இலக்கியங்களில் கோவில் வழிபாடு
”காடும் காவுங் கவின்பெறு துருத்தியும்
யாறுங் குளனும்
வேறுபல் வைப்பும்
சதுக்கமுஞ்
சந்தியும் புதுப்புங் கடம்பும்
மன்றமும் பொதியிலும் கந்துடை நிலையினும்”
(திருமுருகு, 223-226)
என்று நக்கிரர்
திருமுருகாற்றுப்படையில் இறைவனை வழிபடும் இடங்களாகக் காடு, பொழில், ஆற்றிடைக் குறை,
ஆறுகள், குளங்கள், நாற்சந்தி, முச்சந்தி, ஐஞ்சந்தி, ஊர்நடுவே உள்ள மரம் அம்பலம் ஆகியன
இறை உறையும் இடங்களாக இருந்தமை அறியப்படுகிறது.
கோவில்களின்
வளர்ச்சி
பழங்காலத்தில் தமிழகத்தில் கோவில் கட்டிடங்கள்
மரத்தினால் அமைக்கப்பட்டன. இதனை சிதம்பரத்தில் ஊர்த்துவ தாண்டவ மூர்த்தி ஆலயத்தின்
தொன்மைநிலை தெளிவாக்கும். செங்கல், சுண்ணாம்பு, மரம் முதலிய பொருள்களால் கட்டிடங்கள்
அமைக்கப்பட்டன. இக்கருத்தினைக் கடியலூர் உருத்திரங்கண்ணனார்,
”இட்டிகை நெடுஞ்சுவர் விட்டம் விழ்ந்தென
மணிப்புறாத்
துறந்த மரஞ்சோர் மாடத்து
எழுதணி
கடவுள் போகலிற் புல்லென்று
ஒழுகுவலி மறந்த மெழுகாப் புன்றிணை”
அகநானூற்றுப்
பாடல் வரிகள் குறிக்கின்றது. பல்லவர் காலத்தில் பாறைகளைக் குடைந்து குகைக் கோவில்கள்
அமைக்கப்பட்டன. இராசசிம்மப் பல்லவன் காலத்தில் கற்றளிகள் கட்டும் முறை ஏற்பட்டது. தனித்தனிக்
கருங்கற்களை ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கிக் கட்டப்படுவது கற்றளியாகும். பிற்காலச் சோழர்கள்
பல கோவில்களை இம்முறையில் கட்டினர்.
இலக்கியங்களில்
வழிபாடுகள் குறித்தச் செய்திகள்
‘வழிபாடு’ என்ற சொல் இலக்கண நூலாகிய தொல்காப்பியத்தில்
‘வழிபடுதெய்வம்’ எனக்கூறப்படுகிறது.
”வழிபடல் சூழ்ந்தபின் அவருடை நாட்டே
...”
எனவரும் குறுந்தொகைப்
பாடலில் வழிபடல் என்பதற்குச் செல்லுதல் எனப் பொருள் கொள்கிறார் உ.வே.சாமிநாதைய்யர்.
”வழிபடுவோரை வல்லறிதீயே”
எனவரும் புறநானூற்றுப்
பாடலில் ‘வழிபடுதல்’ என்பது ‘வணங்குதல்’ என்ற பொருளைக் குறிக்கின்றது.
”வழிபடு வல்லுதலால்”
என்ற நாலடியார்
பாடல் வழிபாடு என்பதற்குப் ‘பின்பற்றுதல்’ எனப் பொருள் தருகின்றது.
“வந்தனை செய்து வழிபடுதலைக் கோல் ...
கோட்டம்
வழிபாடு .....”
என்னும் சொற்கள்
சிலப்பதிகாரத்தில் பயின்று வருகின்றது.
”அமரர்கொன் வழிபட்டார் ...”
எனத் திருவாய்மொழி
நூற்றந்தாதியில் இச்சொல் ‘நேர்சொல்லுதல்’ எனப் பொருள் தருகின்றது.
”இருமொழியும் வழிபடுத்தார்....”
எனக் காஞ்சிப்
புராணத்தில் வருமிடத்து ‘வழிபடுத்துதல்’ என்பதற்குச் ‘சீர்திருத்தம்’ எனப்பொருள் கொள்ளுமாறு
உள்ளது.
‘வழிபாடு’ என்பது ‘வழிபடுதல்’, ‘நெறியை அடைதல்’
எனப் பொருள்படும். இறையருள் நெறியில் கலந்து செல்ல முற்பட்டுக் குறைவிலா நிறைவாய்க்
கோதிலா அமுதாயுள்ள இறைவனின் உயரிய பண்புநலன்களைப் படிப்படியாக அடைவதற்காக அவன் அருளைத்
துணையாகக் கொண்டு செய்யப்படும் முயற்சியே வழிபாடு எனப்படும்.
நிறைவாக,
மனிதன் மனிதமாக மாறுவதற்கான வழிமுறைகளே வழிபாடு
என்று ஒவ்வொரு சமயத்திலும் பலவாறு வேறுபடுகின்றது. இறைவனுக்கு வழிபாடு காலை, மதியம்,
இரவு என்ற முறையில் நடத்தப்படுகிறது. இவ்வழிபாட்டின் போது தெய்வத்திற்கு நீரிட்டு மலர்தூவி,
இசைபாடி வணங்குவர் என்பதை,
”சலம் பூவொடு தூபம் மறந்தறியேன்
தமிழோடு
இசைபாடல் மறந்தறியேன்...”
என்ற திருவாய்மொழிப்
பாடல் மூலம் அறியலாம்.
பார்வை நூல்
1.
புவனேஸ்வரி. முனைவர்.எ – நாட்டுப்புறத்
தெய்வ வழிபாடு, சித்ரா பதிப்பகம், கோடம்பாக்கம், சென்னை –
600 024, முதல் பதிப்பு – 2019.
Comments
Post a Comment