Skip to main content

கோப்பெருஞ்சோழன் – பிசிராந்தையார் நட்பு

 

கோப்பெருஞ்சோழன் – பிசிராந்தையார் நட்பு

 

வடக்கிருத்தல்

தமிழரின் நம்பிக்கை சார்ந்த பழக்கவழக்கங்களில் வடக்கிருத்தலை ஆடவர் மேற்கொண்டனர். ஊருக்கு வடபால் ஓரிடத்தில் வடக்குத் திசை நோக்கி அமர்ந்த வண்ணம் உண்ணாநோன்பிருந்து உயிர்த்துறப்பதை வடக்கிருத்தல் எனக் கொண்டனர். வடக்கிருக்க அடிப்படைக் காரணியாக அமைவன மானம், வீரம், நட்பு, தன்நோக்கம் நிறைவேறாமை எனலாம். வீரர், புலவர், மன்னர் ஆகியோர் வடக்கிருந்தமையை இலக்கியங்கள் வாயிலாக அறிய முடிகிறது. அவ்வாறு உயிர் துறப்பவர் துறக்கம் பெறுவர் என நம்பினர்.

     கலைக்களஞ்சியம், வடக்கிருத்தலை உத்ரக மனம்என்றும் மகாப் பிரத்தானம்என்றும் கூறும். நாணத்தகு நிலை நேர்ந்ததனாற் சிலர் வடக்கிருந்ததாகத் தமிழ் நூல்கள் கூறுகின்றன என்று கூறுகிறது.

          கோப்பெருஞ்சோழன் வடக்கிருந்து உயிர் விட்டான். அவன் உயிர்விட்டப் பிறகு அவனை பார்க்காமலே நட்புக் கொண்டிருந்தப் பிசிராந்தையாரும், சோழனுடன் இருந்த பொத்தியார் என்ற புலவரும் அவன் வடக்கிருந்த இடத்தின் அருகில் வடக்கிருந்து உயிர் விட்டனர். அந்நிகழ்வு கொண்டப் பாடல்கள் புறநானூற்றில் (214, 215, 216, 217, 218, 220) இடம்பெற்றுள்ளன. அவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளேன். தமிழர்கள் நட்புக்காக உயிரையும் கொடுப்பர் என்பதை இதன் வழி அறியலாம்.  

கோப்பெருஞ்சோழன் – பிசிராந்தையார்

        இவர்கள் இருவரும் பார்க்காமலே நட்பு கொண்டனர். இந்நிகழ்வு நினைக்கும் பொழுது எனக்குப் பெரிதும் நெகிழச்சியாக இருக்கும். இந்நிகழ்வை பதிவு செய்ய வேண்டும் என்று நினைத்திருந்தேன். இன்று அதை நிறைவேற்றிக் கொண்டேன்.  உறையூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டக் கோப்பெருஞ்சோழன் – தென்னவன் பாண்டியன் ஆளும் தென்பாண்டி நாட்டின் சிற்றூர் பிசிர் என்னும் ஊரில் வாழும் பிசிராந்தையாருக்கும் உள்ள நட்பு. இருவரும் பார்க்காமலே நட்புக் கொண்டு வடக்கிருந்து உயிர் துறந்த நண்பர்கள். அரசருக்கும் புலவருக்கும் உள்ள நட்பு வியப்பளிக்கிறது.

கோப்பெருஞ் சோழன் – பொத்தியார்

      சோழன் வடக்கிருந்த போது, அவன் அன்பிற்கினிய பொத்தியாரும் அவனுடன் வடக்கிருந்து உயிர் விட எண்ணினார். புலவர் மனைவி கருவுற்றிருந்ததால் அவரை உறையூருக்கு  அனுப்பி மனைவியுடன் இருக்கப் பணித்தான். உறையூர் திரும்பிய புலவருக்குச் சோழனில்லாத ஊரும் அரண்மனையும் உவப்பூட்டுவதாக இல்லை. வருத்தமே தந்தது. மனைவி மகனை ஈன்றெடுத்து விட்டாள். நானும் உன்னைத் தேடி வந்து விட்டேன். வடக்கிருக்க  எனக்குரிய இடம் எது? என்று சோழன் நடுக்கல்லான இடத்தில் நின்று மனதில் பட்ட இடத்தில் புலவர் பொத்தியார் உயிர் விட்டார்.

