நாட்டுப்புற மருத்துவ முறைகள்
நாட்டுப்புற மக்கள் நாட்டுப்புற மருத்துவ முறைகளில் மிகுதியும்
நம்பிக்கை வைத்தள்ளனர். தங்களுக்கு
ஏற்படும் நோய்கள் மற்றும் கால்நடைகள், பயிர்கள் ஆகியவற்றிற்கு
ஏற்படும் நோய்கள் அனைத்தும் தெய்வங்களின் சீற்றங்களினாலேயே உண்டாகின்றன என்று நம்புகின்றனர். தெய்வக்குற்றம், முன்வினை, மற்றவர்களின் தீயப் பார்வை ஆகியவற்றால்தான் நோய்கள் தோன்றுகின்றன என்றும் முன்னோர்களின்
சீற்றம், தீய ஆவிகளின் பார்வை ஆகியவற்றால் தான் நோய்கள் தோன்றுகின்றன
என்பதும் நாட்டுப்புற மக்களின் நம்பிக்கை. ஆகவே, அதற்கு ஏற்றவாறு நோய்தீர்க்கும் முறைகளைக் கையாளுகின்றனர்.
தலைவியின் உடல்வேறுபாட்டிற்குக் காரணம் தலைவியின் களவு ஒழுக்கம்
என்பதை அறியாமல் வேலன் வெறியாட்டிற்கு ஏற்பாடு செய்ததைப் பழந்தமிழ் இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. சங்க காலம் தொடங்கி இன்று வரையில் நாட்டுப்புற மக்கள் இடையே நோய் தாக்கியதற்குக்
காரணம் தெய்வக்குற்றமே என்று நம்பி வருகின்றனர்.
நாட்டுப்புற மருத்துவம் உளம், உடல் தொடர்பான அனைத்து நிலைகளையும் உள்வாங்கிக் கொண்டு அமைந்த ஒன்றாகும். இம்மருத்துவ முறைகள் எளிமையானவை. அவர்கள் வாழ்கின்ற
மண்ணிலேயே விளைபவை. இயற்கையில் இருந்து பிரிக்க முடியாத அவர்கள் வாழ்விடங்களிலேயே
எளிமையாகக் கிடைக்கக் கூடியவை. அவை மூலிகை
மருத்துவம், மந்திர மருத்துவம், சடங்கு மருத்துவம், நம்பிக்கை மருத்துவம், இயற்கை மருத்துவம், பயிற்சி மருத்துவம், சுற்றுச்சூழல் மருத்துவம் என்ற வகையில் மருத்துவ முறைகளில் மருத்துவ பிரிவுகள்
அமைகிறது.
மூலிகை
மருத்துவம்
நாட்டுப்புற மருத்துவத்தில் மூலிகை மருத்துவம் சிறப்பிடம்
பெறுகிறது. நாட்டுப்புறங்களில் கிடைக்கும் செடி, கொடி, மரங்கள் ஆகியவற்றின் இலைகள், பட்டை, வேர்கள், காய்கள், பழங்கள், விதைகள், கொட்டைகள் ஆகியன
மருத்துவப் பொருட்களாகப் பயன்படுத்தப் பெறுகின்றன. இம்மருந்துகளை உடலில் வெளியிலும் உள்ளுமாகவும் இரண்டு நிலைகளிலும் பயன்படுத்தப்படுகின்றன.
பூசுபவை – மூலிகைகளின் சாற்றினை எடுத்தோ, பச்சிலைகளை அரைத்தோ உடலில் பாதிக்கப் பெற்ற இடத்தில் பூசுகிற முறை உள்ளது. கைகால் சுறுக்கு, வீக்கம், எலும்பு முறிவு, மற்றும் தோல்
நோய்களுக்கும் காயங்களுக்கும் மேற்பூச்சு மருத்துவமுறை கையாளப்படுகிறது. எடுத்துகாட்டாக, எலும்பு முறிவுக்கு
எலும்பினைப் பொருத்தி அசையாமல் கட்டி அதற்குமேல் எண்ணை அல்லது மூலிகைக் கலவையைப் பூசுகிற
மருத்துவ மரபு உள்ளது. எண்ணெய், மூலிகைக் கலவை
எண்ணெய், மூலிகைக் குழம்பு ஆகியவற்றை நாட்டுப்புற மருத்துவத்தில் பூசுவதற்கு
பயன்படுத்துகின்றனர்.
