நாட்டுப்புறக்
கைவினைப் பொருட்கள் (Folk Crafts)
நாட்டுப்புறக் கைவினைப் பொருட்களின் தாயகம்
கிராமங்கள் எனலாம். கிராம மக்கள் தங்கள் கலைத்திறனைக் கொண்டு பல பொருட்களைச் செய்கின்றனர்.
பரம்பரையாகச் செய்து வருகின்ற பொருட்களும் உண்டு. தமிழ்நாட்டு மக்கள் உற்பத்தி செய்யும்
சில கைவினைப் பொருட்களை உலகமே கண்டு வியந்து பாராட்டுமளவிற்கு அமைந்துள்ளன.
மண்பாண்டக்
கலை
தமிழகத்தில் மண்பாண்டக் கலை மிகவும் சிறப்புப்
பெற்றது. கலையழகுடன் கைத்திறனையும் காட்டி மண்பாண்டம் செய்வதையே பெரும் கலையாக்கிவிட்டனர்.
வண்ண நிறங்களும் உருவ அமைப்பில் மாற்றமும் செய்து கலையழகும் பொருந்திய பொருட்களும்
உருவாக்குகின்றனர். கிராமங்களில் காணப்படும் அய்யனார் போன்ற தெய்வங்கள் அனைத்தும் இவர்களது
கை வண்ணத்தில் மிளிர்ந்தவைகளாகும். பண்டைய வேலைத்திறனுடனும் இன்றைய கலைக் கண்ணோட்டத்துடனும்
களிமண்ணில் செய்யப்படுகின்றன. காசியைச் சேர்ந்த வைத்தியநாத் சரஸ்வதி அவர்கள் மண்பாண்டக்
கலையை ஆய்வு செய்து டாக்டர் பெற்றுள்ளார். சிறந்த ஆய்வாக அறிஞர் பெருமக்களால் பாராட்டப்
பெற்ற ஆய்வாகும்.
காகிதப் பொம்மைகள்
களிமண்ணில் பொம்மைகள் செய்வது போன்று காகிதத்தைக்
கொண்டு பொம்மைகள் செய்ய முற்பட்டுள்ளனர். உலோகத்தில் செய்தது போன்ற பிரமிப்பைக் காகிதப்
பொம்மைகள் நமக்கு அளிக்கின்றன. இன்றைய நாகரிகப் போக்கிற்கேற்பக் காகிதப் பொம்மைக் கலை
வளர்ச்சிப் பெற்றுள்ளது.
மரப்பொம்மைகள்
காகிதத்தில் பொம்மைகள் செய்வது போன்று மரத்தில்
அழகான பொம்மைகள் செய்யப்படுகின்றன. இக்கலை பன்னெடுங்காலமாக நம் நாட்டில் இருந்து வருகிறது.
தேரின் சக்கரங்களிலும், வீட்டு வாயிற்படிகளிலும் கதவுகளிலும் அழகான மரப்பொம்மைகள் செதுக்கப்பட்டிருப்பதைக்
காணலாம்.
பாய் பின்னுதல்
பாய் பின்னும் தொழிலும் பல தலைமுறையாகத்
தமிழகத்தில் நடைபெற்று வருகின்றது. பத்தமடை பாய் உலகிலே புகழ் வாய்ந்த தொன்றாகும்.
பனை ஓலையால் கூடை முடைதலும் பெருகி வருகின்ற கைத்தொழிலில் ஒன்றாகும்.
மரவேலைப்பாடு
தமிழ்நாட்டில் மரவேலைப்பாடு மிகச் சிறப்பாக
வளர்ந்துள்ளது. தமிழ்நாட்டிலுள்ள தேர்களில் அழகான சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. திருவாரூர்
தேர், ஸ்ரீவில்லிப்புத்தூர் தேர் முதலியவற்றில் மரத்தினால் எவ்வளவு அழகான அருங்கலைகளை
உருவாக்கியுள்ளனர். இக்கலை பன்னெடுங்காலமாக சிறப்புற்று விளங்கி வருகிறது.
உலோக சிற்ப
வேலைப்பாடு
உலகத்தின் கவனத்தையே கவரும் வண்ணம் தமிழகத்தில்
உலோக சிற்ப வேலைப்பாடு சிறப்புற்று விளங்குகிறது. நமது கலைஞர்களின் கைவண்ணத்தில் செய்யப்பட்ட
உலோக சிற்பங்களுக்கு உலக அரங்கில் பெரும் மிப்புண்டு. உலோகங்களில் தெய்வச் சிலைகளும்
பாவை விளக்குகளும் செய்யப்படுகின்றன. வெண்கல வார்ப்புக் கலையும் தமிழகத்தில் சிறந்து
விளங்குகின்றது.