                                         என் அரசன் இவனே! 

புறநானூறு பாடல் எண் – 212

பாடியவர் – பிசிராந்தையார்

பாடப்பட்டவர் – கோப்பெருஞ்சோழன்

திணை- பாடாண் திணை

துறை – இயன்மொழித் துறை

        பாண்டிய நாட்டில் பிசிர் (இன்று பிசிர்குடி என அழைக்கப்படுகிறது) என்னும் ஊரில் வாழ்ந்த புலவர் பிசிராந்தையார் என்றாலும் சோழ வேந்தன் கோப்பெருஞ்சோழனைத் தலைவன் என்று போற்றி பாடிய பாடல்.

         ”நுங்கோ யார்என வினவின் எம்கோக்

         களமர்க்கு அரித்த விளையல் வெம்கள்

         யாமைப் புழுக்கின் காமம் வீடவாரா

         ஆரற் கொழுஞ்சூடு அங்கவுள் அடாஅ

         வைகு தொழில் மடியும் மடியா விழவின்

         

        யாணர் நல்நாட் டுள்ளும் பாணர்

        பைதல் சுற்றத்துப் பசிப்பகை ஆகிக்

        கோழியோனே கோப்பெருஞ் சோழன்

        பொத்தில் நண்பின் பொதியொடு கெழீஇ

        வாயார் பெருநகை வைகலும் நக்கே!

 

        உன்னுடைய அரசன் யார் என்றா கேட்கிறாய்? சொல்கிறேன், கேட்டுக் கொள். என்னுடைய அரசன் உறையூரைத் தலைநகராகக் கொண்டு வாழும் சோழ நாட்டின் அரசன் கோப்பெருஞ் சோழன். அவன் எப்படிப் பட்டவன் தெரியுமா? வீரருக்கென்று பக்குவம் செய்யப்பட்ட முதிர்ந்த – புளித்த கள்ளை ஆமை இறைச்சியோடு உண்டும், ஆசை யடங்காது, ஆரல் மீனின் சுட்ட இறைச்சியைக் கன்னக் கதுப்புப் புடைக்க அடக்கிக் கொண்டு தம் தொழில் மறந்து திரியும், உழவர் குல மக்கள் மிகுந்த, புதுவருவாயுடைய சோழ நாட்டுள்ளே, பாடி வரும் பாணர்களது சுற்றத்தாரின் பசிக்குப் பகையாக இருப்பவன். பொத்தியார் என்னும் புலவரோடு கூடி அளவளாவி நாளும் மகிழ்ந்திருப்பவன். அவனே எம் அரசன்!

 

நல்லதே செய்க .....

புறநானூறு – 214

பாடியவர் – பிசிராந்தையார்

பாடப்பட்டவர் – கோப்பெருஞ் சோழன்

திணை – பொதுவியல் திணை

துறை – பொருண் மொழிக் காஞ்சி

 

          தான் பெற்ற பிள்ளைகளே தன்னோடு போரிட வந்ததை எண்ணி வருந்திய கோப்பெருஞ் சோழன், வடக்கிருந்து உயிர் விடத் துணிந்த போது நல்லுரையாகப் பிசிராந்தையார் பாடிய பாடலாகும்.

