Skip to main content

கரக ஆட்டத்தின் வளர்ச்சி

 

கரக ஆட்டத்தின் வளர்ச்சி


          கரக ஆட்டமஎன்பது நாட்டுப்புறக் கலைகளுள் சிறந்த கலையாகும். கிராம தேவதைகளின் விழாக் காலங்களில், தேவதைகளின் ஊர்வலம் நடைபெறும்போது பலவித ஆட்டங்களில் ஒன்று கரகமாடுதல் என்று கலைக்களஞ்சியமும், நாட்டு மக்களிடையே பிரபலமாக விளங்கும் கரகம் இசையும், நடனமும் கலந்த ஓர் அழகிய கேளிக்கையாகும் என்று தென் இந்தியக் கிராமிய நடனங்கள் என்ற நூலும் கரகாட்டம் பற்றிக் குறிப்பிடுகின்றன.

          கரகம் என்ற சொல் முதலில் கமண்டலத்தையும், பின்னர் புனிதநீர் தாங்கிய குடத்தையும் செம்பையும் குறிப்பதாயிற்று. கரகம் என்பது செம்பு அல்லது பித்தளையினால் ஆகிய செம்பை அலங்கரித்துத் தலையில் வைத்துக் கொண்டு, அச்செம்பு விழாதவாறு, நையாண்டி மேளத்தின் துணையோடு தாளத்திற்கேற்ப ஆடப்பெறுவதாகும். நாட்டுப்புறங்களில் மண்குடத்தை அலங்கரித்துத் தலையில் வைத்து ஆடுவார்கள். இதனைத் தோண்டிக் கரகம் என்பார்கள். இன்றைய கரக ஆட்டம் இலக்கியங்களில்குடக் கூத்துஎன்று இடம்பெறுகிறது.

          கரகாட்டம், தமிழகத்தில் மட்டுமல்லாமல் மலையாளம், மைசூர், ஆந்திரம் முதலிய பகுதிகளிலெல்லாமல் காணப்படுகிறது. இந்த ஆட்டம் பழங்காலத்திலிருந்தது என்பதற்கு ஆதாரமாகச் சிலைகள் தமிழகத்திலும், கேரளத்திலும் கிடைக்கின்றன.

இலக்கியங்களில் கரகம்

          தொல்காப்பியத்தில்தொல்காப்பியத்தில் கரகம் என்னும் சொல் காணப்படுகிறது.

          நூலே கரகம் முக்கோல் மணையே

          ஆயுங் காலை அந்தணர்க் குரிய” (தொல், மரபியல்,71)

என்று கரகம் என்பது நீர் தாங்கிய கமண்டலத்தைக் குறிக்கும்.

          கலித்தொகையில் – ‘கரகம்என்ற சொல் கலித்தொகையில்,

          உறித்தாழ்ந்த கரகமும் உரைசான்ற முக்கோலும்” (கலி,9:2)

          நீர்மலி கரகம் போல” (கலி,133:4)

இடம்பெறுகிறது. மேலும் புறநானூறு, ஆசாரக்கோவை, சிலப்பதிகாரம், மணிமேகலை, ஆகிய நூல்களிலகரகம்எனும் சொல்கமண்டலம்என்ற பொருளில் வழங்கப்பட்டுள்ளது.

          பிங்கல நிகண்டுகரகம் எனும் சொல் நீர் தாங்கும் செம்பு என்ற பொருள் பட விளக்குகின்றது.

          கர்க்கரி சிகம் கன்னல் கரகம்” (நூற்,1743)

          இச்சொல் இன்று நீர் அல்லது மணல் தாங்கிய அலங்கரிக்கப்பெற்ற செம்பு அல்லது தோண்டியைக் குறிப்பதாகக் கரகம் பயிலப்பட்டு வருகிறது.

குடக்கூத்து

தெய்வங்கள் ஆடியதாக மானிடர் ஆடிய கூத்துகள். சிலப்பதிகாரத்தில் மாதவி ஆடிய பதினொரு ஆடல்களில்,

·        கொடுகொட்டியாடல், பாண்டரங்கம் என்ற இரண்டு ஆடல்களும் சிவனாலும்,

·        அல்லியம், குடக்கூத்து, மல்லாடல், மரக்காலாடல் ஆகிய நான்கு ஆடல்களும் திருமாலாலும்,

·        குடையாடல், துடிக்கூத்து என்ற இரண்டு ஆடல்களும் முருகனாலும்,

·        பேடியாடல் என்ற ஒன்று காமானாலும்,

·        பாவைக்கூத்து திருமகளாலும்,

·        கடையக்கூத்து, அயராணி (இந்திராணி) யாலும் ஆடப்பட்டன.

