Skip to main content

நாட்டுப்புறப் பாடல்களில் வெள்ளையர்களின் ஆட்சியின் மேலாண்மை

 

நாட்டுப்புறப் பாடல்களில் வெள்ளையர்களின் ஆட்சியின் மேலாண்மை


            அரசியல், பொருளாதார ரீதியில் நம்நாடு அடிமைப்பட்டுக் கிடந்த போதிலும் தங்கள் நாட்டு வளர்ச்சியில் நம் நாட்டையும் பயன்படுத்தும் நோக்கத்தோடு அவர்கள் வசதிக்கென சில வளர்ச்சிப் பணிகளையும் வெள்ளையர்கள் மேற்கொண்டனர். இருப்புப் பாதை, புகை வண்டி விமானம், மின்சாரம், தொழிற்சாலைகள், கல்விக் கூடங்கள், கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள் போன்றவை வெள்ளையர் ஆட்சியினால் நமக்கு வந்த வரவுகள். இந்த வளர்ச்சியினால் யாருக்குப் பலன் என்பதில்தான் கருத்து வேறுபாடு. அவர்கள் தங்களுக்காக உருவாக்கியவற்றை எல்லாம் விடுதலை அடைந்தபோது நமக்கென விட்டுச் சென்றனர்.

            இவ்வாறு பொருளாதாரப் போக்கில், சமுதாய அமைப்பில் பயனுள்ள தடயங்களை அவர்கள் உருவாக்கிச் சென்றார்கள் என்பதை நாட்டுப்புறப் பாடல்கள் வழி தெரிந்து கொள்ளலாம்.

மெத்தை வீடுகள்

            குடிசைகளும், ஓட்டு வீடுகளும் அதிகம் இருந்த நம் நாட்டில் அடுக்கு மெத்தை வீடுகள் வெள்ளையர் காலத்தில் அதிகம் என்பதை,

            ஆனை மேஞ்ச இடமெல்லாம்

          அடுக்கு மெத்த வீடாச்சு

          போலிசு டேஷனாச்சு

          போலிசு டேஷனாச்சு

என்று தெரிவிக்கிறது.

            யானை மேய்ந்த புறம்போக்கு நிலங்களில் எல்லாம்  அடுக்கு வீடுகள் உருவாகின. நகர்மயமாதல் என்பது வளர்ச்சியில் ஒரு முக்கிய அங்கம். அதே சமயம் மக்கள் அமைதியாக வாழ்ந்தார்களா? என்றால் இல்லை என்பதைபோலிசு டேஷனாச்சு போலிசு டேஷனாச்சுஎன்று இரண்டு முறை சொல்வதிலிருந்து தெரிய வருகிறது.

மின்சாரம், தார் ரோடு

            வெள்ளையர் நமக்குத் தீமைகளைச் செய்திருந்தாலும் சில நல்லவற்றை நமக்கு அறிமுகம் செய்து வைத்தார்கள் என்றச் செய்தியை இப்பாடல் வழி அறியலாம்.

             விளக்கெண்ணெய் விளக்குக்குப் பதிலா

                    இந்த வெள்ளைக் காரன்

           எலக்ட்ரிக் விளக்குப் போட்டதென்ன

                    இந்த வெள்ளைக் காரன்

          தண்ணி சொட்டும் நிக்காம

                    இந்த வெள்ளைக் காரன்

          தார் ரோட்டு போட்ட தென்ன

                   இந்த வெள்ளைக் காரன்

          அகஸ்த்துமாத்தா ஆள் சாகாமே

                    இந்த வெள்ளைக் காரன்

          ஆசுபத்திரி கட்டினானாம்

                   இந்த வெள்ளைக் காரன்

          கற்குறி கீரல் எல்லாம்

                   இந்த வெள்ளைக் காரன்

          தானே மாற்றி விட்டானய்யா

                   இந்த வெள்ளைக் காரன்

            எண்ணெயை மட்டுமே பயன்படுத்திய நம் வீடுகளிலும் தெருக்களிலும் அவர்கள் காலத்தில் தான் மின்விளக்கு வந்தது. மழைக் காலங்களில் நம் நாட்டுப் பழஞ்சாலைகளில் பயணம் போனால் ஒத்து வராதவை. அப்படிப்பட்ட மண் பாதைகளை மட்டுமே பார்த்த நம் நாட்டு மக்கள் ஒரு சொட்டு நீரும் தேங்காத தார் சாலைகளைப் போட்டார்கள்.

