Skip to main content

அம்பை சிறுகதைகளில் பெண்மை வெளிப்படுத்தும் சீற்றம்

               அம்பை சிறுகதைகளில் பெண்மை வெளிப்படுத்தும் சீற்றம்

 

                    பெண்ணொளியாள் நலம்பெற்றும்

                        பேசுவதோ சிறுமைமொழி

                    கண்ணொளியை இழித்துரைத்தல்

                        கயமையன்றிப் பிறிதென்னே   

என்று திரு.வி.க பெண்ணடிமையின் இழிவையும், பெண்ணுரிமையின் பெருமையையும் போற்றிப் புகழ்கிறார்.

          உரிமையாவது உயிர்கட்குக் கடவுளால் அளிக்கப்பட்ட ஒரு பெரும் இயற்கைக் கொடைஎன்று கூறுகிறார் அறிஞர் பிராட்வே. உரிமை என்பது ஒருவர் கொடுப்பதும், மற்றொருவர் வாங்குவதும் அன்று. அஃது எவரிடத்திலும் எல்லாவிடத்திலும் இயல்பாய் கிடைப்பது. சிலர் தமக்குள்ள வன்மையால் பிறர் உரிமையை அழித்தும் பறித்தும் வருகின்றனர்.

ஆறறிவு பெற்ற நாம் இருபாலருக்கும் வேறுபட்ட முறைகளைக்  கற்பிக்கின்றோம். அதற்கேற்பக் கம்பர் இராமாயணத்தில் அண்ணலும் நோக்கினான், அவளும் நோக்கினாள்என்ற காட்சியை அமைத்திருக்கிறார். மெய்ப்பாடுகளுள் ஒன்றான சிரிப்பையும்,

        ”ஒருத்தி

         சிரிக்கக் கூடாத இடத்தில்

         சிரித்துத் தொலைத்தாள்

        அதுதான் பாரதம்

எனும் வைரமுத்து கவிதை வரிகளிலிருந்து பெண்களுக்குப் பிற்போக்குக் குணங்களைக் கற்பிக்கும் விதமாக அமைத்துள்ளது.

                    அச்சமும் மடமையும் இல்லாத பெண்கள்

                    அழகிய தமிழ்நாட்டின் கண்கள்!”

என்ற பாரதிதாசனின் கவிதை வரிகளுக்கேற்ப நவீனப் பெண் இலக்கியவாதியான அம்பை அவர்கள்  தம் சிறுகதைகளில் கதைமாந்தர்கள் வழி பெண்கள் தங்கள் கோபதாபங்களை எவ்வாறு  வெளிப்படுத்துகின்றனர் என்பதைக் காட்டும் விதமாக இக்கட்டுரை அமைந்துள்ளது.

அம்பைச் சிறுகதையின் நோக்கம்

·        பெண்ணிய பிரச்சினைகள் 

·        ஒவ்வொரு காலகட்டத்திற்கும் ஏற்றவாறு வர்க்கம் சார்ந்தக் கதைகள். 

·        இரண்டாம் இடத்தில் இருக்கும் தாய், மகள், மனைவி போன்ற பதவிகளில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள். 

·        இளம்பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள்.

·         'கற்பு' காரணமாக சமூகத்தில் பெண்கள் பாதிக்கப்படும் நிலை.

·         பாரம்பரிய சிந்தனையிலிருந்து பெண்கள் விலகித் தனக்கென ஒரு புதிய உலகத்தை உருவாக்குதல்.

·        பெண்களின் உழைப்பு சுரண்டப்படுதல்.

·         உரிமைகளும், உணர்வுகளும் ஒடுக்கப்படுதல்.

போன்ற உணர்வுகளைத் தம் சிறுகதைகளில் வெளிப்படுத்துகிறார்.

ஆண் ஆதிக்கத்திற்கும், அந்த ஆதிக்கத்தின் கீழ் பெண் அடங்குவதற்கும் உரிய காரணங்களை உளவியல் ரீதியில் ‘சிறகுகள் முறியும்’ எனும் சிறுகதையில்  எடுத்துக் காட்டுகின்றார். 'இவ்வுலகில் பிறந்தவர்கள் இயல்பாக இருப்பதே அவர்கள் சுதந்திரம்; அவர்களை அவ்வாறு இருக்க விடுவதும் சுதந்திரம் என்பதைப் பல சிறுகதைகளில் வெளிப்படுத்துகிறார்.

