Skip to main content

சங்க இலக்கியங்களில் பாணர்களின் வாழ்க்கை நிலை

 

சங்க இலக்கியங்களில் பாணர்களின் வாழ்க்கை நிலை

 

            அறிவியல் கருவிகள் இல்லாத சங்க காலத்தில் அரசரின் புகழ்பரப்பும் ஊடகமாக மிதவைச் சமூகமாகக் கலைஞர்களே செயல்பட்டுள்ளனர். அரசர் தம் வீரம், கொடை, புகழ் பற்றி இசைப் பாடல்களாகப் பாடியுள்ளனர். செய்திகளை ஓரிடத்தில் நடக்கும் நடப்புகளைப் பிறிதொரு இடத்தில் வெளிப்படுத்தியுள்ளனர். இவர்கள் ஒற்றர்களாக, தூதுவர்களாக, செய்திகள் தரும் களஞ்சியமாக இருந்துள்ளனர். இதன்மூலம் அரசரிடமும் , மக்களிடமும் பரிசுகள் பெற்றுள்ளனர்.

            இவர்கள் கலைகளையே முழுநேரத் தொழிலாகக் கொண்டுள்ளதால் பல்வேறு இடங்களுக்குச் சென்று கலைகளை நிகழ்த்தி அதன் மூலம் பெறும் பரிசில்களைக் கொண்டே வாழ்க்கை நடத்தியுள்ளனர். அதனால், இவர்கள் பரிசிலர் என்று குறிப்பிட்டனர். இவர்களுடைய வாழ்க்கை நிலை பெரும்பாலும் வறுமை வயப்பட்டதாகக் காணப்படுகிறது. தம் வறுமையைப் போக்க வள்ளல்களை நாடி தம் சுற்றமொடு நாடு விட்டு நாடு இடம்பெயரும் நாடோடிகளாக வாழ்ந்துள்ளனர்.

ஆற்றுப்படுத்தும் பண்பு

            சங்க காலக் கலைஞர்களிடையே ஒற்றுமையுணர்வும், ஒருவருக்கொருவர் உதவும் பண்பும் மேலோங்கிக் காணப்படுகிறது. பரிசு பெற்று வறுமை நீங்கப் பெற்ற கலைஞர்க் குழு தன் எதிர்ப்படும் கலைஞர்க் குழுவிடம் தன் வளமைக்குக் காரணமான வள்ளலின் புகழ், கொடைத் தன்மையைப் பற்றி எடுத்துக்கூறி அவ் வள்ளலிடம் செல்ல ஆற்றுப்படுத்துவர். இது சங்க கால கலைஞர்களின் மரபாகும். அதனை தொல்காப்பியர்,

            கூத்தரும் பாணரும் பொருநரும் விறலியரும்

          ஆற்றிடைக் காட்சி உறழத் தோன்றிப்

          பெற்ற பெருவளம் பெறாஅர்க்கு அறிவுறீஇச்

          சென்று பயன் எதிரச் சொன்ன பக்கமும்”1  

என நூற்பாவின் வழி குறிப்பிட்டுள்ளார்.

ஆற்றுப்படை இலக்கியம்

            சங்க இலக்கிய வகையில் ஆற்றுப்படை நூல்கள் பாண் மரபினரை வைத்தே எழுந்தன. அவர்களின் வறுமை தீர்த்துச் செழிப்புடன் வாழப் பொருள்தரும் புரவலரை நோக்கிப் பயன்பெற்ற கலைஞர்கள் வழிப்படுத்துவதாக அமைந்தது.

            ஆற்றுப்படுத்துபவர் பெயரால் பெரும்பாணாற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பொருநராற்றுப்படை, கூத்தராற்றுப்படை என்னும் மலைபடுகடாம் என்ற சங்க நூல்கள் எழுந்தன. இதில் திருமுருகாற்றுப்படை இறைவனாம் முருகனிடம் ஆற்றுப்படுத்தும் விதமாகச் சங்க இலக்கியத்தில் அமைந்துள்ளது.

பாணர்கள்

            பாணர்கள் என்பவர் தமிழ்க்குடியில் தொல்குடி என்பது சங்கப்பாடல் வழி அறிய முடிகிறது. இவர்களின் தோற்றம், வாழ்க்கை முறை மானுடவியல் சமூகவியல் அடிப்படையில் ஆய்வது பல உண்மைகளை வெளிக்கொணரும்.

            பாணர்கள் பயன்படுத்திய கருவி நரம்புக் கருவியாகும். இது வில் போன்ற அமைப்பினை உடையது. மேலும் இவர்கள் உணவுப்பழக்கத்தில் உடும்பு போன்ற இறைச்சியும் தேறிய கள் அருந்த உணவு முறையும், இவர்கள் குறிஞ்சி நிலத்தில் தோன்றிய வேடர்கள் இனத்தைச் சார்ந்த ஒரு பிரிவினராக இருத்தல் கூடும் என்பது சிந்திக்கத்தக்கது.

            தமிழ்த் தொல்குடிகளில் நிலத்தினை ஐந்தாய் வகுத்தத் தமிழினம், ஒவ்வொரு நிலத்திற்கும் உரிய முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் என அடையாளப் படுத்திய இலக்கணம் போன்றவை கருப்பொருளுக்குரிய மக்களைக் குறித்த பொழுது பாணர்களைக் குறிக்காமல் அவர்களது யாழினைக் கருப்பொருளில் சேர்த்துள்ளது.

            ஐவகை நில மக்களைக் குறித்துள்ள திணைநிலை மக்கள் மட்டும் இல்லாமல் சங்கப் புலவர் துடியன், பாணன், பறையன், கடம்பன் அல்லது குடியே என்று புறநானூற்றில் பாடியுள்ளமை சிந்திக்கத்தக்கது.

சங்க இலக்கியத்தில் பாணர்கள்

            பாணர், பொருநர், கூத்தர், விறலியர், கோடியர், வயிரியர், உள்ளிட்ட சங்க கால நிகழ்த்து கலைஞர்கள் அனைவரையும் குறிப்பிடப் பயன்படும் பொதுச் சொல்லாகப் பாண்மரபினர் எனச் சுட்டப்படுகிறது. பாணர் மரபினர் என்பதே பாண் மரபினர் எனப்படுகிறது.

            சங்க இலக்கிய நிகழ்த்துக் கலைஞர்களில் பாணர்களே பெரும்புலவர்களால் முன்னிறுத்தப்படுகின்றனர். பாண்மரபினர் அனைவரையும் பாணர் எனறே உரையாசிரியர் உரையில் எடுத்துரைக்கின்றனர். சங்க இலக்கியப் பாடல்களில் பாணர் என்ற சொல் அதிக அளவில் பயின்று வந்துள்ளது. புறநானூற்றில் மட்டும் இருபத்தாறு இடங்களில் வருகின்றது.

