பீஷ்மர்
அழகியென்றால்
அவள்தான் அழகி. அவளைப் போன்ற
ஒரு அழகிய பெண்ணை எங்குமே கண்டதில்லை. ஆம், அவன் – சந்தனு மகாராஜா! எவ்வளவோ பெண்களைப் பார்த்திருக்கிறான். எத்தனை எத்தனையோ
அரசிளங்குமரிகளை அவன் பார்த்திருந்தாலும் அவன் கண்ட அந்தப் பெண்ணைப் போல சந்தனு மகாராஜா
எங்குமோ அதாவது இந்த வையத்தில் பார்த்ததே இல்லை.
அவன்
அவளை – அந்த அழகரசியைப்
பார்த்த பின்னர் உண்மையில் திகைத்துதான் போய்விட்டான். அவள் உண்மையில் மனித குலத்தில் பிறந்தவளா அல்லது தேவலோகத்துக்
கன்னியர் என்பார்களே, அவர்களில் ஒருத்தியா என்று அவன் பெரிதும் சந்தேகம் கொண்டான்.
அவள்
யாராக இருந்தால்தான் என்ன? அவளை எப்படியும் அடைந்தே தீரவேண்டும். அவளை அடையா
விட்டால் அவனால் இந்த உலகில் வாழவே முடியாது என்று ஒரு நிலைமை. எனவே தயங்காமல்
கூறிட அவன் திட்டமிட்டான். அவளை அவன் நெருங்கிவிட்டான்.
சந்தனு
மகாராஜா அந்த அழகியின் பக்கத்தில் செல்லவும் அவளும் அவனைப் புன்னகையுடன் வரவேற்றாள். வரவேற்றாள்
என்றால் அவள் தன் திருவாய் திறந்து ”வாருங்கள் மன்னரே, என்னுடைய வணக்கத்தை நான் முதற்கண் தெரிவித்துக் கொள்கிறேன். தங்களைப் பார்த்தால்
ஒரு நல்ல இளவரசன் போன்றும் எழில் கோலம் பூண்டு நிற்கிறீர்கள். நீங்கள் எந்த
நாட்டு இளவரசரோ, நான் அறிந்து
கொள்ளலாமா? என்றெல்லாம்
கேட்டு சாந்தனு மகாராஜாவை அவள் சந்தோசபுரிக்கு அழைத்துச் சென்று விடவில்லை.
அவள்
செய்ததெல்லாம் புன்னகையுடன் தன் எழில் கோலம் காட்டி நின்றது தான். ஆம், அவள் தன் அழகிய
வதனம் மேலும் மலர நின்றதுதான்! அது போதாதா அவனுக்கு! அவள் அவனை வெறுக்கவில்லை என்பதைப் புரிந்து கொண்ட சந்தனு
மகாராஜா அவளிடம் அன்பொழுக பேசினான். அன்பான பேச்சில் யார்தான் தன் உள்ளத்தைப் பறி கொடுக்க மாட்டார்கள்.
அவன்
அவ்வளவு அன்புடன் பேசினான். அவளை அவன் பெரிதும் விரும்புகிறான் என்பதை அவள் உணரும் வண்ணம் அன்பு நிறைந்த பார்வையைக் கனிவுடன் வீசியவனாய் அவளிடம்
பேசினான்.
”அன்புடையவளே, நான் சொன்னால் நீ நம்புவாயோ, நம்பமாட்டாயோ, உன்னுடைய ஒப்பற்ற பேரழகு என்னை உன்பால் இழுத்துவிட்டது. அவ்வளவு அற்புத அழகு படைத்தவளாக நீ திகழ்கிறாய். இந்த வார்த்தைகளையெல்லாம்
நான் இதயத்திலிருந்து பேசுகிறேன். நீ இந்த உலகத்துப் பெண்தானா! அல்லது விண்ணுலகுத்
தேவதையோ என்று என்னால் தீர்மானிக்க முடியவில்லை.
