Skip to main content

விவசாயத்திற்குப் பயன்படும் பொருட்கள்

 

விவசாயத்திற்குப் பயன்படும் பொருட்கள்

               

        உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம்

         தொழுதுண்டு பின்செல்பவர்” (குறள்-1033)

என்று உழவின் மேன்மையைத் திருவள்ளுவர் எடுத்துரைத்துள்ளார். அவ்வகையில் விவசாயம் என்பது குறைந்துவரும் தொழிலாகப் புள்ளி விவரங்கள் கூறுகின்றது. விளைநிலங்கள் எல்லாம் விலைநிலங்களாக மாறி வருகின்றன. நாடு எவ்வளவு வளர்ச்சி அடைந்தாலும் மனிதன் உணவின்றி வாழமுடியாது. நம் முன்னோர்கள் காலை எழுந்தவுடன் உடல் உழைப்பால் விவசாயம் செய்து வந்தார்கள். அத்தகைய சிறப்பு மிகுந்த விவசாயத்திற்கு விவசாயிகள் பயன்படுத்திய பொருட்கள் குறித்து நினைவுக் கூறும் வகையில் இக்கட்டுரை அமைந்துள்ளது.

ஏர்

          ஏர் என்பது வயல்களை உழுவதற்குப் பயன்படுத்தப்படும் கருவியாகும். இது மரத்தால் செய்யப்பட்டது. இது பெரும்பாலும் நுனாமரம் என்னும் ஓதியன் மரத்தினால் செய்வர். இதை இலேசாக்குவதற்காகப் பல மாதங்கள் தண்ணீரில் ஊறவைத்துப் பின் செய்வார்கள். ஏர்க் கருவியின் இயக்கத்திறகு நுகத்தடி அமைப்பர். வரப்பு கட்டித் தண்ணீர் உள்ள வயலில் உழுவார்கள். ஒரே சீராக உழும் கருவி. ஏரின் கீழ்ப்பகுதி உலோகத்தால் வடிவமைக்கப்பட்டிருக்கும். அதற்கு ஏர்க்கலப்பை என்று பெயர்.

கலப்பை

          கலப்பையின் அடிப்பகுதி இரும்பாலும், மேல்பகுதி மரத்தினாலும் செய்யப்பட்டு இருக்கும். வயலிற்குத் தண்ணீர் விடுவதற்கு முன்பு இக்கலப்பையால் உழுவார்கள். இதனால் அடியிலுள்ள மண் மேலேயும், மேலே உள்ள மண் அடியிலும் செல்லும். மண்ணைக் கலக்குவதால் இதற்குக் கலப்பை என்று பெயர். மானாவாரிப் பயிர்கள் தெளிப்பதற்கு முன்னும், வயலின் மண்ணைப் பதப்படுத்துவதற்குக் கலப்பையில் காளை மாடுகளைப் பூட்டி உழுவார்கள். இதனால் அடியிலுள்ள மண் மேலேயும், மேலே உள்ள மண் அடியிலும் செல்லும். இது மிகவும் கனமாக இருக்கும். இதன் நுனிப் பகுதியில் இரு குச்சியைச் சொருகி, பூட்டாங்கயிறு என்னும் கயிற்றால் மாட்டின் கழுத்தை இத்துடன் பிணைத்து உழுவார்கள். உழு கருவி எனவும் இதை அழைக்கலாம்.

சால்

          சால் என்பது மரத்தாலும், பின் இருப்பினாலும் தற்பொழுது பெரும்பாலும்பெல்ட் எனப்படும் கயிற்றினாலும் செய்யப்பட்டுள்ளது. பெரிய சட்டி வடிவத்தில் இருக்கும். கிணற்றிலிருந்து ஏற்றம் வழியாக தண்ணீரை மேலே எடுப்பதற்கு பயன்படுத்தப்படுகிறது. அதிகமான கொள்ளளவு உடையதாக இருக்கும். அதிகமாக சாப்பிடுபவரை உனக்கு இருக்கிறது வயிறா? சாலா, எனக் கேட்கும் கிராமத்து வழக்காறு இதனைக் கொண்டே அமைகிறது.