            சங்க காலத்தில் பாணர்களைப் பெருநில வேந்தர்களும், குறுநிலத் தலைவர்களும், திணைநிலை மக்களும் போற்றிப் புரந்துள்ளனர். பெரும்பாணாற்றுப்படை பல்வகை மக்களும் பாண்மரபினை வரவேற்று விருந்தளித்துப் புரந்ததைத் தெரிவிக்கின்றது. தமிழ் இசையும், பாடல்களும் நிகழ்த்துக் கலைகளையும், தமிழ்நிலம் முழுவதும் பரப்பிய பெருமைமிக்கோர் பாணர்கள் ஆவர். ஆற்றுப்படை நூல்கள் பாணர்களின் பெருமை, திறமை, வாழ்க்கை, வறுமை, எனப் பல நிலைகளைக் காட்டுகின்றன. பதிற்றுப்பத்து பழங்காலப் பாணர்களின் சமூக, சமய, அரசியல் நிலையைக் காட்டுகின்றன.

            சங்க காலத்தில் பாணர்கள் உயர்வோடு வாழ்ந்ததும் பின்னர் சங்கம் மருவிய காலத்திற்குப் பின் வீழ்ந்ததுமான வரலாற்றை அறிய முடிகிறது. பாணர்கள் மன்று தோறும், ஊர்தோறும், நாடுதோறும் தமிழ் இசை வளர்ச்சிக்கு வித்திட்டனர்.

            பாணர்களுள் பெரும்பாணர், சிறுபாணர் என்ற இருபிரிவினர் இருந்தனர். பேரியாழ் கொண்டு மிக இசையறிவு பெற்றுப் பாடியோர் பெரும்பாணர் என்றும், சீறியாழ் கொண்டு இசைநுட்பம் குறைந்து காணப்பட்டோர் சிறுபாணர் என்றும் அழைக்கப்பட்டனர். சங்க கால இசைக்கலைஞர்களில் பாணர் சமூகத்தில் சிறப்பிடம் பெற்று வாழ்ந்தனர். தொல்குடியில் ஒருவராக விளங்கினர். இதனைத்,

            துடியன், பாணன் பறையன் கடம்பனென்று

           இந்நான் கல்லது குடியுமில்லை”2

என்ற புறநானூற்றுப் பாடலடிகள் புலப்படுத்துகின்றன.

            பாணர்களில் ஆடவரைச் சென்னியர், வயிரியர், செயிரியர், மதங்கர், இன்னிசைக்காரர்’ 3 எனப் பிங்கல நிகண்டு குறிப்பிடுகின்றது.

பாணர்களின் வகைகள்

            பாணர்கள் இசைக்கும் கருவிகள் பெயரால், பண்ணொடு பாடுவதால் நான்கு வகைப்படுவர்.

·         சீறியாழ்ப்பாணர்          - சிறுபாணர்

·         பேரியாழ்ப்பாணர்       - பெரும்பாணர்

·         மண்டையாழ்ப்பாணர்மண்டைப்பாணர்

·         இசைப்பாணர்            - பனுவல்பாடுநர்

என்போர் ஆவர். மண்டையாழ் என்னும் இசைக்கருவியைக் கொண்டோர் மண்டைப்பாணர் எனப்பட்டனர்.

பாணர்களின் கலைத்தொழில்

            பாணர்கள் சீறியாழ் இன்குரல் சீறியாழ் இடவயின் தழீஇ’4, பேரீயாழ் இடனுடைப் பேரியாழ்’5  என்ற குறிப்பு, பாணர்கள் கருவியிசையிலும், குரலிசையிலும் வல்லவர்களாகத் திகழ்ந்துள்ளனர் என்பதைப் புலப்படுத்துகிறது. இதனை,

            இழை பெற்ற பாடினிக்குக்

          குரல் புணர் சீர் கொளை வல்பாண் மகனும்மே” 6

என்ற சங்கப்பாடல் பகுதி புலப்படுத்துகிறது. மேலும் இவர்கள் தோற்கருவி இசைப்பதிலும் வல்லவர்களாக இருந்தமையைச் சங்க இலக்கியச் சான்றுகள் மூலமே தெரிய வருகின்றது. இதனை,

            கன்று பெறு வல்சிப் பாணன் கையதை

           வள்ளுயிர்த் தண்ணுமை போல” 7    

என்ற நற்றிணை பாடலடிகள் உணர்த்துகின்றன. மேலும், பாணர் யாழுடன் ஆகுளி, பதலை, முழவு ஆகிய வேறுவகைப் பறை வாத்தியங்களையும் வைத்திருந்தனர். இக்குழுவின்  நிகழ்வு வழங்குதல் ஆடலையும், பாடலையும் உள்ளடக்கி இருந்தது. இதனை,

            பாடுவல் விறலி ஓர் வண்ணம், நீரும்

          மண்முழா அமைமின், பாண்யாழ் நிறுமின்

          கண்விடு தூம்பின் களித்து உயிர்தொழுமின்

          புதலை ஒரு கண் பையென இயக்குமின்

          மதலை மாக்கோல் கைவலம் தமினென்

          நிறைவன் ஆகலின் சொல்லுபு குறுகி”8    

என்ற பாடற்பகுதி விளக்குகின்றது.

கலை நிகழ்தளங்கள்

            பாணர்கள் பெருவேந்தர்களின் அரண்மனையிலும், அரண்மனை வாயில்களிலும், குறுநில மன்னர்களின் அவைகளிலும் தம் கலைகளை நிகழ்த்தியுள்ளனர். பாணர்கள் செல்லும் வழியெங்கும் ஊர்ப்பொது மன்றில்களில் தங்கள் கலை நிகழ்வை நிகழ்த்தி மக்களை மகிழ்ச்சியுறச் செய்துள்ளனர். இதனை,

            மன்றம் போந்து மருகுசிறை பாடும்

          வயிரிய மாக்கள் கடும்பசி நீங்கப்

          பொன்செய் புனையிழை யொலிப்பப் பெரிதுவந்து

          நெஞ்சுமலி உவகையர் உண்டு மலிந்தாடச்

          சிறு மகிழானும் பெருங்கலம் வீசும்

          போரடு தானைப் பொலந்தார் குட்டுவ” 9

என்ற பாடல் வழி அறியமுடிகிறது. தெருவோரங்களில் நிகழ்த்தப்பட்டதைப் புறநானூறும் (புறம்:70) தெரிவிக்கின்றது.

பாணர்களின் ஆதரவாளர்கள்

            சங்க காலச் சமூக அமைப்பில் பாணர்களையும், அவர்கள் சார்ந்த குழுவினரையும் பெருமன்னர்களும், குறுநில மன்னர்களும், வேளிர் தலைவர்களும், பொதுமக்களும் ஆதரித்து அவர்களுக்கான வாழ்க்கை ஆதாரங்களை அளித்துள்ளனர். அவர்களின் கலையைப் போற்றிப் புகழ்ந்துள்ளனர்.