பெண்கள் வளர்ச்சியில் தடைக்கற்களாக...

          நடைமுறை வாழ்வில் குடும்பம், சமுதாயம் போன்ற இடங்களில் பெண்கள் சந்தித்து வருகின்ற சிக்கல்கள் ஏராளம்அன்றைய காலக்கட்டத்தில் ஆண்களுக்கு வரதட்சணை தர இயலாத பெற்றோர்கள் தமது பெண்ணை மனநிலை சரியில்லாத ஆட்வருக்குத் திருமணம் செய்து வைக்கும் கொடுமையினை அம்பையின்அறைக்குள்ளிருந்தவன்என்ற சிறுகதை சித்தரிக்கின்றது.

           வறுமை எப்படிப்பட்ட ஒன்று. பசி வயிறு புதையுண்டு போக, நாவின் சுவைக் காம்புகள் மண்ணைக் கண்டாலும் ஊறலெடுக்க, பிச்சைக்காரன் குவளையிலிருக்கும் கதம்பச் சோறு கூட வயிற்றில் விழக்கூடிய சுவையுள்ளதாகத் தோன்றும் பசியை அவளுக்குத் தெரியும்.

          அப்படி ஒருமுறை வந்த போது தான் அந்த வீட்டு யஜமானி கேட்டாள்.

          சமையலறைக்கே வந்து இடுப்பில் கை வைத்தபடி, ”என்ன ரங்கம்மா, இவளுக்கு என்ன வயதுஎன்றாள்.

          பத்தொன்பது மாமி. நடுநடுவே பணம் இல்லாம படிப்பு விட்டுப் போயிடுத்து. …….

          ”என்ன படிப்பு வேண்டியிருக்கு? சமர்த்தா லட்சணமா இருக்கா. என் பிள்ளைக்குத் தரயா?

          மூன்று பிள்ளைகள் அந்த வீட்டில். மூத்தவனை அவள் பார்த்ததே பிடையாது. அவன் கத்தலை மட்டும் கேட்டதுண்டு…..

          நடுங்கும் குரல்எந்தப் பிள்ளையைச் சொல்றேள்?” என்றாள் அம்மா.

          ”மூத்தவனைத்தான். அவனைக் கவனிச்சுக்கவும் ஒரு ஆளு வேணுமோ இல்லையோ? என் மனம் என்னிக்குமே எளகிய மனசு. என்னாலே விடிவு வரட்டுமே? வேற பெண்ணு கிடைக்காரா என்ன? கிடைக்கும் ஒரு ஏழைப்பொண்ணு நம்மாலே நல்லபடியா வாழட்டுமேன்னு தான் சொல்றேன் என்ன சொல்றே

          ”மாசம் மாசம் உனக்குப் பணம் அனுப்பிடுவேன் நீ இப்படி வேலை பண்ணவேண்டாம்என்றாள்.

          மேற்கண்ட உரையாடல் ஏழைத்தாய்பணக்காரத்தாய் இருவரின் உரையாடல். இக்கதையில் வறுமையின் காரணமாக வரதட்சணை கொடுக்க இயலாத ஏழைத்தாய் தமது மகளை மனநிலை சரியில்லாத ஒருவனுக்குத் திருமணம் செய்து கொடுப்பதற்கு ஒப்புக் கொள்வதாய் அமைந்துள்ளது. இந்நிலை வறுமையின் காரணமாகத் திருமண வயதுள்ள பெண்கள் விலை பேசப்படும் நிலையில் உள்ளதைச் சித்திரித்துக் காட்டியுள்ளார்.

