Skip to main content

கொல்லிப்பாவை

 

கொல்லிப்பாவை


          கொல்லிப்பாவை என்பது கொல்லிமலைமேல் இருந்த அழகான பெண் உருவம். இந்தக் கொல்லிப் பாவை, காண்பவர் மனத்தைக் கவர்ந்து அவர்களை மயங்கச் செய்யும் ஆற்றல் வாய்ந்தது. இப்பாவை, சங்கப் புலவர்களால் சங்க நூல்களில் கூறப்படுகிறது. இது கொல்லி மலைமேல் இருப்பதால் இதற்குக் கொல்லிப் பாவை எனப் பெயர் பெற்றது.

          கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் கொல்லி மலையானது கடை எழு வள்ளல்களுள் ஒருவனாகிய ஓரி என்னும் குறுநில மன்னனுக்கு உரியதாக இருந்தது. வள்ளல் ஓரி, வில் வித்தையில் வல்லவன். ஆகவே, அவன் சங்கப் புலவர்களால் வல்வில் ஓரி என்று கூறப்பட்டான்.

          ஓரி என்னும் வள்ளல் வாழ்ந்திருந்த அதே காலத்தில் காரி என்னும் மற்றொரு வள்ளலும் வாழ்ந்திருந்தான். காரி என்பவனும் கடை எழு வள்ளல்களுள் ஒருவன். முள்ளூர் என்னும் ஊரை ஆண்ட குறுநில மன்னன். காரி கொங்கு நாட்டுப் பெருஞ்சேரலிரும் பொறைக்குப் படைத் தலைவனாக இருந்தான். ஆகவே, காரி ஓரியுடன் போர் செய்து, அப்போரிலே ஓரியைக் கொன்று, அவனுடைய கொல்லி மலையைக் கைப்பற்றி, அதனைச் சேர மன்னனுக்குக் கொடுத்தான். இச்செய்தியைக் கல்லாடனார் என்னும் புலவர்,

                    ”……. …………………செவ்வேல்

                முள்ளூர் மன்னன் கழல் தொடிக் காரி

                செல்லா நல்லிசை நிறுத்த வல்வில்

                ஓரிக் கொன்று சேரலர்க் கீத்த

                செவ்வேர்ப பலவின் பயங்கெழு கொல்லி” (அகம், 209)

 என்று இச்செய்தியைக் கூறுகிறார். எனவே, ஓரிக்கு உரியதாக இருந்த கொல்லிமலை பெருஞ்சேரலிரும்பொறைக்கு உரியதாயிற்று.

கொல்லிப் பாவை

          கொல்லிப் பாவை என்பது கொல்லி மலை மேல் சென்று பார்த்தால், ஓர் அழகிய மங்கையின் உருவம், காண்பவர் மயங்கத்தக்க காட்சியுடையதாகத் தோன்றுமாம். அருகில் சென்று பார்த்தால் இது காட்சிக்கு மறைந்துவிடுமாம்.

          கொல்லிமலை கடல் மட்டத்திற்கு மேல் 4000 அடி உயரமாக இருக்கிறது. வடக்குப் பக்கத்தில் சரிவாகத் தாழ்ந்து இந்தப் பகுதியில் வரகூர், கோம்பை, வால கோம்பை, என்று இம்மலை பெயர் பெற்றுள்ளது. நாமக்கல் பக்கத்திலிருந்து பார்த்தால், இந்தக் கொல்லிமலையின் உச்சி சமதரைபோல ஒரே மட்டமாகக் காணப்படுகிறது. இதனால் இம்மலை சதுரகிரி என்றும் கூறுவர்.

          இங்கு வளமாக வளர்ந்து நடுத்தர வயதுள்ள ஓர் அழகிய மங்கையின் தோற்றத்தைக் காட்டுகிற கொல்லிப் பாவையைக் கண்டு ஆடவர் மயங்கினர். ஆடவரை மயக்கும் இப்பாவையைப் பற்றிச் சங்கப் புலவர்கள் தமது பாடல்களில் பாடியிருக்கிறார்கள்.

