புறநானூற்றில் பெண்பாற் புலவர்களின் புலமைத்திறன்
‘மங்கையராய்ப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா’ என்ற கவிமணியின்
கூற்றை நிரூபிக்கும் வகையில் புறநானூற்றில் 15 பெண்பாற் புலவர்கள் பாடியுள்ளனர். அவர்கள் ஔவையார், அள்ளூர் நன்முல்லையார், ஒக்கூர் மாசாத்தியார், காக்கைப் பாடினியார், நச்செள்ளையார், காவற்பெண்டு, குறமகள் இளவெயினி, தாயங் கண்ணியார், பாரிமகளிர், பூங்கண் உத்திரையார், பூதப்பாண்டியன்
தேவி பெருங்கோப்பெண்டு, பெருங்கோழி
நாய்கன் மகள் நக்கண்ணையார், பேய்மகள் இளவெயினி, மாற்பித்தியார், மாறோக்கத்து
நப்பசலையார், வெண்ணிக்குயத்தியார் போன்ற பெண்பாற் புலவர்கள் பாடல்கள் இயற்றியுள்ளனர்.
தாய்மைக்கும், பெண்மைக்கும் மதிப்பளித்து போற்றியது பண்டைய தமிழகம். சங்க காலத்தில் மன்னர் குலம் முதல் குறவர் குலம் வரை எல்லாச் சமுதாயத்தினரிடையேயும்
பெண்கள் கவிபாடும் அளவுக்குக் கல்விச் செல்வம் ஓங்கியிருந்தது என்பதையும், கற்றோருக்குச் சாதி வேறுபாடின்றி அரசவையில் மதிப்பிருந்தது என்பதையும் புறநானூற்றுப்
பாடல்கள் வழி அறிய முடிகிறது.
மறக்குடி மகளிரின் மாண்பு
வீரப் பெண்டிரின் செய்கைகளாகப் புறநானூற்றுப் பாடல்களில் நல்லிசை புலமை வாய்ந்த பெண்மணிகளால் பாடப்பட்டிருந்தாலும் தாய், அரசன், மகன் முதலியவருக்குரிய கடமைகள் இன்னதென்பதை,
”ஈன்று புறந்தருதல்
என்தலைக் கடனே
சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே
வேல்வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே
நன்னடை நல்கல்
வேந்தற்குக் கடனே
ஒளிறுவாள் அருசமம் முருக்கி
களிறு எறிந்து
பெயர்தல் காளைக்குக் கடனே” (புறம், 312)
இப்பாட்டால்
அக்காலத்து வீரத்தாயது மனநிலை இத்தகையது என்பதை அறியலாம். ‘என் தலைக் கடனே’ என்பதனால் பொன்முடியார்
தம்மையே தாயாகக் கூறிக் கொள்ளுதலைக் காணலாம். எவ்வளவு உயர்வும், பெருமையும்
கொண்ட சிந்தை முற்காலத்துப் பெண்டிர்க்கு இருந்ததென்பது இப்பாட்டை நோக்குவோர்க்கு விளங்கும்.
வீரத்தாயின் செயல்
ஔவையார், அதியமானின்
வீரத்தைப் புகழ்ந்து பாடியதோடு நில்லாமல், நாடு காக்கப்போரிடும் படைவீரர்களின் வீரமாண்பையும், அவர்களைப் பெற்ற
வீரத்தாயாரின் மனநிலையையும் புகழ்ந்து பாடியுள்ளார். வேந்தரிடையே போர் நிகழும் போது, போர்க் களத்தில்
அருஞ்செயல் பல செய்து, எதிரிகளை வீழ்த்தி விழுப்புண் ஏற்று வெற்றியுடன் திரும்பிய
வீரன் ஒருவனைக் கண்ட தாய் வீரங்கண்டு மகிழ்ந்தாலும், அவள் உள்ளத்தில் ஒரு பெருங்குறை இருந்தது. அதையறிந்த ஔவையார் அவ்வீரத்தாயாரிடம் ‘உன் மனக்குறை யாது? என்று கேட்டார். அதற்கு அவ்வீரத்தாய் கூறிய பதில்,
”வெள்ளை வெள்யாட்டுச்
செச்சை போலத்
தன்னோ ரன்ன இளையர் இருப்பப்
பலர்மீது நீட்டிய மண்டைஎன் சிறுவனைக்
கால்கழி கட்டிலில்
கிடப்பித்
தூவெள் அறுவை போர்ப்பித் திலதே!” (புறம் 286)
‘போர்க்களத்தில் வீரமரணமடைந்து பாடையில் கிடத்தி வெள்ளாடை
போர்த்தப்படும் வாய்ப்பு என் மகனுக்குக் கிடைக்கவில்லையே’ என்று வருந்துகிறாள்.