            பெருமன்னர்கள் கரிகால் பெருவளத்தான், பாண்டிய மன்னன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன், இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், சோழன் நலங்கிள்ளி, அதியமான் நெடுமானஞ்சி, போன்ற பெருமன்னர்கள் பாண் மரபினரைப் பெரிதும் ஆதரித்துள்ளனர்.

            நாஞ்சில் வள்ளுவன், பண்ணன், பாரி, பேகன், ஆய் அண்டிரன், வளவில் ஓரி, நல்லியக் கோடன், ஆதனுங்கன், இளந்திரையன், நன்னன், வேண்மான், அவியன், தழும்பன், பிட்டன் போன்ற பல குறுநில மன்னர்களும், பேரூர் தலைவர்களும் பாணர்களின் பசிதீர்த்து வறுமை போக்கிய வள்ளல்களாவர்.

            ஐவகை நிலமக்களும், பாண்குழுவினரை வரவேற்றுப் பசிநீக்கி அவர்களை ஆதரித்துள்ளனர். இதனைப் பெரும்பாணாற்றுப்படையும், சிறுபாணாற்றுப்படையும், மலை படுகடாமும் புலப்படுத்துகின்றன.

பாணர்களின் வாழ்க்கை முறை

பாணர்கள் ஓரிடம் நிலைத்து வாழாது நாடு முழுவதும் மன்னர்களையும், வள்ளல்களையும், மக்களையும் நாடித் தங்கள் கலைகளை நிகழ்த்தி அதன் மூலம் பெற்ற வருவாயைக் கொண்டு வாழ்க்கை நடத்தினர்.

            பாணர்கள் கூட்டம் கூட்டமாக ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கும், புரவலர் ஒருவரிடம் இருந்து மற்றோருவரிடத்தும் கொடை வேண்டி அலைந்து திரிவோராவர். இவ்வாற அலையும் பாணர்கள் பழுமரம் தேடி அலையும் வௌவால்களோடு அடிக்கடி ஒப்பிடப் பெறுகின்றனர். உண்மையில் பசியும் பட்டினியும் அவர்களோடு உடனுறைந்தன. கோப்பெருஞ்சோழன் பாண் குடும்பத்தின் பசிப் பகைவன் என்றும், நலங்கிள்ளியும் பகைவர்களை அழிப்பதோடு பாணர்களின் பசியையும் அழிப்பவன்” 10 என்றும் கூறப்பெற்றுள்ளனர்.

பாணர்கள் மிதவைச் சமூகமாய் வாழ்ந்ததால், நிலைத்தக் குடியிருப்பு பற்றிய முழுமையான செய்திகள் அறிய முடியவில்லை. பாணர்கள் செல்லுமிடந்தோறும்  ஊர்ப் பொது மன்றில்களிலும், ஊருக்குப் புறம் தற்காலிகக் குடியிருப்பு ஏற்படுத்தியும் வாழந்துள்ளனர்.

            மதுரையின் புறநகர்ப் பகுதிகளில், சிறுகுடியிருப்புப் பகுதிகளில் வாழ்ந்ததாக மதுரைக்காஞ்சி குறிப்பிடுகிறது. இப்புறக் குடியிருப்புகள் பாண்சேரி எனப்பட்டன. புகார் நகரத்திலும் அதன் புறப்பகுதியில் பாண்சேரி இருந்துள்ளது.

பாணரும் சுற்றமும்

            பாணர்கள் மிதவைச் சமூகமாய் வாழ்ந்ததால், நிலைத்த குடியிருப்பு பற்றிய முழுமையான செய்திகள் அறிய முடியவில்லை. பாணர்கள் செல்லுமிடந்தோறும்  ஊர்ப் பொதுமன்றில்களிலும், ஊருக்குப் புறம் தற்காலிகக் குடியிருப்பு ஏற்படுத்தியும் வாழந்துள்ளனர்.

            மதுரையின் புறநகர்ப் பகுதிகளில், சிறுகுடியிருப்புப் பகுதிகளில் வாழ்ந்ததாக மதுரைக்காஞ்சி குறிப்பிடுகிறது. இப்புறக் குடியிருப்புகள் பாண்சேரி எனப்பட்டன. புகார் நகரத்திலும் அதன் புறப்பகுதியில் பாண்சேரி இருந்துள்ளது.

பாணரின் வாழ்க்கை முறையில் சுற்றத்தார் பெரும்பங்கு வகிக்கின்றனர். பாணரைக் குறிப்பிடும் பொழுதெல்லாம் கடும்பு, ஒக்கல், சுற்றம் எனக் குறிக்கப் பெறுகின்றனர். பாணர்கள் தனித்து இயங்காமல் தன் சுற்றத்மொடு நாடோடிக் குழுவினராய்ப் பரிசில் தரும் வள்ளல்களை நாடிச் சென்றுள்ளனர். இக்கருத்திற்குப்,

பழுமரம் தேரும் பறவைபோல்

சுற்றமொடு கால் கிளர்ந்து திரிதரும்”11

புல்லின் யாக்கைப் புலவுவாய்ப் பாண”12

என்ற பாடலடிகள் சான்றாக விளங்குகின்றன.

            பாணர் தன் வாழ்வில் பெற்ற வளத்தைச் சுற்றமொடு பகிர்ந்து வாழும் பண்பு பெற்றவராக இருந்ததை அறிய முடிகின்றது.

            இரும்பேர் ஒக்கல் பெரும்புலம்பு அகற்ற” 13

          கட்கேள்வி கவை நாவின்

          திறன் உற்ற அனாஅப் போலும்

          வறன் ஓரீஇ வழங்கு வாய்ப்ப

          விகுமதி அத்தை கடுமான் தோன்றல்”14

என்ற பாடல் வழி தனக்கு வேண்டுவன தருபவற்றைப் பிறர்க்குத் தான் வழங்கி மகிழ்வேன் என்பதன் மூலம் அவர்களின் சுற்றம் சூழ வாழும் நற்குணத்தை அறிய முடிகிறது.

பாணர்களின் பழக்க வழக்கங்கள்

·         பாணர்கள் இறைச்சி, கள் உண்ணும் பழக்கத்தினராகவும், உணவு, பரிசுப் பொருட்கள் என கிடைப்பனவற்றைப் பகுத்துண்ணும் பழக்கம் உடையவர்களாக இருந்தனர்.

·         செல்வத்தைச் சேர்த்து வைக்கும் வழக்கம் உடையவராகக் காணப்படவில்லை. நிலைத்த சமூகமாய் அல்லாமல் நாடோடிகளாய் நிலைத்த சமூகத்தினரை நாடி, அண்டி வாழும் நாடோடிகளாகக் காணப்படுகின்றனர்.

·         கலைகளைப் போற்றியவர்கள், பொருட்செல்வத்தைப் போற்றிப் பாதுகாக்கவில்லை.

·         உண்மையை நிலைநாட்ட யாழ்மீது சூள் உரைக்கும் பழக்கம் உடையவர்களாக விளங்கியுள்ளனர்.

