Skip to main content

மகாத்மா காந்தி

 

மகாத்மா காந்தி


          குஜராத் மாநிலம் போர் பந்தரில் கரம்சந்த் காந்திக்கும் புத்திலி பாய்க்கும் 1869 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 2 – ந் தேதி பிறந்தார். இவரது பெற்றோர் இவருக்கு மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி என்று பெயரிட்டனர்.

காந்திய நெறி

          சேர வேண்டிய இடம் மட்டுமன்று; செல்ல வேண்டிய வழியும் தூய்மையாக இருக்க வேண்டும் என்பதே காந்தியம். காந்தியடிகளைப் பொருத்தவரையில் சத்தியமே எல்லை; அகிம்சையே அதனை அடைவதற்கு வழி; எனவே சத்தியமும் அகிம்சையும் காந்தியத்தின் அடிப்படைக் கூறுகள். இவை மட்டுமன்றி மனத்தாலும், சொல்லாலும், செயலாலும் தூய்மையாக இருத்தல், தொண்டாற்றத் துணிதல், பிறர் வாழத் தம்மையே வருத்துதல், எளிமையை எல்லா நிலைகளிலும் பேணுதல், சமயப் பொறையினைக் காப்பாற்றுதல் ஆகிய பண்புகளாலும் காந்தியம் உயர்ந்து நிற்கிறது. ஒரு இலக்கை அடைய நினைத்தால் இலக்கு முக்கியமன்று. அதனை அடைவதற்குரிய வழி முக்கியமானதாகவும் தூய்மையாகவும் இருக்க வேண்டும் என்று காந்தியடிகள் கருதினார்.

          இத்தகு ஒழுக்க நெறிகளையும், அகிம்சையையும் தாம் பின்பற்றுவதற்கு ஒரு குஜராத்திப் பாடலே காரணமாக இருந்த்தென்று காந்தியடிகள் குறிப்பிடுகின்றார். சாம்லால் பட் என்னும் கவிஞனின்உண்ணுநீர் தந்த ஒருவனுக்குக் கைம்மாறாய் வின்னமுதைப் போல் அன்னம் விரும்பிப் படைத்திடுவாய்என்னும் பாடலே காரணமாக இருந்துள்ளது. இப்பாடலின் கருத்துத் தீமை செய்தார்க்கும் நன்மையே செய் என்று நிறைவு பெறுகிறது. இது வள்ளுவரின்,

          இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண

         நன்னயம் செய்து விடல்” (குறள்,314)

என்னும் குறள் கருத்தை ஒத்ததாகக் காணப்படுகிறது. இவ்வாறு தீமை செய்தவனுகும் நன்மையே செய்ய வேண்டும் என்ற உயரிய மனிதநேயச் சிந்தனை காந்தியடிகள் மனதில் அழ பதிந்துள்ளது.

கற்றலும் அதன்வழி நிற்றலும்

          காந்தியடிகள் தனது நண்பர்போலக்என்பவர் நூலொன்றைப் பரிசாக அளித்தார். அந்நூல் ஜான் ரஸ்கின் எழுதிய கடையனுக்கும் கடைத்தேற்றம் (Unto this last) என்பதாகும். தனது கருத்தை ஒத்ததாக இந்நூலின் கருத்தும் அமைந்திருந்தது. ஆகவே அதன் பால் அதிக ஈடுபாடு காண்பித்துப் படித்தறிந்தார். அந்நூலின் சாரமாக,

·        எல்லோரின் நலனில்தான் தனிப்பட்டவரின் நலனும் அடங்கியுள்ளது.

·        உழைப்பின் மூலம் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளும் உரிமை எல்லோருக்கும் உண்டு. ஆகவே ஒரு நாவிதனின் வேலைக்கும் வழக்கரைஞன் வேலைக்கும் சம மதிப்புதான் கொடுக்க வேண்டுமென்று கருதினார்.

·        பாட்டாளி வர்க்கமாகிய உழவர்களின் வாழ்க்கையும், கைத்தொழில் செய்பவர்களின் வாழ்க்கையும் சிறந்த தகுதியான வாழ்க்கையே என்று துணிந்தார்.