            கல்விக் கூடங்களும், மருத்துவமனைகளும் வளரத் தொடங்கின. கல்வி வரவால் நம் மக்களும் உயர்கல்வி பெற வாய்ப்புப் பெருகியது. நோய் தீர மருத்துவ வசதி கிடைத்தது. ஆங்கில அலோபதி மருத்துவ முறை வெள்ளையர் காலத்தில் தான் அறிமுகம் செய்யப்பட்டது. அதுவரை நம் நாட்டில் நாட்டு மருத்துவம் செய்து வந்தார்கள்.

            நீலகிரிப் பகுதியில் போட்ட மின்சாரத்தைப் பற்றிய குறிப்பு உள்ளது. அடிக்கடி விவசாய நிலங்களுக்கு சென்று வந்த வெள்ளை அதிகாரிகள் நீலகிரிக்கும் மின்சாரம் கொண்டுவந்தனர்.

            நீலகிரி ஓரத்திலே

          நீட்டிவிட்டான் காந்தக் கம்பி

          தொட்டா புடிக்குதடி

          துடிக்காரன் போட்ட கம்பி

என்று மின்சாரத்தின் இயல்பையும் இப்பாடல் இயம்புகிறது.

புகைவண்டி

            புகைவண்டி வந்ததும் வெள்ளையர் காலத்தில்தான். முதல் முதலில் இருப்புப் பாதை பம்பாய் பகுதியில் போடப்பட்டு நீளமான புகைவண்டி ஓடத் தொடங்கிய போது நம்நாட்டுப் பாமர மக்கள் கூட்டம் கூட்டமாக நின்று அதனை வேடிக்கைப் பார்த்திருக்கிறார்கள். மாடில்லாமல் மாயமாக எப்படி இந்த வண்டி வருகிறது என்று வியந்து போயிருக்கிறார்கள்.

            எஞ்சினு வண்டிகளாம்

           இருபுறமும் சூட்சியமாம்

           மாடில்லாமல் போகுதடி

           மாய வெள்ளைக்கார வண்டி

           தன்னாலே போகுதடி

           சாதி வெள்ளைக்கார வண்டி

இப்பாடல் புகைவண்டியைத் தவிர மற்ற வண்டிகளையும் குறிப்பதாகக் கொள்ளலாம். வெள்ளைக்கார வண்டி என்பதெல்லாம் வெள்ளைக்காரன் கண்டுபிடித்தது என்பதை மட்டுமின்றி அவர்கள் மட்டுமே போகின்ற வண்டி என்பதற்காகவும் கொள்ளலாம். அவர்களே அனுமதித்திருந்தாலும் அறிமுகமான காலத்தில் நம்நாட்டவர் அதில் பயணம் செய்யவே பயந்து ஒதுங்கி இருப்பார்கள்.

ஆகாய விமானம்

            வெள்ளையர்கள் புகைவண்டியைப் போல் ஆகாய விமானத்தையும் இந்திய மண்ணில் இறக்கியவர்கள். உலக அதிசயங்கள் போல  விமானம் எப்படிப் பறக்கிறது. எதுவோ மாயவேலை என்றுதான் நம்நாட்டு மக்கள் நினைத்திருக்கிறார்கள். விஞ்ஞானமும் கல்வியும் வளர்ந்த இக்காலத்தில் விமானத்தில் பறக்கிறது என்றால் வானத்தை நிமிர்ந்து பார்க்காதவர்கள் இருக்க மாட்டார்கள். இவ்வளவு அதிசயமான விமானத்தைக் கண்டுபிடித்தவர்கள் செத்தவனைக் கூட பிழைக்க வைக்கும் ஆற்றல் படைத்தவர்களாக இருப்பார்கள் என நம் மக்கள் அதிசியத்துப் போனார்கள்.

            பத்துமைல் தூரத்திலே

          பறக்குதடி ஏரோப்பிளேன்

          செத்தா பிழைக்க வைப்பான், இந்த

          சீமை வெள்ளைக்காரன் மகன்

பத்து மைல் தூரம் என்பதும் அதிக உயரத்தைக் குறிக்கும் உயர்வு நவிற்சியாகக் கூறியுள்ளனர்.