ஏற்றம்

          ஏற்றம் கிணற்றிலிருந்து நீர் இறைக்கும் கருவி. கிணற்றில் இருக்கும் தண்ணீரை வயலுக்கு இறைப்பதற்கு பயன்படுகிறது. இந்த ஏற்றத்தின் கடைப்பகுதியில் சால் ஒட்டப்பட்டிருக்கும். முனைப்பகுதியில் காளை மாடு கட்டப்பட்டிருக்கும். மாடு பின்னால் வரும்பொழுது தண்ணீரை சுமந்து செல்லும். முன்னால் செல்லும்போது தண்ணீர் கிணற்றிலிருந்து மேலே மொண்டு வரப்படும். பின் வாய்க்கால் வழியாக வயலிற்குப் பாசனம் செய்வர். ஏற்றம் இறைப்பது காலை நேரத்தில் மட்டுமே செய்வார்கள். சூரிய உதயத்திற்கு முன்பு இறைத்தால் தண்ணீர் ஆவியாதல் குறைவாக இருக்கும் என்ற காரணத்தால் பெரும்பாலும் அதிகாலை நேரத்திலேயே ஏற்றம் இறைப்பது வழக்கம்.

மண்வெட்டி

          மண்ணை வெட்டுவதால் இதற்கு மண்வெட்டி என்று பெயர். விவசாயத்தில் இதன் பயன்பாடு அதிகம். வரப்புக்களை ஒழுங்குபடுத்தவும், வயலினைச் சரிசெய்யவும், மேட்டுப்பகுதி மண்ணை வெட்டி பள்ளப் பகுதியில் போடவும், விதைகள் போடுவதற்குக் குழித் தோண்டவும், தண்ணீர் சுலபமாகப் பாய்வதற்கு வாய்க்காலைக் கிழித்துவிடுவதற்கும், எனப் பல நிலைகளில் இதன் பயன்பாடு அமைகிறது. இதன் மேல்பகுதி மரத்தினால் ஆன உருண்டையான கைப்பிடிப் பகுதியாக இருக்கும். கீழ்ப்பகுதி தட்டையான வடிவத்தில் சதுர வடிவில் மண்ணை அள்ளுவதற்குத் தகுந்த நிலையில் இருக்கும். அதனுள் ஒரு காம்பு பொருத்தப்பட்டு அது கைப்பிடிக்குள் நுழைக்கப்பட்டிருக்கும். இதனுடன் பூண் எனப்படும் உபபொருளும் சேர்த்து செய்யப்பட்டிருக்கும். மண் வெட்டி ஆடாமல் நன்கு தரமாக இருப்பதற்குப் பூண் போடப்படுகிறது.

கோடாரி

          கைப்பிடிப்பகுதி மரத்தாலும், கீழ்ப்பகுதி, நன்கு கூர் செய்யப்பட்டு கனமான இரும்பாலும் செய்யப்பட்டிருக்கும். பூண் போடப்பட்டிருக்கும். வயலின் அருகே உள்ள மரங்களின் பெரிய பாகங்களை வெட்டுவதற்கும், அதன் வேர்களைப் பறித்தெடுப்பதற்கும் பயன்படுகிறது. மரங்களை வெட்டுவதற்கும், பிளப்பதற்கும் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது.