பெண்மை வெளிப்படுத்தும்  சீற்றங்கள்

அம்பையின் கதை மாந்தர்களில் ஆண்கள் பெரும்பாலும் ஆதிக்க உணர்வு மிக்கவர்களாகவும், பெண்கள் அவ்வாதிக்க உணர்வினால் பாதிக்கப்படக் கூடியவர்களாகவும் இருக்கிறார்கள். அந்த அடக்குமுறைக்கு எதிரான எதிர்ப்புணர்வு பாதிக்கப்படும் பெண்கள் மனத்தில் இருப்பதை அம்பையின் பெண் கதைமாந்தர்கள் வாயிலாக அறியலாம். அவ்வெதிர்ப்புணர்வைச் சிலர் தங்கள் பேச்சில் வெளிப்படுத்துகின்றனர். சிலர் செயலில் காட்டுகின்றனர்.

வல்லூறுகள், அறைக்குள்ளிருந்தவன், வெளிப்பாடு, ஒரு கட்டுக்கதை, வீட்டின் மூலையில் ஒரு சமையலறை, ஆரம்பகாலக் கவிதைகள், காவு நாள் போன்ற கதைகளை அவ்வகையின் கீழ் வைத்து விவாதிக்க முடியும்.  வல்லூறுகள்' என்னும் கதையில்,

மொட்டை மாடியில் படுத்து அண்ணாந்து தாரகைகளைப் பார்த்தவாறு அம்மா சொல்கிறாள். ஒவ்வொரு நட்சத்திரமும் பிணம் தின்னிக் கழுகு மாதிரி கொடூரமா மின்னரது பாரு ஷைலு …. திடீர்னு ஒரு நாள் பாரு, நட்சத்திரங்களுக்குப் பதிலா இறக்கைகளை விரிச்சுண்டு மானத்தை அடைச்சுண்டு வெறும் வல்லூறுகள் இருக்கும். கீழே எல்லாம் பிணங்கள் பிணங்கள் தான் ….” எனத் தன் கற்பனையை மகளுக்குத் தாய் சொல்லுவதாகத் துவங்கும் வல்லூறுகள் கதையில் வரும் அம்மா அப்பாவின் கைதியாக அந்த வீட்டுக்குள் வாழ்கிறாள்.

டெல்லியிலிருந்து கல்லூரி விடுமுறைக்கு வீட்டுக்கு வந்து விட்டு திரும்புகிற மகளிடம்உனக்கு தப்பிக்க ஓரிடம் இருக்குஎன்று சொல்கிறாள். தான் பெற்ற மகளைப் பார்த்தே பொறாமையுடன்உனக்கு தப்பிக்க ஒரு இடம் இருக்குஎன்று சொல்கிற அந்த ஒரு வார்த்தைக்குள் எத்தனை கதைகள் உறைந்திருக்கிறது? தான் அடிமைப் பட்டிருப்பதை அவள் உணரும் தருணமாகவும் மகள் விடைபெறும் தருணம் மாறுகிறது.

வீட்டுக்குப் பின்னால் இருக்கம் ஒரு ஷெட்டுக்குள் நள்ளிரவு எழுந்து சென்று போய் கதவைத் திறந்து உள்ளே ஒரு கிழிந்த பாயில் விழுந்து அம்மா பெருத்த ஓசையுடன் அழுவதை இந்த மகள் பார்த்திருக்கிறாள். அப்பாவுக்கு முன்னால் அவள் அழுவதில்லை. அப்பாவுடன் பேசுவதும் இல்லை. அப்பாவின் ஆண்மையையும் கணவன் என்ற பெருமிதத்தையும் வெறும் மௌத்தாலே கொன்றவளாக அந்த அம்மா வாழ்கிறாள்.

வெடித்தெழும் வாழ்வு எனும் கதையில் ஆய்வுக்காகப் பாரீஸ் போயிருந்த போது, அவனோடு (விச்வாவோடு) கொண்ட உறவால் உருவான குழந்தையைரெட்டைக் குழந்தைகள்புனேவுக்குப் போய் கலைத்து விட்டு வந்திருந்தாள். அவன் திருமணம் செய்து கொள்ளவோ அவை தன் குழந்தைகள் என ஏற்கவோ தயாராக இல்லை. காரணம் அவள்சகுகருப்பு. கருக்கலைப்புச் செலவுக்குப் பணம் அனுப்பியிருந்தான். அவனாலும் பொறுப்பை ஏற்க முடியும் என்னும் குறிப்புடன்.

