறு

          சூரிய வழிபாடு தொன்று தொட்டு இன்று வரை நாட்டுப்புற வழிபாட்டில் மட்டுமல்லாமல் சமயங்களிலும் இடம்பெற்றுள்ளது. மனித இனம் உயர் வாழ ஒளியை சூரியன் வழங்குவதால் நாட்டுப்புற மக்கள் சூரியனை வணங்குகின்றனர். வேளாண்மைக்கு அடிப்படையாக விளங்கும் சூரியனுக்கு ஆண்டுதோறும் சிறப்பு வழிபாடு செய்கின்றனர்.

சந்திரன்

          நாட்டுப்புறத்தில் ஊர்பொது இடத்தில் முளைப்பாலிகை வைத்துப் பெண்கள் எல்லோரும் சேர்ந்து கும்மி கொட்டி வணங்கி வழிபடுவர். பின்னர், முளைப் பாலிகையை நீர் நிலைகளில் கொண்டு விட்டு வழிபாட்டினை நிறைவு செய்வர். வளமைச் சடங்குகளில் ஒன்றான பாலிகை வழிபாட்டினைச் சந்திரனை முன்னிருத்தித் தொடங்குகின்றனர்.

மழை

          மழை மனித வாழ்வுக்கு மிகவும் இன்றியமையாதது. மழையின்றிப் போனால் மக்கள் படும் துன்பத்தை விளக்கமாகப் பாடல்கள் விவரிக்கின்றன. நாட்டுப்புறப் பாடல்களில் மழைப் பாடல்கள் மிகுதியான உள்ளன. மழை வேண்டி மழைக்கஞ்சி எழுத்து மக்கள் கடவுளுக்குப் பூசை செய்வர்.

மரங்கள்

          நாட்டுப்புற மக்கள் மரங்களில் தெய்வங்கள் உறைவதாகக் கருதுகின்றனர். ஒவ்வொரு தெய்வத்திற்கும் உகந்தவையாகச் சில மரங்களைக்  கொண்டு வணங்குகின்றனர். மரங்களில் மருத்துவக் குணமுண்டு என்றும் நம்புகின்றனர். தெய்வங்களுக்கு மரங்களின் பெயர்களான பனையடியான், நாவலடியான், வேம்படியான், இலந்தக் காட்டான், மூங்கிலடியான், புன்னை மரத்தான், பொந்துபுளியான் என்று  தெய்வங்களுக்கு மரங்களின் பெயர்கள் சூட்டி வழிபடுகின்றனர். இந்தத் தெய்வங்களுக்குக் கோயில்கள் கிடையாது. அந்த மரங்களைச் சுற்றி மேடை அமைத்து இரும்பு வேல்கள் நிறுத்தி வைத்து, விளக்கு மாடம் அமைத்து விளக்கேற்றி அம்மரங்களையே கடவுளாக வழிபடுகின்றனர்.

பறவைகள்

          நாட்டுப்புற வழிபாட்டில் பறவைகள் தெய்வ ஆற்றலைப் பெற்றிருப்பதாகக் கருதுகின்றனர். தெய்வங்களுக்கு வாகனமாகப் பறவைகளை எண்ணுகின்றனர். முருகனின் வாகனமாக மயில், திருமாலின் வாகனமாகக் கருடன், நாட்டுப்புற மக்களின் வழிப்பாட்டில் சிறப்பிடம் பெறுகின்றன. கருடனின் குறியீடாகக்  கருடக் கம்பம் என்ற விளக்குத் தூண் அமைத்து விளக்கேற்றி வைத்து வழிபடுகின்றனர். குலக்குறி வழிபாட்டிலும் சில இனமக்கள் தங்களுக்கு என்று சில பறவைகளைப் புனிதமாகக் கருதுகின்றனர்.