உட்கொள்ளுதல் – 1. மூலிகைகளை உட்கொள்ளும் முறையும் பெருவழக்காக உள்ளது. மூலிகை மருத்துவத்தில் தேன் சிறப்பிடத்தைப் பெறுகிறது. 2. ‘வல்லாரைத் தின்பவரை வெல்வாரும் இல்லை’ என்பதற்கேற்ப உடல்வலிமை, மூளை வளர்ச்சி, நோய் எதிர்ப்புச் சக்தி என அனைத்திற்கும் பயன்படுகின்றன. 3. சிறயாநங்கை, பெரியா நங்கை, கோடைக்கொடி, வாழைப்பட்டைச்சாறு ஆகியன விடக்கடிக்குப் பருகக் கொடுக்கப்பெறும் மூலிகைகளில்
குறிக்கத்தக்கனவாகும்.
2. மந்திர மருத்துவம்
தீய ஆவிகளின் செயல்களால் நோய்கள் நோய்கள் ஏற்படுகின்றன என்ற
நம்பிக்கை மக்களிடையே உள்ளது. தீய ஆவிகளின்
ஆற்றல்களை மந்திரத்தினால் கட்டுப்படுத்தினால் கட்டுப்படுத்தவியலும் என்று நம்புகின்றனர். எனவே முதலில் மந்திரம் அறிந்தவர்களான மாந்திரிகர்களை நாடுகின்றனர். கோயில் பூசாரிகளைப் பெரும்பாலும் மந்திரம் அறிந்தவர்கள் என்று நாட்டுப்புற மக்கள்
நம்புகின்றனர். மந்திர மருத்துவத்தில் மந்திரித்தல், திருநீறு மந்திரித்தல், தாயத்து மந்திரித்தல், பொருட்களை மந்திரித்தல் என்றவாறு அமைகிறது.
மந்திரத்தை வாயில் உச்சரித்துக் கொண்டே, இருந்த இடத்தில் இருந்து கொண்டே மந்திரிப்பர். மந்திரம் உச்சாடனம் செய்வதோடு மந்திரித்து முடித்த பிறது திருநீறும் கொடுப்பர். இவர்கள் விடக்கடிகள், கண் திருட்டியினால்
குழந்தைகள் குழந்தைகள் அழுதல், தூக்கமின்மை, பசியின்மை, சிறு காய்ச்சல், வயிற்றுப் போக்கு முதலிய நோய்களுக்கு முதலிய நோய்களுக்கு இம்மருத்துவர்களை நாட்டுப்புற
மக்கள் நாடுகின்றனர்.
சில மந்திரக் குறியீடுகளைத் தகட்டில் வரைந்து அதனை ஒரு சிறு குழாயில் வைத்து
நூலில் சுற்றி நோய்வாய்ப்பட்டவரின் உடலில் எப்போதும் படும்படியாகக் கையிலோ, இடுப்பிலோ கட்டுவர். இத்தாயத்து
நோய்நொடிகளில் மக்களைக் காப்பதாகக் குறிக்கின்றனர்.
3. சடங்கு மருத்துவம்
நோய்களுக்குக் காரணமான தீய ஆவிகள், தீய பார்வைகளின் தாக்கத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என நாட்டுப்புற மக்கள்
எண்ணுகின்றனர். தீய பார்வைகளில் விளைவுகளைத் தடுக்கக் கண்ணேறு கழித்தல் என்னும்
சடங்கினைச் செய்வர். உடலில் ஏற்படும் அக்கி எனப்படும் நோய்க்கு நாட்டுப்புற மக்கள்
குயவரை நாடுவர். அவர் விடியலில் செம்மண் குழம்பில் நீராகராத்தை (கஞ்சி) விட்டுக் கரைத்து ஒரு தூரிகையில் நெற்றி மற்றும் நோய்பாதித்துள்ளப்
பகுதிகளில் தடவி மந்திரத்தைச் செபிப்பர். இதனை அக்கிக்கு
எழுதுதல் என்று குறிக்கின்றனர்.
4. இயற்கை மருத்துவம்
நாட்டுப்புற மக்கள் இயற்கையை மருந்தாகக் கொள்கின்றனர். இயற்கையை அப்படியே மருந்தாகக் கொள்வது இயற்கை மருத்துவம் எனலாம். சிறு குழந்தைகளைக் காலை இளம் வெயிலில் சிறிது நேரம் படுக்க வைப்பர். இளஞ்சூரியக் கதிர்கள் ஆடையின்றிப் படுக்க வைக்கப் பெற்ற குழந்தையின் உடலில்
படுவதால் தோல், கண் நோய்கள் வராது என்று நம்புகின்றனர்.