கடப்பாரை

          இது கனமான இரும்புக் கம்பியினால் செய்யப்பட்டிருக்கும். மிகுந்த கனமானதாக இருக்கும் தண்ணீர் இல்லாமல் காய்ந்து இருக்கும் மண்ணைத் தோண்டி எடுப்பதற்கும் மரத்தின் வேர், போன்றவற்றை த் தோண்டி எடுப்பதற்கும் கடப்பாரை பயன்படுத்தப்படுகிறது. இதில் பெரிய பாறை, சின்னப்பாறை என அளவிற்கேற்ப பலவகைகள் உள்ளன. சின்னப் பாறைகளால் செடிகள் நடுவதற்கு குழித் தோண்டப்படுகிறது. மேலும் பெரிய பாறைகளினால் வேலி அடைப்பதற்கு ஊன்றப்படும் வேலிக்கால் நடுவதற்குக் குழித் தோண்டவும் பயன்படுத்தப்படுகிறது. பெரிய மரங்கள் போன்றவற்றைத் தூக்குவதற்கு இப்பெரிய பாறைகளை அம்மரங்களின் கீழே கொடுத்து நெம்பி அம்மரங்களைத் தூக்குவார்கள். இவ்வாறு பல நிலைகளில் இக்கடப்பாரையின் பயன்பாடு அமைகிறது.

அரிவாள்

          வெட்டுவதற்கு அரிவாளின் பயன்பாடு அதிகமாக இருக்கிறது. இதன் நுனிப்பகுதி வளைந்தும், மிகுந்த கூர்மையான வடிவத்திலும் உள்ளது. கைப்பிடி மரத்தாலும் சிலவற்றில் இரும்பினாலும் செய்யப்படுகின்றன. மரங்கள் வெட்டுவதற்கும், அதன் இலை தழைகளைக் கழிப்பதற்கும் பயன்படுத்தப்படுகிறது. இது பல வடிவங்களில் உள்ளது. மரத்தை வெட்ட பெரிய அரிவாள் பயன்படுத்தப்படுகிறது. அதன் கிளைகளை வெட்டுவதற்குச் சின்ன அரிவாள் பயன்படுத்தப்படுகிறது.

          புள் அரிவாள் – வரப்புகளிலும், வயல்களிலும் உள்ள புற்களை அறுப்பதற்குப் பயன்படுத்தப்படுகிறது. புற்களை அறுத்து கால்நடைகளுக்குப் போடுவர். இதன் நுனிப்பகுதி மிகுந்து வளைந்து இருக்கும். கைப்பிடி மெல்லியதாக இருக்கும். புல்லை இடது கையால் வளைத்துப் பிடித்து, அரிவாளை வலது கையால் அறுக்கும் நிலைக்கேற்ப இது வடிவமைக்கப்பட்டிருக்கும்.

          கதிரறுவாள் – விளைந்த கதிர்களை அறுப்பதற்காக உள்ள அரிவாள். இதுவும் புல் அரிவாள் போன்றே இருக்கும். இருப்பினும் நன்கு அகட்டப்பட்டு வளைந்து இருக்கும். இதன் வெட்டும் பகுதி கருக்குடையதாக இருக்கும். அதனால் வெட்டறுவாளிலிருந்து வித்தியாசப்பட்டிருக்கும்.

          அலக்கறுவாள் (துறட்டுக்கோல்) – நீண்ட மெல்லிய மூங்கிலின் முனைப்பகுதியில் இரும்பினால் செய்த சின்ன அரிவாள் கட்டப்பட்டிருப்பதற்கு அலக்கு என்று பெயர். அந்த அரிவாளின் கைப்பிடி குட்டையாகவும், முனைப்பகுதி வளைந்தும் இருக்கும். மரங்களில் ஏறாமல் தரையில் இருந்தபடியே சிறிய கிளைகளைக் கழிப்பதற்கு பயன்படுகிறது. மரத்திலிருந்து விழுந்த இலைகள் வயலிற்குத் தழை உரமாகப் பயன்படுத்துவதாகும். அந்நிலையில் இதனால் தழைகள் வெட்டிப் போடப்படுகிறது. மேலும் கால்நடைகளுக்குத் தேவையான தழைகளும் இதனால் வெட்டிப் போடப்படும். மூங்கில் மரங்களின் முட்களால் வேலி செய்யப்படும். அப்பொழுது மூங்கில் மரத்திலிருந்து முள் குத்தாமல், முள்ளை தூரத்திலிருந்து அரிந்தெடுக்கப் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. மரங்களில் உள்ள காய், கனிகளைப் பறிப்பதற்கும் உப்யோகப்படுத்தப்படுகிறது.