இரண்டு மாதங்களுக்குப் பிறகு ஒரு பின் மாலையில், வாசகசாலையில் படித்துக்கொண்டிருந்த அவனைப் பார்க்கிறாள். அவனிடம் வந்து கொஞ்சம் வெளில வர முடியுமா?” என்றாள்.

          “நான் அது பத்திப் பேசத் தயாராக இல்லை

          ‘இது அது பத்திப் பேச இல்லை ‘ என்றாள்.

வெளியே பசும் புல் தரையில் யாருமில்லை . அது எல்லோரும் இரண்டாவது முறை தேநீர் பருகப் போகும் நேரம்மங்கலான நிலவு.

          புல்வெளியின் நடுவே அவன் வந்ததும், அவன் எதிர்பாராத தருணத்தில் காலிலிருந்த செருப்பைக் கழற்றி அவனைப் பாய்ந்து பாய்ந்து அடித்தாள். அவன் தடுத்துக் கொள்வதற்கு முன்னால் முகம், முதுகு, தொடை, தலை என மாறி மாறி அடி விழுந்தது. இடுப்பில் சொருகி இருந்த பணத்தை அவன் மேல் வீசிவிட்டு மீண்டும் அடித்தாள்.

 ‘பாட்டுக்குப் புரண்டுதடா அது ரெண்டும்உன் நிறமும் இல்லாமல் ரத்தச் சதையாய் இருந்ததுடா! கண், காது, கை, கால் எல்லாம் இருந்ததுடா! ஒவ்வொரு சொல்லையும் அழுத்தி அழுத்திச் சொல்லிச் செருப்பால் அடித்தாள்.

என்னால திருப்பி அடிக்க முடியாதா?’ என்று அவன் கத்திய  போது, தூத்தே நின்று கொண்டிருந்த அருள் அருகே வந்து, சினத்தால் நடுங்கிக் கொண்டிருந்த அவளை வலுக்கட்டாயமாய அழைத்துக் போனான்.

நிலவைத் தின்னும் பெண்என்ற கதையில் வரும் காட்சி. பெரிய படிப்புப் அறிவுஜீவிகளாக வாழ்ந்த நிலையிலும், உடலைப் பகிர்தல் என்பது விருப்பம் சார்ந்தது. மண உறவு என்னும் பந்தம் கட்டாயமில்லை என்கிற சிந்தனைப் போக்குள்ள அறிவுசார் உலகத்திற்குள்ளே செருப்படியைக் கொண்டு வந்து சேர்க்கிறார் அம்பை. அவனுக்கு அது தகும் என்று அவனுடைய அம்மாவே சகுவுக்குக் கடிதம் எழுகிறார். தன்னை ஒரு மூத்த சினேகிதியாக ஏற்றுக் கொள்ளுமாறு கடிதத்தில்  கோருகிறார்.

விச்வாவின் அம்மா பாகீரதி தன் கதையைக் கூறுகிறார். விச்வாவின் அம்மாவும் சகுவைப் போல அந்தத் தலைமுறையின் விடுதலை பெற்ற ஒரு பெண்மணிதான். அதனால்தான் அவரால் சகுவைப் புரிந்து கொள்ள முடிகிறது.

சிறகுகள் முறியும் கதையில் மனம் முறிந்து போகும் சாயா தன் விதியை நொந்து கொள்கிறாள். அவள் சிறகுகளை விரித்து பறக்கவேண்டும். விசும்பின் சலனமில்லா அமைதியில் அவள் சிறகுகள் அசையவேண்டும் அதுதான் வாழ்க்கை என்று எண்ணினாள்”. ஆனால் தாம்பத்திய பந்தத்தை முறித்துக் கொள்ளவில்லை. அவள் வளர்ந்த விதம், அவள் ஆளுமையின் குணம், அதை மீறி அவளால் எதுவும் செய்திருக்க முடியாது.

