Skip to main content

சிற்பமும் சமயமும்

                                                           சிற்பமும் சமயமும்


        தாய்மடிக் கிடந்த குழவி தந்தை தோளிற் கிடந்தாங்கு இயற்கையொடு மருவிய சிற்பக்கலை சமயத்திற்குத் தாவியது. எல்லாக் கலைகளுமே ஒரு நிலையில் சமய அணைப்பிலேயே வாழ்வும் வளர்ச்சியும் பெற்றன என்பது வரலாறாகும். சங்க காலத்தில் சமயம் பெருநிலை பெறவில்லை. அழுத்தமான நிறுவன அமைப்பை பெறிவில்லை. ஆகவே அக்காலக் கலை வேந்தரின் மடியிலிருந்தது. நானில மக்களிடை இருந்தது. வேத்தியல் பொதுவியல் என்றிரு திறத்ததாய் வாழ்வுற்றிருந்தது. இலக்கியங்களும் புராணங்களும் பற்பலவாக எடுத்துரைக்கும் தெய்வ வடிவங்களின் விளக்கங்களே படிமக்கலையின் வளர்ச்சிக்கு உறுதுணையாய் அமைந்தன.

            ஏற்றுவல னுயரிய எரிமருள் அவிர்சடை

             மாற்றருங் கணிச்சி மணிமிடற் றோனும்

             கடல்லவளர் புரிவளை புரையு மேனி

             அடல்வெந் நாஞ்சிற் பனைக்கொடி யோனும்

             மண்ணுறு திருமணி புரையு மேனி

            விண்ணுயர் புடகொடி விறல்வெய் யோனும்

            மணிமயி லுயரிய மாறா வென்றிப்

             பிணிமுக வூர்தி யொண்செய் யோனுமென” 253

என்றவாறு தெய்வ வடிவங்களின் உருச்சமைத்தற்குரிய மூலப்பகுதிகள் இலக்கியத்தில் கிடைக்குமாறு காணலாம்.

சிற்பக் கலையும் கட்டிடக் கலையும்

            சிற்பக்கலை வளர்ச்சிக்குக் கட்டிடக்கலை பெரிதும் உதவியது. ஒவ்வொரு காலக் கட்டிடக்கலை அமைப்பை அதன் சிற்ப ஒழுங்கு கொண்டு காணுமாறு சிற்ப வடிவங்கள் அமைந்தன. நாகரம், வேசரம், திராவிடம் என்ற மூன்று வகையமைந்த இந்தியக் கட்டிடக் கட்டிடக் கலையமைப்பில் திராவிடக் கட்டிடக் கலை மரபு தொன்மையானது. திராவிடக் கட்டிடக் கலை மரபு சிந்துவெளியிலிருந்தே சிறப்புற அமைந்திருந்தது. அகன்ற நெடுந் தெருக்கள், சுட்ட செங்கற்கள், ஒழுங்கமைந்த புதை சாக்கடைகள், குளிப்பறைகள் ஆகிய அந்நாகரிகம் பயந்த கட்டிடக்கலைச் சின்னங்களாகும். இவற்றின் வளரச்சியே ஆறுகிடந்தன்ன அகனெடுந் தெருக்கள், தேனூரான்ன இவள், ஆமூரன்ன இவள் என்று உவமங் கூறுமாறு அமைந்த அழகிய ஊர்கள், முட்டாச் சிறப்பின் பட்டினங்கள் ஆகியனவாகும்.

            மழையாடு மலையி னிவந்த மாடமொடு

            வையை யன்ன வாக்குடை வாயில்

            வகைபெற வெழுந்து வான மூழ்கிச்

            சில்காற் றிசைக்கும் பல்புழை நல்லில்”  255

என்று வருணனையே சங்க காலத்திருந்த கட்டிடக்கலை வளர்ச்சிக்குச் சான்றாகும்.

            நகர் என்ற சொல் விளக்கம் என்ற பொருளில் நகு, நகை, நகம் என்றாற் போல ஒளியும் பளபளப்புமுடைய சுதை தீட்டலால் அமைந்த கட்டிடக்கலைப் பணியைக் குறிக்க அமைந்தது. சுதையின்ற இப்பெருமனைகள் தோறும் சிற்ப ஓவியக் கலைச்சிறப்புகள் நிறைந்திருந்தன.