டாம்லர் கலப்பை

          டாம்லர் கலப்பை என்பது கூரிய கத்தி போன்ற பட்டையான சக்கர வடிவத்தில் இருக்கும். மேலே ஒரு கைப்பிடி இருக்கும். இருபுறமும் கயிறு கட்டுவதற்கு இடம் இருக்கும். இதில் கயிற்றைக் கட்டி மாட்டின் கழுத்தில் பிணைப்பர். தண்ணீர் பாய்ச்சிய வயலில் இதைக்கொண்டு சமன் செய்வர். விதைகளைத் தெளிப்பதற்கு முன் இதனால் வயலைப் பக்குவப்படுத்துவார்கள்.

மட்டக் கலப்பை

          பலாமரத்தினால் பெரும்பாலும் இப்பலகை செய்யப்பட்டது. கனமாக இருக்கும். இருமுனையும் சற்று கூர்மையாக மட்டப்படுத்தி இருப்பார்கள். இரு முனைகளிலும் இரு வளையம் பொருத்தப்பட்டிருக்கும். அதனுள் கயிற்றைக் கட்டி மாட்டின் கழுத்தில் பிணைத்து இருப்பார்கள். விதை தெளிக்கும் முன் நிலத்தினை மட்டமாக்குவதற்கு இப்பலகையைக் கட்டி இழுப்பார்கள். நிலம் மேடு பள்ளம் இல்லாமல் இருந்தால் தான் தண்ணீர் சமமாகப் பாய்ந்து பயிர்கள் நன்கு விளையும். எனவே இம்மட்டப் பலகை கொண்டு சரி செய்வார்கள்.

தார்க்குச்சி

          இரண்டு முழம் அளவுடைய மெல்லிய மூங்கில் குச்சியின் முனைப்பகுதியில் ஆணி அடித்து கூர்த் தீட்டப்பட்டிருக்கும். இதற்குத் தார்க்குச்சி என்று பெயர். மாடுகளை வேகமாக ஓட்டுவதற்கு இது பயன்படுத்தப்படுகிறது. அக்குச்சி முனையில் உள்ள தார் ஊசியால் மாடுகள் குத்தப்படும்போது ஆவகமாக ஓடும். மாட்டை ஓட்டுவதற்கு இது பயன்படுத்தப்படுகிறது.

கூடை

          கூடை என்பது பல வகைகளில் உள்ளது. அது விவசாயம் செய்யப்படும் பயிர்களுக்கேற்ப உள்ளது. பொதுவான நிலையில் மூங்கிலால் செய்யப்பட்ட கூடை எனப் பல வகையில் கூடைகள் முடையப்படுகின்றன. பிரப்பன் கூடை, கொட்டுக்கூடை, தட்டுக்கூடை என்பன கூடையின் வகைகளாகும். விவசாயத்தில் சிறிய அளவிளான கூடைகள் விதைகளை வைத்துத் தெளிப்பதற்கும், ஓர் இடத்திலிருந்து மற்ற இடத்திற்குப் புல், விதைகள், உரங்கள் முதலானவை எடுத்துச் செல்வதற்கும், உரத்தை அள்ளித் தெளிப்பதற்கும் பயன்படுத்தப்படுகிறது. கால்நடைகளுக்குத் தீவனம் எடுத்துச் செல்லவும், வைப்பதற்கும் பயன்படுத்தப்படுகிறது. இக்கூடை வீடுகளில் பயன்படுத்தும்பொழுது காகிதத்தால் மெழுகிப் பயன்படுத்துகின்றனர். மூங்கிலின் பட்டைகளால் பின்னபட்டிருக்கும். இது தற்பொழுது பெரும்பாலும் அலுமினியம், மற்றும் இரும்பினால் செய்து உபயோகப்படுத்தப்படுவதால் முந்தைய நிலை மாறியுள்ளது.