நீ யாராகயிருந்தாலும்
என் மனதில் இடம் பிடித்துவிட்டாய். நீ இல்லாமல் என்னால் வாழமுடியாது என்ற நிலைமை ஏற்பட்டுவிட்டது. உள்ளம் கவர்ந்தவளே, உன்னைப் பற்றி
யார் என்று உன்னிடம் கேட்காமலே உன்னை என்னுடையவளாக ஆக்கிக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம்
என்னுள்ளத்தில் ஆழப்பதிந்துவிட்டது. வாழ்ந்தால் உன்னுடன் தான் வாழவேண்டுமென்று உறுதியாக இருக்கிறேன்.
இதயம்
கவர்ந்தவளே, நீ என்னுடைய
இந்த விஷயத்திற்கு இணங்காவிட்டால் எனக்கு உண்மையில் வாழ்வே கிடையாது. ஆம்! உன் நினைவிலேயே
என்னுயிரை விட்டு விடுவேன். ஆகவே, பரிதவிக்கும் நிலைக்கு என்னை ஆக்கிவிடாதே.
இன்னுயிருனும்
மேலானவளே, என்னைப் பற்றி
நான் இதுவரைக் கூறவில்லையே, என் பெயர்தான் சந்தனு மகாராஜா என்பது. என்னுடைய ராஜியம்
எவ்வளவு பெரியது என்பது உனக்குத் தெரியாது. இந்த ராஜியம், இந்த மாடமாளிகை என்று எனக்கு எதுவுமே வேண்டாம். உயிரினும் இனியவளே, உன்னை நான்
மனைவியாக அடையவேண்டும் என்பதே என்னுடைய ஒரே இலட்சியமாகும்!” என்றெல்லாம் சந்தனு மகாராஜா தன் உள்ளத்தில் உள்ளதை யெல்லாம்
அவளிடம் கூறிவிட்டான்.
அந்த
அழகியை எவ்விதமும் அடைய வேண்டும்; அடைந்தே தீரவேண்டும் என்ற காதல் பைத்தியம் அவனைப் பிடித்துவிட்டது.
அந்தப்
பேரழகியை அவன் யாரென்று தெரியாமலேயே இவ்விதம் பேசிக்கொண்டிருந்தான். அவள் எதுவும்
பேசாமல் அவனைப் பார்த்துப் புன்னகை புரிந்து கொண்டிருந்தாள்.
ஆம், அவள் சிரித்த
முகத்துடன் அவன் பேசுவதையெல்லாம் கேட்டு ரசித்துக் கொண்டிருந்தாள். அழகிய பெண்ணொருத்தியைக்
கண்டு இந்த மன்னன் தன்னை இழந்த நிலைக்கு வந்துவிட்டானே, ஒரு பெண்ணிற்குத்தான் எவ்வளவு ஆற்றல் உள்ளது என்று பலவாறு
எண்ணியவளாய்ப் புன்னகை மாறாமல் இருந்தாள். அவள் தோற்றம் அவனை மேலும் கிறுகிறுக்க வைத்தது.
அவள்
அதே புன்னகையுடன் காணப்பட்டாள். அந்த இளம் நகைதான் சந்தனு மகாராஜானை அவள் பால் இழுத்தது. அவளுடைய மலர்ந்த
முகம் கண்டு அவன் உண்மையில் கிறுகிறுத்துத்தான் போனான். பின்னர் அந்தப் பேரழகி சந்தனு மகாராஜாவைப் பார்த்துப் பேச
ஆரம்பித்தான்.
”அரசர் பெருமானே, நான் தங்கள் மனைவியாவதில் எந்தவித ஆட்சேபணையும் இல்லை. நீங்கள்தான்
நான் இல்லாமல் வாழவே முடியாது என்று தௌளத் தெளிவாகக் கூறிவிட்டீர்களே! என்மீது இவ்வளவு
அன்பு கொண்டிருப்பீர்கள் என்று கனவில் கூட ஆசைகளையெல்லாம் நான் நிச்சயமாகத் தீர்த்து
வைப்பேன். தீர்த்து வைக்கவேண்டுவது
என்னுடைய கடமையுமாகும். என்மீது கொண்ட காதல் உண்மையான காதல் – ஆழ்ந்த காதல்
என்பதை நான் தெரிந்து கொண்டேன். ஆமாம்! நன்றாகவே உணர்ந்தும் கொண்டேன்.