விலங்குகள்

          விலங்குகள் சிங்கம், புலி, வேங்கை, எருது, குதிரை, மான், யானை, நாய் முதலான விலங்குகளைக் கடவுளின் வாகனங்களாக நாட்டுப்புற மக்கள் கருதுகின்றனர். முருகனை யானையுடன் தொடர்படுத்தியானைக் குட்டிச்சாமிஎன்று அழைக்கின்றனர். குதிரை, யானை முதலிய விலங்குகளைக் காவல் தெய்வக் கோயில்களுக்கு ஆண்டுதோறும் சுடுமண் சிலைகளைக் காணிக்கைகளாகக் கொண்டு வழிபடுவர். கருப்பண்ணசாமி வேங்கையில் அமர்ந்து வருவதாகக் கூறுவர். சிங்கத்தின் மீது காளி அமர்ந்திருப்பதாகவும் மக்கள் கொண்டுள்ளனர். காவல் தெய்வத்தின் முன் நாய் உருவம் அமைக்கப்படுவதும் குறிக்கத்தக்கது.

          விலங்குகளில் பாம்பு, பல்லி ஆகியன சிறப்பிடம் பெறுகின்றன. பாம்புச் சிலைகளைச் செய்து வைத்து வழிபடுவர். பாம்புப் புற்றினை வழிபடுவதும், பாம்பு கடவுளின் ஆற்றலாகவும் எண்ணுவர். பல்லியின் வாயிலாக்க் கடவுள் மக்களுக்குக் கட்டளை இடுவதாகவும் செய்திகளைக் கூறுவதாகவும் நம்புகின்றனர்.

2.  ஆவியுலக வழிபாடு

இறந்தவர்களின் ஆவிகள் மனித வாழ்க்கையைக் கட்டுப்படுத்துகின்றன என்று மக்கள் நம்புகின்றனர். பெரும்பாலும் வன்கொலையில் இறந்தவர்கள் இறப்பிற்குப் பின் ஆவியாக வந்து துன்பம் கொடுப்பார்கள் என எண்ணுகின்றனர். இறப்பிற்குப் பின் ஆவிகளை வழிபட்டால் நன்மை விளையும் என்று கருதுகின்றனர். அந்த அடிப்படையில் ஆவிகளை வழிபட்டு வருகின்றனர். அந்த அடிப்படையில் ஆவிகளை வழிபட்டு வருகின்றனர். பெரும்பாலான நாட்டுப்புறத் தெய்வ வரலாறுகள் வன்கொலைக்குப் பிறகு தெய்வமானவர்களைப் பற்றிப் பேசுகின்றனர்.

மதுரைவீரன் மாறுகால், மாறுகை வெட்டப்பட்டு இறந்தான். இறப்பிற்குப் பிறகு மதுரை மீனாட்சியின் புதல்வனாக மதிக்கப்பெற்று வழிபாட்டில் இடம் பெற்றான். காத்தவராயன் உயர்சாதிப் பெண் ஆரியமாலையைக் காதலித்தான். கலப்புத் திருமணம் செய்து கொண்டான். அதற்குத் தண்டனையாகக் கழுவில் ஏற்றிக் கொல்லப்பட்டான். இறப்பிற்குப் பின் காமாட்சியின் மைந்தனாக மதிக்கப் பெற்று வழிபாட்டில் இடம் பெற்றான். இவ்வாறு வன்கொலையால் இறக்கும் மனிதர்களின் ஆவிகள் தங்கள் கொலைக்குக் காரணமானவர்களைப் பழிவாங்கும் என்று அச்சம் கொள்கின்றனர். இந்த அச்சத்தின் காரணமாக தெய்வ வணக்கம் தோன்றுகிறது.

நாட்டுப்புற மக்களிடையே உரிமைக்குக் குரல் கொடுத்த வீரர்களாகக் கருதிப் பலரை வணங்குகின்றனர். அவர்களின் ஆவிகள் இறப்பிற்குப் பிறகும் தொடர்ந்து தங்களைக் காக்கும் என்று மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர். இவ்வாறு நாட்டுப்புற வழிபாட்டில் ஆவி வழிபாடு இடம் பெற்றுள்ளது.