இதன்மூலம் அடிமைத்தனமற்ற முறையில் அனைவரும் சமமாக மதிக்கப்பட வேண்டுமென்ற மனிதநேயச் சிந்தனையை அறிந்து கொண்டதோடு அதனை விதைக்கவும் செய்தார்.

இளமையில் மனிதநேயம்

          சமத்துவத்தைப் போற்றிய காந்தியடிகள் அதனைத் தன் இளவயதிலேயே பின்பற்றியுள்ளார். சிறுவனாகக் காந்தியடிகள் இருக்கும் போதுதோட்டிதொழில் செய்தோரின் மகன்உகாஎன்ற சிறுவனோடு நெருங்கிப் பழகினார். இதனைக் கண்ட காந்தியின் தாய் உகாவோடு பழகுவதைத் தடுத்தார். காந்தியடிகள் காரணம் கேட்ட போது உகா தீண்டாத்தகாதவன். சூத்திரன், அருவருப்புக்கு உரியவன் என்று புத்திலிபாய் காரணம் கூறினார். இதனை ஏற்காத காந்தியடிகள் நாம் இந்து என்றால் உகாவும் இந்து தானே என்று வாதம் புரிந்தார். தன் தாயின் பேச்சைக் கேட்காமல் உகாவோடு நெருங்கிப் பழகினார். தனது சமத்துவம் மிக்க மனிதநேயச் செயலை இளம் வயதிலேயே காந்தியடிகள் பின்பற்றினார். ஒடுக்கப்பட்டவர்களின் நலனில் பிற்காலத்தில் பெருவிருப்பம் கொண்டிருந்தார். ஒடுக்கப்பட்டோர் உரிமை பெறப் பல வழிகளைக் கூறினார்.

·        ஹரிஜனக் குழந்தைகளுக்குக் கல்வி கிடைக்க வேண்டும்.

·        அவர்கள் வாழ்வதற்கு நல்ல வீடு வேண்டும்.

·        குளிக்கவும் குடிக்கவும் நல்ல தண்ணீர் வசதி செய்து தர வேண்டும்.

·        முழுமையான அரசியல் உரிமை வேண்டும.

·        கடவுளை வழிபடுவதற்குச் சமமான உரிமை வேண்டும்.

இவ்வடிப்படை வசதிகளைப் பெற வேண்டுமென்று காந்தியடிகள் போராடினார்.

பெண்ணுரிமை

          இந்து சமயத்தில் பால்ய விவாகம் என்னும் இளவயது திருமணங்கள் ஒரு சில சாதியில் பின்பற்றபட்டன. இதனால் பாதிக்கப்படுவது பெண்ணினமேயாகும். பெண் திருமணத்திற்குப் பின் இறந்தால் ஆண் பிறிதொரு திருமணம் செய்து கொள்ள அனுமதிக்கப்பட்டான். ஆனால் ஆண் இறந்தால் அப்பெண்ணும் உடன்கட்டை (சதி) ஏறும் வழக்கத்தைப் பின்பற்றினர். இக்கொடுஞ்செயலைக் காந்தியடிகள் கண்டித்தார். தந்தை தன் மகளைக் கன்னிகாதானம் என்ற பெயரில் கிழவனுக்கும், சிறுவர்களுக்கும் தாரை வார்த்துக் கொடுக்கும் வழக்கத்தினை எதிர்த்தார். பெண்ணைத் தானம் செய்யும் உரிமை தந்தைக்கு எங்கிருந்து வந்தது என்றும் வினா எழுப்புகிறார். பெண் ஆணுக்குச் சமமானவள். ஆணின் தோழி, ஆணுக்கு இருக்கும் சுதந்திரமும், உரிமையும் பெண்ணுக்கும் வேண்டும் என்று காந்தியடிகள் வலியுறுத்துயுள்ளார். மனைவியை இழந்த கணவன் திருமணம் செய்து கொள்வது போலக் கணவனை இழந்த மனைவியும் திருமணம் செய்து கொள்ளலாம் என்று வலியுறுத்தினார்.