சுண்ணாம்பு, கரி, செம்மண் ஆகியவற்றால் உடல் முழுவதும் புள்ளிகளை வைத்துக் கொண்டு வேப்பிலைகளை
உடலில் சுற்றிக்கொண்டு நேர்த்திக் கடன் செலுத்துவதும் இயற்கை மருத்துவ முறையாக அமைகிறது. மேலும் வேப்ப இலையில் தழை ஆடையால் மூடிக்கொண்டு நேர்த்திக்கடன் செலுத்துவதும்
நோயின்றி உடல் அமைவதற்கான மருத்துவ முறைகளில் ஒன்றாக மக்கள் கொண்டுள்ளனர்.
புனித மண்ணைக் கரைத்துக் குடித்தல், புனித நீர் நிலைகளில் புனித நாட்களில் நீராடுதல் மலைகளில் உள்ள கோயில்களுக்கு
ஆண்டுதோறும் சென்று வழிபட்டு வருவதை இயற்கை மருத்துவக் கூறாகக் கொள்ளலாம்.
5. உணவு மருத்துவம்
உணவுப் பழக்கமுறையும் மருந்தாக அமைகிறது. நாட்டுப்புற மக்கள் காலம்காலமாக எந்தெந்த நாட்களில் எவ்வகையான உணவுகளை உண்ண
வேண்டும் என்ற நடைமுறைகளைக் கடைபிடிக்கின்றனர். நாட்டுப்புற மக்கள் தங்கள் வாழிடங்களில் கிடைக்கும் உணவுகளைப் பருவ காலங்களுக்கு
ஏற்பவும் சடங்குமுறைகளுக்கு ஏற்பவும் உண்ணுகின்றனர். கூழானும் குளித்துக் குடி, கந்தையானாவும்
கசக்கிக் கட்டு என்பது மருத்துவ நலவாழ்வுப் பொன்மொழியாகும்.
விரத நாட்களில் உணவில் முதலில் வாழைத்தண்டு, வாழைக்காய், வாழைப்பூ, பூசணி போன்ற
காய்களைச் சேர்த்துக் கொள்கின்றனர். குடலில் ஏற்படும்
அழற்சியைப் போக்கிக் குடலைச் சீராக்கும் வல்லமை ஓய்வு கிடைக்கிறது. விரத நாட்களில் உண்ணக் கூடாத பொருள்களாக முள்ளங்கி, முருங்கை, பாகற்காய் போன்ற காய்கள் அமைகின்றன.
காலையில் நீராகாரம் அருந்துதல், மாலை ஏழு மணிக்குள் உணவுகொள்ளுதல், மட்பாண்டங்களைப் பயன்படுத்துதல், வேப்பம்பூரசம், வேப்பம்பூ துவையல், கொள்ளுத் துவையல், கொள்ளுரசம், வரகு, சோளம், கம்பு இவற்றுடன் முருங்கை, முள்ளு முருங்கை
இலை ஆகியவற்றைக் கலந்து செய்யப்பெறும் உணவுகள் மருந்துமுறைக்கு காட்டாகின்றன. இப்பகுதியை விரிவாக உணவு நேரம், தவிர்க்க வேண்டியவை, உணவில் சேர்க்க வேண்டியவை அவை தொடர்பான நம்பிக்கைகள் என்று பகுத்து நோக்கலாம்.
6. சுற்றுச்சூழல் மருத்துவம்
சுற்றுச்சூழல் மாசினால் பல தொற்றுநோய்கள் உண்டாகின்றன. இதனை நாட்டுப்புற மக்கள் தெய்வக்குற்றம் என்று எண்ணுகின்றனர். ஊரில் காலரா, அம்மை, காய்ச்சல் போன்ற
நோய்கள் தாக்கத் தொடங்கியதும் மக்கள் தெய்வக்குற்றம் என்றும் தெய்வத்தின் சீற்றம் என்றும்
கூறுவர். ஊர்முழுவதும் மாரியம்மன் கும்பிடு, பச்சை வைத்தல், சந்தி பூசை செய்தல் என்ற வகையில் ஊர்மக்கள் கூடி அம்மனுக்கு
உகந்த நாளில் பூசை செய்வர். வீடு, தெரு என்று ஊரினைத் தூய்மை செய்வர்.
வேப்ப இலைத் தோரணங்கள் கட்டுவர். மக்கள் அந்த நாளில் மஞ்சள் கலந்த நீரினில் குளித்து மஞ்சள் தோய்த்த ஆடையினைக்
கட்டிக் கொண்டு விரதமிருப்பர். மஞ்சள் கலந்த
நீரில் குளித்து மஞ்சள் தோய்த்த ஆடையை அணிவதால் இயல்பாகவே நோய்த்தடுப்பு ஆற்றலினை உடல்
பெறுகிறது எனலாம். ஆனால் மக்கள் மாரியம்மனுக்கு உகந்தது என்ற அளவில் இந்த முறையைக்
கையாளுகின்றனர்.