3.  குலக்குறி வழிபாடு

பழங்குடி மக்கள் சில உயிர்களிலிருந்து தாங்கள் இனம் தோன்றியதாக நம்புகின்றனர். ஆகவே அந்த உயிர்களைப் பாதுகாக்கவும் வழிபடவும் தொடங்கினர். இயற்கையில் உள்ள தாவரங்கள், பறவைகள், விலங்குகள் ஆகியவற்றில் ஒன்றினைக் குலக்குறியாகக் கொண்டனர். குலக்குறி வழிபாடு நாட்டுப்புற வழிபாட்டில் இடம் பெற்றுள்ளதால் அந்த விலங்குகள், பறவைகளைக் கொல்வதில்லை.

கொங்கு நாட்டு மக்களிடையே குலக்குறி வழிபாடு வழக்கில் உள்ளது. வரகுண்ணாக் கூட்டத்தினர் வரகு உண்பதில்லை. கௌதாரி, காடைக் கூட்டம், செம்பூத்துக் கூட்டம் என்று பறவைகள் பெயரிலும் குலங்கள் அமைந்துள்ளதைக் காணலாம். வன்னியக் கவுண்டர் இனத்தில் ஒரு கூட்டத்தில் பசுவைத் தெய்வமாக எண்ணி வழிபடுகின்றனர். அவ்வினத்தில் ஒரு கூட்டத்தினர் பசுவின் இறைச்சியை உணவாகக்  கொள்கின்றனர். இவ்வாறு நாட்டுப்புற மக்களிடையே குலக்குறி வழிபாடு நிலவுகிறது.

4.  புனிதப் பொருள் வழிபாடு

நாட்டுப்புற மக்கள் இயற்கை கடந்த ஆற்றல்கள் சில பொருள்களில் உறைவதாக நம்பினர். அப்பொருட்கள் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். இயற்கையானதாகவோ, செயற்கையானதாகவோ இருக்கும். உயிர் உள்ளதாகவோ உயிரற்றதாகவோ இருக்கும். தாயத்து, எந்திரத்தகடுகள், வண்ணக் கயிறுகள், மந்திரித்த மை, திருநீறு, குங்குமம், மரங்கள் செடிகளின் வேர்கள், செடிகள், மண், நீர் ஆகியவற்றில் இயற்கை கடந்த ஆற்றல்ல் உள்ளதாக மக்கள் நம்புகின்றனர். குறியீடுகளை வரைந்த செப்புத் தகடுகளை வழிபடுவர். வேர்களை இடுப்பிலோ, கையிலோ கட்டிக் கொள்வர். திருநீறு, குங்குமம் ஆகியவற்றைத் தங்கள் உடலில் படும்படியாக வைத்துக் கொண்டால் தீய சக்திகள் அணுகாது என்று நம்புகின்றனர். அச் சக்திகளை வெல்லும் மந்திர ஆற்றல் இப் பொருள்களில் நிறைந்திருப்பதாக நாட்டுப்புற மக்கள் கருதுகின்றனர்.

5.  முன்னோர் வழிபாடு

நாட்டுப்புற மக்கள் வழிபாட்டில் முன்னோர் வழிபாடு சிறப்பிடம் பெறுகிறது. நடுகல் வழிபாடு முன்னோர் வழிபாட்டைக் குறிப்பதாகும். ஆண்டுதோறும் நாட்டுப்புற மக்கள் பொங்கல் நாளில் முன்னோர்களை நினைவிற் கொண்டு பூசை செய்வதனை இன்றளவும் கைக் கொண்டுள்ளனர். அமாவாசையில் நோன்பிருத்தல், ஆடி அமாவாசை, தை அமாவாசை, ஆகிய நாட்களில் முன்னோர்களை நினைவு கொண்டு வழிபாடு செய்தல் இன்றளவும் பின்பற்றி வருகின்றனர்.