மாதவி ஆடிய இவையனைத்தும் தெய்வ விருத்தி என்னும் தெய்வக் கூத்துகளாகும். தெய்வக் கூத்துக்களிலிருந்து தோன்றிய ஒன்றே இன்றைய கரக ஆட்டம் எனலாம்.

மாரியம்மன் விழாக்களில் கரகம்

          தமிழர்கள் மழையின் தெய்வமாக மாரியம்மனை வழிபடுகிறார்கள். மழை வறண்ட பகுதிகளிலுள்ள சிற்றூர்களில் பெரும்பாலும் மாரியம்மன் வழிபாடு நடைபெறுவது குறிப்பிடத்தக்கதாகும். சோமலே, ‘மழைத் தெய்வமாக மாரியம்மனையும், ஆற்றுக் கடவுளர்களாக கங்கை அம்மனையும் வழிபடத் தொடங்கினர். இந்தத் தெய்வங்களைப் போற்றக் கரக ஆட்டம் ஏற்பட்டது.

          மாசி, பங்குனி, சித்திரை, வைகாசி, ஆனி ஆகிய மாதங்கள் தமிழ் நாட்டில் வெப்பம் மிகுந்த மாதங்களில் பித்தம் மிகுந்து கொப்புளங்கள் வெடிக்கும் படியான வெப்புநோய்கள் (அம்மை) பரவும். இந்த நோயிலிருந்து மக்கள் தங்களைக் காப்பாற்றிக் கொள்ளும் பொருட்டு மாரியம்மனை வழிபடுவார்கள். அவ்வாறு வழிபடும்போது மக்கள் கரகம் எடுத்து விழாக் கொண்டாடுவார்கள்.

·        தென் இந்தியக் கிராமிய நடனங்கள் என்ற நூல்விழாக் காலங்களிலும், பஞ்சம் வந்த போதும், கொள்ளை நோய்கள் வந்து கொட்டமடிக்கும் போதும் மக்கள், தங்கள் இதயங்களுக்கு மிக நெருங்கிய இந்த கரக நடத்தை ஆடி வழிபாடு நிகழ்த்துவார்கள்என்று குறிப்பிடுகின்றது.

·        ஐயனார், கங்கையம்மன், மாரியம்மன் முதலான கிராம தேவதைகளின் விழாக் காலங்களிலும் மழை பெய்வதற்காக வேண்டிக் கொள்ளும் பொழுதும், தொத்து நோய்கள் வராமல் இருப்பதற்காகத் தேவதைகளை மகிழ்விக்கவும் இந்தக் கரக ஆட்டம் நடைபெற்று வருகிறது.

·        தை மாதத்தில் அறுவடை முடிந்தபின் மக்கள் தங்களை  ஓய்வுக்காலத்தை மகிழ்ச்சியாகக் கொண்டாடவும், தெய்வங்களுக்கு நன்றி தெரிவிக்கவும் சிற்றூர், பேரூர் தோறும் மாரியம்மன் விழாக் கொண்டாடுவார்கள். அவ்விழாக் காலங்களில் கரகம் முக்கிய ஆட்டமாகக் கருதப்பட்டுப் போற்றி வளரக்கப்படுகிறது.

மாரியம்மனையும் கரக ஆட்டத்தையும் தொடர்புபடுத்திப் பாடப்பெறும் பல பாடல்கள் உண்டு. எடுத்துக்காட்டாக,

          ஒண்ணாங் கரகமடி எங்கமுத்துமாரி

         ஒசந்த கரகமடி எங்கமுத்துமாரி

         ரெண்டாங் கரகமடி எங்கமுத்துமாரி

         ரெத்தினக் கரகமடி எங்கமுத்துமாரி

         மூணாங் கரகமடி எங்கமுத்துமாரி

         முத்துக் கரகமடி எங்கமுத்துமாரி” 

இவ்வாறு பத்து எண் வரை உயரந்து கொண்டே போகும். ஆடுவதற்கேற்ற சந்தத்தில் இப்பாடல் அமைந்துள்ளது.

கரக ஆட்டத்தின் வளர்ச்சி

கரகம் சக்திக் கரகம், ஆட்டக்கரகம் என இருவகைப்படும்.  

