மனிதநெறிகளாக...
விழியுள்ளவன் விழியற்றவனுக்கு வழிகாட்ட வேண்டும். இருப்பவன் இல்லாதவனைப் பராமரிக்க வேண்டும். கற்றவன் கல்லாதவனின் கண் திறக்க
வேண்டும். தன்னுடைய அடிப்படைத் தேவைகளுக்கு மிஞ்சியதைத் தானே மனம் உவந்து இல்லாதவனுக்குத்
தர வேண்டும். சமூகத்தின் மேடு பள்ளங்களைச் சமன்படுத்த மதங்கள் கண்டுபிடித்த மனிதநெறிதான்
தானம். இதுதான் மனிதநேயத்தின் அடையாளமாகும்.
”வழங்கலும் துய்த்தலும் தேற்றாதான் பெற்ற
முழங்கு
முரசுடைச் செல்வம் – தழங்கருவி
வேய்முற்றி
முத்துதிரும் வெற்ப! அதுவன்றோ
நாய்
பெற்ற தெங்கம் பழம்” (பழமொழி -151)
என்ற பழமொழி
பாடலில், ஒருவனிடம் செல்வம் இருந்தால் அடுத்தவனுக்கு வழங்க வேண்டும். தானும் அனுபவிக்க
வேண்டும். இரண்டும் இல்லாமல் பெட்டியில் வைத்துப் பூட்டி மகிழ்ந்தால், அச்செல்வம் தானும்
தின்னவியலாமல், பிறருக்கும் தர விரும்பாமல் நாய் உருட்டிப்
பார்க்கும் தேங்காய்க்கு சமம். இந்தச் சிந்தனை எத்தனை செல்வந்தர்கள் உணர்ந்துள்ளார்கள்.
இருப்பவன் இல்லாதவனுடன் பகிர்ந்து கொள்ளவேண்டும் என்பதுதான் மனிதநெறியாகும்.
பிறர் துயர் தீர்க்கும் பெருங்ருணை ஒன்றுதான்
மனித வாழ்வை அர்த்தமுள்ளதாக ஆக்கும். ”தன்பெண்டு, தன் பிள்ளை, சோறு, வீடு, சம்பாத்யம்
இவையுண்டு, தானுண்டு” என்று வாழும் தன்னலத்தில் மனிதப் பிறவிக்கு எந்த மகத்துவமும்
இல்லை.
வாழ்க்கையின் நோக்கத்தை “Life is to
give. Not to take’ என்று ஒரு வரியில் விளக்கினார் பிரெஞ்சு எழுத்தாளர் விக்டர் ஹயூகோ.
பசுவின் பால் கன்றுக்கு, தாயின் பால் குழந்தைக்கு என்பதுதான் இயற்கையின் கொள்கை.
Comments
Post a Comment