         ”செய்குவம் கொல்லோ நல்வினை எனவே

         ஐயம் அறாஅர் கசடுஈண்டு காட்சி

         நீங்கா நெஞ்சத்துத் துணிவு இல்லோரே

         யானை வேட்டுவன் யானையும் பெறுமே

         குறும்பூழ் வேட்டுவன் வறுங்கையும் வருமே

 

         அதனால் உயர்ந்த வேட்டத்து உயர்ந்திசி னோர்க்குச்

         செய்வினை மருங்கின் எய்தல் உண்டெனின்

         தொய்யா உலகத்து நுகர்ச்சியும் கூடும்

         மாறிப் பிறப்பு இன்மையும் கூடும்

 

        மாறிப் பிறவார் ஆயினும் இமயத்துக்

        கோடுயர்ந் தன்ன தம்மிசை நட்டுத்

        தீதில் யாக்கையொடு மாய்தல் தவத்தலையே”

 

          நல்லறம் நாமும் செய்வோம் என்ற துணிவைப் பெறாது, நல்லறம் நம்மால் செய்ய முடியுமா என்று சந்தேகப்பட்டுச் சஞ்சலப்படுவார்கள், அறிவுத் தெளிவு இல்லாதவர்கள். யானை வேட்டைக்குப் போனவன் வீரன். அவனுக்கு வேட்டையில் யானை கூடக் கிடைக்கலாம். காடை குருவிகளைப் பிடிக்கக் கண்ணி வைப்பவன் ஒன்றும் பெறாமல் வெறும் கையுடன் திரும்பவும் நேரலாம். எனவே உயர்வுள்ளம் உடையவர்களுக்கு அவர்களது நற்செயல்களின் பலனாக, அவர்களுக்கு நல்வினை தீவினை செய்யா வானுலக நல்வாழ்வு கிட்டும். வானுலக நல்வாழ்வைச் சுவைக்கின்ற பேரின்பம் அவர்களுக்குக் கிட்ட வில்லை என்றாலும், மீண்டும் மீண்டும் பிறந்து இறக்காத, பிறவித் துயரிலிருந்து விடுபடுகின்ற நன்னிலையாவது கிடைக்கலாம். மாறி மாறி மனிதர் பிறப்பதில்லை என்று எவரேனும் சொன்னால் இவ்வுலகிலேயே இமயமலை போல உயர்ந்து இறவாப் புகழோடு இருக்கின்ற நிலையை யாவது அடையலாம். எனவே எப்படிப் பார்த்தாலும் நல்லன செய்வதே நல்லது.

வாராதிருப்பாரோ ....? வருவார்!

புறநானூறு – 215

பாடியவர் – கோப்பெருஞ்சோழன்

திணை – பாடாண் திணை

துறை – இயன்மொழித் துறை

        வடக்கிருந்த கோப்பெருஞ்சோழன் இறுதி நாட்களில் பிசிராந்தையார் வருவார் என்ற ஆவலில் தவித்திருந்தான். மன்னனிடம் பிசிராந்தையார் வரமாட்டார் என்று மற்றவர் கூற, அவர் கண்டிப்பாக வருவார், என்று அவர்களுக்கு மறுமொழியாகக் கோப்பெருஞ் சோழன் பாடிய பாடல்.

          ”கேட்டல் மாத்திரை அல்லது யாவதும்

         காண்டல் இல்லாது யாண்டுபல கழிய

         வழுவின்று பழகிய கிழமையர் ஆகினும்

        அரிதே தோன்றல் அதற்பட ஒழுகல்என்று

        ஐயம் கொள்ளல்மின் ஆரறி வாளீர்

 

        இகழ்விலன்; இனியன் யாத்த நண்பினன்

        புகழ்கெட வரூஉம் பொய்வேண் டலனே

        தன்பெயர் கிளக்கும் காலை என்பெயர்

        பேதைச் சோழன் என்னும் சிறந்த

        காதல் கிழமையும் உடையன் அதன்தலை

 

        இன்னதோர் காலை நில்லலன்

        இன்னே வருகுவன் ஒழிக்க அவற்கு இடமே”

 