”புறந்தார்கண் நீர்மல்கச் சாகின்பின் சாக்காடு
இரந்துகோள் தக்கது உடைத்து” (குறள், 780)
என்னும்
வள்ளுவர் வாய்மொழிக்கேற்ப தலைவன் கண்ணீர் வடிக்கும்படியாக வீரமரணம் அடையும் வாய்ப்பு
கிடைக்கவில்லையே என வருந்துகிறாள். இத்தகைய வீரத்தாயரும், வீரரும் வாழ்ந்த தமிழகம் சங்க காலத் தமிழகம்!
இடித்துரைக்கும் பண்பு
ஒரு சமயம் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் பகைவரைப் போரில்
வென்றான். பண்டைய மரபுப்படி வெற்றி வெறியில் பகையரசன் பதுங்கியிருக்கும்
அந்நாட்டைத் தீயிட்டு கொளுத்தி அழிக்க முயன்றான். அக்கொடுமையை விரும்பாத நப்பசலையார், வெறிகொண்ட மன்னன் அஞ்சாது சென்று புறாவின் துயர் தீர்த்த சிபியாகிய முன்னோன்
அருட்பண்பை நினைவூட்டி அக்கொடுமையைத் தடுத்தார். அப்பொழுது பாடிய பாடல்,
”இமயம் சூட்டிய
ஏமவிற் பொறி
மாண்வினை நெடுந்தேர் வானவன் தொலைய
வாடா வஞ்சி வாட்டும் நின்
மீடுகெடு நோன்தாள் பாடுங்காலே” (புறம், 39)
என்று
கூறுகிறார். கிள்ளிவளவனுக்குத் தனிச்சிறப்பில்லை என்று பழிப்பது போல்
முன்னோரின் பண்புகளாகிய ஈகை, மறம், அறம் ஆகிய அனைத்துப் பண்புகளும் ஒன்று திரண்டவன் எனப் போற்றப்படுதலால், வஞ்சப்புகழ்ச்சி அணிநயம் இப்பாடலுக்குச் சுவையூட்டுகிறது.
இமயத்தில் வில்பொறித்த இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் வரலாற்றுக்
குறிப்பும் உள்ளதால் இப்பாடல் வரலாற்றுக் களஞ்சியமாகவும் திகழ்கிறது. பகை நாட்டையழிக்கும் போர் வெறியைத் தவிர்த்து நயமாகப் புகழ்ந்து உள்ளத்தைக்
குளிர்விக்கும் நப்பசலையாரின் மாண்பும், புலமையும் வியந்து
வியந்து போற்றற்குரியனவாகும்.
அஞ்சா நெஞ்சம்
வெண்ணிகுயத்தியார் வெற்றி பெற்ற கரிகாலனுக்கு முன் நின்று
அஞ்சாது சேரலாதனின் மறங்குன்றாத தன்மானச் சாவை இவ்வாறு பாராட்டுகிறார். காற்றும் வீசும் திசைக்கு எதிராகவும், கப்பலைச் செலுத்திப் புகழ் பெற்ற மரபில் வந்தவனே! கரிகால் வளவனே! வெண்ணிப் பறந்தலைப் போரில் வென்ற பெருவீரனே! உன்னால் மார்பில் எறியப்பட்ட வேல், முதுகில் ஊடுருவிய புறப்புண்ணுக்கு நாணி வடக்கிருந்து உயிர்நீத்தும் பெரும்
புகழ் எய்திய சேரலாதன் உன்னை விடச் சிறந்த வீரனாவான்.