சக்திக்கரகம் - மாரியம்மன் விழாவோடு மிகவும் இணைந்து விளங்குவது. ஆட்டக்கரகமே இல்லாமலும் சக்திக் கரகமெடுத்தல் உண்டு. ஆனால், சக்திக் கரகமில்லாமல் கோயில் விழாக்களில் ஆட்டக்கரகம் மட்டும் தனித்து நிகழ்வதில்லை. தற்போது பொது நிகழ்ச்சிகளில் சக்திக்கரகமில்லாமல் ஆட்டக்கரகம் மட்டும் ஆடப்பட்டு வருகிறது. சக்திக்கரகக்காரர் அம்மன் அருள் வந்து ஆடுவதல்லால், தம் திறமை புலப்படுமாறு தாள ஞானத்தோடு ஆட்டக்காரரைப்போல் ஆடுவதில்லை.

ஆட்டக்கரகம் – தொழிலாக அல்லது வருவாய்க்காக ஆடுவது ஆட்டக்கரகம் எனப்படும். சக்திக்கரகத்திற்குத் துணையாகவும், ஊராரை மகிழ்விப்பதற்காகவும் ஆட்டகரகம் தோன்றியது என்பர். ஆட்டக்கரகம் தோண்டிக் கரகம், செம்புக் கரகம் என இரண்டு வகைப்படும்.

அ. தோண்டிக் கரகம் என்பது மண்ணால் செய்யப்பட்ட பானையை அலங்கரித்தக் கரகமாகும். இது பழங்காலத்திலிருந்து ஆடப்படும் கரகமாகும். தொன்மையான குடக்கூத்தின் பண்டைய வடிவம் தோண்டிக்கரகமாகும். காலத்தின் வளர்ச்சிக்கேற்ப மண்தோண்டிக்கு மாறாக தற்காலத்தில் பித்தளையாலும், ஐம்பொன்னாலும் செய்த குடத்தில் ஒப்பனை செய்து ஆடுகின்றனர்.

ஆ. செம்புக்கரகம் என்பது இன்று பெரும்பாலோர் ஆடுவதாகும். குடம் தலையில் உருள்வது போல் அல்லாமல் செம்பு நன்றாக நிற்பதாலும், கலைஞர்கள் தம் திறமையை வெளிப்படுத்த மிகுந்த வாய்ப்புகள் இருப்பதாலும் செம்புக் கரகத்தின் செல்வாக்கு இன்று மிகுந்து வரலாயிற்று.

ஆண்கள் பெண் வேடமிட்டு ஆடுதல்

          கரக ஆட்டத்தை இந்தியா விடுதலை பெற்ற காலத்தில் ஆண்களே ஆடி வந்தார்கள். நாடகத்திலும், பேசும்படங்களிலும் ஆண்களே பெண் வேடமிட்டு நடிக்கும் பழக்கம் இருந்தது. அப்பழக்கத்தின் தாக்கத்தால், கரக ஆட்டக்காரர்கள் சிலர் பெண் வேடமிட்டு ஆடத் தொடங்கினர். அவர்களில் கலைமாமணி எம்.எஸ்.அங்குப்பிள்ளை, கலைமாமணி ஓம்.பெரியசாமி, சாரங்கபாணி ஆகியோர் குறிப்பிடத்தக்கக் கலைஞர்கள் ஆவர். பெண் வேடம் போடாவிட்டாலும், பெண் போல் நீண்ட முடி வளர்த்துக் கொண்டைப் போட்டுக் கொண்டு கரகம் ஆடினர். அவர்களில் கரகம். சுந்தரராஜீ நாயுடு, பெரியராமு ஆகியோர் குறிப்பிடத்தக்கவராவர். பிறகு பெண்கள் கரகமாடத் தொடங்கினர்.

கரக ஆட்டப் பயிற்சிப்பள்ளி

          கரக ஆட்டம் மக்களைக் கவர்ந்ததால், கரக ஆட்டத்தின் புகழும் பரவியது. இதனையுணர்ந்து இளம்பிள்ளைகள் பலரும் கரக விளையாட்டுக்களைப் பழக விரும்பினர். அக்காலத்தில் ஒருவர் ஆடியதைப் பார்த்து மற்றவர் பழகி வந்தனர். கரகாட்டப் பயிற்சிப் பள்ளிகள் அந்நாளில் இல்லை. அக்காலத்தில் ஐராவதநல்லூர் தங்கச்சாமிப் பிள்ளை, வெள்ளையப்ப நாடார், தவசி நாடார் ஆகியோர் தாங்கள் ஆடிப் புகழ் பெற்றாலும், பள்ளிகளை உருவாக்கவில்லை. முதன்முதலான கரகாட்டப் பயிற்சிப் பள்ளியைக் கலைமாமணி எம்.எல்.அங்குப்பிள்ளை என்பர் உருவாக்கினார். இவர் தமது பயிற்சி பள்ளியில் 250 மாணவர்களுக்குக் கரக ஆட்டம் கற்பித்துள்ளார். இதனால் குழுநடனம் உருப்பெற்று கரக ஆட்ட வரலாற்றில் புதிய முறை உருவாயிற்று எனலாம்.