           ”வல்வில் ஓரி கொல்லிக் குடவரைப்

           பாவையின் மடவந் தனனே

           மணத்தற் கரிய பணைப்பெருந் தோளே”(குறுந்,100)

என்று தன் தலைவியைக் கொல்லிப் பாவைக்கு ஒப்பாகத் தலைமகன் கூறியதாகக் கபிலர் பாடுகிறார்.

          ”களிறு கெழு தானைப் பொறையன் கொல்லி

          ஒளிறுநீர் அடுக்கத்து வியலகம் பொற்பக்

          கடவுள் எழுதிய பாவையின்

         மடவது மாண்ட மாஅ யோளே” (அகம், 62)

என்று தலைமகன் ஒரு தலைமகளைக் கொல்லிப் பாவைக்கு உவமை கூறியதாகப் பரணர் பாடுகிறார்.

          ஆடவர் மனத்தைக் கவர்ந்து மயங்கச் செய்யும் அமைப்பு வாய்ந்த இப்பெண் உருவம், இளவெயில் காயும் போது மிகுந்த எழிலுடன் காணப்படுமாம். அன்றியும் இந்தப் பாவை, புயல் அடித்தாலும், பெருமழை பெய்தாலும், இடி விழுந்தாலும், வேறு எதனாலும் அழியாதது. அதனால் இதனைத் தெய்வப் பாவை என்றும், கடவுட் பாவை என்றும், மாயா இயற்கைப் பாவை  என்றும், வினைமாண் பாவை என்றும், பூதம் அமைத்த விசித்திரப்பாவை என்றும் புலவர்கள் கூறிவார்கள்.

          ”செவ்வேர்ப் பலவின் பயங்கெழு கொல்லி

         நிலைபெறு கடவு ளாக்கிய

         பலர் புகழ் பாவை ……….” (அகம், 209)

என்று கல்லடானாரும்,

          ”பெரும்பூண் பொறையன் பேஎமுதிர் கொல்லிக்

         கருங்கண் தெய்வம் குடவரை எழுதிய

         நல்லியற் பாவை” (குறுந், 89)

என்று பரணரும்

          ”பயங்கெழு பலவின் கொல்லிக் குடவரைப்

        பூதம் புணர்ந்த புதிதியல் பாவை

        விரிகதிர் இளவெயில் தோன்றி யன்ன….” (நற், 192)

என்று நற்றிணை பாடலில் இடம்பெற்றுள்ளது.

          கொல்லி மலையில் இருந்த இந்தப் பாவை, உருவெளித் தோற்றமாகும். அதாவது, உள்ளது போலக் காணப்படுகிற ஒரு பொய் தோற்றம். இதைச் சிற்பக் கலைஞன் கற்பாறையில் பெண் உருவமாக அமைத்து வைக்கவில்லை. குறிப்பிட்ட ஓரிடத்திலிருந்து பார்க்கும் போது, மலையினிடையே பாறைக்  கல்லிருந்து எழில்மிக்க பெண் ஒருத்தி நிற்பது போன்று தோற்றம் காணப்படுகிறது. அந்த உருவம் கண்ணையும் கருத்தையும் கவரும் வனப்புடையது. ஆனால், அருகில் சென்று பார்த்தால் அது மறைந்து விடும். குறிப்பிட்ட அந்த இடத்துக்கு வந்து பார்த்தால் அவ்வுருவம் மீண்டும் தோன்றும். மலைப் பாறையின் அமைப்புக்களும் சூரிய வெளிச்சத்தின் சாயலும் சேர்ந்து, பெண் மகளின் உருவம் போல் வெளிச்சத்தின் சாயலும் சேர்ந்து, பெண் மகளின் உருவம்போல் அமைந்து காணப்பட்ட இது, வெறும் உருவெளித் தோற்றமே. அழகும், எழிலும், சாயலும் அமைந்த நடுத்தர வயதுள்ள பெண்மணி போன்ற காட்சியளித்த இவ்வுருவெளித் தோற்றத்தைச் சங்கப் புலவர்கள் தெய்வப்பாவை என்று கூறியதில் வியப்பொன்றும் இல்லை.