முறம்

          மூங்கில் பட்டையால் செய்யப்பட்டிருக்கும் கருவி. கைப்பகுதி குவிந்தும், வாய்ப்பகுதி நன்கு அகன்றும் பின்னப்பட்டிருக்கும். இது காகிதக் கூழால் மெழுகப்பட்டுப் பின் சூரிய ஒளியில் காய வைத்து உபயோகப்படுத்தபடுகிறது. பூச்சிகள், வண்டுகள் கடிக்காமல் இருப்பதற்காகவும், ஒட்டை விழாமல் இருப்பதற்காகவும் சாணம் கொண்டு மெழுகப்படுகிறது. இது தானியங்களைப் புடைப்பதற்கும், அதனை சுத்தப்படுத்துவதற்கும், கல் போன்றவற்றை நீக்குவதற்கும், நெல்மணியிலிருந்து பதர்களைப் பிரிப்பதற்கும் சில பொருட்களைக் காய வைப்பதற்கும் பயன்படுத்தப்படுகிறது. சித்ரா பௌர்ணமியில் முறத்தில் தானியங்களை வைத்து இறைவனுக்குப் படைக்கும் வழக்கம் இன்றும் கிராமங்களில் உள்ளது. இதுவும் தற்பொழுது பல உலோகங்களால் செய்யப்பட்டு பயன்பாட்டில் உள்ளது.

வண்டி

          வண்டிகள் பல வகைகளில் உள்ளன. அவற்றுள் விவசாயப் பயன்பாட்டில் இருப்பது கட்டை வண்டி மற்றும் டயர் வண்டி என்பன. மரத்தால் ஆன சக்கரம் கொண்டு வடிவமைக்கப்பட்டது. கட்டை வண்டி அல்லது பாறை வண்டி டயர் கொண்டு சக்கரம் உடையது டயர்வண்டி. இதன் பயன்பாடு விவசாயத்தில் அதிகம். விதைகளை எடுத்து செல்லுவதற்கும், உரத்தை எடுத்துச் செல்லவும், விளைந்த விளைச்சலை வீட்டிற்கு எடுத்து வருவதற்கும், சந்தைக்குச் செல்வதற்கும், வைக்கோல் முதலான பல பொருட்களை எடுத்துச் செல்லவும் இவ்வண்டிகள் பயன்படுத்தப்படுகின்றன.

குதிர்

          விதைகளைப் பாதுகாப்பதற்கும் சேமிப்பதற்கும் இது பயன்படுத்தப்படுகிறது. இது களிமண், வைக்கோல், தேங்காய், நார், பதர் போன்ற பல பொருட்களால் செய்யப்படுகிறது. தனித்தனி வட்டவடிவ வளையங்களாகச் செய்யப்பட்டு பின் காய வைத்து இணைக்கப்படுகிறது. கீழ்ப்பகுதியில் சிறிய துவாரம் இருக்கும். மேல் பகுதி வழியாக விதைகளைக் கொட்டி மூடி, மேலேயும், கீழேயும், களிமண் கொண்டு மூடிவிடுகிறார்கள். தேவையான பொழுது விதைமணிகள் எடுத்துக் கொள்ளப்படும். தேவையான பொழுது விதைமணிகள் எடுத்துக் கொள்ளப்படும். இவ்வாறாக, விதைகளை நன்கு பாதுகாக்கவும், அதன் தரம் மாறாமல் இருக்கவும், வண்டுகள் பூச்சிகளிடமிருந்து பாதுக்காக்கவும் இதனைப் பயன்படுத்துகிறார்கள். பெரும்பாலும் விதை ஆராய்ச்சிப் பண்ணைகளும், விதை உற்பத்தி நிலையங்களும் பெருகிய நிலையில் இதன் பயன்பாடு குறைந்து விட்டது எனலாம்.