பெண்கள் கரகம் ஆடுதல்

          ஆண்களின் கரக ஆட்டத்தைப் பார்த்துப் பெண்களும் கரகப் பயிற்சிப் பள்ளியின் மூலம் பெண்களும் கரகம் பயிலவும் ஆடவும் தலைப்பட்டனர். முதன்முதலில் பாண்டியம்மாள், மாரியம்மாள், பஞ்சவர்ணம் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

          ஆண்களோடு பெண்களும் கரகம் ஆடத் தொடங்கிய பிறகு கோயில் விழாக்களில் பங்குகொள்ள முனைந்தனர். போட்டி நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.

          மாரியம்மன் விழா முதலிய  சிற்றூர் தெய்வ விழாக்கள் தொடர்பாக கரக ஆட்டங்கள், தெருவில் தரை நிகழ்ச்சிகளாக நடைபெற்று வந்தன. ஆனால் இந்திய விடுதலைக்குப்பின் படிப்படியாக மேடை நிகழ்ச்சியாக உருபெறத் தொடங்கின. இந்நிலையில் தெய்வத் தொடர்பான கூத்தாக இருந்த கரக ஆட்டம், பின்னர் பொதுக் கூத்தாக, தனியொரு கலையாக மாறியது எனலாம்.

          அரசியல் மாநாடுகள், ஊர்வலங்கள், பொங்கல் விழாப் போன்ற சமூக விழாக்கள், கலைமன்ற விழாக்கள் ஆகியவற்றின் எழுச்சியாலும், முயற்சியாலும் மேடை நிகழ்ச்சிகளில் கரக ஆட்டம் முதலிய நாட்டுப்புறக் கலைகளும் மேடையில் நடைபெறத் தொடங்கின.

          கோயில் விழாக்களோடு வேறு பல பொது நிகழ்ச்சிகளிலும் வந்த கரக ஆட்டக் கலையானது திரைப்படத் துறையிலும் இடம்பெறத் தவறவில்லை. முகூர்த்தநாள், காத்தவராயன், பாலாபிசேகம், குருதட்சிணை முதலிய படங்களில் கரக நிகழ்ச்சிகள் இடம் பெற்றுள்ளன.

கரகக் கலைஞர்களின் சங்கம்

          கரக ஆட்டக் கலைஞர்களின் ஒற்றுமையை வலுப்படுத்தவும், வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும் அவர்களிடையே சங்கம் ஒன்று உருவானது. இச்சங்கம் ‘தமிழ்நாடு கிராமிய கரக ஒயிலாட்ட வாத்தியக் கலைஞர்கள் சங்கம்’ என்ற பெயரில் இயங்கியது.

          அச்சங்கம் வெளியிட்ட அறிக்கையில் ‘கிராமியக் கலைகளாக கரகம், புரவி, மயில் வாத்தியம், ஒயில், காவடி, பம்பை, கிடுமுட்டி, சின்னமயில், போர் முரசு போன்ற ஆட்ட நுண்கலைகள் அழிந்து விடாதபடி பாதுகாக்கவும், புதிய வாத்திய கலைக் கருவிகள் வழங்கவும், கலைஞர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி அவர்களை மகிழ்வித்து ஊக்கமளிக்கவும்’ என்ற குறிக்கோள் கூறப்படுகின்றன. சங்கத்தினர் மாநாடுகளும் நடத்துகின்றனர்.

நிறைவாக,

          தெய்வக் கூத்தாகத் தோன்றிய கரக ஆட்டமானது கூத்துக் கலையாக வளர்ந்தது. சமூகத்தில் ஆடவரும் பெண்டிரும் ஆடுங்கலையாகவும், மேடை நிகழ்ச்சி, திரைப்படம், தொலைக்காட்சி, வானொலி, அரங்க நிகழ்ச்சி ஆகியவற்றால் வளர்ந்து இன்று அருங்கலையாக வலம் வருகின்றது.