வீடுகளைப் பசுஞ்சாணியால் மெழுகுதல் வாயிலைச் சாண நீர்கொண்டு தெளித்துத் தூய்மை
செய்தல், விழா நாட்களில் வீடுகளுக்குச் செம்மண் பட்டைத் தீற்றுதல், சுண்ணாம்பு தீட்டுதல், வீட்டுச் சுவர்களுக்கு
ஒருமுறை சுண்ணாம்பு தீட்டுதல் ஆகியனவும் சுற்றுச்சூழல் நோக்கில் நோய்த் தடுப்பு முறையாக
அமைகிறது. இதனை மரபாகக் கொண்டு மக்கள் கடைபிடித்து வருகின்றனர்.
7. நம்பிக்கை மருத்துவம்
நாட்டுப்புற மக்களின் நம்பிக்கைகளும் சில நோய்களைத் தீர்க்கின்றன. ஒருவர் அறியாமல் அவரது பகைவர்கள் மருந்து எனப்படும் பொருளை மந்திரித்து உணவில்
கலந்து கொடுத்துவிடுவதாக நம்புகின்றனர். அதனால் உணவில்
வெறுப்பு, உடலில் நோய்கள், மனநோய்கள் ஏற்படும் என்று கருதுகின்றனர். அந்த மருந்தினை உடலிலிருந்து எடுத்து விட்டால் நோய்கள் விலகிவிடும் என்ற நம்பிக்கை
உள்ளது. மருந்தை எடுப்பதற்காக ஊதுகிறவர்கள் என்று சில நாட்டுப்புற
மருத்துவர்கள் உள்ளனர். இவர்கள் ஒரு
குழாயின் ஒரு முனையைத் தங்கள் வாயிலும் மறுமுனையை நோயாளியின் வாயிலும் வைத்து ஊதுவர். அதனால் நோயாளி வாந்தி எடுப்பர். அதில் மருந்து
வெளிவந்து விட்டதாகக் கூறி ஏதேனும் ஒரு பொருளைக் காட்டுவார். பாதிக்கப்பட்ட நோயாளிக்கு இத்தகைய வைத்தியமுறை நோயினைத் தீர்ப்பதாக அமைகிறது.
உடலில் தோன்றும் மருக்களுக்குக் கோயிலில் அம்மனுக்கு மரு
எனப்பெறும் நறுமண இலையைச் சரமாகக் கட்டி மாலையாகச் சாற்றுவர். உப்பு வாங்கி கோயிலில் வைப்பதாக வெப்பு நோய்க்கு வேண்டிக் கொள்வர். தலைமுடியை மழித்துக் கொள்வதாக நேர்ந்து கொள்வர். மனநோய் பிடித்தவர்களைச் சில கோயில்களுக்கு அழைத்துச் சென்று சந்நிதியில் நிறுத்திவைப்பர். பூசை முடிந்ததும் தீர்த்தம் தெளித்து அந்நீரைப் பருகச் செய்வர். சில ஊர்களில் மனநோய் நீங்கிடவும், பேய், தீய ஆவிகளினால் ஏற்படும் நோய்கள் அகன்றிடவும் கோயிலில் உள்ள சாமி சாட்டையில்
அடிக்கச் செய்வார். தெய்வங்கள் வாழ்கின்றதாக்க் கருதும் மரங்களின் கட்டை, இலைகள் ஆகியவற்றை மருந்தாகக் கொள்ளுதல் முதலியன நம்பிக்கை ஒன்றை மட்டும் அடிப்படையாகக்
கொண்டு செய்யப்படும் மருத்துவ முறைகளுக்குச் சான்றுகளாகக் கொள்ளலாம்.
நிறைவாக,
மரபு வழியாக மக்கள் கொண்டுள்ள நாட்டுப்புற மருத்துவம் கடவுள்
நம்பிக்கை, வினைகளின் நம்பிக்கை, இவற்றின் அடிப்படையில் அமைகின்றது. மேலும் இயற்கையை உற்று நோக்கி விலங்குகள், பறவைகள், நீர், நில வாழ் உயிரிகளில்
மருத்துவக் குணம் இருப்பதாக அறிந்து அவற்றையும் மருந்துகளாகக் கொண்டனர். உணவுமுறை, மந்திரச் சடங்குகள், பழக்க வழக்கங்கள் ஆகியவனவும் மருத்துவ முறைகளில் சிறப்பிடம் பெறுகின்றன. இன்றளவும் பக்கவிளைவுகளற்ற எளிமையான நாட்டுப்புற மருத்துவம் மரபு வழியாக மக்களால்
பேணப்பட்டு வருகிறது.
Comments
Post a Comment