என்னைப்
பற்றிச் சில உண்மைகளை நான் அதற்கு முன்னால் சொல்லித்தான் ஆகவேண்டும். ஆனால், இப்போது அல்ல... பின்னர் கண்டிப்பாகக்
கூறுகிறேன். ஆனால், அதற்கு முன்னால்
என்னைப் பற்றி எதையும் அறிந்து கொள்ள முயற்சி செய்யக் கூடாது.
அவ்விதம்
முயற்சி செய்தாலும் அது வீண் முயற்சியேயாகும். நான் யார், எந்த நாட்டைச் சேர்ந்தவள் என்பன போன்றவைகளையெல்லாம் நீங்கள்
அறிய முயலக்கூடாது. நானானச் சொன்னால்தான் என்னைப் பற்றி இரகசியங்களைத் தெரிந்து
கொள்ள வேண்டும்.
திருமணத்திற்குப்
பின்னர் நான் செய்யும் காரியங்கள் பற்றி ஏன், எதற்கு என்று கேட்கக் கூடாது. நான் செய்யும் செயல்கள் உங்களுக்குப் பிடிக்காமல் தான் இருக்கும். அவ்விதம் பிடிக்காமல்
இருந்தாலும் எனக்கு ஆதரவாகத்தான் இருக்க வேண்டும். ”அதைச் செய்யாதே இதைச் செய்யாதே” என்றெல்லாம் கூறி என்னுடைய சுதந்திரத்தை நீங்கள் பறிக்க முயலக்
கூடாது.
நான்
சொல்லும் இவைகளையெல்லாம் பின்பற்றி வந்தால் நம் வாழ்க்கை அமைதியாக இருக்கும். இல்லாவிட்டால்
நான் தங்களை விட்டுப் பிரிய வேண்டிய நிலைமை ஏற்படும்” என்றேல்லாம் கூறவும், அந்தப் பேரழகி தனக்கு வேண்டும் என்ற எண்ணத்தில் அவள் சொன்னதற்கெல்லாம்
அவன் தலையசைத்த வண்ணமிருந்தான்.
அவள்
என்ன என்ன சட்டத்திட்டங்களை மேலும் மேலும் கூறினாலும் சந்தனு மகாராஜா அனைத்தையும் அவ்விதமே
கேட்டு நடப்பது என்று மனதிற்குள் எண்ணியவனாயத் தலையசைத்த வண்ணமிருந்தான். அவளை எவ்விதத்திலும்
அடைய வேண்டும் என்பதுதான அவன் குறிக்கோளாகும்.
”உயிரினும் மேலானவளே, எனக்கு நீதான் வேண்டும்; உன் பேரன்பைப் பெறுவதற்காக நான் எதையும் இழக்கத் தயாராக உள்ளேன். நீ யார் என்றோ, எந்த ஊர் என்றோ
எதையும் கேட்கவும் மாட்டேன். உன்னைப் பற்றி நீ சொல்ல வேண்டும் என்று கேட்க மாட்டேன். நீ சொல்வது
வரை நான் பொறுமையுடன் தான் இருப்பேன். உன்னைப் பற்றி நான் எந்தவிதமான விசாரணையையும் செய்ய மாட்டேன். எனக்கு நீதான்
வேண்டும். உன் ஆசைப்படி
நீ தாராளமாக நடந்து கொள்ளலாம். நம்முடைய அரண்மனையில் உன் விருப்பத்திற்கு மாறாக யாரும் நடக்க
மாட்டார்கள். ஆகவே, நீ எந்தவிதக்
கவலையும் பட வேண்டாம்” என்றான் சாந்தனு மகாராஜா.