          ‘கேள்விப் பட்டிருக்கிறீர்களே தவிர, ஒரு முறை கூட நேரில் சந்தித்துக் கொண்டதில்லை. இப்படி நேருக்கு நேர் காணாது நீங்கள் இருவரும் பல ஆண்டுகள் ஒருவருக்கு ஒருவர் அன்பு பாராட்டி வாழ்பவர்கள். அப்படி இருக்க, அவர் இப்போது இங்கே எப்படி வருவார்?’ என்று, அறிவார்ந்த சான்றோர்களே! நீங்கள் சந்தேகப்பட வேண்டாம்.  அவன் அந்தப் பிசிராந்தையன் ஒரு போதும் என்னை இகழாதவன். இனிய பண்பினன். எனக்கினிய நண்பன். புகழ் அழிக்கும் போலி வாழ்வை விரும்பாதவன் அவன். தன் பெயர் சொல்ல வேண்டிய இடத்தில் கூட என் பெயரைத் தன் பெயராகச் சொல்லி எனக்குப் பெருமை சேர்ப்பவன். என் அன்புக்குரியவன். எனவே அவன் என்னுடைய இந்த இறுதி நாளில் கண்டிப்பாக வந்தே தீருவான். என் அருகில் அவனுக்கும் ஓர் இடம் ஏற்பாடு செய்க.

அரிய நட்பு! பெரிய சோகம்!

 

புறநானூறு – 217

பாடியவர் – பொத்தியார்

திணை – பொதுவியல் திணை

துறை – கையறுநிலை துறை

          பிசிராந்தையார் கோப்பெருஞ் சோழன் இறந்த பிறகே வந்தார். நிச்சயம் வருவார் என்று சொன்ன பிசிராந்தையார் வந்தார். சோழன் இறந்து நல்கல்லான பிறகு. வந்தவர் நிலை கண்டு வருத்தமும் பெருமிதமும் உற்ற பொத்தியார் கோப்பெருஞ்சோழன் - பிசிராந்தையாரின் நட்பின் பெருமையைப் பாடியது.

          நினைக்கும் காலை மருட்கை உடைத்தே

           எனைப்பெரும் சிறப்பினொடு ஈங்கிது துணிதல்

         அதனினும் மருட்கை உடைத்தே பிறன்நாட்டுத்

         தோற்றம் சான்ற சான்றோன் போற்றி

 

         இனையதோர் காலை ஈங்கு வருதல்

         வருவன் என்ற கோனது பெருமையும்

         அதுபழு தின்றி வந்தவன் அறிவும்

         வியத்தோறும் வியத்தோறும் வியப்பிறந்தன்றே

         அதனால் தன்கோல் இயங்காத் தேயத்து உறையும்

         சான்றோன் நெஞ்சுரம் பெற்ற தொன்றிசை

         அன்னோனை இழந்த இவ்வுலகம்

         என்னா வதுகொல்? அளியது தானே!

 

          நினைத்துப் பார்க்கவே முடியாத அளவுக்கு ஆச்சரியம் உண்டாக்குவது! எவ்வளவு பெரும் சிறப்போடு வாழ்ந்த மன்னன்! இவன் இப்படி வடக்கிருந்து உயிர்விடத் துணிந்தது. அதைவிட ஆச்சரியமானது அயல் நாட்டில் கற்ற்றிந்த மேலோன், புகழுக்குரிய நட்பொன்றையே பற்றுக் கோடாகக் கொண்டு, இங்கு வந்ததும், அப்படி வருவான் என்று உறுதியாகச் சொன்னானே, அப்படி சொன்ன கோப்பெருஞ் சோழனின் பெருமையும், வந்த பிசிராந்தையாரது அறிவு நலமும், நினைக்க நினைக்க ஆச்சிரியமளிப்பதாக உள்ளது. எனவே தன்னுடைய ஆட்சிப் பரப்புக்குள் இல்லாத ஒரு நாட்டில் வாழும் சான்றோன் ஒருவன் உள்ளத்திலும் இடம் பெற்றிருந்த புகழுடைய ஒருவனை இன்று இழந்துவிட்டது இவ்வுலகம் – இந்தச் சோழ வளநாடு! எவ்வளவு பெரிய துன்பம்! எத்தனை இரங்கத் தக்க நிலை.

கற்றோர் கற்றோருடனே சேர்வர்!