காற்றைப் பயன்படுத்திக் கப்பல் செலுத்தும் முறையை மிகப் பழங்காலத்திலேயே
தமிழர்கள் அறிந்திருந்தனர்.
”நளியிரு முந்நீர்
நாவாய் ஓட்டி
வளிதொழில் ஆண்ட உரவோன் மருக!
களியியல் யானைக் கரிகால் வளவ!
சென்ற மர்கடந்த
நின்னாற்றல் தோன்ற
வென்றோய்! நின்னினும் நல்லன் அன்றே! (புறம், 66)
வெண்ணிக்குயத்தியார்
நின்னினும் நல்லன் அவன் எதிரியைப் புகழ்வது நயமும் துணிவும் மிக்கச் செயலாகும்.
இங்ஙனம் வெண்ணிக்குயத்தியார் ஒரே பாடல் பாடியிருந்தாலும், அந்தப் பாடலில் பண்டைய தமிழர் நாகரிகம், வரலாற்றுக் குறிப்பு, வென்றோன் தோற்றோன்
ஆகிய இருவரையும் புகழ்தல், வென்றோனுக்கு
முன்பாகவே தோற்றோனைப் புகழுடையவனாகப் புகழும் துணிவு ஆகிய அனைத்தும் அடங்கியுள்ளன.
ஆற்றுப்படுத்தும் பண்பு
ஔவையார் அதியமானிடம் பரிசில் பெற்று வருகையில் ஒரு சுரத்திடையே தங்கியிருந்த
விறலி ஒருத்தியைக் கண்டார். ஆதரிப்பார் யாரும் இல்லையே என ஏங்கியிருந்த
விறலியின் நிலையைக் கண்ட ஔவையார் அவளை அதியமானிடம் ஆற்றுப்படுத்துகிறார். ‘கவிழ்ந்து கிடக்கும் உண்கலமாகிய என் மண்டையை மலர்க்குநர் யார்? என ஏங்கும் சில் வளை விறலி! சேய்மைக் கண்ணன்ற அண்மையிலேயே
நெடுமானஞ்சி உள்ளான். அவன்பாற் செல்வையாயின் அவன் பகைப்புலத்துத்
திறையாகக் கொண்ட பொருள் நிரம்ப உடையவன். ‘அலத்தற் காலையாயினும்
புரத்தல் வல்லன் அவன்பாற் செல்க‘ என விறலியை அதியமானிடம் அனுப்புகிறார்.
இப்பாடல் பாடாண் திணையில் அமைந்து விறலி செல்வையாயின், சேணோன் அல்லன், புரத்தல் வல்லன் என அதியமானிடம் ஆற்றுப்படுத்தலின்
இப்பாடல் விறலியாற்றுப்படையாயிற்று.
வீர உள்ளம்
பொன்முடியார் போர்க்களத்திற்கு அஞ்சாது அங்கு நடக்கும் வீர நிகழ்ச்சிகளைக்
கண்டு வியக்கும் வீர உள்ளமும், அந்நிகழ்ச்சிகளை உவமை நயத்துடன்
பாடும் புலமையும் மிக்கவராய் உள்ளதை அவர் பாடல் மூலம் அறியலாம்.
போர்க்களத்தில் கடும்போர் செய்யும் வீரன் ஒருவன் தன் கைக் கருவிகளை இழந்த நிலையில்,
அவன் மார்பில் பாய்ந்த வேலையே பிடுங்கிப் பகைவர் மேல் எறிவது
‘நூலிலாட்டு்’ எனப்படும். இது தும்பைத் திணைக்குரிய துறையாகும்.