சத்தியாகிரகி

      காந்தியத்தைப் பின்பற்றக் கூடியவன் சத்தியாகிரகி என்று அழைக்கப்படுவான். அவன் ஒவ்வொரு நிலைகளிலும் ஒழுக்கத்தோடும் பண்பாட்டோடும் நடந்து கொள்ள வேண்டும். இதற்கான கொள்கைகளைக் காந்தியடிகள் வகுத்தளித்துள்ளார். அவை,

·        மரண பயமின்மை – சத்தியாகிரகி மரணபயம் அற்றவனாக இருக்க வேண்டும்.

·        பற்றற்றவன் – உடமை, வீண் கௌரவம், உறவினர் முதலியற்றின் மீது பற்றுதலைத் துறக்க வேண்டும்.

·        பிரம்மச்சரியம் – மனதைச் சிதற விடுபவன் ஆண்மையை இழக்கிறான். ஆகவே கற்பு சத்தியாகிரகிக்கு இன்றியமையாதது.

·        பொருளாசையின்மை – பணம், பொருள் ஆகியவற்றின் மீது பற்றற்றவனாக இருக்க வேண்டும்.

·        கடவுள் நம்பிக்கை – சத்தியாகிரகிகளுக்குக் கடவுள்தான் புகழிடம். ஆகவே அவன் கடவுள் நம்பிக்கை உடையவனாக இருக்க வேண்டும்.

·        தியாக உணர்வு – தன்னலாம் கருதாது பிறருக்காகத் தொண்டு செய்யும் தியாக உணர்வு வேண்டும்.

·        கோபங் கொள்ளாமை – சத்தியாகிரகம் என்பது தீயவற்றுக்கு எதிரான போர். ஆகவே எதிராளி கோப மூட்டினாலும் அதனைப் பொறுத்துக் கொள்ள வேண்டும்.

·        சுய தூய்மை – மனிதனுக்குச் சிறந்த பாதுகாப்பு சுய தூய்மையே – ஆகவே தூய்மையுடையவனாக இருக்க வேண்டும்.

·        அஞ்சாமை – சத்தியாகிரகி கைதுக்கும் சொத்தைப் பறிமுதல் செய்வதற்கும் அஞ்சக் கூடாது. பொதுச் சொத்தைப் பாதுகாக்கத் தன் உயிரையும் கொடுக்கத் துணிய வேண்டும்.

·        பழிவாங்கக் கூடாது – பதிலுக்குப் பதில் செய்யக் கூடாது. பிறரை வார்த்தைகளால் கூடத் துன்புறுத்தக் கூடாது.

·        வகுப்புவாத வேறுபாடின்மை – வகுப்பு வாதத்தில் ஈடுபடக் கூடாது. அனைவரையும் சமமாக மதிக்க வேண்டும்.

 இவ்வாறு காந்தியடிகள் சத்தியாகிரகிகளுக்குத் தேவையான நெறிமுறைகளை வகுத்தளித்துள்ளார். பத்தொன்பது இருபதாம் நூற்றாண்டுகளில் இவ்வாறு ஒரு மனிதன் நகமும் சதையுமாக வாழ்ந்தான் என்பது வியப்பிற்குரிய செய்தியாகும். அத்தகு அகிம்சையை உலகிற்கு அறிமுகப்படுத்திய பெருமைக்குரிய மகாத்மாவாகக் காந்தியடிகள் திகழ்ந்தார். இப்பெருமகன் 1948 ஆம் ஆண்டு ஜனவரி முப்பதாம் நாள் இயற்கை எய்தினார்.

பார்வை நூல்

1.  முனைவர் ஆ.ஜெகதீசன்இலக்கியத்தில் மனித உரிமைக் கோட்பாடுகள், அமர்நாத் பதிப்பகம், தஞ்சாவூர் மாவட்டம் -613 204,  முதற்பதிப்புசெப்டம்பர், 2008.