அதிசயத் தொழில்கள்

            ஆங்கிலேயர்கள் இந்தியாவிற்கு இயந்திரங்களை அறிமுகம் செய்தவர்கள். மனிதர்கள் காலங்காலமாக செய்து வந்த வேலைகளை எல்லாம் இயந்திரங்கள் செய்யத் தொடங்கின. தொழிற்புரட்சிக்குப் பின் இங்கிலாந்தில் ஏற்பட்ட தொழில் மாற்றங்கள் பிறநாடுகளிலும் பரவ ஆரம்பித்தன. இந்தியாவிற்கும் தானே ஆடும் இயந்திரம், தந்தி, தொலைபேசி, கல் உடைக்கும் இயந்திரம் போன்றவை புரட்சிகரமாக வந்தது. பாமர மக்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவில்லை. முதன்முதலில்வீடியோவும், கம்ப்யூட்டரும்வந்த போது நம் தலைமுறை அதியித்தது போல அந்தத் தலைமுறை மக்களும் இயந்திரங்களைக் கண்டு அதிசயித்துப் போனதில் வியப்பேதுமில்லை.

            ஆடுதடி ஓர்க்கு ஷாப்பு

          அரைக்குதடி சுண்ணாம்பு

          எடுக்குதடி மானிடங்க

          எண்ணத் தொலையாம

          சீமை இரும்பெடுத்து

          சிமில்போல தோதை செஞ்சு

          ஆடாத சூட்சியத்தை

           ஆட்டிவச்சான் லோகந்துரை

          அக்கரைக்கும் இக்கரைக்கும்

          அழகான தந்தி போட்டு

          தந்தி மேலே பேசறாராம்

          தருமதுரை லோகனுமே

          கல்லை உடைக்கிறதும்

          கருமலையை மெல்லறதும்

          சொல்லறதும் பொய்யானால்

          சுரங்கத்தில் போய்ப்பாரு

            இங்கு செய்தியோடு செய்தியாக ஒரு முக்கியமான சிக்கலும் தெரிவிக்கப்படுகிறது. இயந்திரங்கள் எந்த அளவிற்கு பயன்படுத்தப்படுகின்றவோ அந்த அளவிற்கு மற்ற வேலை மிச்சப்படுத்தப்படும். எனவே ஏற்கனவே அந்த வேலையை செய்பவர்கள் வேலையை இழக்க நேரிடும். இதைத்தான்,

            எடுக்குதடி மானுடங்க

          எண்ணத் தொலையாமே!”

எனும் புலப்படுத்துகின்றன. மேலே குறிப்பிட்டுள்ள நாட்டுப்புறப் பாடல்கள் மூலம் வெள்ளையர்கள் நமக்குச் செய்த நன்மைகளும் தீமைகளும் பட்டியல் போட்டுக் காட்டுகின்றன.

நிறைவாக,

            ஆங்கிலேயர்கள் நம் நாட்டு மக்களின் வறுமையைப் பணயமாக வைத்துத் தங்கள் பணத்தைக் கொண்டு நாட்டையே விலைக்கு வாங்கிக் கொண்டனர். நாட்டுவளங்களை எல்லாம் சுரண்டி தங்களின்  தாய் நாட்டின் வளத்தைப் பெருக்கிக் கொண்டனர். வெள்ளையரின் வெள்ளிப் பணம் பலப்பல சித்து வேலைகளை எல்லாம் செய்தது. தமிழ்நாட்டில் மூலைமுடுக்குகளில் எல்லாம் பாடப்பட்ட பாடல்,

            ஊரான் ஊரான் தோட்டத்திலே

          ஒருத்தன் போட்டானாம் வெள்ளரிக்காய்

          காசுக்கு ரெண்டு விக்கச் சொல்லி

          காயிதம் போட்டானாம் வெள்ளைக் காரன்

          வெள்ளைக்காரப் பணம் வெள்ளிப் பணம்

          வேடிக்கை காட்டுதாம் சின்னப்பணம்

இப்பாடலில் ஆறே வரிகளில் எவ்வளவு உண்மைகள் பொதிந்து கிடக்கின்றன.

            1871 – ஆம் ஆண்டில் சார்லஸ் . கோவர் என்ற ஒரு ஆங்கிலேயரின் முயற்சியால்  இந்தத் தமிழ் நாட்டுப் பாடல்கள்  தொகுக்கப்பட்டது. அவரைத் தொடர்ந்து நம் புலவர் பெருமக்கள் அப்பணியைத் தொடர்ந்து செய்து வருகின்றனர்.

துணை நின்ற நூல்கள்

1.    ஆறுமுகம் . ,  - நாட்டுப்புற இலக்கியமும் பண்பாடும், தேன்தமிழ்ப் பதிப்பகம், சேலம் – 636 001, முதல் பதிப்பு, செப்டம்பர்,1984.