”களங்கழுவிய படை உளங்கழிந்த
வேல்பறித்து ஞச்சின்று” (பு.வெ.மாலை, 142)
”கைவேல் களிற்றோடு போக்கி வருபவன்
மெய்வேல் பறியா நகும்” (குறள்,774)
என்னும் குறட்பா நூழிலாட்டுத் துறையாகும்.
முன்னாள் போரில் பல களிறுகளை வீழ்த்தித் தானும் வீழ்ந்துபட்ட பெருவீரன் ஒருவனின்
மகன், பெரும் போர் செய்து பல களிறுகளையும், பகைவர்களையும் வீழ்த்தித் தன் மார்பில் அம்பு பாய்ந்ததையும் உணராது போர் செய்கிறான்.
கைக் கருவிகளை இழந்து, கேடயமும் வீழ்த்தப்பட்டு
அதன் மீது செயலற்று வீழ்ந்து கிடக்கிறான். அதன் பிறகு நடந்த நிகழ்ச்சியைப்
பொன்முடியார் நேரில் கண்டு பாடுகிறார்.
”குழந்தைப் பருவத்தில் கிண்ணத்தில் பால் கொண்டு ஊட்டியபொழுது, குடிக்க மறுத்ததால், சிறுகோல் ஒச்சி மிரட்ட அதற்கு அஞ்சி
இவனுக்காக வருந்தும் மனமே! இப்பொழுது முன்னால் போரில் வீழ்ந்த
பெருவீரன் மகனாதலால் பல களிறுகளை வீழ்த்தி அம்பு பாய்ந்ததையும் உணராமல் போர் செய்து
கேடயத்தில் வீழ்ந்து கிடக்கின்றான். குதிரையின் பிடரி போன்ற குடுமியும்,
குறுகிய தாடியும் உடைய இந்த இளைய வீரனிடம் மார்பில் பாய்ந்த அம்பைக்
காட்டியவுடன் ‘ஆ’ இதை உணரேனே! உணர்ந்திருந்தால் முன்பே இதைக் கொண்டு ஒரு களிற்றை வீழ்த்தியிருப்பேன்”
என்கிறான். என்னே இவனது வீரம்.
செறாஅது ஓச்சிய சிறுகோலுக்கு அஞ்சிய குழந்தைப் பருவ நிகழ்ச்சியும்,
மார்பில் அம்பு பாய்ந்ததையும் உணராது போர்புரியும் இளமைப் பருவத்து வீர
உணர்ச்சியும் முரண்தொடையாக அமைந்து, கற்போருக்கு வியப்பும் மகிழ்வும்
ஊட்டுகின்றன. மான் உளையன்ன குடுமியும், புல் அணலும் அக்கால இளம் வீரர்களின் தோற்றப் பொலிவை விளக்குகின்றன.
வேந்தனைப் பாராட்டும் விதம்
இளவெயினியார் காலத்தில் அவர் வாழ்ந்த மலைக்குறவர் தலைவனாக விளங்கியவன் ஏறைக்கோன்.
அவன் பல்வகை உயர்பண்புகள்
உடையவனாக விளங்கினான். பல சான்றோர்கள் கூடியுள்ள
அவையில் புலவர்கள் அவரவர் நாட்டுத் தலைவன் பண்புகளைச் சிறப்பித்துப் பாடினர்.
அப்பொழுது இளவெயினியார் தம் தலைவன் ஏறைக்கோனின் உயர்பண்புகள் குறித்துப்
பாடிய பாடல்,
”தமர்தன் தப்பின் அது நோன்றலும்
பிறர்கை யறவுதான் நாணுதலும்
படைப்பழி தாரா மெத்தினன் ஆதலும்
வேந்துடை அவையத்து ஓங்குபு நடத்தலும்
நும்மோர்க்குத் தகுவல அல்ல, எம்மோன்
சிலைசெல மலர்ந்த மார்பில், கொலைவேல்,
கோடற் கண்ணி குறவர் பெருமகன்
ஆடுமழை தவிர்க்கும் பயங்கெழு மீமிசை
எல்படு பொழுதின் இனம்தலை மயங்கி
கட்சி காணாக் கடமான நல்வேறு
மடமான் நாகுபினை பயிரின் விடாமுழை
இரும்புலிப் புகர்ப்போந்து ஓர்க்கும்
பெருங்கல் நாடன் எம் இறைவனுக்குத் தகுமே” (புறம்,
157)
இத்தகைய உயர் மாண்புகள் எம் தலைவனுக்கு
மட்டுமே உரியவை. இப்பாடல் பாடாண் திணை இயல்மொழித்
துறையாகும்.
