தீபாவலி
தென்தமிழ் நாட்டுமக்கள் கார்த்திகைத் திங்கள்
முழுமதி இரவிலே விளக்குகளை வரிசை வரிசையாக வைத்து அவற்றின் ஒளிவடிவிலே எல்லாம்வல்ல
முழுமுதற் கடவுளைக் கண்ணாரக் கண்டு வணங்கி வருதல்போலவே, வடநாட்டில் அக்காலத்திலிருந்த
தமிழ் மக்கள் ஐப்பசித் திங்களில் விளக்குவரிசை வைத்து அவற்றின் ஒளியிலே விளங்காநின்ற
முழுமுதற் கடவுளுக்குத் திருவிழாக் கொண்டாடி வந்தனர். அதுதான் தீபாவலி என வழங்கிவருகின்றது.
வடநாட்டவர் தென்னாட்டிற் குடியேறியபின் தீபாவலித் திருநாள் இங்குள்ள தமிழரது கொள்கைக்கும்
ஏற்றதாய் இருத்தலால், அஃது இங்குள்ள தமிழ் மக்களாலும் கொண்டாடப்பட்டு வருவதாயிற்று.
கண்ணன் நரகாசுரனைக் கொன்ற நாளின் நினைவுக் குறியாகத் தீபாவலித் திருநாள் கொண்டாடப்படுகிறது
என்னும் கதை பிற்காலத்தில் பார்ப்பனர் கட்டிவிட்ட தொன்றாகும்.
பார்ப்பனர் தமது உயிர்க்கொலை வேள்விக்கு உடம்படாத நரகாசுரன் என்னும் தமிழ் மன்னன்
ஒருவனைத் தமது உயிர்க் கொலை வேள்விக்கு உடம்பட்டுத் தமக்குத் துணையாயிருந்த மற்றொரு
தமிழ் மன்னனாகிய கண்ணனை ஏவிக் கொலை செய்தனர். இந்நிகழ்ச்சியை, இதற்கு முன்னமே தோன்றி
நடைபெற்று வந்த தீபாவலித் திருநாளில் இயைந்து, அத்திருநாளின் உயர்ந்த கருத்தை விட்டதெல்லாம்
பார்ப்பனர் செய்த சூழ்ச்சிச் செயலாகும். தீபாவலி என்னும் சொற்றொடர்ப் பொருளை ஆயுங்கால்
அத்திருநாளுக்கும், கண்ணன் நரகாசுரனைக் கொன்ற நிகழ்ச்சிக்கும் ஏதோர் இயைபும் தொடர்பும்
இல்லை என்பது தெளிவுப்படும். தீபாவலி என்பது தீப ஆவலி எனப் பிரிந்து விளக்கு வரிசை
என்றே பொருள்தரும். விளக்கு வரிசை வைத்து அதன் கண் இறைவனை வழிபடும் கார்த்திகை விளக்கு
விழாவுக்குத் தீபாவலி விழாவுக்கும் வேற்றுமை சிறிதும் இல்லை. ஆதலால், தீபாவலித் திருநாளுக்குப்
பார்ப்பனர் பிற்காலத்தில் ஏற்றி வைத்த பொருந்தாக் கதையை மறந்து, அஃது இறைவனை ஒளிவடிவில்
வழிபடுத் திருநாள் என்பதைத் தமிழ் மக்கள் அனைவரும் நினைவுக் கூறுவேண்டும்.
ஆதலால் தீபாவலி திருநாள் கார்த்திகைத் திருநாளைப் போல் எல்லாம் வல்ல சிவபிரானை
ஒளிவடிவில் வைத்து வழிபடுந் திருநாள் என்பதை நாம் அனைவரும் கடைபிடித்து இறைவனை வணங்கி
உய்த்து உணர்வோமாக!
பார்வை நூல்
1.
மறைமலையடிகள்
– தமிழர் மதம், பூம்புகார் பதிப்பகம், இரண்டாம் பதிப்பு- 2008, சென்னை – 600 108
Comments
Post a Comment