பாணற் குழுவினரில் சிலர் தமக்கென உரிமைக் கொண்ட தலைவனைத் தவிர்த்த பிற தலைவனையும், பிற நாட்டையும் நாடுவதில்லை.

பாணர்களின் மரபுகள்

சங்க கால மக்கள் ஆண், பெண் வேறுபாடின்றித் தலையில் பூச்சூடும் மரபினை உடையவர்கள். அவ்வகையில் பாணர்களும் தலையில் பூச்சூடும் மரபினை உடையவர்கள். பாணர் தலைவன் ஒருவன் இறந்ததினால் பூச்சூடவில்லை என்ற செய்தியை,

பாணர் சென்னியும் வண்டு சென்று ஊதா” 15

என்ற பாடலடியும்,

பாணன் சூடான் பாடினி அணியாள்” 16   

என்ற பாடலடியும் இதனைப் புலப்படுத்துகின்றன. பாணற் குழுவினர் இன்னொரு பாணற் குழுவினரை ஆற்றுப்படுத்துவது மரபாகும். பாணர் அகவாழ்க்கையில் தூது செல்லும் மரபுடையவர்களாகக் காணப்படுகிறார்.

தொன்நெறி மரபின் கற்பிற்குரியர்” 17

தலைவியின் ஊடல் தீர்க்கும் வாயில்களாகவும் செயல்பட்ட மரபினைக் காண முடிகிறது. பாணரின் மரபாக,

நிலம்பெயர்ந் துரைத்தல் வரைநிலை யுரைத்தல்

கூத்தர்க்கும் பாணர்க்கும் யாத்தவை உரிய” 18

எனும் இலக்கண மரபின் வழி அறிய முடிகிறது.

பாணரின் வறுமை நிலை

பாணரின் வாழ்க்கை வறுமை நிலைப்பட்டதாகவே பெரும்பான்மை பாடல்களில் காணப்படுகின்றன. அவர்கள் உணவு, உறையுள் இன்றி உடுத்த நல் ஆடைகள் இன்றி சுற்றத்தாரோடு நாடோடிகளாகத் திரிந்த வாழ்க்கையைச் சங்கப் பாடல்கள் வழி அறிய முடிகிறது.

கையது கடன் நிறை யாழே: மெய்யது

புரவலர் இன்மையின் பசியே, அரையது

வேற்று இழை நுழைந்த வேர்நனை சிதாஅர்

ஓம்பி உடுத்த உயவல் பாண!

பூட்கை இல்லோன் யாக்கைப் போலப்

பெரும்புல் லென்ற இரும்பேர் ஒக்கலை” 19

கையிலே எப்பொழுதும் இலக்கண முறைமை நிரம்பிய யாழைக் கொள்வதைக் கடமையாகக் கொண்ட பாணன், நைந்து தைத்த வேர்வையால் நனைந்த பழைய கந்தையாடை அணிந்து எப்பொழுதும் தன் சுற்றத்தோடும், பசியோடு அலையும் பாணனே என்னும் பொருள்படப் பதிந்துள்ள இப்பாடல் பாணரின் வறுமை நிலையைத் தெளிவாக உணர்த்துகின்றது. கடும்பசி இரவலனாக’20 ‘மேனி பொலிவற்றவனாகப்’21 ‘இரந்துண்பவனாக’ 22 வறுமை தீர்க்கும் வள்ளல்களை நாடி அலைபவனாக பாணரின் வறுமை வாழ்க்கை விளங்கியதை அறிய முடிகிறது. மேலும்,

உடும்பு உரித்து அன்ன என்புஎழு மருங்கின்

கடும்பின் கடும்பசி களையுநர்க் காணாது”23

என்ற பாடற்பகுதி பாணரின் கடும் பசியினைக் களையக் கூடிய வள்ளலைக் காணாது வறுமையின் கொடுமையினால் எலும்பும் தோலுமாக இருந்த்தை உடும்பு என்னும் விலங்கின் தோலினை உரித்தபின் காட்சித் தருவதைப் போலக் காணப்பெற்றதைப் புலப்படுத்துகிறது.

உடை கிழிந்தும் நைந்தும், பழமையுற்று, இழைகள் எல்லாகள் எல்லாம் தெரியும்படி கிழிந்து போன ஆடையை அணிந்திருந்தனர் என்றும், நெய்த இழைகளைக் காட்டிலும் கிழிந்த இடங்களைத் தைத்தப் பிறநூல் இழைகளே மிகுந்து இருந்தன என்பதை,

தொன்றுபடு துளையொடு

பெரு இழை போகி

நைந்து கரை பறைந்த என் உடையும் நோக்கி”24

வேற்றிழை நுழைந்த வேர்நனை

யுடுத்த வுயவற்பாண”25

விரும்பிய முகத்தனாகி என் அரைத்

துரும்பு படு சிதாஅர் நீக்கித் தன் அரைப்

புகை விரித்தன்ன பொங்கு துகில் உடீஇ” 26

என்ற சங்கப் பாடலடிகள் பாணனுடைய கிழிந்த ஆடையை நீக்கித் தன் இடுப்பிலுள்ள புகையைப் போன்ற ஆடையை வஞ்சன் என்னும் மன்னன் வழங்குவான் என்று குறிப்பிடுகின்றன.

பசியின் காரணமாகப் பஞ்சடைந்த உடல்மெலிந்து எலும்பும் தோலுமாய்ச் சுற்றத்தாருடன் கடும்பசியில் உழல்வதைப் பல பாடலகள் பதிவு செய்துள்ளன.

உண்ணாமையின் ஊன் வாடித்

தெண்ணீரின் கண்மல்கிக்

கசிவுற்ற என் பல்கிளையொடு

பசி அலைக்கும்” 27

என்ற பாடலடிகள் சான்றாகும்.

பாணர்களின் பசிதீர்த்தமை

பாணர்கள் தங்கள் சுற்றத்துடன் தான் தேடி வந்த கொடையாளரிடம் அடைந்தபின் அத்தலைவன் பாணர்களுக்கு முதற் கண் விருந்து வைத்து அவர்களது பசியினை ஆற்றியுள்ளான்.

படுமடைக் கொண்ட குறுந்தாள் உடும்பின்

விழுக்கு நிணம் பெய்த தயிர்க்கண் விதவை

          பாணர் நல்லவை பாணரொடு ஓராங்கு 

          வருவிருந்து அயரும் பாணரோடு” 28

பாண் உவப்ப பசி தீர்த்தனன்” 29

என்ற பாடலடிகள் பாணர்களின் பசிதீர உணவு வழங்கப்பட்டதைக் குறிப்பிடுகின்றன. மேலும் பாணர்களுக்கு ஊன் உணவு, தயிர், பழங்கள், தீயில் வறுத்த தசைத் துண்டுகள், கள், அரிசியில் நெய் சேர்த்து செய்யப்பட்ட உணவு வழங்கினான் என்பதை,

வள்ளத் திடும்பால் உள்ளுறை தொடரியோடு

களவுப் புளியன்ன விளைகள்

வாடூன் கொழுங்குறை

கொண்குரல் அரிசியொடு நெய்பெய்து அட்டுத்

          துடுப் பொடு சிவணிய களிக்கொள் வெண்சோறு

உண்டு இனி திருந்த பின்றை” 30

என்ற பாடலடிகள் புலப்படுத்துகின்றன. மேலும் ஆட்டிறைச்சியும், கள்ளும் பசிதீர தரப்பட்டன என்பதை,

அரவு வெகுண்டன்ன தேறலொடு சூடுதரு

 நி ரயத்தன்ன என் வறன்களைந் தன்றே”31

என்ற பாடலடிகள் மூலம் அறிய முடிகின்றது.