 

புறநானூறு – 218

பாடியவர் – கண்ணகனார்

திணை – பொதுவியல் திணை

துறை – கையறுநிலை துறை

          ஒருவரை ஒருவர் காணாமலே, அன்பால் நட்பான பிசிராந்தையார், தன்னைக் காண வருவார் என்று கோப்பெருஞ்சோழன் கூறியதைப் போலவே, புலவர் சோழன் வடக்கிருந்து உயிர் துறந்த பின் வந்து கண்டார். சோழன் அவர் நிச்சயம் வருவாரென்று, அவருக்கும்ம் ஓர் இடம் தனக்கருகில் வைத்திருக்கச் சொன்னான். சோழன் இறந்து நடுக்கல்லான போது வந்து கண்ட பிசிராந்தையார் தானும் வடக்கிருந்து உயிர் விட்டார். இந்த அன்பின் மிகுதியை வெளிப்படுத்திய பாடல்.

        ”பொன்னும் துகிரும் முத்தும் மன்னிய

         மாமலை பயந்த காமரு மணியும்

        இடைபடச் சேய வாயினும் தொடைபுணர்ந்து

        அருவிலை நன்கலம் அமைக்கும் காலை

        ஒருவழித் தோன்றியாங்கு என்றும் சான்றோர்

 

        சான்றோர் பாலர் ஆப

        சாலார் சாலார் பாலர் ஆகுபவே!”

 

          பொன்னும், பவழமும், முத்தும், உயர்ந்து விளங்கும் பெரிய மலைகளில் கிடைத்த, பலரும் விரும்பும் மணியும் கிடைக்கும் இடங்கள் அருகருகானவை அல்ல. ஒன்றுக்கொன்று வெகுதூரம் உள்ளவை. என்றாலும் அவை ஒன்றாகத் தொடுக்கப்பட்டு, விலைமதிப்பற்ற ஆபரணமாகும் பொழுது, ஓரிடத்தில் ஒன்றாகத் தோன்றியது போல அவற்றின் பெருமை சிறப்பு உயர்வதைப் போல, சான்றோர் பெருமக்கள் எங்கே இருந்தாலும், சான்றோர் கூட்டத்துடனேயே சேர்வர். சால்பொழுக்கமில்லாத கீழ்மக்கள், அவர்கள் இனத்துடனே சேர்ந்திருப்பர்.

இறந்த பின்னும் சிறந்த நட்பு!

 

புறநானூறு – 223

பாடியவர் – பொத்தியார்

திணை – பொதுவியல் திணை

துறை – கையறுநிலை

          பொத்தியார் வடக்கிருக்க எனக்கிடம் எங்கே என்று சோழனின் நடுகல் அருகில் நின்று கேட்க, சோழன் அவருக்கு உணர்த்தியது போல் மனதில் பட்ட ஓர் இடத்தில் இருந்து புலவர் உயிர்விட்டார். இருக்கும் போது உதவினாய். இறந்த பின்னும் இடங்காட்டி உதவினாய். என்னே உன் உயர்குணம்! நட்புரிமை! என்று பொத்தியார், கோப்பெருஞ் சோழனைப் போற்றி புகழும் பாடல்.

          ”பலர்க்கு நிழலாகி உலகம் மீக்கூறித்

         தலைப் போகன்மையின் சிறுவழி மடங்கி

         நிலைபெறு நடுகல் ஆகியக் கண்ணும்

         இடம்கொடுத்து அளிப்ப மன்ற உடம்போடு

         இன்னுயிர் விரும்பும் கிழமைத்

        தொன்நட் புடையார் தம்உழைச் செலினே”

 

          வாழும் போது பலருக்கு நிழல் போல இருந்து, கொடுத்துதவி அன்பு காட்டி, உலகம் போற்றும் உயர்ந்த புகழுடையவனாக இருந்தாய். இறந்து நடுக்கல்லாய் நிற்கும் இந்த நிலையிலும் எனக்கு இடம் காட்டி அருள் செய்தாய. உடலை விரும்பும் இன்னுயிர் போல, அன்பால் இணைந்த ஆழ்ந்த நட்புடையவர் பக்கம் சேர்பவர் பெற்ற பயன் நானும் இன்று பெற்று விட்டேன்.