          இக்காலத்தில் இந்தப் பாவையைப் பற்றிப் புதிய கதை – கற்பனைக் கதை கூறப்படுகிறது. பாண்டியன் மீது போர் செய்யக் களபரன் என்னும் அரசன் வந்தானாம். அச்சமயம் பாண்டியன் இராணியுடன் கொல்லி மலை மேல் இயற்கைக் காட்சிகளைக் கண்டு மகிழ்ந்திருந்தானாம். அப்போது போர் முரசு கொட்டும் ஓசை கேட்டதாம். அப்போது பாண்டியன் அரசியிடம் ‘இங்கேயே இரு’ விரைவில் வந்து விடுகிறேன் என்று கூறி போர்முனைக்குச் சென்றானாம். சென்ற பாண்டியன் திரும்ப வரவில்லை. வருவான் வருவான் என்று அவள் மலைமேல் காத்துக் கொண்டிருக்கிறாளாம். அவள்தான் இந்தக் கொல்லிப்பாவையாம். இது இக்காலத்தில் கூறப்படுகிற கற்பனை கதை.

          ஆனால், இந்தக் கற்பனைக் கதையிலும் சரித்திர செய்தி யொன்று அமைந்திருக்கிறது. பிறகு, அதாவது, கி.பி.250 வருடங்களுக்குப் பாண்டியனுடன் போர் செய்து, பாண்டிய நாட்டைப் பிடித்துகொண்டு, அந்நாட்டை அரசாண்டவர் என்பது இச்செய்தியைச் சின்னமனூர் செப்புப் பட்டயம் கூறுகிறது. கொல்லிப் பாவையைப் பற்றிய கதையிலும் பாண்டியன் களவரனுடன் போர் செய்யச் சென்றான் என்றும் செய்தி கூறப்படுகிறது. கொல்லிப் பாவைக் கதை கற்பனையாக இருந்தும் அதில் சரித்திரச் செய்தி புகுத்தப்பட்டிருப்பது கருதத்தக்கது.

          சேலத்திலிருந்து நாமக்கல்லுக்குப் போகிற சாலையில் 51/4 மைல் தூரத்தில் பொய்மான் கரடு என்னும் பாறைக்கல் இருக்கிறது. சாலையின் மேற்குப் பக்கத்தில் இருக்கிற இப்பாறையைச் சற்றுத் தூரத்திலிருந்து பார்க்கும்போது, மான் ஒன்று ஓடுகிறது போல ஒரு தோற்றம் காணப்படுகிறது. அருகில் பார்த்தால், அந்த மான் உருவம் மறைந்து விடுகிறது. ஆகவே இதற்குப் ‘பொய்மான் கரடு’ என்று பெயர் கூறப்படுகிறது. மாரீசன் என்னும் அசுரன் மான் போல உருவெடுத்து வந்த்தையும், அதனை பிடிக்க இராமன் சென்ற போது அது ஓடியதையும் பொய்மான் கரடு குறிப்பதாக கதை கற்பிக்கப்படுகிறது இது பாமர்ர் பகர்ச்சியே.

          இந்தப் பொய்மானும் கொல்லிப் பாவைளும் வெறும் தோற்றங்களே. உண்மையில் உள்ள பொருள்கள் அல்ல. தூரப் பார்வைக்கு இவை மான் போலவும் காட்சியளிக்கின்றன. இதனால்தான் அருகில் சென்று பார்த்தால் காணப்படாமல் தூரத்திலிருந்து பார்த்தால் கண்ணுக்குப் புலனாகின்றன.

பார்வை நூல்

1.  மயிலை.சீனி வேங்கடசாமி -  நுண்கலைகள், நாம் தமிழர் பதிப்பகம், திருவல்லிக்கேணி,  சென்னை -600 005.

