மொழிப் புரட்சிக்கு வித்திட்டவர் பெரியார்!
‘மொழி மனிதனுக்குக் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளும் அளவுக்கு – விஷயங்களைப்
புரிந்து கொள்ள வாய்ப்பளிக்கும் தேவையானதே ஒழிய, பற்று கொள்வதற்கு அவசியமானதல்ல’ என்று தந்தை பெரியார் கூறி இருப்பதிலிருந்து அவர் எதையும்
பகுத்தறிவுக்கண் கொண்டு அணுகுபவர் என்பது புலப்படும்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய
மொழிகள் அனைத்தும் தமிழ்தான். அவை ஆரியக் கலப்பால் நான்கு இடங்களில் நான்குவிதமாகப் பேணப்பட்டு
வருகின்றன என்பதற்குத்தான் ஆராய்ச்சிமூலம் பெரியார் பல கருத்துக்களைக் கூறியிருக்கிறார்.
பெரியார்
இந்தியை ஏன் எதிர்த்தார். தமிழ், தமிழ் நாட்டுச் சீதோஷ்ண நிலைக்கு ஏற்றது மக்களின் நல்வாழ்விற்கும், பண்புக்கும்
ஏற்றமுள்ள மொழி தமிழ்தான். தமிழ் நாகரிகம் பெற்ற மொழி, மூடநம்பிக்கைகளைப் புறக்கணிக்கும் மொழி தமிழ். வேறு மொழி புகுத்தப்பட்டு
மக்கள் நலம் கெட்டு கேடு உண்டாகும். தமிழை விட மேலான மொழியில்லை இந்தி. ஏற்கெனவே தமிழ்
மொழி – வடமொழித் தொடர்பால்
எப்படிச் சிதைந்து விட்டது என்பதற்குப் பெரியார் சான்றுகளைக் கூறுகிறார்.
‘சாதி’ என்ற சொல்லைத்
தமிழில் இருந்து எடுத்து விட்டால் அதற்கு வேறு தமிழ்ச் சொல் உண்டா என்று தமிழ்ப் பண்டிதர்களையே
கேட்டவர் பெரியார்.
திவசம், திதி, கல்யாணம், வைகுந்தம், சொர்க்கம், நரகம் இப்படிப்
பல வார்த்தைகள் தமிழ்ச் சொற்களாக இருக்கின்றன. அவை
புகுத்தப்பட்ட பிறகுதான் சச்சரவுகளும், சீரழிகளும் புதிது புதிதாக உண்டாக்கிவிட்டன
என்பது உண்மை. பிற மொழித் தொடர்பால் ஒரு மொழி வளர்ச்சி பெறுமானால் அதனை வரவேற்கவேண்டும்
என்கிற முற்போக்கு எண்ணம் படைத்தவர் பெரியார். தமிழுக்கு ஆங்கில மொழித் தொடர்பால் ஏற்பட்ட
நன்மைகளைச் சுட்டிக் காட்டி, இந்தியைத் தமிழர்கள் ஏன் வெறுக்க வேண்டும் என்பதை அறிவுபூர்வமாக
விளங்கியவரும் பெரியாரே.
மதச்சார்புடையவர்களிடம் தமிழ்மொழி சிக்கிக்
கொண்டதன் விளைவாக இங்கு மதம் வேரூன்றியது என்பதைச் சுட்டிக்காட்டி, தமிழிலிருந்து ஆரியத்தைப்
போக்கிவிட்டால், எளிதில் பழந்தமிழ் கிடைத்துவிடும் என்பதை அழகாக ஆராய்ந்து கூறியவர்
பெரியார் ஒருவர்தான்.
தமிழ்மொழியை எல்லோரும் எளிதில் கற்கப் பெரியார்
ஒருவர்தான் வழி கண்டார். மொழி வல்லுநர்கள், பெருமக்கள், பண்டிதர்கள் தங்களுக்குள்ள
பாண்டித்தியத்தைக் காட்டிக் கொள்ளவே பாடுபட்டனர். பேரும் புகழும் தேடிக் கொண்டனர்.
ஆனால், பெரியார் அதிகம் படித்தவருமல்லர் – பண்டிதருமில்லை. இருந்தும், எல்லோரும் எளிதில்
தமிழ் மொழியைக் கற்க அவர்தான் வழிகண்டார்.