களைக்கொட்டு

          புஞ்சை வயல்களில் களை எடுப்பதற்குப் பயன்படுத்தப்படும் கருவி. இது மண்வெட்டியைப் போன்றே வடிவமைப்பு உடையது. கைப்பிடி மரத்தாலும் வெட்டும் இலைப்பகுதி தட்டையாக சிறிய வடிவத்திலும் இருக்கும். செடிகளுக்கு இடையே களைகளைக் கொத்தி எடுப்பதற்குத் தகுந்தாற் போன்று வடிவமைக்கப்பட்டிருக்கும். களைகளைக் கொத்துவதற்கும், விதைபோடும்போது குழியைத் தோண்டவும், சிறு செடிகளை நடவு செய்யக் குழத் தோண்டவும் பயன்படுத்தப்படுகிறது.

கத்தி

          இரும்பினால் ஆனது கத்தி மூட்டைகளில் உள்ள கட்டுமானத்தையும் சணல் போன்றவற்றை அறுப்பதற்கும் தென்னங்கீற்றிலிருந்து வாருகோல் கிழிப்பதற்கும் பயன்படுகிறது. மடக்குவது போன்றும், மடக்க முடியாது நீண்டும் இதன் வடிவமைப்புகள் உள்ளன.

நெல் அடிக்கும் கல்

          நெல் விளைச்சல் அறுவடை ஆனபின் கதிர்கள் அறுக்கப்பட்டுக் களங்களுக்கு கொண்டு வரப்படுகிறது. அப்பொழுது நெற்பயிர்கள் சிறிதுசிறிதாக எடுத்து அடித்து எடுக்கப்படும். அவ்வாறு அடிப்பதற்கு நீண்ட அகலமான கல் பயன்படுத்தப்படும். இதற்கு நெல் அடிக்கும் கல் என்று பெயர். இவ்வாறு அடித்த நெல்மணிகள் உதிர்த்து எடுக்கப்படும். எல்லாத் தானியங்களும் இவ்வாறாகவே கதிர்களில் இருந்து பிரித்தெடுக்கப்படும்.

நிறைவாக,

          விவசாயத்திற்குப் பல பொருட்கள் பயன்பட்டு வந்துள்ளன. இவற்றுள் பெரும்பான்மையான பொருட்கள் தற்பொழுது பயன்பாட்டில் குறைந்து வருவது எண்ணத்தக்கது. இந்தியா விவசாய நாடு என்று கூறுகிறோம். ஆனால் இன்றைய நிலையில் நான் ஒரு விவசாயி என்றும் நான் விவசாயியின் மகன் என்றும் மார்த்தட்டிச் சொல்லும் மனவலிமை யாருக்கும் இல்லாமல் இருப்பது வருத்தத்திற்கு உரியதாகவே இருக்கிறது.

          இன்றைய நிலையில் புதிய கண்டுபிடிப்புகள், டிரேக்டர்கள், நீர் மூழ்கி இயந்திரங்கள், விதைத் தெளிக்கும் இயந்திரம், குறைந்த நாட்களில் அதிக மகசூல் எனப் பல நிலைகளில் எல்லாத் துறைகளையும் போல்  விவசாய துறையும் பல நிலைகளில் இயந்திர மயமாக்கப்பட்டுள்ளதால் நமது தாத்தாக்கள் பயன்படுத்திய பொருட்களைப் பயன்படுத்துவது இன்றைய காலங்களில்  குறைந்து விட்டது. இனியாவது நாம் நமது  விவசாயத்தை  காப்போம். விவசாயிகளைப் போற்றுவோம்.

பார்வை நூல்

1.  வாழ்வியல் பண்பாட்டுத் தாளிகைகள் – முனைவர் ச.வனிதா, கோடம்பாக்கம், சென்னை -600 024, முதல் பதிப்பு – 2015.