வழிபாட்டு முறைகள்

          நாட்டுப்புற வழிபாட்டில் தமிழக மக்களிடையே நிலவும் வழிபாட்டு முறைகளில் பலி கொடுத்தல், சடங்குகளைச் செய்தல், நிகழ்த்திக் காட்டுதல், நினைவுக் கூர்தல், நேர்த்திக் கடன் செலுத்துதல் போன்ற வழிமுறைகளைக் கையாளுகின்றனர்.

பலி கொடுத்தல்

          நாட்டுப்புற வழிபாட்டு முறைகளில் குறிப்பிடத்தக்கது. உயிர்ப்பலி கொடுத்தல், தெய்வங்களுக்கு விலங்குகளைப் பலியிட்டு இரத்தத்தைக் காணிக்கை செலுத்துவது சிறப்பாகக் கருதப்படுகின்றது. ஆடு, மாடு, கோழி, பன்றி, நரி முதலிய விலங்குகளைப் பலியிடுகின்றனர். பலியில் உயிர்ப்பலியிட்ட விலங்குகளைச் சமைத்துப் படையிலிடுதல் மற்றும் பலியிட்டவற்றைப் புதைத்தல் என்ற வகையில் பலிக் கொடுக்கும் வழிபாடு நடைமுறையில் உள்ளது.

சடங்குகளைச் செய்தல்

          வழிபாட்டில் சடங்குகள் வழிவழியாக மிகுதியாக இடம்பெற்றுள்ளன. பொருள் அறியாமல் சடங்குகள் பெரும்பாலும் செய்யப்படுகின்றன. வழிபாட்டில் இடம்பெற்றுள்ள சடங்குகள் நிகழ்த்திக் காட்டுதல், நினைவு கூர்தல் என்ற இரண்டு நிலைகளில் அமைகின்றன.

நிகழ்த்திக் காட்டுதல்

          நிகழ்த்திக் காட்டுதல் என்பது புராண நிகழ்வுகளை நினைவு கொள்ளும் விழாக்களில் நிகழ்த்திக் காட்டும் கூறு இடம்பெறுகிறது. காட்டாக முருகனுக்குரிய விழாக்களில் சூரசம்காரம், வள்ளித் திருமணம் போன்ற விழாக்களைக் கொள்ளலாம். நாட்டுப்புற விழாக்களில் நடத்தப் பெறும் கழுவேற்றம், படுகளம் ஆகியன எடுத்துக்காட்டுகளாகும்.

நினைவு கூர்தல்

          நினைவு கூர்தல் என்பது விழாக்களில் குறிப்பிட்ட இடங்களில் பலி கொடுத்தல், சில சடங்குகளைச் செய்தல் ஆகியன நினைவு கூர்தலில் அடங்கும். வரலாறுகளை முழுமையாக நடத்திக் காட்டாமல் நிகழ்ச்சிகளை நினைவுக் கூர்தல் பொருட்டுப் பலி கொடுப்பர். கழுமரத்தின் அடியில் பலி கொடுத்தல, எல்லைகளில் பலி கொடுத்தல், விழாச் சடங்குகளில் பலி கொடுத்தல் ஆகியன நினைவு கூர்தல் வகையில் அடங்கும். வேடப்புனைவு இன்றிப் பாட்டாக வரலாற்றைப் படித்து இறுதியில் அத்தெய்வம் வன்கொலைக்கு ஆளான இடத்தில் பலி கொடுப்பது பெருவழக்காக உள்ளது.

