கொழுமுகத்துக் குழந்தை (சீதை)
விதேஹ மன்னரான ஜனகர் மிகவும் நல்லமுறையில் தம் தேசத்தை ஆண்டு வந்தார். தசரதச்
சக்கரவர்த்திக்குப் பழைய மித்திரர். தசரதன் புத்திரப் பேற்றுக்காகச் செய்த பெரிய யாகத்திற்கு
அரசர்களை அழைத்தபோது ”ஜனகரிடம் தூதுவர்களை அனுப்பவேண்டாம். மந்திரிகளே நேரில் போய்
அழைக்க வேண்டும்” என்று தனி உத்தரவிட்டான். ஜனகர் ஒரு ராஜரிசி; சூரர்; எல்லாச் சாஸ்திரங்களையும் நன்றாகக் கற்றவர்;
வேத வேதாந்தகளில் நிபுணர்; நியமம் காத்தவர்; பிரம்மஞானி. கடமைகளைச் செய்தே சித்தியடைவதைப்
பற்றி அர்ச்சுனனுக்கு எடுத்துச் செல்லும்போது, கண்ணன் ஜனகரைச் சிறந்த உதாரணமாக எடுத்துச்
சொன்னான். அவதார தேவி சீதையை மகளாகப் பெற்ற தகுதி கொண்ட மகான்.
ஒரு காலத்தில் ஜனக மகாராஜா யாகம் செய்வதற்கென்று
இடம் கண்டு, அதைத் தாமே கலப்பைப் பிடித்து உழுதார். உழுது, புதரும் பூண்டுமாக இருந்த
பூமியைத் திருத்தி ஒழுங்குப்படுத்திக் கொண்டிருக்கும் போது, மண்ணில் ஒரு திவ்ய ரூபமான
பெண் குழந்தையைக் கண்டார். ஜனகருக்குக் குழந்தையில்லை. தரையில் புரண்டு உடலெல்லாம்
மண் பூசிக் கிடந்த அக்குழந்தையைப் பூதேவியே தமக்குத் தந்த வரம் என்று மகிழ்ச்சிப் பரவசமாக்க்
கையில் எடுத்துக் கொண்டு தம் பிரிய பார்யையிடம் சென்று, ”இதோ, நமக்குக் கிடைத்த பெருந்தனம்!
யாக பூமியில் இவளை அடைந்தேன். இவளே நம்முடைய சந்தானம்!” என்று குழந்தையைப் பட்ட மகஷியிடம்
கொடுத்தார். அவளும் அக்குழந்தையைத் தான் பெற்ற குழந்தையாகவே வளர்த்தாள். கம்பர் பாடியிருக்கும்
மிக அழகிய பாடலாக இவ்விடத்தில் கூறலாம்.
”உழுகின்ற கொழுமுகத்தின் உதிக்கின்ற கதிரின்
ஒளி
பொழிகின்ற
புவிமடந்தை உருவெளிப்பட் டெனப்புணரி
எழுகின்ற
தெள்ளமுதோ (டு) எழுந்தவளும் இழித் (து) ஒதுங்கித்
தொழுகின்ற நன்னலத்துப் பெண்ணரசி தோன்றினாள்”
இப்பாடலின் பொருளாக, பூதேவியை நாம் நேரில் பார்க்க முடியாது. உழுகின்ற கொழுமுகத்தில்,
தன் அபார சௌந்தரியத்தை அழகிய பச்சைப் பயிர்களின் வாயிலாகக் காட்டுகிறாள். உதிக்கும்
சூரியனுடைய கிரணங்களுக்குச் சம்மான பொலிவுடன் முறைக்கும் பயிர்களில் விளங்குகிறாள்
பூமாதேவி. உள்ளே மறைந்து நிற்கும் தேவியின் முழு அழகு நமக்குத் தெரியாது. அந்தப் பூதேவியே
சீதையாக வெளிப்பட்டு ஐனகருடைய கலப்பைக் கொழுமுகத்தில் தோன்றினாள். கடலைக் கடைந்த போது
அமுதத்தோடு எழுந்த ஸ்ரீதேவியும், சீதையின் அழகைக் கண்டு வியந்து தொழுவாள் என்று கம்பர்
பாடுகிறார்.
தெய்வீகக் குழந்தையான சீதையை மிகவும் அன்போடு
ஜனகரும் அவர் பிரிய பத்தினியும் வளர்த்தார்கள்.
விவாகத்துக்குரிய காலம் வந்தது. இவளை விட்டுப்
பிரிய வேண்டும் என்று ஜனகர் துக்கப்பட்டார். தெய்வீகப் பெண்ணாகிய இவளை, மனைவியாகப்
பெறக்கூடிய அரசகுமாரன் யார் என்று யோசித்து, வெகு காலம் மிகவும் வருத்தப்பட்டார். இந்த
நிலையில் ஜனகர் முடிவு செய்தார். முன்னொரு சமயம் மகாயாகம் செய்த காலத்தில் வருணன் ஜனகருடைய
யாகத்தைப் போற்றி, ருத்திர வில்லையும் இரண்டு அம்பறாத் துணிகளையும் ஜனகருக்குத் தந்தான்.
அந்த வில்லானது மிக புராதன தெய்வீகமான வில். அதைச் சாமான்ய ஜனங்கள் கையால் அசைக்கக்
கூட முடியாது. எடுத்து, வளைத்து, நாண் ஏற்றவதைப் பற்றி சொல்ல வேண்டாம்! முடியாத காரியம். ஜனகர் அரச சமூகத்துக்குத்
தெரியப்படுத்தினார்.
”என்னிடம் இருக்கும் வருணதேவப் பிரசாதமான
இந்த ருத்திரவில்லை எந்த அரசகுமாரன் வளைத்து நாண் பூட்டுகிறானோ அவனுக்கு என் மகள் சீதையைத்
தருவேன். இதுவே என் மகளுடைய சுயம்வர நிபந்தனை.
சீதையின் அழகைப் பற்றிக் கேள்விப்பட்டு பல
அரச குமாரர்கள் வில்லைப் பார்த்துவிட்டு, ஒன்றும்
செய்ய முடியாமல் திரும்பிவிட்டார்கள்.
Comments
Post a Comment