Comments

Popular posts from this blog

எண்ணம் போல் வாழ்வு

                                                                        எண்ணம் போல் வாழ்வு             நினைவுகளே பழக்கவழக்கங்களாக மாறுகின்றன. எனவே தான் எண்ணம் போல் வாழ்வு அனைவருக்கும் அமைகிறது. வெற்றி பெற்ற அனைவரும் பிறரைத் தன் நடத்தையால் மகிழ்விக்க நினைத்தவர்களே என்பதை நாம் நினைவில் நிறுத்த வேண்டும். ·         வங்கியில் பணத்தைச் சேமிப்பதைவிட இதயத்தில் இனிய எண்ணங்களைச் சேமிப்பது மகிழ்ச்சியான வாழ்விற்கு உதவும் வைப்பு நிதியாகும். ·      மனம் - மகிழ்ச்சி அளிக்காத நிகழ்வுகளை மறந்து விடும் இயல்புடையது. ·         வெறுப்பு - மனத்தையும், உணர்வையும் பற்றிக் கொண்டுள்ள தொற்று நோய். எனவே வெறுப்பிற்கு விடுதலை தரும்வரை மகிழ்ச்சி நம்மை அணுகாது. ·   ...

பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்

திருக்குறளில் எனது சிறு முயற்சியாக… .  " பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்"  என்ற இத்தலைப்பில் அமைந்த 133 வரிகள் கொண்ட இப்படைப்பு முருகனின் ” கந்த சஷ்டி  கவசம் ” போன்று உருவாக்கப்பட்டது. இப்பகுதி அறத்துப்பால் 38  அதிகாரங்கள், பொருட்பால் 70  அதிகாரங்களிலிருந்து மட்டும் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்ற முறையில், திருக்குறளின் சாராக அமைத்து வழங்கியுள்ளேன். அறமும், பொருளும் ஒருவருக்கு அமைந்தால் இன்பம் தானாகக் கிட்டும் என்ற நோக்கத்தில் அமைக்கப்பட்டது. ”பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்” காக்க காக்க அறத்தைக் காக்க (1) காக்க காக்கக் குறளைக் காக்க உலக மொழிகளில் ஒப்பற்ற நூலாம், நோக்க நோக்க பெயா்த்து நோக்க மனிதன் கற்று மனிதம் காக்க ஐம்பொறி உணா்வை காக்க காக்க புகழுடன் வாழ ஒழுக்கம் காக்க அறநெறி வாழ்வை இறைவழி காக்க வானம் பொய்யா வளத்தைக் காக்க பசிப்பிணி யில்லா உலகைக் காக்க பற்றற்ற வாழ்வை பரிவுடன் காக்க அறத்தைக் காக்க அன்பைக் காக்க (2) குறையிலா வாழ்வை குணமுடன் காக்க இல்லற வாழ்வுடன் நல்லறம் காக்க பண்பொடு பயனும் அறத்துடன் காக்க வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க வாழ்க...

மனிதனாக வாழ ...

  மனிதனாக வாழ ... ·         பிறர் உன்னை தூற்றும் பொழுது தலை நிமிர்ந்து நில். ·         பொறாமை, கோபம், வீண் மயக்கம் போன்ற குணங்களை விரோதிகளாக எண்ணுதல். ·         வெற்றி -   தோல்வி,   இன்பம் – துன்பம் இரண்டையும் சமமாக பாவித்தல். ·         உண்மைக்குப் புறம்பானவற்றைச் செய்யாதிருத்தல். ·         நண்பர்கள் இல்லையென்றாலும் பரவாயில்லை. பகைவர்கள் இல்லாமல் வாழ முயற்சி செய்தல். ·         மனத்திடத்தோடு வாழ்தல். ·         ஏற்றத் தாழ்வு இல்லா மனநிலையுடன் இருத்தல். ·         மனிதனுக்கு உரியது - கலங்காத அறிவு, அன்பு நிறைந்த மனம், ஆரோக்கியமான   உடல். ·         எதற்கும் அஞ்சாதே -   பயம் நம்மை கோழையாக்கி விடும்.      யாரையும் வெறுக்காதே ...