பிறர் வறுமைக்குத்தான் நாணுவது மிக உயர்ந்த பண்பு எல்லா பண்புகளும் மிக்கவரே
வேந்தரவையில் தலைநிமிர்ந்து ஏறு போல் பீடுநடை போட முடியும். மலைவாழ்
குறவர் குலத்திலும் பாடும் புலவர் இருந்திருப்பதால், அக்கால சமுதாயம்
கல்விச்செல்வம் ஓங்கியிருப்பதை உணரலாம்.
கையறுநிலை
மூவேந்தரால் வள்ளல் பாரி வஞ்சனையாக்க் கொல்லப்பட்டு, பறம்புமலையும் கைப்பற்றப்பட்டது. தந்தையையும்,
நாட்டையும் இழந்து வருந்தும் பாரி மகளிரைக் கபிலர் ஆறுதல் கூறி அழைத்துச்
சென்று பாதுகாப்பான இடத்தில் வைத்திருந்தார். சில நாட்கள் கழிந்தன. முழுநிலவு நாள் வந்தது. விண்ணில் முழு
நிலவு ஒளி வீசித் திகழ்ந்தது.
பாரி மகளிர் மகிழ்வுடன் வாழ்ந்த கடந்த முழு நிலவு நாளையும், பெற்ற தந்தையையும் வாழ்ந்த நாட்டையும் இழந்துவிட்ட இந்த முழுநிலவு நாளையும்
எண்ணிப் பார்த்தனர். அப்பொழுது உள்ளத்தில் பொங்கிய அவல உணர்வு பாடலாக வெளிவந்தது.
”அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவின்
எந்தையும் உடையேம், எம் குன்றும் பிறர் கொளார்
இற்றைத் திங்கள் இவ்வெண்ணிலவின்
வென்றுஎறி முரசின் வேந்தர்எம்
குன்றும் கொண்டார் யாம் எந்தையும் இலமே” (புறம்,112)
வென்றெறி
முரசின் வேந்தர் என்பது, வஞ்சப்புகழ்ச்சியாக
போரில் வெல்ல முடியாமல் வஞ்சித்துக் கொன்று விட்டுக் கொட்டப்பட்ட முரசுடை வேந்தர் எனப்
பழிக்கப்படுவதை உணர்த்துகிறது.
‘எம் குன்றும் கொண்டார், யாம் எந்தையும் இலமே’ என்பது அவலத்தின்
உச்சநிலையை உணர்த்துகிறது. ஐந்தடிகள் கொண்ட
இச்சிறிய பாடல், முரண்தொடை, வஞ்சிப்புகழ்ச்சி
ஆகியவற்றுடன் அவலச் சுவையின் பிழிவாக உணர்ச்சி மிக்கப் பாடலாகத் திகழ்கிறது.
கணவரை
இழந்த பெண்களின் நிலை
கணவன் இறந்த பின் மனைவி வருந்துதலும் உடன் மாய்தலும் ஆனந்தப்
பையுள் துறையாகும். பூதப்பாண்டியன் இறந்த ஞான்று, பெருங்கோப்பெண்டு தீப்பாய்ந்து உயிர்விடத் துணிந்தார். அரசுப் பொறுப்பேற்கத் தக்கோர் இன்மையால், சான்றோர் தேவியாரைத் தடுத்து அரசு பொறுப்பேற்க வேண்டினர். சான்றோரின் நாட்டு நலங்கருதிய நன்னோக்கத்தை உணராத தேவியார், கணவன் ஆவியோடு கலத்தலைத் தடுக்கச் சூழ்ச்சி செய்வதால் துயர மிகுதியால் மாறுபடக்
கருதினார். அப்பொழுது சினத்துடனும், துயரத்துடனும் இவ்வாறு கூறினார்.