கல் சிற்ப வேலைப்பாடு
உலோகத்தால் செய்கின்ற சிற்பங்கள் போல, கல்லாலோ
அழகிய சிற்பங்கள் உருவாக்கப்டுகின்றன. கலைஞர்களில் கைத்திறனையும் கைவண்ணத்தையும் இவற்றில்
காணலாம். கோயில்களில் காணப்படும் கல் சிற்ப வேலைப்பாடு உலகில் அனைவரது கவனத்தையும்
கவர்கின்றது. கல்லிலே சிலை வடிப்பதற்கென மகாபலிபுரத்தில் பயிற்சிக்கூடமே உள்ளது. தமிழர்கள்
இம் மூன்று கலைகளிலும் வல்லவர்களே என்பதை நம் கோயில்களே சான்றாகும். வாழையடி வாழையாக
வளர்ந்து வரும் இக்கலைகள் மேலும் சிறப்புற்று வளர அரசு ஆவன செய்து வருவதும் இங்குக்
குறிப்பிடத்தக்கது.
சப்பரம் தேர்,
தெய்வம் அலங்கரிக்கும் கலை
திருவிழாக் காலங்களில் தெய்வங்களை ஊர்வலமாக எடுத்துச்
செல்வர். அப்போது சப்பரம், தேர் முதலியவற்றையும் தெய்வத்தையும் அலங்கரிப்பர். இவ் அலங்காரம்
மூலம் அழகியல் உணர்வு வெளிப்படுகின்றது. பல வண்ணத் துணிகள், வண்ணச் சேர்க்கை, மலர்கள்,
இலைகள் முதலியவற்றைக் கொண்டு அலங்கரிப்பர். கோயில்களில் பயன்படுத்தும் குடை, ஆலவட்டம்
முதலியவை கலைஞர்களின் கைவண்ணப்பாட்டிற்கு எடுத்துக்காட்டாக விளங்குகின்றன.
நெசவுக்கலை,
சாயமேற்றும் கலை
இவ்விரண்டு கலைகளும் இரண்டாயிரம் ஆண்டுகட்கு
முன்பே பிறந்து விளங்கியுள்ளதை வரலாறு நமக்குக் காட்டுகின்றது. நெசவுக்கலையோடு இணைந்த
சாயமேற்றும் கலையும் சிறப்புற்று விளங்கியது. சோலைகளிலும், பூங்காக்களிலும், காடுகளிலும்
பூத்த மலர்களின் வண்ணங்களைக் கண்டு ரசித்த மனிதன், உதயசூரியன் வானத்தில் தீட்டும் பல
வண்ணங்களை ரசித்த மனிதன் பற்பல நிறங்களைக் கொண்ட சாயங்களைத் தோற்றுவித்தான். சங்க இலக்கியங்களிலும்
சீவகசிந்தாமணி, பெருங்கதை போன்ற நூல்களிலும் இவற்றைப் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன.
தஞ்சாவூர் தட்டு,
நெல்மணி, ஏலக்காய் மாலை செய்தல்
தஞ்சை என்றாலே பல கலைகளின் பிறப்பிடம் எனக்
கூறலாம். தென்னாட்டின் நெற்களஞ்சியமான அத்தஞ்சைத் தரணியிலே நெல்மணி, ஏலக்காய் முதலியவற்றைக்
கொண்டு அழகுற மாலை தொடுக்கின்றனர். இவ்வழகைக் கண்டு மேலை நாட்டினரே வியந்து போற்றுகின்றனர்.
தஞ்சாவூர் தட்டும் தஞ்சாவூர் பொம்மையும் கலையழகுடன் மிளிர்பவைகள். கலைகளுக்குப் பெயர்
போன தஞ்சை மாவட்டத்தில் தென்னங்கீற்றுகளைக் கொண்டு அழகான பந்தல் அமைக்கின்றனர். கலையே
தொழிலாகவும் தொழிலே கலையாகவும் கொண்ட ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் இப்பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.
பார்வை நூல்
1.
சக்திவேல்.சு.டாக்டர்,
- நாட்டுப்புற இயல் ஆய்வு, கற்பகம் அச்சகம், சென்னை -2, முதல் பதிப்பு – 1983.
Comments
Post a Comment