அந்தப் பேரழகி உண்மையில் ஆச்சிரியமடைந்தாள்.
தன்னுடைய பேச்சிற்கு எந்த விதமான மறுப்பும் சொல்லவில்லையே என்று எண்ணி மகிழ்ந்தாள்.
இவ்வளவு அன்பு வைத்திருக்கும் மகாராஜாவை ஏமாற்றக் கூடாது என்று எண்ணிய அவள் அவனை மணம்
புரிய ஒத்துக் கொண்டாள். ஆகவே, சந்தனு மகாராஜா பெரிதும் மகிழ்ச்சியடைந்தான்.
சந்தனு மகாராஜா அந்தப் பேரழகியைத் தரையில்
நடக்கவிடவில்லை. அவளிடம் அவ்வளவு அன்பாக இருந்தான். ஆம், அன்பை மழையாகப் பொழிந்தான்
என்று கூறலாம். அவளும் அவனிடம் பேரன்பு கொண்டிருந்தாள். அவளை சந்தனு மகாராஜா அடைந்தது
மிகப் பெரிய பாக்கியம் என்று பெருமையுடன் கூறிக் கொண்டான்.
சில வருடங்கள் அவர்களுடைய இன்ப வாழ்க்கை
அமைதியாக ஓடியது. அவள் அழகான ஒரு ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தாள். சந்தனு மகாராஜா உண்மையில்
பெரிதும் மகிழ்ச்சியடைந்தான். தனக்குப் பின்னால் நாட்டை ஆளுவதற்கு ஒரு மகன் பிறந்தான்
என்று எண்ணிப் பெரிதும் மனமகிழ்ந்தான்.
ஆனால் அவளோ அந்த அழகிய குழந்தையை எடுத்துச்
சென்று பொங்கிச் சென்று கொண்டிருந்த கங்கையாற்றில் வீசியெறிந்துவிட்டு வந்து விட்டாள்.
அதைக் கண்ட சந்தனு மகாராஜா உண்மையில் திகைத்துப் போய்விட்டான். இவள் என்ன இப்படிச்
செய்து விட்டாளே? இந்தப் பச்சிளம் குழந்தையைப் பாசம் சிறிதுமின்றி நுங்கும் நுரையுமாகச்
சென்று கொண்டிருந்த ஆற்றில் கொஞ்சமும் கருணையன்றி விட்டு எறிந்துவிட்டாளே, இவள் என்ன
இரக்கம் இல்லாதவளாக இருப்பாளோ என்று எண்ணி வருந்தினான்.
ஆனால் அவன் எதுவுமே பேசவில்லை. பேசமுடியுமா
அவனால்! முடியாதே! அவள்தான் என்னவெல்லாம் கூறினாள்! அவையனைத்தையும் அவன் ஒத்துக் கொண்டவனாயிற்றே.
எனவே, அவளிடம் அவனால் பேசமுடியாதல்லவா? இருந்தாலும் சந்தனு மகாராஜா பெரிதும் மனம் வருந்தினான்.
இரக்கம் இல்லாமல், கருணை சிறிதும் இல்லாமல் இருக்கிறாளே என்று எண்ணி வருந்தினான். மனதிற்குள்
அழுது கொண்டான்.
தாம் பெற்ற பிள்ளையைக் கொஞ்சம் கூட ஈவு இரக்கம்
இல்லாமல் நுங்கும் நுரையுமாகப் பொங்கிவரும் பெருவெள்ளத்தில் எறிந்து விட்டாளே! மனம்
வருந்தினானே தவிர அவன் வாய் திறந்து எதையுமே பேசவில்லை. ஆம் பேசமுடியவில்லை. பேசினால்
அவன் பாடு என்னாகும்! அவள் அவனை விட்டுச் சென்றுவிடுவாள் என்ற பயம் ஏற்பட்டதினால் எதையும்
அவளிடம் கேட்கவில்லை. ஆம் வாய் திறக்கவில்லை.
அவள் எந்தக் கவலையுமின்றிச் சிரித்துக் கொண்டிருந்தாள்.