பசிதீர்த்த பாணர்கள் பாடுவதும், அரண்மனைகளுக்குச் செல்லும் வள்ளல் பெருமக்களிடத்துப் பரிசில் பெறுவதும் பெற்றதைத் தம் போன்று வறுமையில் இருப்போர்க்கு அளிப்பதும் அவர்களை ஆற்றுப்படுத்துவதும் பாணர்களின் இயல்பாகும். வள்ளல் பெருமக்கள் தகுதியறிந்து வழங்குதலும் கொடைமடம் படுத்து வழங்குதலும் வேண்டியனவெல்லாம் வழங்குதலும் எனப் பாண் மக்களுக்கு வழங்கியுள்ளனர்.

பாணர்களின் பசிதீர்த்த மன்னர்கள், வள்ளல்கள் அவர்களின் வறுமைதீரப் பொன்னும் பொருளும், தகுதிக்கு ஏற்றவாறு யானை, குதிரை, ஊர் எனக் கொடைகளாகப் பெற்று தம் வறுமை தீரத் திரும்பியுள்ளனர்.

பாணர்களும் அரசர்களும்

பாணர்கள் கலை நிகழ்வுகளோடு மட்டுமல்லாது தம் நுட்பமான அறிவுத்திறத்தினால் பண்டைய அரசு நிறுவனங்களோடு முக்கியப் பங்காற்றினர்.

ஒற்று தெரிவித்தல், பகையரசன் வலிமையைக் கூறுதல், இரு மன்னர்களுக்கிடையே சமாதானம் செய்வித்தல், போரினைத் தடுத்தல், நிமித்தம் கூறுதல், நாழிகை பார்த்து சங்கு ஊதுதல், நாட்டு நிகழ்வுகளைத் தெரிவித்தல், மக்களின் மனநிலையை எடுத்துரைத்தல் என்பதோடு அரண்மனையிலேயே தங்கி ஒரு சாரார் அரசனுக்கு ஆலோசகராக, நண்பனாக, அதிகாரியாக, விடியற்காலையில் நற் பாடல்களைப் பாடி அரசனைத் துயில் எழுப்பும் சூதகராக, வேதாளியராக, போரில் பங்கு பெற்று வீரர்களுக்கு உணர்ச்சியூட்டும் பாடல்களைப் பாடும் பொருநராக, துடிப்பறை முழக்கியவராக முரசினை அறைந்தவராக, அரசு சார்ந்து பணியாற்றினர்.

காக்கையூர்ப் பாடினியான நச்செள்ளையார் ஆடு கோட்பாட்டுச்  சேரலாதனிடமும், ஔவையார் அதியானிடமும் அரசவையில் மிகச் சிறப்பான இடத்தைப் பெற்றிருந்தனர்.

பதிற்றுப்பத்தில் ஆறாம் பத்தினைப் பாடியவர் காக்கைப் பாடினியாவார். அவர் பாட்டிற்குப் பரிசாக ஒன்பது காப்பொன்னும், இலட்சம் பொற்காசும் வழங்கியதோடு, தன் அரசவைப் புலவராகவும், அமைச்சராகவும் ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் ஆக்கிக் கொண்டான்.

ஔவையாரும் தொண்டைமானிடம் அதியமானின் தூதராகச் சென்றார். இவையாவும் பாணர் குலப் பெண்டிரும் உயர்நிலையில் இருந்தமையையும் அரசு சார்ந்த நிலையையும் புலப்படுத்துகின்றன.

பாணர்களை அரசர்கள் சிறப்பு செய்தல்

நாடுதோறும் அலைந்து திரிந்து பசியினாலும் அது ஏற்படுத்திய களைப்பினாலும் வாடிய பாணர்களையும் அவர்களின் சுற்றத்தார்களையும் கண்ட வள்ளல்கள் முதற்கண் உணவளித்துப் பசியைத் தீர்த்துக் களைப்பைப் போக்கினர். பின் அவர்களின் கலை நிகழ்வுகளைக் கண்டு பாணர்களின் வறுமை நீங்கும் அளவு செல்வம் வாரி வழங்கிச் சிறப்பு செய்தனர்.

தம்மை நாடி இரப்போர் வாராராயினும் அவரைத் தேடி தேரையனுப்பி அழைத்து வரச்செய்து வேண்டுவன எல்லாம் கொடுத்துச் சிறப்பித்த செய்தியைப் பதிற்றுப்பத்துப் பகர்கின்றது.

வாரார் ஆயினும் இரவலர் வேண்டித்

          தேரின் தந்தவர்க்கு ஆர்பதன் நல்கும்

          நகைசால் வாய்மொழி இசைசால் தோன்றல்”32

என்ற பாடலில் அக்கருத்து காணப்பெறுகிறது.

வள்ளுவனார் இறைமாட்சியின் இலக்கணங்களுள் ஈகையும் ஒன்றென எடுத்தியம்புவர். அம்முறையில் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் விரியுளை மாவும் களிரும் தேரும், வயிரியர் கண்ணுளர்க்கு ஒம்பாது வீசியவன் கரிகாற் பெருவளத்தான், இரும்பாண் ஒக்கல் கடும்பு புரந்தவன் சோழன் நலங்கிள்ளி போன்றோர் செய்த சிறப்பினை அறிய முடிகிறது. மேலும், பாணர்களுக்கு அகலாச் செல்வம், பொற்றாமரை, ஊர்க்கொடை, எனப் பல்வேறு பரிசில்களைத் தந்து பாணர்கள் சிறப்பு செய்யப்பட்டதை ஆற்றுப்படை இலக்கியங்களும், மதுரைக்காஞ்சியும், புறநானூற்றுப் பாடல்களும் புலப்படுத்துகின்றன.

பாணர்களும் சமூகமும்

சமூகச் சச்சரவுகளில் அமைதியை ஏற்படுத்துபவர்களாகவும், குடும்பச் சச்சரவுகளைத் தீர்த்து வைக்கும் நடுவர்களாகவும் காதலன் காதலியிடையே ஊடல் தீர்க்கும் தூதுவர்களாகவும் சமூகத்தில் விளங்கியுள்ளனர். இதற்குச் சமூகத்தோடு கொண்டிருந்த நல்லுறவு காரணம் எனலாம்.