 

 

 

 

 

 

 

Comments

Popular posts from this blog

எண்ணம் போல் வாழ்வு

                                                                        எண்ணம் போல் வாழ்வு             நினைவுகளே பழக்கவழக்கங்களாக மாறுகின்றன. எனவே தான் எண்ணம் போல் வாழ்வு அனைவருக்கும் அமைகிறது. வெற்றி பெற்ற அனைவரும் பிறரைத் தன் நடத்தையால் மகிழ்விக்க நினைத்தவர்களே என்பதை நாம் நினைவில் நிறுத்த வேண்டும். ·         வங்கியில் பணத்தைச் சேமிப்பதைவிட இதயத்தில் இனிய எண்ணங்களைச் சேமிப்பது மகிழ்ச்சியான வாழ்விற்கு உதவும் வைப்பு நிதியாகும். ·      மனம் - மகிழ்ச்சி அளிக்காத நிகழ்வுகளை மறந்து விடும் இயல்புடையது. ·         வெறுப்பு - மனத்தையும், உணர்வையும் பற்றிக் கொண்டுள்ள தொற்று நோய். எனவே வெறுப்பிற்கு விடுதலை தரும்வரை மகிழ்ச்சி நம்மை அணுகாது. ·   ...

பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்

திருக்குறளில் எனது சிறு முயற்சியாக… .  " பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்"  என்ற இத்தலைப்பில் அமைந்த 133 வரிகள் கொண்ட இப்படைப்பு முருகனின் ” கந்த சஷ்டி  கவசம் ” போன்று உருவாக்கப்பட்டது. இப்பகுதி அறத்துப்பால் 38  அதிகாரங்கள், பொருட்பால் 70  அதிகாரங்களிலிருந்து மட்டும் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்ற முறையில், திருக்குறளின் சாராக அமைத்து வழங்கியுள்ளேன். அறமும், பொருளும் ஒருவருக்கு அமைந்தால் இன்பம் தானாகக் கிட்டும் என்ற நோக்கத்தில் அமைக்கப்பட்டது. ”பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்” காக்க காக்க அறத்தைக் காக்க (1) காக்க காக்கக் குறளைக் காக்க உலக மொழிகளில் ஒப்பற்ற நூலாம், நோக்க நோக்க பெயா்த்து நோக்க மனிதன் கற்று மனிதம் காக்க ஐம்பொறி உணா்வை காக்க காக்க புகழுடன் வாழ ஒழுக்கம் காக்க அறநெறி வாழ்வை இறைவழி காக்க வானம் பொய்யா வளத்தைக் காக்க பசிப்பிணி யில்லா உலகைக் காக்க பற்றற்ற வாழ்வை பரிவுடன் காக்க அறத்தைக் காக்க அன்பைக் காக்க (2) குறையிலா வாழ்வை குணமுடன் காக்க இல்லற வாழ்வுடன் நல்லறம் காக்க பண்பொடு பயனும் அறத்துடன் காக்க வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க வாழ்க...

மனிதனாக வாழ ...

  மனிதனாக வாழ ... ·         பிறர் உன்னை தூற்றும் பொழுது தலை நிமிர்ந்து நில். ·         பொறாமை, கோபம், வீண் மயக்கம் போன்ற குணங்களை விரோதிகளாக எண்ணுதல். ·         வெற்றி -   தோல்வி,   இன்பம் – துன்பம் இரண்டையும் சமமாக பாவித்தல். ·         உண்மைக்குப் புறம்பானவற்றைச் செய்யாதிருத்தல். ·         நண்பர்கள் இல்லையென்றாலும் பரவாயில்லை. பகைவர்கள் இல்லாமல் வாழ முயற்சி செய்தல். ·         மனத்திடத்தோடு வாழ்தல். ·         ஏற்றத் தாழ்வு இல்லா மனநிலையுடன் இருத்தல். ·         மனிதனுக்கு உரியது - கலங்காத அறிவு, அன்பு நிறைந்த மனம், ஆரோக்கியமான   உடல். ·         எதற்கும் அஞ்சாதே -   பயம் நம்மை கோழையாக்கி விடும்.      யாரையும் வெறுக்காதே ...