Comments

Popular posts from this blog

எண்ணம் போல் வாழ்வு

                                                                        எண்ணம் போல் வாழ்வு             நினைவுகளே பழக்கவழக்கங்களாக மாறுகின்றன. எனவே தான் எண்ணம் போல் வாழ்வு அனைவருக்கும் அமைகிறது. வெற்றி பெற்ற அனைவரும் பிறரைத் தன் நடத்தையால் மகிழ்விக்க நினைத்தவர்களே என்பதை நாம் நினைவில் நிறுத்த வேண்டும். ·         வங்கியில் பணத்தைச் சேமிப்பதைவிட இதயத்தில் இனிய எண்ணங்களைச் சேமிப்பது மகிழ்ச்சியான வாழ்விற்கு உதவும் வைப்பு நிதியாகும். ·      மனம் - மகிழ்ச்சி அளிக்காத நிகழ்வுகளை மறந்து விடும் இயல்புடையது. ·         வெறுப்பு - மனத்தையும், உணர்வையும் பற்றிக் கொண்டுள்ள தொற்று நோய். எனவே வெறுப்பிற்கு விடுதலை தரும்வரை மகிழ்ச்சி நம்மை அணுகாது. ·   ...

மனிதனாக வாழ ...

  மனிதனாக வாழ ... ·         பிறர் உன்னை தூற்றும் பொழுது தலை நிமிர்ந்து நில். ·         பொறாமை, கோபம், வீண் மயக்கம் போன்ற குணங்களை விரோதிகளாக எண்ணுதல். ·         வெற்றி -   தோல்வி,   இன்பம் – துன்பம் இரண்டையும் சமமாக பாவித்தல். ·         உண்மைக்குப் புறம்பானவற்றைச் செய்யாதிருத்தல். ·         நண்பர்கள் இல்லையென்றாலும் பரவாயில்லை. பகைவர்கள் இல்லாமல் வாழ முயற்சி செய்தல். ·         மனத்திடத்தோடு வாழ்தல். ·         ஏற்றத் தாழ்வு இல்லா மனநிலையுடன் இருத்தல். ·         மனிதனுக்கு உரியது - கலங்காத அறிவு, அன்பு நிறைந்த மனம், ஆரோக்கியமான   உடல். ·         எதற்கும் அஞ்சாதே -   பயம் நம்மை கோழையாக்கி விடும்.      யாரையும் வெறுக்காதே ...

பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்

திருக்குறளில் எனது சிறு முயற்சியாக… .  " பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்"  என்ற இத்தலைப்பில் அமைந்த 133 வரிகள் கொண்ட இப்படைப்பு முருகனின் ” கந்த சஷ்டி  கவசம் ” போன்று உருவாக்கப்பட்டது. இப்பகுதி அறத்துப்பால் 38  அதிகாரங்கள், பொருட்பால் 70  அதிகாரங்களிலிருந்து மட்டும் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்ற முறையில், திருக்குறளின் சாராக அமைத்து வழங்கியுள்ளேன். அறமும், பொருளும் ஒருவருக்கு அமைந்தால் இன்பம் தானாகக் கிட்டும் என்ற நோக்கத்தில் அமைக்கப்பட்டது. ”பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்” காக்க காக்க அறத்தைக் காக்க (1) காக்க காக்கக் குறளைக் காக்க உலக மொழிகளில் ஒப்பற்ற நூலாம், நோக்க நோக்க பெயா்த்து நோக்க மனிதன் கற்று மனிதம் காக்க ஐம்பொறி உணா்வை காக்க காக்க புகழுடன் வாழ ஒழுக்கம் காக்க அறநெறி வாழ்வை இறைவழி காக்க வானம் பொய்யா வளத்தைக் காக்க பசிப்பிணி யில்லா உலகைக் காக்க பற்றற்ற வாழ்வை பரிவுடன் காக்க அறத்தைக் காக்க அன்பைக் காக்க (2) குறையிலா வாழ்வை குணமுடன் காக்க இல்லற வாழ்வுடன் நல்லறம் காக்க பண்பொடு பயனும் அறத்துடன் காக்க வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க வாழ்க...