ஆசை
நாம் வாழும் வாழ்க்கைக்கு ஆசைதான் உந்து
சக்தியாக இருக்கிறது. ஆனால் இந்த ஆசைதான் நாம் அனுபவிக்கும் துன்பங்களுக்கும், கவலைகளுக்கும்
அடிப்படைக் காரணமாகும். ஆசைபடுகின்ற மனிதர்கள் அனைவரும் துன்பம் இல்லாத வாழ்வை அடைய
விரும்புகின்றனர். ஆனால் ஒவ்வொரு இன்பத்திற்கும் துன்பம் தான் அடிப்படைக் காரணமாக அமைகிறது.
இன்பத்தின் நிழலாய் துன்பம் தொடரும் என்பதை யாரும் எதிர்ப்பார்ப்பதில்லை.
ஆசையை விலக்கிவிட்டு வாழ்வதற்கு நாம் யாரும்
துறவிகளில்லை. ஆசையானது ஆசைப்படும் பொருள்களை அனுபவிப்பதனால் ஒரு போதும் அடங்குவதில்லை.
அது மேலும் மேலும் தொடர்கிறது. முட்செடியைத் தின்று விட்டு நாக்கில் இரத்தம் வடிந்தாலும்
ஒட்டகம் அந்த முட்செடியையே மீண்டும் மீண்டும் நாடுகிறது. அதுபோல் துன்பத்தில் துடித்தாலும்
மனித மனம் ஆசை என்னும் தேரிலேயே அன்றாடம் பயணம் செய்கிறது.
‘பொருள்களை நினைப்பதால் பற்று உண்டாகிறது.
பற்று ஆசையாகப் பரிணமிக்கிறது. ஆசை சினமாக வடிவெடுக்கிறது. சினத்தால் மனம் மயங்குகிறது.
மயக்கத்தால் நினைவு அழிகிறது. நினைவு அழிவதால் புத்தி நாசமடைகிறது. புத்தி நாசத்தால்
மனிதன் அழிகிறான்’. என்று பகவத் கீதை ஸாங்கிய யோகத்தில் மனித வாழ்வில் தொடர் சங்கிலி
போல் ஆசையின் சீரழிவைப் பட்டியலிடுகிறது.
”ஆசைகள் அற்ற இடத்தில் குற்றங்கள் அற்றுப்
போகின்றன. குற்றங்களும், பாபங்களும் அற்றுப் போய் விட்டால் மனிதனுக்கு அனுபவங்கள் இல்லாமற்
போய்விடுகின்றன. அனுபவங்கள் இல்லையென்றால் நன்மை, தீமைகளைக் கண்டுபிடிக்க முடியாது.
தவறுகளின் மூலமே மனிதன் உண்மையை உணரவேண்டும் என்பதற்காகவே இறைவன் ஆசையைத் தூண்டி விடுகிறான்”
என்கிறார் அனுபவத்தில் சிறந்த கண்ணதாசன்.
துன்பம் தரும் ஆசையின் அளவை நம்மால் குறைத்துக்
கொள்ளலாம். ஆனால் ஆசைக்கு நாம் அணைக்கட்டலாகாது?
பார்வை நூல்
1.
தமிழருவி மணியன்
– மனமும் மனிதனும், கற்பகம் புத்தகாலயம், சென்னை – 600 017.
Comments
Post a Comment