ஐங்குறுநூற்றிலுள்ள பத்துப் பாடல்கள் யாழ் வாசிக்கும் வல்லமையைப் புலப்படுத்துவதோடு, ஊடல்கள் தவிர்க்கத் தூது செல்லுதலையும் குறிப்பிட்டுள்ளன. இதன் மூலம் பாணர்கள் அகத்துறையில் பாங்கனாகச் செயல்பட்டது தெரிய வருகிறது. கலை, கல்விகளில் சிறந்து விளங்கிய பாணர்கள் செல்வக் குடும்பம் முதல் எளிய குடும்பம் வரை தடையின்றிப் பழகக் கூடிய வாய்ப்பின் காரணமாகப் பாணர் கற்புக் காலத்து வாயிலாகச் சமூகத்தில் இருந்துள்ளனர்.

            பாணர், கூத்தன், விறலி, பரத்தை

          யாணஞ் சான்ற அறிவர், கண்டோர்

          பேணுதரு இளந்த அறுவரொடு தொகை இத்

          தொன்னெறி மரபின் கற்பிற்குரியர்”33

என்னும் பாடற்பகுதியில் கற்புக் காலத்தில் வாயிலாகப் பாணர் முதன்மையாகக் குறிக்கப் பெற்றுள்ளனர் என்பது புலப்படுகிறது.

            சங்க காலத்தில் தலைவனது அகவாழ்க்கையில் பாணன் பங்கெடுப்பது அவனது மாறும் ஆளுமையைக் காட்டுகிறது. மன்னர்களின் அகவாழ்க்கையில் பாணர்கள் ஈடுபட்டுள்ளமைக்கான சான்றுகள் பல உண்டு. வீரயுக இலக்கியத்தில் பாணர் வீரர்களின் அகவாழ்க்கையில் இணைவது அறியப்பட்டதே. பாணர்கள் சமூகத்தில் அனைத்துப் படி நிலைகளிலும் எளிதாக சென்றுவரக்கூடிய உரிமை பெற்றிருந்தனர் என்பதைப் புலப்படுத்துகின்றன.

அரசாட்சியில் பாணர்

பாண்மரபினர் பண்ணை மட்டும் ஆளவில்லை. மண்ணையும் ஆண்டனர். பிறரிடம் தம் வறுமை போக்கப் பரிசில் வாழ்க்கை மட்டும் வாழவில்லை. பிறருக்குப் பரிசில் வழங்கும் ஆற்றல் பெற்ற மன்னனாய் அரசாட்சி செய்துள்ளனர். இதனை அகப்பாடல்-133 பதிவு செய்துள்ளது.

            பாணன் என்பான் பாலியாற்றின் வடகரையில் உள்ள நாட்டில் அரசு புரிந்து வந்தான். அந்நாட்டில் பாலியாற்றின் கரையில் உள்ள பெரும்பாணப் பாடியும், பாண்மலையும் அப்பகுதியிலுள்ள கல்வெட்டுகளால் குறிக்கப்படுகின்றன. அவன் வழி வந்தோர் வாணர் எனவும் வாணாதிராயர் எனவும் வாணவதரையர் எனவும் நிலவினர். வடார்க்காடு வட்டத்துத் திருவல்லம் கோயிலில் இவர்களுடைய கல்வெட்டுக்கள் மிகுதியாக உள்ளன. பிற்காலத்தே அவர்கள் தமிழக முழுவதும் பரவியிருந்தனர். வாணகோவரையர் என்பாரும் பண்டைய பாணன் வழி வந்தோரே யாவர். இதன் மூலம் அரசாண்ட ஒரு கிளையாகவும் சிறப்புப் பெற்றிருந்தனர் என்பதை அறிய முடிகிறது.

இலக்கிய வளர்ச்சியில் பாணர்கள்

          பாணர்கள் பாடுதலும் பாட்டு இயற்றலும், கருவி இசைத்தலும் ஆகிய செயல்களைச் செய்துள்ளனர். அவை அரசியல் சமூகச் சூழலில் சில இலக்குகளை நோக்கியவையாக இருந்துள்ளனர். அவ்வாறு அவர்கள் இலக்கியங்களை வளர்த்தெடுத்துள்ளனர். பிற்கால தூது, கலம்பகம், ஆற்றுப்படை, ஐந்திணை போன்ற பல இலக்கிய வகைகளுக்கு முன்னோடிகளாக விளங்கியுள்ளனர்.

            அகப்பொருள் இலக்கியத்தில் காமம் மிக்க கழிபடர் கிளவி என்னும் துறையில் தலைவி தன் உள்ளத்து உணர்ச்சியாம் செய்தியை நாரை, சிறு வெள்ளாங்குருகு, கிளி முதலியன வழியாகத் தலைவனுக்கு அனுப்புவதாக அமைந்த 54, 70, 102, ஆகிய நற்றிணைப் பாடல்களையும், புறப்பொருள் இலக்கியத்தில் பிசிராந்தையார் தம் நண்பன் கோப்பெருஞ்சோழனிடம் அன்னச் சேவலைத் தூது விடுத்ததாய் வந்துள்ள பாடலையும் பிற்கால தூது இலக்கியத் தனி நூலிற்கான முன்னோடியாகக் காணலாம்.

            நாகரிகம் வளர்ச்சியுறத் தொடங்கிய காலத்தில் பல்வேறு நாடுகளில் முதன்முதல் பாணரும் பாடினியரும் இலக்கிய வளர்ச்சிக்கு மூல காரணமாக இருந்துள்ளனர். அவர்கள் மாவீரர்களின் புகழை ஊர்ப்பொது மன்றங்களிலும், திருவிழா நடைபெற்ற இடங்களிலும், மன்னரின் அவைகளிலும் இசையோடு பாடிக் கேட்போரை மகிழ்வித்தனர். அவர்களுடைய பாடல்கள் வீர உணர்ச்சியை ஊட்டியதோடு மகிழ்ச்சி அளிப்பதாகவும் இருந்தன. அவர்களுடைய பாடல்களில் மூதுரைகளும், பழமொழிகளும், அறவுரைகளும், அறிவுரைகளும் இலைமறை காய் போல இங்குமங்குமாக இடம் பெற்றிருந்தன. இவ்வாறான இலக்கியம் தொடங்கிய காலத்தைப் பாணர் பாடினியரின் காலம் என்பர்.

பாணர்களின் பெயரில் அமைந்த ஊர்கள்

·         பாணான் பட்டுவிழுப்புரம்   - விழுப்பும்

·         பாண்டிச் சேரி    - பாண்டிச் சேரி   - புதுவை மாநிலம்

·         பாச்சேரி           - கள்ளக்குறிச்சி    - விழுப்புரம்

·         பாணர் பரணர்   - சிவகங்கை      - சிவகங்கை

·         பாணன் வயல்    - திருப்பத்தூர்   - திருப்பத்தூர்

·         பாண்சேரி        - திருக்கழுக்குன்றம்    - காஞ்சிபுரம்

·         பாணஞ்சேரி   - கேரளா

·         யாழ்ப்பாணம்   -இலங்கை

பாணர்களின் பிறத் தொழில்கள்

            பாணர்களில் சிலர் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டதாகவும், சங்க இலக்கியப் பாடல்கள் வழி அறிய முடிகிறது.

