இலக்கியத்தில் தமிழர் காதல்
உணர்வும், அறிவும் ஒருங்கிணைந்த கலவையே மனித
இனம். உணர்வுக்கு இடமில்லாத வறண்ட அறிவு நன்மையின் பக்கமே எப்போதும் நடக்கும் என்று
எதிர்பார்க்க முடியாது. உணர்வில் முகிழ்க்கும் அன்பு தான் இதயங்களை ஈரப்படுத்தும்.
இல்லறத்தை மேன்மைப்படுத்தும். மனிதநேயத்தை வளர்த்தெடுக்கும். உலகத்தை ஒருங்கிணைக்கும்.
நாடு, இனம், மொழி, மதம், சாதி, அனைத்தும்
ஒரு வகையில் மனிதகுலத்தைப் பேதப்படுத்தும் தடைச்சுவர்கள். அன்பு ஒன்று தான் உயிர்களைத்தையும்
ஒன்றாக இணைக்கும் உயரிய பாலம். அதனால் தான் ‘அன்பின் வழியது உயிர்நிலை’ என்று வள்ளுவர்
அறிவுறுத்துகிறார். அன்பே ஓர் ஆணையும், ஒரு பெண்ணையும் காதலர்களாக்கி அகவாழ்க்கையில்
ஈடுபட அடித்தளமாக்குகிறது.
சங்க இலக்கியம் அகத்திணையில் காதல் பாடுவதால்
சிறப்பு என்பதில்லை. இவ்வகையான காதலை இவ்வகையாகத்தான் பாடுவது என்ற கட்டுப்பாடே அகத்திணையின்
சிறப்பு. காதல் பொருளிலும் கட்டுப்பாடு. அதனைச் சொல்லும் முறையிலும் கட்டுப்பாடு. இவை அகத்திணை நெறிகள். பிற இலக்கியங்கள் சுவைக்காக
எக்காதலையும் பாடும். அகத்திணை அன்புக் காதலை மட்டுமே பாடும். அறிவுறுத்தும். ஐந்திணைக்
காதலின் இயல்பினை விளக்கும் தொல்காப்பியத்தில்,
”இன்பமும் பொருளும் அறனும் என்றாங்கு
அன்பொடு
புணர்ந்த ஐந்திணை”
என்று குறிப்பிடுவதை
நாம் கருத்தூன்றிச் சிந்தித்தால், வெறும் உடல் இச்சையால் உந்தப்படும் இரண்டு உள்ளங்களில்
உயர்ந்த காதல் ஒரு போதும் உருவாவதில்லை. இழிந்த காமத்தில் அன்பும் இல்லை; அறனும் இல்லை;
உண்மையான இன்பமும் இல்லை; ‘அன்பொடு புணர்ந்த
ஐந்திணை’ இதுதான் நேரிய காதலின் நல்ல அடையாளமாகும்.
சங்த தமிழர்களிடத்தில் அன்புடைய தலைவனும்
தலைவியும் கூடிக் கலந்தொழுகும் காதலொழுக்கம் களவு என்றும், கற்பு என்றும் இருவகைப்பட்டது.
உருவும், திருவும், பருவமும், குலனும், குணனும், அன்பும் ஒத்த தலைமகனும், தலைமகளும்
அடுப்பாரும் கொடுப்பாரும் இன்றித் தாமே எதிர்ப்பட்டுக் கூடிக் கலப்பது களவு என்றும்,
இருவரும் முறைப்படி மணந்து இல்லிருந்து அறம் புரிந்து ஒழுகுவது கற்பென்றும் விதிக்கப்பட்டது.
அதுதான் தமிழினப் பண்பாடு. இந்த வாழ்க்கை தமிழருக்கே உரியது. இன்றும் மலைவாழ் பழங்குடி
மக்களிடையே அங்குமிங்குமாய் முந்தைய களவு நெறியின் எச்சத்தைக் காண முடிகிறது.
சங்க இலக்கியத்தின் அகப்பாடல்களின் தனிச்
சிறப்பு, அவற்றுள் எந்தப் பாடலும் ஒரு தனி மனிதனை மையப்படுத்திப் பாடப்படவில்லை என்பதுதான்,
”மக்கள் நுதலிய அகனைந் திணையும்
சுட்டி
ஒருவர்ப் பெயர்கொளப் பெறாஅர்”
என்ற பாடலில்,
தனிப்பட்ட ஒருவரின் இயற்பெயரோ, குடிப்பெயரோ, ஊரோ, அடையாள மாலையோ அகப்பாடலில் சொல்லப்
பெறுவதில்லை.
அன்புக் கற்களால் கட்டப்படாத குடும்ப மாளிகையில்
அவநம்பிக்கை மட்டுமே குடியிருக்கும்.
பார்வை நூல்
1. மனமும் மனிதனும் – தமிழருவி மணியன், கற்பகம் புத்தகாலயம்,
சென்னை – 600 017.
Comments
Post a Comment