அவள் சிரித்துக் கொண்டிருந்திருந்த நேரத்தில் அவனும் சிரிக்கத்தான் வேண்டும். அவன்
அவளுடன் சேர்ந்து சிரிக்காவிட்டால் அவன் அவனைப் பற்றி என்ன எண்ணுவாள்! ஒரு வேளை அவள் அவனைவிட்டுச் சென்று விட்டால் என்ன செய்வது
என்று எண்ணினான். உண்மையில் அவன் அச்சமுடன்தான் காணப்பட்டான். அவன் தன்னுடைய மனதில்பட்ட
வேதனையை வெளியே காட்டிக் கொள்ளவில்லை.
காலம் ஓடியது. அவனுடைய அவள் மீது அடங்காத
காதல் அல்லவா, அவளோடு கூடி மகிழ்ந்தான். ஒவ்வொரு குழந்தையாகப் பிறக்கவும் அவளும் தயவு
தாட்சணியமின்றி ஒவ்வொரு குழந்தையையும் ஆற்றில் எறிந்து கொண்டிருந்தாள். அவள் அதற்காகத்
துளிகூடக் கவலைப்படவில்லை. ஆனால், அவனால் அவள் செயலைத் தாங்கிக் கொள்ளமுடியவில்லை.
இருந்தாலும் அவன் பொறுமையாகத்தான் இருந்தான். அவள் பொங்கிவந்த கங்கையில் எறிந்து கொண்டிருந்தாள்.
ஒவ்வொரு குழந்தையையும், அவன் பொங்கி வந்த துயரத்தையெல்லாம் அடக்கிக் கொண்டவனாய் அமைதியாக
இருந்தான். அவளுக்காக அவன் சிரித்துக் கொண்டான். வேறு வழியில்லை, அவன் அவளுக்காகச்
சிரித்துத்தான் ஆகவேண்டும். அவளிடம் பேசாமல் இருந்தால் பரவாயில்லையே, அவனைவிட்டு அவள்
சென்று விடுவாளே! அவளைப் பிரிந்து ஒரு நாள் கூட வாழமுடியாதே!
இவ்விதமாக ஒவ்வொரு குழந்தையையும் அவள் எடுத்துச்
சென்று ஆற்றில் வீசிவிட்டு வருவாள். ஏழு குழந்தைகளை இவ்விதம் அவள் வீசி எறியவும் சந்தனு
மகாராஜா தன் மனதிற்குள் அழுது கொண்டிருந்தான். ஆனால் வெளியில் அவளுக்காகச் சிரித்துக்
கொண்டான். சிரிக்கத்தான் வேண்டும். வேறு வழி இல்லையே!
ஏழு குழந்தைகளை இவ்விதம் வீசி எறியவும் சந்தனு
மகாராஜா பொறுமையுடன் இருந்தான். அவளுடன் சிரித்துப் பேசினான். அவள் அழகிற்கு அடிமையாகிவிட்டவன்
அல்லவா, அவனால் அவள் அரவணைப்பை இழக்க முடியவில்லை. அவள் வேண்டும், அவளிடம் அவன் முன்னால்
கூறியது போல் அவளுடைய அன்புத் தழுவல் அவனுக்கு நிதம் வேண்டும். குழந்தையை எறிந்து வந்தபோது
வேதனைப்பட்ட சந்தனு மகாராஜா பின்னர் அவளிடம் கூடிக்குலவுமான். அவளைவிட்டு அவனால் பிரிந்திருக்க
முடியாது.
அந்தநிலையில் எட்டாவது குழந்தையும் பிறந்தது.
அவள் வழக்கம் போல, தாம் பெற்றெடுத்த எட்டாவது குழந்தையை எடுத்துக் கொண்டு ஆற்றை நோக்கி
புறப்பட ஆயத்தமானாள்.
