வித்தும் விளைவும் – தந்தை பெரியார்
விதையைத் தேர்ந்தெடுத்து நட்டுவிட்டால் மட்டும்
மரமாகிவிடாது. அதிலும் நல்ல விதையைத் தேர்ந்தெடுக்க
வேண்டும். குடம் குடமாக நீர் ஊற்றினால் மட்டும் விதை உடனே மரமாகி விடாது. பெரிய ஆலமரத்தைத்
தோட்டத்தில் காண வேண்டுமென்றால், அதன் விதையை நட்டு செடியாக்கியவர்களால் காண முடியாது.
மரத்தின் வளர்ச்சிக் காலத்தையும், மண்வளத்தையும், வளர்க்கப்பட்ட தன்மையும் பொறுத்ததுதான்.
அதே போன்றுதான் பெரியாரின் கருத்துக்களும், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகப் பிற்போக்கு நிலையில்
கிடந்து பழக்கப்பட்டு விட்ட ஒரு சமுதாயத்தை நினைத்த மாத்திரத்தில் விருப்பப்படி மாற்றி
அமைத்துவிட இயலாது.
அதனால்தான் தந்தை பெரியார் விரும்பிய சமுதாய
மாற்றத்தை அவரது காலத்திலேயே காண முடியவில்லை. ஆனால், அவர் விரும்பிய சமுதாயம் படிப்படியாக
முன்னேறி வருவதும், சிறு சிறு மாற்றங்கள் படிப்படியாக ஏற்பட்டு வருவதையும் அவரது காலத்தில்
காணமுடிந்தது.
அவர் அனைத்தும் சாதித்து விட்டார் என்று
தவறான கணக்குப் போடுவதோ, பெரியார் என்ன செய்து விட்டார் என்று குறை காண்பதோ சரியன்று!
சிறு உளியைக் கொண்டு மலையைச் செதுக்குவதற்கும், டைனமைட் வெடி வைத்து தகர்ப்பதற்கும்
வித்தியாசமுண்டு. சில நாடுகளில் புரட்சி வெடித்து, சர்வாதிகார முறையில் கட்டளைகள் பிறப்பிக்கபட்டு,
சாதனைகள் குவிக்கபட்டிருக்கின்றன. பெரியார் மனிதனை மதித்து, அவனது அறியாமையை நீக்கத்
தன் வாதங்களின் மூலம் திருத்தி தவற்றை உணரச் செய்து பகுத்தறிவாதியாக வாழச் செய்தார்.
அதற்காக அவர் பலாத்காரத்தை நாடவில்லை. பகுத்தறிவையேத் துணைக் கொண்டார். பதவியை நாடவில்லை.
புத்தியைப் பயன்படுத்தினார். 1925 – ஆம் ஆண்டு ஆணவமாக நடந்து கொண்ட ஆரியர்களை 1954
– ஆம் ஆண்டில் அதாவது 30 ஆண்டுகளில் அறிவு வழிக்குக் கொண்டு வந்தார். இந்தச் சாதனை
ரத்தம் சிந்தாத சத்தமில்லாத புரட்சிச் சாதனையல்லவா!
பெரியாரின் வெண்தாடியையும் உருவத்தையும்
கண்டு குஜராத், மராட்டிய பெண்மணிகள் அவரை ஒரு பெரிய மகான் என்று தப்புக் கணக்குப் போட்டு,
அவரது தரிசனம் பெற பூ பழங்களுடன் வந்தனர்.
தந்தை பெரியார் கோபப்படாமல் அவர்கள் கொண்டு வந்த அன்பளிப்புக் காணிக்கைகளை பெற்றுக்கொண்டு
அவர்கள் மனம் புண்படும்படி எதையும் பேசாமல் சிரித்தபடியே தரிசனம் கொடுத்து வழியனுப்பி
வைத்தார்கள். அப்படி ஒரு புரட்சிவாதி நடந்து கொண்டதாக வரலாறு இல்லை. எதையும் காலம்வரும்
போது சாதிக்கலாம் என்று உறுதியுடன் பாதை தவறாமல் பாடுபட்டு அமோக வெற்றியைக் கண்டவர்
பெரியார். எளிய நடையில், எவர் மனமும் புண்படாத வகையில் ஒளிவு மறைவு ஏதும் இல்லாமல்,
ஆணித்தரமாக மணிக்கணக்கில் பேசி மக்களின் இதயத்தைக் கவர்ந்தவர் பெரியார்.
லெனினுக்கு எப்படி ஒரு ‘ஸ்கார்’ ஏடு, காந்திக்கு
‘அரிஜன்’ ஏடும் பயன்பட்டதோ, அப்படி தந்தை பெரியாருக்குக் ‘குடியரசு’ ஏடு பயன்பட்டது.
சாமி கைவல்யத்தின் புரட்சிக் கருத்துகளும், மா.சிங்காரவேலரின் கட்டுரைகளும், மூட நம்பிக்கைகளில்
மூழ்கிக்கிடந்த மக்களுக்கு தெளிவு தரும் கருவிகளாக விளங்கின. கடவுளை எதிர்ப்பதோ, பார்ப்பனர்களைக்
கண்டிப்பதோ அவ்வளவு எளிதான காரியமில்லை. அதற்கான பக்குவம் பெரியாரிடம் ரொம்ப இருந்தது.
வடகோடியில் இருந்தாலம், வைதீகத்தில் பற்று கொண்டவரானாலும், பார்ப்பனர்களின் ஏகோபித்த
தலைவராக விளங்கினாலும், இன்று பெரியாரின் பெயரைக் கூறாமல் தமிழகத்தில் அரசியல் கட்சிகள்
நடத்த முடியாது என்கிற நிலை ஏற்பட்டிருப்பது மறுக்க முடியாத காலகட்டமும், இந்திய அரசியலின்
உண்மைநிலையுமாகும்.
பார்வை
நூல்
1. வேணு ஏ.எஸ்,
- பெரியார் ஒரு சரித்திரம், பூம்புகார்
பிரசுரம்,மேகலை எண்டர்பிரைசஸ், சென்னை
-5, முதற்பதிப்பு – 1980.
Comments
Post a Comment