 

Comments

Popular posts from this blog

எண்ணம் போல் வாழ்வு

                                                                        எண்ணம் போல் வாழ்வு             நினைவுகளே பழக்கவழக்கங்களாக மாறுகின்றன. எனவே தான் எண்ணம் போல் வாழ்வு அனைவருக்கும் அமைகிறது. வெற்றி பெற்ற அனைவரும் பிறரைத் தன் நடத்தையால் மகிழ்விக்க நினைத்தவர்களே என்பதை நாம் நினைவில் நிறுத்த வேண்டும். ·         வங்கியில் பணத்தைச் சேமிப்பதைவிட இதயத்தில் இனிய எண்ணங்களைச் சேமிப்பது மகிழ்ச்சியான வாழ்விற்கு உதவும் வைப்பு நிதியாகும். ·      மனம் - மகிழ்ச்சி அளிக்காத நிகழ்வுகளை மறந்து விடும் இயல்புடையது. ·         வெறுப்பு - மனத்தையும், உணர்வையும் பற்றிக் கொண்டுள்ள தொற்று நோய். எனவே வெறுப்பிற்கு விடுதலை தரும்வரை மகிழ்ச்சி நம்மை அணுகாது. ·   ...

மனிதனாக வாழ ...

  மனிதனாக வாழ ... ·         பிறர் உன்னை தூற்றும் பொழுது தலை நிமிர்ந்து நில். ·         பொறாமை, கோபம், வீண் மயக்கம் போன்ற குணங்களை விரோதிகளாக எண்ணுதல். ·         வெற்றி -   தோல்வி,   இன்பம் – துன்பம் இரண்டையும் சமமாக பாவித்தல். ·         உண்மைக்குப் புறம்பானவற்றைச் செய்யாதிருத்தல். ·         நண்பர்கள் இல்லையென்றாலும் பரவாயில்லை. பகைவர்கள் இல்லாமல் வாழ முயற்சி செய்தல். ·         மனத்திடத்தோடு வாழ்தல். ·         ஏற்றத் தாழ்வு இல்லா மனநிலையுடன் இருத்தல். ·         மனிதனுக்கு உரியது - கலங்காத அறிவு, அன்பு நிறைந்த மனம், ஆரோக்கியமான   உடல். ·         எதற்கும் அஞ்சாதே -   பயம் நம்மை கோழையாக்கி விடும்.      யாரையும் வெறுக்காதே ...

பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்

திருக்குறளில் எனது சிறு முயற்சியாக… .  " பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்"  என்ற இத்தலைப்பில் அமைந்த 133 வரிகள் கொண்ட இப்படைப்பு முருகனின் ” கந்த சஷ்டி  கவசம் ” போன்று உருவாக்கப்பட்டது. இப்பகுதி அறத்துப்பால் 38  அதிகாரங்கள், பொருட்பால் 70  அதிகாரங்களிலிருந்து மட்டும் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்ற முறையில், திருக்குறளின் சாராக அமைத்து வழங்கியுள்ளேன். அறமும், பொருளும் ஒருவருக்கு அமைந்தால் இன்பம் தானாகக் கிட்டும் என்ற நோக்கத்தில் அமைக்கப்பட்டது. ”பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்” காக்க காக்க அறத்தைக் காக்க (1) காக்க காக்கக் குறளைக் காக்க உலக மொழிகளில் ஒப்பற்ற நூலாம், நோக்க நோக்க பெயா்த்து நோக்க மனிதன் கற்று மனிதம் காக்க ஐம்பொறி உணா்வை காக்க காக்க புகழுடன் வாழ ஒழுக்கம் காக்க அறநெறி வாழ்வை இறைவழி காக்க வானம் பொய்யா வளத்தைக் காக்க பசிப்பிணி யில்லா உலகைக் காக்க பற்றற்ற வாழ்வை பரிவுடன் காக்க அறத்தைக் காக்க அன்பைக் காக்க (2) குறையிலா வாழ்வை குணமுடன் காக்க இல்லற வாழ்வுடன் நல்லறம் காக்க பண்பொடு பயனும் அறத்துடன் காக்க வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க வாழ்க...