            பச்சூன் பெய்த சுவல்பிணி பைந்தோல்

          கோள்வல் பாண்மகன் தலை வலிந்து யாத்த

          நெடுங்கணைத் தூண்டில் நடுங்க நாள் கொளீஇ” 34

என்ற பாடல் பாணன் தூண்டிலிட்டு மீன் பிடிப்பது விளக்கப்படுகிறது. குறுந்தொகை,

            பாணர் பசுமீன் சொரிந்த மண்டை” 35

என்றும்,

            மீன் சீவும் பாண்சேரி யோடு

          மருதம் சான்ற தண்பணை”36

என்றும் குறிப்பிடும் பாடலடிகள் மீனை அறுப்பதை விளக்குகின்றன. மற்றொரு ஐங்குறுநூற்றுப் பாடல், பாணர் பிடித்த மீனை விற்று அரிசியைப் பண்டமாற்று முறையில் பெற்றமையைக் கூறுகின்றது. அதற்கு,

            வாலைவல் பாண்மகன் வாலெயிற்று மடவாள்

           வராஅல் சொரிந்த வட்டியுள் மனையோள்

          யாண்டு கழி வெண்ணெல் நிறைக்கும் ஊரே” 37

என்ற பாடல் சான்றாகிறது.

பாணரின் வீழ்ச்சி நிலைக்கான காரணங்கள்

·         பாணர்கள் செல்வத்தைச் சேமிக்கும் பழக்கமற்றவர்கள்.

·         கள்ளுண்ணும் தன்மை மிக்கோர்ஒழுக்கம் பிறழல்

·         பாணர் ஒரு நாடோடிக் குழுவாக வாழ்ந்தனர்

·         பாணர் கலைத் தொழிலைத் தவிர்த்து நிலையான பொருளாதார வளர்ச்சிக்குத் தம்மை உட்படுத்தாமல் கிடைத்த்தை உண்டு வாழும் தன்மையால் வீழ்ச்சியடைந்துள்ளனர்.

·         பிராமணர்களின் சடங்கியல் செல்வாக்கு பாணர்களைக் கீழ் நிலைப்படுத்தியது.  

பாணர்களும் அரசியல் சரிவுநிலையும்

            சங்க கால அரசுகளில் உயர்நிலையில் இருந்த பாணர்கள் மெல்ல சரிவுநிலை செய்யப்பட்டனர். சங்க காலத்தில் நுழைந்த ஆரிய பிராமணர் மெல்ல மெல்லப் பெருவேந்தர் குறுநில மன்னர்களோடு உறவு பூண்ட நிலையில் பாணர்கள் சிறுகச்சிறுக மன்னர்களோடு விலக்கம் அடைகின்றனர்.

ஒரு காலத்தில் பாணரால் புகழப்படுவது அரச அந்தஸ்தின் சின்னமாகக் கருதப்பட்டது. ஆனால் இப்பொழுது பிராமணர்கள் சடங்காற்றல் அதிகாரத்தைப் பெற்றுக் கொள்வதுடன் மன்னனின் சுற்றத்தவராகிறார். உள்ளூர் மரபுகள் பிராமணியத்துடன் முரண்படுகிறது. பிராமணியச் செல்வாக்கின் அதிகரிப்பினைக் காட்டுகிறது. மன்னர்களைப் பிடித்துக் கொண்ட புதிய அந்தஸ்துச் சின்னத்தின் வளர்ச்சியை மதுரைக்காஞ்சியிலும் தெளிவாகச் சொற்களில் காண முடிகிறது. மாங்குடிமருதனார், பாண்டியன் நெடுஞ்செழியனிடம் பலரையும் வெற்றி கொண்ட பெருமையை உடையவன் என்பதுடன், பாணர் போன்ற மக்களுக்குப் பாதுகாப்பை அளித்தவன் எனக் கூறுவர்.  நெடியோன் முதுகுடுமிப் பெருவழுதியின் ஐதீக மூதாதை”38 ஆகவும், பலயாக சாலைகளைக் கட்டுவித்தவன் எனவும் புகழப்படுகின்றான். புலவன் அவனிடம் பெருமைக்குரியவராலும், உயர்குடியினராலும் புகழப்படவேண்டும் எனக் கூறுவதைக் காணும்போது பாணர் உயர்நிலையில் இருந்து கிழிறக்கப்பட்டச் சமூகத்தின் அடிநிலைக்குத் தள்ளப்படுவதை அறியலாம்.

நிறைவாக, 

நிரம்ப ஓதிய புலமையும், வாய்மையும், துறை பல முற்றிய அறிவும், இசைக்கலை நுட்பமும், வரும் பொருள் உரைக்கும் உணர்வும், நிலைத்த புகழும், சொல்வன்மையும் உடையவர் பாணர்கள் என்பதைப் பின்வரும் சங்கச் சான்றோர் வாக்குகளால் முறையே அறியலாம்.

            நீயும் அம்மோ முதுவா யிரவல” 39

          முதுவாய் இரவல”40

முதுவாய்க் கோடியவர்”41      

துறைபல முற்றிய பைதீர் பாணர்”42

          விரகறி பொருந” 43

          அன்னாய் இவன் ஓர் இளமாணாக்கன்

           தன்னூர் மன்றத்து என்னன் கொல்லோ”44

எனப் பல சிறப்புச் சொல்லடைவுகளால் பதியப் பெற்றுள்ளனர். இதன் வழி இவர்களின் தனித்திறன், கலைத்திறன், வருவதுரைக்கும் கணிப்புத்திறன் எனப் பல்லாற்றானும் சிறந்து விளங்கிய பழம் தமிழக்குடியினர் ஆவர் என்பது அறிய முடிகிறது.

பாண் பெருமக்கள் அறிவுத் துறையைச் சார்ந்தவர்கள் ஆதலின் தமிழகத்தின் நாட்டு வாழ்விலும், வீட்டு வாழ்விலும், சமுதாய வாழ்விலும், சமய வாழ்விலும் இடம் பெற்று இருந்தனர் என்பது மறுக்கவோ மறைக்கவோ முடியாத உண்மை.

அடிக்குறிப்புகள்

1.    தொல்காப்பியம்,புறத். நூற்பா -36.

