தமிழே அறிவு மொழி!
தமிழரில் ஒவ்வொருவரும் தமிழ் மொழியிலும்
ஆங்கிலத்திலும் சம அளவில் பயிற்சி பெற வேண்டுமென்பதும் தமிழுக்குப் பெருமை தேடுவது
ஆகாது. உலகிலுள்ள அறிவு நூல்களெல்லாம் தமிழில் வெளிவர வேண்டுமானால், எல்லோரும் ஆங்கிலத்தைக்
கட்டாய பாடமாக ஏற்றுக் கற்கும் நிலை கைவிடப்பட வேண்டும்.
ஜெர்மனியன் ஜெர்மன் மொழியின் மூலமாகத்தான்
உலகியல் அறிவைப் பெற்று அறிவாளியாகின்றான். அவன் ஜெர்மனியையும் ஆங்கிலத்தையும் இரு
கண்களாகக் கொண்டு உலகத்தைப் பார்ப்பதில்லை. அப்படியே பிரான்ஸ், கிரேக்கம், இத்தாலி,
ஜப்பான், சீனா ஆகிய நாடுகளிலெல்லாம் அந்தந்த நாட்டு மொழியின் மூலந்தான் மக்கள் உலகியல்
அறிவைப் பெற்று அறிவாளிகளாகிறார்கள். அற்புதங்கள் புரியும் விஞ்ஞானிகள் கூட இதற்கு
விலக்கல்லர்.
உலகப் புகழ் பெற்ற ருஷ்ய ஞானியான டால்ஸ்டாய்க்கு
ஆங்கிலம் தெரியாது. வள்ளுவரை இன்றும் உலகம் போற்றுகிறதே. அவருடைய திருக்குறள் உலக மொழிகளிலெல்லாம் வெளியாகியிருக்கிறது.
அவர் ஆங்கிலம் கற்றதாலா? தமிழன் அறிவாளியாக வேண்டுமானானல் தமிழையும் ஆங்கிலத்தையும்
இரு கண்களாகக் கொண்டு அவற்றில் சம அளவில் ஞானம் பெற வேண்டுமென்றால், ஆங்கிலம் தமிழகத்திற்கு
வருவதற்கு முன்பு தமிழரெல்லாம் ஒற்றைக் கண் கொண்டு இருந்தார்களா? அறிவற்ற மூடர்களாகவா
இருந்தார்கள்?
ஆங்கிலம் வருமுன்பு தத்துவக் கலை, கட்டட
மருத்துவக் கலை, தர்க்க வாதம், போர்த் தொழில், ஆட்சி நடத்தும் முறை என்று அனைத்து நிலைகளிலும்
தலைசிறந்து விளங்கியுள்ளார்கள்.
ஔவையார் அரசர்கள் எல்லாம் போற்றும் வகையில்
அறிவாளியாக விளங்கினாளே, ஆங்கிலத்தையும் தமிழையும் இரு கண்களாகக் கொண்டதாலா?
உலகில் சுதந்திரமாக உள்ள எந்த ஒரு நாட்டிலும்
தாய் மொழியையும் அன்னிய மொழியையும் இரு கண்களாகக் கொள்ள வேண்டும் என்ற வாதத்தை அறிவுடையோர்
ஏற்பார்களா? இல்லை, எள்ளி நகையாடுவார்கள்.
பார்வை நூல்
1.
சிவஞானம் .
டாக்டர் ம.பொ -ஆங்கிலம் வளர்த்த மூடநம்பிக்கை,
பூங்கொடி பதிப்பகம், மயிலாப்பூர், சென்னை – 600 004.
Comments
Post a Comment