அந்தக் குழந்தையை சந்தனு மகாராஜாவால் இழக்க
மனம் வரவில்லை. அந்தப் பேரழகியின் அன்பு வேண்டும். அவளுடைய அரவணைப்பு நிதம் வேண்டும்
என்று எண்ணிக் கொண்டு எப்படியோ தன்னுடைய உள்ளத்தில் எழுந்த துன்பங்களை எல்லாம் தாங்கிக்
கொண்டு வந்த மகாராஜாவால் மேலும் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அவள் பேரழகில் மயங்கிக்
கிடந்த சந்தனு மகாராஜாவால் பொறுமையுடன் இருக்க முடியவில்லை. இருந்தாலும் அவளிடம் அவன்
கோப்பட வில்லை. பொறுமையுடன் தான் பேசினான்.
அன்பு நிறைந்தவளே, உன் பேரன்பை என்னால் மறுக்க
முடியவில்லை. இதுவரை நீ யார், எந்த நாட்டைச் சேர்ந்தவள் என்று கேட்கவும் இல்லை. உன்
எண்ணம் போல நீ நடந்து கொள்ளலாம் என்று சர்வ சுதந்திரம் உனக்குத் தந்திருந்தேன். இருந்தாலும்
நீ பெற்ற குழந்தைகளையெல்லாம் ஒவ்வொன்றாக ஆற்றில் எறிந்த வந்தபோது நான் எனக்குள் அழுது
வந்தேனே தவிர ஏன் நீ எறிந்தாய் என்று கேட்கவில்லை. எப்படிதான் உனக்கு மனம் வந்ததா தெரியவில்லை.
இந்த எட்டாவது குழந்தையாவது நீ வாழவைக்க வேண்டும். இதையும் நீ கொன்றுவிடாதே. தயவுசெய்து
இந்த குழந்தையை வாழவிடு என்று கெஞ்சிக் கேட்டுக் கொண்டான்.
மன்னர் பேசுவதைக் கேட்டுக் கொண்டு பொறுமையுடன்தான்
இருந்தாள். மகாராஜா பேசி முடித்தபின்னர், அந்த அழகி மகாராஜா மன்னிக்க வேண்டும். என்னை
நீங்கள் எவ்வளவு விரும்பினீர்கள். என்மீது எவ்வளவு அன்பு பாராட்டி வந்தீர்கள். அதனால்
தான் என்னை உங்களுக்கு அளித்து எட்டுக் குழந்தைகளையும் பெற்றுக் கொண்டேன். நீங்கள்
அளித்த வாக்குறுதியிலிருந்து தவறி விட்டீர்கள். உங்கள் மீதும் தவறில்லை. யார்தான் தன்னுடைய
குழந்தையை ஒன்றன்பின் ஒன்றாக சாவுக்குக் கொடுப்பார்கள். இப்போது என்னைப் பற்றித் தெரிந்து
கொள்ளவேண்டும். உங்களுக்கு மனைவியாக இருந்து எட்டுக் குழந்தைகளுக்குத் தாயாக வேண்டும்
என்பது வசிஷ்டரின் ஆணையாகும். அதனால்தான் மகாராஜா நானே உங்களைத் தேடி வந்தேன். நான்தான்
கங்காதேவி! இந்த எட்டாவது பிள்ளை நிச்சயமாக ஆற்றில் எறிய மாட்டேன். நான் தான் வளர்த்து
வருவேன். இவன் கொஞ்சம் வளர்ந்ததும் உங்களிடம் கொண்டு வந்து விடுகிறேன். இந்தக் குழந்தையை
நீங்கள்தான் வளர்க்கப் போகிறீர்கள. என்று கூறி விட்டு விரைவாக அங்கிருந்தும் சென்று
விட்டாள்.
அந்த எட்டாவது குழந்தை தான் வளர்ந்து பின்னர்
‘பீஷ்மர்’ என்று புகழுடன் விளங்கியது.
பார்வை நூல்
1.
பட்டத்தி மைந்தன்
– மனதைக் கவரும் மகாபாரதக் கதைகள், வாரிசம் பதிப்பகம், அரும்பாக்கம், சென்னை – 600
106.
Comments
Post a Comment