பெண் விடுதலை, தனிமனித அறம், தனிமனித சுதந்திரம், சமூக அக்கறை, வெறுப்பு-பகைமையின் இடத்தில் அன்பை வைப்பது, மதவாத எதிர்ப்பு என்று பலவற்றைக் கூறலாம். அவருடைய கதைக்களன்கள் பெரும்பாலும் நடுத்தர வர்க்க வாழ்க்கையை மையமிட்டவை. பல கதைகள் பிராமணக் குடும்பப் பின்னணி கொண்டவை. இசையும் நாட்டியமும் கற்றுத்தந்த பிராமணக் குடும்பப்பின்னணி அவருடைய கதைகளின் வீச்சுக்கும் விரிவுக்கும் துணை செய்கின்றன. பரந்த ஞானமும்,  உலகளாவிய பயணங்களும் அவருடைய பார்வையைக் கூராக்க உதவியிருக்கின்றன.

அம்பையின் எழுத்துக்கள் மற்ற பெண் எழுத்தாளர்களிடமிருந்து பிரித்துக் காட்டுகிறது. அவர்கள் எல்லாம் ஒரு வரையறுக்கப்பட்ட வட்டத்திற்குள் பயணிப்பவர்கள். அவர்களுக்குப் புதிய பாதைகள் தேவையில்லை. இவர்களிலும் ஒரு சில விதிவிலக்குகள் உண்டு. அவர்கள் குரல்கள் கிறீச்சிட்டுக் காதைக் கிழிப்பன அல்ல. அவர்கள் ஒரு திரிசங்கு நிலையில் இங்குமில்லை அங்குமில்லை என்று ஊசலாடுபவர்கள். பாதுகாப்பாக இயங்குகிறவர்கள். இரண்டு உலகங்களிலும் இருக்க விரும்புகிறவர்கள்.     

நிறைவாக,

நவீன இலக்கியவாதியான அம்பை அவர்களின் ஒவ்வொரு படைப்புக்களிலும் அவர்களின் ஆதங்கம் வெளிப்படுகிறது. அவர்களின் எண்ணங்களைக் கதாபாத்திரங்களின் வழி வெளிப்படுத்தியுள்ளார். திரிசங்கு நிலையில் இருக்கும்  பெண்களின்  நிலை மாறவேண்டும்.

          ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால்

         அறிவி லோங்கியிவ் வையந் தழைக்குமாம்

என்று பாரதியின் கூற்றிற்கிணங்கபெண்ணியம்என்பது பெண்களுக்கு மட்டும் சமத்துவம் வேண்டும் என்பதல்ல. ஆண்களுக்கும் பெண்களுக்கும் பொதுவான நேர்மையான சமத்துவம் உருவாக வேண்டும் என்பதே பெண்ணியத்தின் அணுகுமுறை. அதில் ஆணும் பெண்ணும் பாலினப் பாகுபாடின்றி மனிதர்களாக மதிக்கப்பெறுதல் வேண்டும். இந்நிலை மாறவேண்டும் என்றால் வருங்கால சந்ததியினரின் வாழ்க்கை சிறகொடிந்த பறவையாக இல்லாமல் சிறகை விரித்துப் பறக்கும் சுதந்திர பறவைகளாக வாழவேண்டும் என்பதே இவ் ஆய்வின் நோக்கமும்இந்நூலாசிரியரின் விருப்பமும், முடிவு வருங்கால சந்ததியினர் கையில்....

 

-----

துணை நின்ற நூல்கள்

1.   அம்பை - அம்பை சிறுகதைகள்(1972-2000), காலச்சுவடு பப்ளிகேஷன்ஸ் (பி) லிட், நாகர்கோயில் -629001, முதல் பதிப்புடிசம்வர் 2007.

2.   அருணன்பெரியாரின் பெண்ணியம், வசந்தம் வெளியீட்டகம், மதுரை – 625 001. பதிப்பு -2008.

3.   மாணிக்கம். பாவலர் வி.பிபாரதியின் பெண்ணியச் சிந்தனைகள், சூர்யா பதிப்பகம், பெரம்பூர், சென்னை -11, முதற் பதிப்பு -  2012.

4.   ரகுநாதன். எம்.ஆர்தமிழ்க் கவிதைகளில் பெண்கள் (சங்க காலம் முதல்தற்காலம் வரை), ஸ்ரீ செண்பகா பதிப்பகம்,

 சென்னை -600 017, முதற் பதிப்பு – 2014.