2.    சண்முகசுந்தரம். சு, - நாட்டுப்புறவியல், காவ்யா வெளியீடு, சென்னை – 600 024, இரண்டாம் பதிப்பு , ஏப்ரல், 2007.

3.    ராஜன்..மு, - நாட்டுப் பாடல்களில் பொருளாதாரம், வெற்றி அச்சகம், இராயப்பேட்டை, சென்னை-14, முதல் பதிப்பு,1987.

 

 

 

Comments

Popular posts from this blog

எண்ணம் போல் வாழ்வு

                                                                        எண்ணம் போல் வாழ்வு             நினைவுகளே பழக்கவழக்கங்களாக மாறுகின்றன. எனவே தான் எண்ணம் போல் வாழ்வு அனைவருக்கும் அமைகிறது. வெற்றி பெற்ற அனைவரும் பிறரைத் தன் நடத்தையால் மகிழ்விக்க நினைத்தவர்களே என்பதை நாம் நினைவில் நிறுத்த வேண்டும். ·         வங்கியில் பணத்தைச் சேமிப்பதைவிட இதயத்தில் இனிய எண்ணங்களைச் சேமிப்பது மகிழ்ச்சியான வாழ்விற்கு உதவும் வைப்பு நிதியாகும். ·      மனம் - மகிழ்ச்சி அளிக்காத நிகழ்வுகளை மறந்து விடும் இயல்புடையது. ·         வெறுப்பு - மனத்தையும், உணர்வையும் பற்றிக் கொண்டுள்ள தொற்று நோய். எனவே வெறுப்பிற்கு விடுதலை தரும்வரை மகிழ்ச்சி நம்மை அணுகாது. ·   ...

பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்

திருக்குறளில் எனது சிறு முயற்சியாக… .  " பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்"  என்ற இத்தலைப்பில் அமைந்த 133 வரிகள் கொண்ட இப்படைப்பு முருகனின் ” கந்த சஷ்டி  கவசம் ” போன்று உருவாக்கப்பட்டது. இப்பகுதி அறத்துப்பால் 38  அதிகாரங்கள், பொருட்பால் 70  அதிகாரங்களிலிருந்து மட்டும் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்ற முறையில், திருக்குறளின் சாராக அமைத்து வழங்கியுள்ளேன். அறமும், பொருளும் ஒருவருக்கு அமைந்தால் இன்பம் தானாகக் கிட்டும் என்ற நோக்கத்தில் அமைக்கப்பட்டது. ”பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்” காக்க காக்க அறத்தைக் காக்க (1) காக்க காக்கக் குறளைக் காக்க உலக மொழிகளில் ஒப்பற்ற நூலாம், நோக்க நோக்க பெயா்த்து நோக்க மனிதன் கற்று மனிதம் காக்க ஐம்பொறி உணா்வை காக்க காக்க புகழுடன் வாழ ஒழுக்கம் காக்க அறநெறி வாழ்வை இறைவழி காக்க வானம் பொய்யா வளத்தைக் காக்க பசிப்பிணி யில்லா உலகைக் காக்க பற்றற்ற வாழ்வை பரிவுடன் காக்க அறத்தைக் காக்க அன்பைக் காக்க (2) குறையிலா வாழ்வை குணமுடன் காக்க இல்லற வாழ்வுடன் நல்லறம் காக்க பண்பொடு பயனும் அறத்துடன் காக்க வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க வாழ்க...

மனிதனாக வாழ ...

  மனிதனாக வாழ ... ·         பிறர் உன்னை தூற்றும் பொழுது தலை நிமிர்ந்து நில். ·         பொறாமை, கோபம், வீண் மயக்கம் போன்ற குணங்களை விரோதிகளாக எண்ணுதல். ·         வெற்றி -   தோல்வி,   இன்பம் – துன்பம் இரண்டையும் சமமாக பாவித்தல். ·         உண்மைக்குப் புறம்பானவற்றைச் செய்யாதிருத்தல். ·         நண்பர்கள் இல்லையென்றாலும் பரவாயில்லை. பகைவர்கள் இல்லாமல் வாழ முயற்சி செய்தல். ·         மனத்திடத்தோடு வாழ்தல். ·         ஏற்றத் தாழ்வு இல்லா மனநிலையுடன் இருத்தல். ·         மனிதனுக்கு உரியது - கலங்காத அறிவு, அன்பு நிறைந்த மனம், ஆரோக்கியமான   உடல். ·         எதற்கும் அஞ்சாதே -   பயம் நம்மை கோழையாக்கி விடும்.      யாரையும் வெறுக்காதே ...