வழிபாட்டுப் பொருட்கள்

          நாட்டுப்புற வழிபாட்டில் இடம்பெறும் வழிபாட்டுப் பொருட்கள் அந்தந்த மண்ணில் விளையும் விளைபொருட்களே. பயறு வகைகள், அரிசி, சோளம், கேழ்வரகு, தினை முதலிய தானியங்களின் மாவு, விலங்குகள், பறவைகளின் இளைச்சி ஆகியன குறிப்பிடத்தக்கன.

          தேங்காய், வாழைப்பழம், சாம்பிராணி, சூடம், பத்தி, அவல், பொரி, கடலை ஆகியன அனைத்து நிலைகளிலும் பொதுவாக வழிப்பாட்டில் பயன்படுத்தப் பெறுகின்றன.

          தெய்வங்கள் ஒவ்வொன்றும் விரும்பும் உணவுப் பொருட்களின் பெயராலும் தெய்வங்கள் பெயர் பெறுகின்றன. களி, கஞ்சி, பாயசம், மாவு, தேன், பொங்கல், அவிக்கப் பெற்ற பயறு வகைகள், காய்கறிகள், சமைக்கப் பெற்ற இறைச்சி, கறிவாடு ஆகியவற்றைத் தெய்வங்கள் விரும்பி ஏற்பதாக நாட்டுப்புற மக்கள் நம்புகின்றனர். களியை விரும்பி உண்ணும் கருப்புசாமி களிதின்னி என்று பெயர் பெற்றுள்ளனர்.

          நாட்டுப்புறத் தெய்வங்கள் மணமிக்கப் பொருட்களாக மணமுள்ள பூக்கள், பூமாலை, மருக்கொழுந்து, சந்தனம், சவ்வாது, புனுகு, சாம்பிராணி ஆகிய மணப்பொருட்களைத் தெய்வங்கள் விரும்புவதாக நம்புகின்றனர். இவை தவிர பெரும்பாலான காவல் தெய்வங்கள் கள், சாராயம், கஞ்சா, சுருட்டு, புகையிலை போன்றவற்றை விரும்புவதாக நாட்டுப்புற மக்கள் நம்புகின்றனர். இப்பொருட்களைத் தொடர்புபடுத்தியும் தெய்வங்களுக்குப் பெயர் சூட்டுகிற மரபும் உண்டு.

நிறைவாக,

          இயற்கையின் பேராற்றல்களை உற்று நோக்கிய மாந்தரினம் அதன் விளைவுகளுக்கு அஞ்சித் தீய விளைவுகளிலிருந்து தன்னைக் காத்துக் கொள்வதற்கு இயற்கையை வணங்கியது. பிறப்பிலிருந்து இறப்பு, இயற்கை மாற்றங்கள், சீற்றங்கள், பருவ மாறுதல்கள், ஒலி, ஒளி, மழை என்று அனைத்தும் பண்டைய மனிதனுக்குப் பலவற்றைக் கற்றுக் கொடுத்தன. ஆகவே இவற்றை இயக்கும் ஆற்றலை மனிதன் வணங்கினான்.

          வழிபாடு மக்களையும் இறையினையும் இணைக்கின்ற பாலமாகும். தமிழர் பண்பாடுகளில் தலையானது நன்றியுணர்வு. நன்றி உணர்வினை இறைவனிடம் காட்டுவது வழிபாடாகிறது. மக்கள் தங்களின் தெய்வங்களை வழிபடும் முறைகளைக் குறிக்க வழிபாடு என்ற சொல் உலக வழக்கில் கையாளப்பெறுகிறது.

துணை நின்ற நூல்கள்

1.   மருததுரை.அருநாட்டுப்புறப் பண்பாட்டுக் கூறுகள், அருணா வெளியீடு, திருச்சி, முதற் பதிப்பு – 2003.