பல பண்புகள் நிறைந்த சான்றோரே ‘உம் கணவருடன் செல்க என்று என்னை விடாமல் தடுக்கப் பொல்லாத சூழ்ச்சி செய்யும்
சான்றோரே வெள்ளரி விதை போன்ற வெண்மையான நெய்யின்றி இலையில் பிழிந்திடப்பட்ட நீர்ச்சோற்றில்
எள் துவையலும், புளி சேர்த்துச் சமைத்த வெந்த வேளைக் கீரையும், சேர்ந்த உணவையுண்டு. பரல் கற்களில்
பாயின்றிப் படுக்கும் கைம்மை நோன்புடைய பெண்களைப் போல், யாம் வருந்தி வாழ விரும்பவில்லை.
”பெருங்காட்டுப் பண்ணிய கருங்கோட்டு ஈமம்
நுமக்கு அரிதா குகதில்ல; எமக்குஎம்
பெருந்தோட் கணவன் மாய்ந்தன, அரும்புஅற
வள் இதழ் அவழிந்த தாமரை
நள் இரும்பொய்கையும் தீயும் ஒன்றே!” (புறம்,
246)
அக்காலப்
பெண்களின் கைம்மை நோன்பும், கற்புடைய பெண்கள், கணவன் இறந்தவுடன் தீக்குளித்து உயிர் விட்டுக் கணவனோடு கலத்தலும் இப்பாடலில்
உவமைநயத்துடன் விளக்கப்படுகின்றன. இப்பழக்கம்
நாளடைவில் வற்புறுத்தி உடன் கட்டையேற்றும் பழக்கமாகி இராசாம் மோகன்ராய் போன்ற சான்றோராலும்
சட்டத்தாலும் தடுக்கப்பட்டது வரலாறாகும்.
நிறைவாக,
மக்கள் இம்மையில் அடைய வேண்டிய அறம், பொருள், இன்பம் என்னும் உறுதிப்பொருள் மூன்றனுள் அறம், பொருள் ஆகிய இரண்டைப் பற்றியும் ஆழமாகவும், தெளிவாகவும், விரிவாகவும் விளக்குவதில் புறநானூற்றுக்கு இணையான நூல் இப்புவியில்
இல்லை எனலாம்.
புறநானூற்றில் பெண்பாற் புலவர்களின் பாடல்களில் கல்வியின் சிறப்பு, வீரத்தாயின் செயல், பெண்கள் தூது
செல்லும் பண்பு, மன்னனிடம் இடித்துரைக்கும் பண்பு, வீரர்களின் அஞ்சா நெஞ்சையும், பெண்களின் கைம்மை
பண்பு, ஆகியவற்றின் தன்மைகளை விளக்கும் பாடல்கள் அமைந்து அக்கால சமுதாய நிலையை வெளிப்படுத்தும் காலக் கண்ணாடியாகத் திகழ்ந்துள்ளது.
துணை நூற்பட்டியல்
1. இராசாமி. ஆ.வே - புறநானூற்றுப் பெண்பாற் புலவர்கள், திருவள்ளுவர் பதிப்பகம், வைரிசெட்டிப்பாளையம், திருச்சி.
2. கோவிந்தசாமி.மு - புறநானூற்றுப் புதையல், திருமலைக் குமரன் பதிப்பகம், தஞ்சை மாவட்டம்.
3. மாணிக்கனார்.அ. - புறநானூறு மூலமும் –உரையும், உமா பதிப்பகம், சென்னை -600 001, முதல்
பதிப்பு, 1998.
----
Comments
Post a Comment