2.    புறநானூறு, பா எண். 335:7-8

3.    பிங்கல நிகண்டு, பக்.815

4.    சிறுபாணாற்றுப்படை, பா.வரி. 462

5.    பெரும்பாணாற்றுப்படை, பா.வரி.462

6.    புறநானூறு, 11:14-15

7.    நற்றிணை:310:9-10

8.    புறநானூறு,152

9.    பதிற்றுப்பத்து,23:5-10

10. புறநானூறு, 212:6-8

11. மலைபடுகடாம், 54-55

12. பெரும்பாணாற்றுப்படை, 20-22

13. புறநானூறு, பா.எண்,390

14. மேலது, பா.எண்,382

15. மேலது,பா.எண்,244-1

16. மேலது, பா.எண், 242-3

17. .காந்திதாஸ், சங்க இலக்கியங்களில் நிகழ்த்து கலை, கலைஞர்கள், .193.  

18. .காந்திதாஸ், சங்க இலக்கியங்களில் நிகழ்த்து கலை, கலைஞர்கள், .193.  

19. புறநானூறு, பா.எண்-69

20. மேலது, பா.எண்-141

21. பொருநராற்றுப்படை, பா.வரி,79-81

22. குறுந்தொகை,பா.எண்-33

23. புறநானூறு, பா.எண்.68:1-2

24. மேலது, பா.எண்.376:10-11

25. மேலது, பா.எண்,69:3-4

26. மேலது, பா.எண், 398:18-20

27. மேலது, பா.எண்.136:6-9

28. மேலது, பா.எண்.326:9-12

29. மேலது, பா.எண்.239

30. மேலது, பா.எண்.328:7-12

31. மேலது, பா.எண்.376:14-16

32. பதிற்றுப்பத்து,பா.வரி.55:10-12

33. தொல்காப்பியம்,491

34. பெரும்பாணாற்றுப்படை, பா.வரி.283-285

35. குறுந்தொகை, பா.எண்:169-4

36.  பெரும்பாணாற்றுப்படை,பா.வரி.348 

37. ஐங்குறுநூறு, பா.எண்.48:1-3

38. மதுரைக்காஞ்சி, பா.வரி.215

39. புறநானூறு, பா.எண்.180:9

40. சிறுபாணாற்றுப்படை.பா.வரி.40

41. பட்டினப்பாலை,பா.வரி.253

42. மலைபடுகடாம், பா.வரி.40

43. பொருநராற்றுப்படை, பா.வரி.3

44. குறுந்தொகை, பா.எண்.33

 

 

துணை நின்ற நூல்கள்

1.    காந்திதாஸ். Dr. , சங்க இலக்கியங்களில் நிகழ்த்து கலை, கலைஞர்கள், A.M. பதிப்பகம், சென்னை, முதற்பதிப்பு 2019.

2.    பாலசுப்பிரமணியன். முனைவர்.கு.வெ. சங்க இலக்கியத்தில் கலையும் கலைக்கோட்பாடும், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., அம்பத்தூர், சென்னை, முதற்பதிப்பு 2016

3.    சிதம்பரனார். சாமி. பத்துப்பாட்டும் பண்டைத் தமிழரும், அறிவுப் பதிப்பகம், சென்னை, இரண்டாம் பதிப்பு 2006.

 

 

------

 

           

           

 

 

 

 

 

 

 

Comments

Popular posts from this blog

எண்ணம் போல் வாழ்வு

                                                                        எண்ணம் போல் வாழ்வு             நினைவுகளே பழக்கவழக்கங்களாக மாறுகின்றன. எனவே தான் எண்ணம் போல் வாழ்வு அனைவருக்கும் அமைகிறது. வெற்றி பெற்ற அனைவரும் பிறரைத் தன் நடத்தையால் மகிழ்விக்க நினைத்தவர்களே என்பதை நாம் நினைவில் நிறுத்த வேண்டும். ·         வங்கியில் பணத்தைச் சேமிப்பதைவிட இதயத்தில் இனிய எண்ணங்களைச் சேமிப்பது மகிழ்ச்சியான வாழ்விற்கு உதவும் வைப்பு நிதியாகும். ·      மனம் - மகிழ்ச்சி அளிக்காத நிகழ்வுகளை மறந்து விடும் இயல்புடையது. ·         வெறுப்பு - மனத்தையும், உணர்வையும் பற்றிக் கொண்டுள்ள தொற்று நோய். எனவே வெறுப்பிற்கு விடுதலை தரும்வரை மகிழ்ச்சி நம்மை அணுகாது. ·   ...

பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்

திருக்குறளில் எனது சிறு முயற்சியாக… .  " பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்"  என்ற இத்தலைப்பில் அமைந்த 133 வரிகள் கொண்ட இப்படைப்பு முருகனின் ” கந்த சஷ்டி  கவசம் ” போன்று உருவாக்கப்பட்டது. இப்பகுதி அறத்துப்பால் 38  அதிகாரங்கள், பொருட்பால் 70  அதிகாரங்களிலிருந்து மட்டும் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்ற முறையில், திருக்குறளின் சாராக அமைத்து வழங்கியுள்ளேன். அறமும், பொருளும் ஒருவருக்கு அமைந்தால் இன்பம் தானாகக் கிட்டும் என்ற நோக்கத்தில் அமைக்கப்பட்டது. ”பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்” காக்க காக்க அறத்தைக் காக்க (1) காக்க காக்கக் குறளைக் காக்க உலக மொழிகளில் ஒப்பற்ற நூலாம், நோக்க நோக்க பெயா்த்து நோக்க மனிதன் கற்று மனிதம் காக்க ஐம்பொறி உணா்வை காக்க காக்க புகழுடன் வாழ ஒழுக்கம் காக்க அறநெறி வாழ்வை இறைவழி காக்க வானம் பொய்யா வளத்தைக் காக்க பசிப்பிணி யில்லா உலகைக் காக்க பற்றற்ற வாழ்வை பரிவுடன் காக்க அறத்தைக் காக்க அன்பைக் காக்க (2) குறையிலா வாழ்வை குணமுடன் காக்க இல்லற வாழ்வுடன் நல்லறம் காக்க பண்பொடு பயனும் அறத்துடன் காக்க வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க வாழ்க...

மனிதனாக வாழ ...

  மனிதனாக வாழ ... ·         பிறர் உன்னை தூற்றும் பொழுது தலை நிமிர்ந்து நில். ·         பொறாமை, கோபம், வீண் மயக்கம் போன்ற குணங்களை விரோதிகளாக எண்ணுதல். ·         வெற்றி -   தோல்வி,   இன்பம் – துன்பம் இரண்டையும் சமமாக பாவித்தல். ·         உண்மைக்குப் புறம்பானவற்றைச் செய்யாதிருத்தல். ·         நண்பர்கள் இல்லையென்றாலும் பரவாயில்லை. பகைவர்கள் இல்லாமல் வாழ முயற்சி செய்தல். ·         மனத்திடத்தோடு வாழ்தல். ·         ஏற்றத் தாழ்வு இல்லா மனநிலையுடன் இருத்தல். ·         மனிதனுக்கு உரியது - கலங்காத அறிவு, அன்பு நிறைந்த மனம், ஆரோக்கியமான   உடல். ·         எதற்கும் அஞ்சாதே -   பயம் நம்மை கோழையாக்கி விடும்.      யாரையும் வெறுக்காதே ...