          இவ்வாறாக நாள், கிழமை, இதழ்களும் கரக ஆட்டக் கலையை வளர்த்து வருகின்றன.

பார்வை நூல்

1.  வேலுச்சாமி.நா, -  கரக ஆட்டக்கலை, பரணி அச்சகம், மதுரை, பதிப்பு- 1986.

Comments

Popular posts from this blog

எண்ணம் போல் வாழ்வு

                                                                        எண்ணம் போல் வாழ்வு             நினைவுகளே பழக்கவழக்கங்களாக மாறுகின்றன. எனவே தான் எண்ணம் போல் வாழ்வு அனைவருக்கும் அமைகிறது. வெற்றி பெற்ற அனைவரும் பிறரைத் தன் நடத்தையால் மகிழ்விக்க நினைத்தவர்களே என்பதை நாம் நினைவில் நிறுத்த வேண்டும். ·         வங்கியில் பணத்தைச் சேமிப்பதைவிட இதயத்தில் இனிய எண்ணங்களைச் சேமிப்பது மகிழ்ச்சியான வாழ்விற்கு உதவும் வைப்பு நிதியாகும். ·      மனம் - மகிழ்ச்சி அளிக்காத நிகழ்வுகளை மறந்து விடும் இயல்புடையது. ·         வெறுப்பு - மனத்தையும், உணர்வையும் பற்றிக் கொண்டுள்ள தொற்று நோய். எனவே வெறுப்பிற்கு விடுதலை தரும்வரை மகிழ்ச்சி நம்மை அணுகாது. ·   ...

பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்

திருக்குறளில் எனது சிறு முயற்சியாக… .  " பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்"  என்ற இத்தலைப்பில் அமைந்த 133 வரிகள் கொண்ட இப்படைப்பு முருகனின் ” கந்த சஷ்டி  கவசம் ” போன்று உருவாக்கப்பட்டது. இப்பகுதி அறத்துப்பால் 38  அதிகாரங்கள், பொருட்பால் 70  அதிகாரங்களிலிருந்து மட்டும் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்ற முறையில், திருக்குறளின் சாராக அமைத்து வழங்கியுள்ளேன். அறமும், பொருளும் ஒருவருக்கு அமைந்தால் இன்பம் தானாகக் கிட்டும் என்ற நோக்கத்தில் அமைக்கப்பட்டது. ”பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்” காக்க காக்க அறத்தைக் காக்க (1) காக்க காக்கக் குறளைக் காக்க உலக மொழிகளில் ஒப்பற்ற நூலாம், நோக்க நோக்க பெயா்த்து நோக்க மனிதன் கற்று மனிதம் காக்க ஐம்பொறி உணா்வை காக்க காக்க புகழுடன் வாழ ஒழுக்கம் காக்க அறநெறி வாழ்வை இறைவழி காக்க வானம் பொய்யா வளத்தைக் காக்க பசிப்பிணி யில்லா உலகைக் காக்க பற்றற்ற வாழ்வை பரிவுடன் காக்க அறத்தைக் காக்க அன்பைக் காக்க (2) குறையிலா வாழ்வை குணமுடன் காக்க இல்லற வாழ்வுடன் நல்லறம் காக்க பண்பொடு பயனும் அறத்துடன் காக்க வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க வாழ்க...

மனிதனாக வாழ ...

  மனிதனாக வாழ ... ·         பிறர் உன்னை தூற்றும் பொழுது தலை நிமிர்ந்து நில். ·         பொறாமை, கோபம், வீண் மயக்கம் போன்ற குணங்களை விரோதிகளாக எண்ணுதல். ·         வெற்றி -   தோல்வி,   இன்பம் – துன்பம் இரண்டையும் சமமாக பாவித்தல். ·         உண்மைக்குப் புறம்பானவற்றைச் செய்யாதிருத்தல். ·         நண்பர்கள் இல்லையென்றாலும் பரவாயில்லை. பகைவர்கள் இல்லாமல் வாழ முயற்சி செய்தல். ·         மனத்திடத்தோடு வாழ்தல். ·         ஏற்றத் தாழ்வு இல்லா மனநிலையுடன் இருத்தல். ·         மனிதனுக்கு உரியது - கலங்காத அறிவு, அன்பு நிறைந்த மனம், ஆரோக்கியமான   உடல். ·         எதற்கும் அஞ்சாதே -   பயம் நம்மை கோழையாக்கி விடும்.      யாரையும் வெறுக்காதே ...