ஆங்கில மொழியில் குறைந்த அளவு எழுத்துகள்
இருப்பதால் அம்மொழி பேசுவோர் அடைந்த நன்மைகளைச் சுட்டிக் காட்டி, தமிழ்மொழியில் பல
எழுத்துகள் இருப்பதைக் குறைத்தால் என்ன, குடியா மூழ்கிவிடும் என்று வாதாடிய வல்லுநர்
பெரியார்.
அச்சுக் கோக்கவும் தட்டச்சடிக்கவும் சுலபம்,
நேரம் மிச்சப்படும். உழைப்பும் குறையும் என்பதை விளக்கித் தமிழ் எழுத்துச் சீர்திருத்தம்
செய்துகாட்டி, அதனைத் தாமே நடைமுறைப்படுத்தி எழுதியும், தம்முடைய ஏடுகளை நடத்திக் காட்டியவரும்
பெரியார்.
தந்தை பெரியாரின் எழுத்துச் சீர்திருத்தத்தினால்
மொழிக்கோ, பொருளுக்கோ, இயக்கத்திற்கோ எந்தவிதக் கேடும் ஏற்பட்டுவிடவில்லை. மொழி வளர்ச்சிக்கு
நல்லதொரு தொண்டு செய்தவர் என்று டாக்டர் மு.வ. பெரியாரைப் பாராட்டினார்.வெளிநாட்டிலிருந்து
வந்த ஒருவர் செய்தால்தான் அது சீர்திருத்தமாகும் என்பதில்லை. நம் நாட்டிலுள்ளவர் செய்வதும்
சீர்திருத்தமாகாலாம் என்று தந்தை பெரியாரின்
எழுத்துச் சீர்திருத்தத்தை, தமிழக அரசு தமிழ் வளர்ச்சி இயக்குநர் பேராசிரியர் கொண்டல்
மகாதேவன் கூறியுள்ளார். உலகம் போகிற வேகத்தைக் கவனித்து கிணறுக்குள் இருந்துகொண்டே
பெருமைப்பட்டுக் கொண்ட தமிழ் மக்களை இந்த மொழிச் சீர்திருத்தத்தின் மூலம் முன்னேற வழிகண்டவர்
பெரியார். இப்படிப்பட்ட நல்ல சீர்திருத்தத்தைக் கூட நாடு உடன் ஏற்கவில்லையே ஏன்?
தமிழ் மக்கள் தங்களில் மொழி தமிழ் என்றுதான்
பெருமைப்படக் கற்றுக் கொண்டனரே தவிர, தமிழகம் முழுவதும் தமிழ் ஒரேமாதிரி இருக்கிறதா
என்று கவனிக்கத் தயங்கும் நிலையிலேயே இருந்தவருகின்றனர். ஒரு சிலர் பெரியாரை எதிர்ப்பதற்கு
மூலகாரணம் உண்டு.
அதிகம் படிக்காத, பட்டம் எதும் பெறாத பெரியார்
சொல்ல நாம் கேட்பதா என்கிற எண்ணம் ஒரு சாராருக்கு. பழைமை முழுவதும் அழிக்கப்பட்டுவிடும்
என்ற அச்சம் வேறு சிலருக்கு. இப்படிப்பட்ட அச்சம் ஏற்படுவது அவர்களைப் பொருத்தமட்டில்
நியாயம்தான். ஆனால், அவர்களைப் போன்றவர்கள் போடும் தடை உடைக்கப்பட்டதாகத்தான் உலக வரலாறு
கூறுகிறது. இன்றில்லை என்றால் நாளை நாளையும் இல்லை என்று சொன்னவர்களுக்கு முன் விரைவில்
தந்தை பெரியாரின் எழுத்து சீர்திருத்தம் ஓரளவு வெற்றி கண்டது.
எத்தனையோ முக்கியமான சீர்திருத்தங்களுக்காக
வாழந்து காட்டிய பெரியார், இன்றுள்ளவர்களுக்கு ஒரு முக்கிய பாடமாக விளங்குகிறார்.
பார்வை நூல்
1. வேணு ஏ.எஸ், - பெரியார் ஒரு சரித்திரம், பூம்புகார் பிரசுரம்,மேகலை எண்டர்பிரைசஸ், சென்னை -5, முதற்பதிப்பு – 1980.
Comments
Post a Comment