----

         

 

 

 

         

 

 

 

Comments

Popular posts from this blog

எண்ணம் போல் வாழ்வு

                                                                        எண்ணம் போல் வாழ்வு             நினைவுகளே பழக்கவழக்கங்களாக மாறுகின்றன. எனவே தான் எண்ணம் போல் வாழ்வு அனைவருக்கும் அமைகிறது. வெற்றி பெற்ற அனைவரும் பிறரைத் தன் நடத்தையால் மகிழ்விக்க நினைத்தவர்களே என்பதை நாம் நினைவில் நிறுத்த வேண்டும். ·         வங்கியில் பணத்தைச் சேமிப்பதைவிட இதயத்தில் இனிய எண்ணங்களைச் சேமிப்பது மகிழ்ச்சியான வாழ்விற்கு உதவும் வைப்பு நிதியாகும். ·      மனம் - மகிழ்ச்சி அளிக்காத நிகழ்வுகளை மறந்து விடும் இயல்புடையது. ·         வெறுப்பு - மனத்தையும், உணர்வையும் பற்றிக் கொண்டுள்ள தொற்று நோய். எனவே வெறுப்பிற்கு விடுதலை தரும்வரை மகிழ்ச்சி நம்மை அணுகாது. ·   ...

பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்

திருக்குறளில் எனது சிறு முயற்சியாக… .  " பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்"  என்ற இத்தலைப்பில் அமைந்த 133 வரிகள் கொண்ட இப்படைப்பு முருகனின் ” கந்த சஷ்டி  கவசம் ” போன்று உருவாக்கப்பட்டது. இப்பகுதி அறத்துப்பால் 38  அதிகாரங்கள், பொருட்பால் 70  அதிகாரங்களிலிருந்து மட்டும் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்ற முறையில், திருக்குறளின் சாராக அமைத்து வழங்கியுள்ளேன். அறமும், பொருளும் ஒருவருக்கு அமைந்தால் இன்பம் தானாகக் கிட்டும் என்ற நோக்கத்தில் அமைக்கப்பட்டது. ”பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்” காக்க காக்க அறத்தைக் காக்க (1) காக்க காக்கக் குறளைக் காக்க உலக மொழிகளில் ஒப்பற்ற நூலாம், நோக்க நோக்க பெயா்த்து நோக்க மனிதன் கற்று மனிதம் காக்க ஐம்பொறி உணா்வை காக்க காக்க புகழுடன் வாழ ஒழுக்கம் காக்க அறநெறி வாழ்வை இறைவழி காக்க வானம் பொய்யா வளத்தைக் காக்க பசிப்பிணி யில்லா உலகைக் காக்க பற்றற்ற வாழ்வை பரிவுடன் காக்க அறத்தைக் காக்க அன்பைக் காக்க (2) குறையிலா வாழ்வை குணமுடன் காக்க இல்லற வாழ்வுடன் நல்லறம் காக்க பண்பொடு பயனும் அறத்துடன் காக்க வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க வாழ்க...

மனிதனாக வாழ ...

  மனிதனாக வாழ ... ·         பிறர் உன்னை தூற்றும் பொழுது தலை நிமிர்ந்து நில். ·         பொறாமை, கோபம், வீண் மயக்கம் போன்ற குணங்களை விரோதிகளாக எண்ணுதல். ·         வெற்றி -   தோல்வி,   இன்பம் – துன்பம் இரண்டையும் சமமாக பாவித்தல். ·         உண்மைக்குப் புறம்பானவற்றைச் செய்யாதிருத்தல். ·         நண்பர்கள் இல்லையென்றாலும் பரவாயில்லை. பகைவர்கள் இல்லாமல் வாழ முயற்சி செய்தல். ·         மனத்திடத்தோடு வாழ்தல். ·         ஏற்றத் தாழ்வு இல்லா மனநிலையுடன் இருத்தல். ·         மனிதனுக்கு உரியது - கலங்காத அறிவு, அன்பு நிறைந்த மனம், ஆரோக்கியமான   உடல். ·         எதற்கும் அஞ்சாதே -   பயம் நம்மை கோழையாக்கி விடும்.      யாரையும் வெறுக்காதே ...