Comments

Popular posts from this blog

எண்ணம் போல் வாழ்வு

                                                                        எண்ணம் போல் வாழ்வு             நினைவுகளே பழக்கவழக்கங்களாக மாறுகின்றன. எனவே தான் எண்ணம் போல் வாழ்வு அனைவருக்கும் அமைகிறது. வெற்றி பெற்ற அனைவரும் பிறரைத் தன் நடத்தையால் மகிழ்விக்க நினைத்தவர்களே என்பதை நாம் நினைவில் நிறுத்த வேண்டும். ·         வங்கியில் பணத்தைச் சேமிப்பதைவிட இதயத்தில் இனிய எண்ணங்களைச் சேமிப்பது மகிழ்ச்சியான வாழ்விற்கு உதவும் வைப்பு நிதியாகும். ·      மனம் - மகிழ்ச்சி அளிக்காத நிகழ்வுகளை மறந்து விடும் இயல்புடையது. ·         வெறுப்பு - மனத்தையும், உணர்வையும் பற்றிக் கொண்டுள்ள தொற்று நோய். எனவே வெறுப்பிற்கு விடுதலை தரும்வரை மகிழ்ச்சி நம்மை அணுகாது. ·   ...

பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்

திருக்குறளில் எனது சிறு முயற்சியாக… .  " பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்"  என்ற இத்தலைப்பில் அமைந்த 133 வரிகள் கொண்ட இப்படைப்பு முருகனின் ” கந்த சஷ்டி  கவசம் ” போன்று உருவாக்கப்பட்டது. இப்பகுதி அறத்துப்பால் 38  அதிகாரங்கள், பொருட்பால் 70  அதிகாரங்களிலிருந்து மட்டும் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்ற முறையில், திருக்குறளின் சாராக அமைத்து வழங்கியுள்ளேன். அறமும், பொருளும் ஒருவருக்கு அமைந்தால் இன்பம் தானாகக் கிட்டும் என்ற நோக்கத்தில் அமைக்கப்பட்டது. ”பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்” காக்க காக்க அறத்தைக் காக்க (1) காக்க காக்கக் குறளைக் காக்க உலக மொழிகளில் ஒப்பற்ற நூலாம், நோக்க நோக்க பெயா்த்து நோக்க மனிதன் கற்று மனிதம் காக்க ஐம்பொறி உணா்வை காக்க காக்க புகழுடன் வாழ ஒழுக்கம் காக்க அறநெறி வாழ்வை இறைவழி காக்க வானம் பொய்யா வளத்தைக் காக்க பசிப்பிணி யில்லா உலகைக் காக்க பற்றற்ற வாழ்வை பரிவுடன் காக்க அறத்தைக் காக்க அன்பைக் காக்க (2) குறையிலா வாழ்வை குணமுடன் காக்க இல்லற வாழ்வுடன் நல்லறம் காக்க பண்பொடு பயனும் அறத்துடன் காக்க வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க வாழ்க...

மனிதனாக வாழ ...

  மனிதனாக வாழ ... ·         பிறர் உன்னை தூற்றும் பொழுது தலை நிமிர்ந்து நில். ·         பொறாமை, கோபம், வீண் மயக்கம் போன்ற குணங்களை விரோதிகளாக எண்ணுதல். ·         வெற்றி -   தோல்வி,   இன்பம் – துன்பம் இரண்டையும் சமமாக பாவித்தல். ·         உண்மைக்குப் புறம்பானவற்றைச் செய்யாதிருத்தல். ·         நண்பர்கள் இல்லையென்றாலும் பரவாயில்லை. பகைவர்கள் இல்லாமல் வாழ முயற்சி செய்தல். ·         மனத்திடத்தோடு வாழ்தல். ·         ஏற்றத் தாழ்வு இல்லா மனநிலையுடன் இருத்தல். ·         மனிதனுக்கு உரியது - கலங்காத அறிவு, அன்பு நிறைந்த மனம், ஆரோக்கியமான   உடல். ·         எதற்கும் அஞ்சாதே -   பயம் நம்மை கோழையாக்கி விடும்.      யாரையும் வெறுக்காதே ...