            வெள்ளி யன்ன விளக்குஞ் சுதையுரீஇ

             மணிகண் டன்ன மாத்திரள் திண்காழ்ச்

            செம்பியன் றன்ன செய்வுறு நெடுஞ்சுவர்

             உருவப் பல்பூ ஒருகொடி வளைஇக்

             கருவொடு பெயரிய காண்பின் நல்லில்”  256

எனச் சுவர்களில் கொடிகள் படந்தாலெனச் சுதையாற் செய்தமை குறிக்கப் பெறும். சங்க காலத் தமிழர் வாழும் இல்லத்தையும், தொழுங் கோயிலையும், தலைமை கொள்ளும் அரண்மனையினையும், அமைந்த ஊரையும் சிற்ப ஓவியக் கலைக்கூடமாக ஆக்கித் தம் கலையுணர்வை வெளிப்படுத்தினர். இரண்டாயிரம் ஆண்டு மூத்த சிற்பக்கலைகளின் எச்சங்கள் இன்று கட்புலனாகவில்லை. கலைக்கரூவுலங்களாக இருந்த கோநகரங்கள் வீறு குன்றின. புகார் கடலுள் கரந்தது; வஞ்சி இதுவென அறியாது மயங்கியது; உறையூர் இளைத்தது; மதுரை தொடர்ந்த படையெடுப்புகளால் உருமாறியது. இலக்கியக் கலை சிற்பக்கலையில் உயர் மாண்புகளை முற்றத் தெரிவிக்கவில்லை. எனினும் மேற்காட்டிய சான்றுகளிலிருந்து கலைத்திறன் மிக்க பண்டைத் தமிழ்ச் சமதாயத்தின் சிற்பக் கலையுணர்வும், இல்லும் கோயிலும், அரணும், அரங்கும் எனப் பலவிதமான வளர்ச்சியும் நாம் இலக்கியங்கள் வழி அறிய வாய்ப்பாக அமைகின்றது.


Comments

Popular posts from this blog

எண்ணம் போல் வாழ்வு

                                                                        எண்ணம் போல் வாழ்வு             நினைவுகளே பழக்கவழக்கங்களாக மாறுகின்றன. எனவே தான் எண்ணம் போல் வாழ்வு அனைவருக்கும் அமைகிறது. வெற்றி பெற்ற அனைவரும் பிறரைத் தன் நடத்தையால் மகிழ்விக்க நினைத்தவர்களே என்பதை நாம் நினைவில் நிறுத்த வேண்டும். ·         வங்கியில் பணத்தைச் சேமிப்பதைவிட இதயத்தில் இனிய எண்ணங்களைச் சேமிப்பது மகிழ்ச்சியான வாழ்விற்கு உதவும் வைப்பு நிதியாகும். ·      மனம் - மகிழ்ச்சி அளிக்காத நிகழ்வுகளை மறந்து விடும் இயல்புடையது. ·         வெறுப்பு - மனத்தையும், உணர்வையும் பற்றிக் கொண்டுள்ள தொற்று நோய். எனவே வெறுப்பிற்கு விடுதலை தரும்வரை மகிழ்ச்சி நம்மை அணுகாது. ·   ...

பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்

திருக்குறளில் எனது சிறு முயற்சியாக… .  " பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்"  என்ற இத்தலைப்பில் அமைந்த 133 வரிகள் கொண்ட இப்படைப்பு முருகனின் ” கந்த சஷ்டி  கவசம் ” போன்று உருவாக்கப்பட்டது. இப்பகுதி அறத்துப்பால் 38  அதிகாரங்கள், பொருட்பால் 70  அதிகாரங்களிலிருந்து மட்டும் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்ற முறையில், திருக்குறளின் சாராக அமைத்து வழங்கியுள்ளேன். அறமும், பொருளும் ஒருவருக்கு அமைந்தால் இன்பம் தானாகக் கிட்டும் என்ற நோக்கத்தில் அமைக்கப்பட்டது. ”பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்” காக்க காக்க அறத்தைக் காக்க (1) காக்க காக்கக் குறளைக் காக்க உலக மொழிகளில் ஒப்பற்ற நூலாம், நோக்க நோக்க பெயா்த்து நோக்க மனிதன் கற்று மனிதம் காக்க ஐம்பொறி உணா்வை காக்க காக்க புகழுடன் வாழ ஒழுக்கம் காக்க அறநெறி வாழ்வை இறைவழி காக்க வானம் பொய்யா வளத்தைக் காக்க பசிப்பிணி யில்லா உலகைக் காக்க பற்றற்ற வாழ்வை பரிவுடன் காக்க அறத்தைக் காக்க அன்பைக் காக்க (2) குறையிலா வாழ்வை குணமுடன் காக்க இல்லற வாழ்வுடன் நல்லறம் காக்க பண்பொடு பயனும் அறத்துடன் காக்க வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க வாழ்க...

மனிதனாக வாழ ...

  மனிதனாக வாழ ... ·         பிறர் உன்னை தூற்றும் பொழுது தலை நிமிர்ந்து நில். ·         பொறாமை, கோபம், வீண் மயக்கம் போன்ற குணங்களை விரோதிகளாக எண்ணுதல். ·         வெற்றி -   தோல்வி,   இன்பம் – துன்பம் இரண்டையும் சமமாக பாவித்தல். ·         உண்மைக்குப் புறம்பானவற்றைச் செய்யாதிருத்தல். ·         நண்பர்கள் இல்லையென்றாலும் பரவாயில்லை. பகைவர்கள் இல்லாமல் வாழ முயற்சி செய்தல். ·         மனத்திடத்தோடு வாழ்தல். ·         ஏற்றத் தாழ்வு இல்லா மனநிலையுடன் இருத்தல். ·         மனிதனுக்கு உரியது - கலங்காத அறிவு, அன்பு நிறைந்த மனம், ஆரோக்கியமான   உடல். ·         எதற்கும் அஞ்சாதே -   பயம் நம்மை கோழையாக்கி விடும்.      யாரையும் வெறுக்காதே ...