உமையொருபாகன்
முனிவர்களில் சிறந்த பிருங்கி என்பவர் வண்டு உருவங் கொண்டு உமாதேவியாரை நீக்கிவிட்டு,
சிவபெருமானை மட்டும் வலம் வந்து வணங்கினார். தாம் சிவபெருமானின் வேறாகத் தனி உருவம்
கொண்டு இருந்ததால் தானே இவ்வாறு நிகழ்ந்தது என்று எண்ணி, தாம் இறைவனோடு பிரிவறக்கலந்து
ஒன்றிநிற்கும் தவத்தை ஏற்று உமையம்மையைத் தம்மிற் பிரிவறத் தம்முடைய இடபாகத்தில் பாதியளவு
இடம்கொடுத்து என்றும் தம்முடன் ஒன்றியிருக்கும் நிலையில் ஏற்றுக் கொண்டருளினார்.
இவ்வாறு ஒருதிரு மேனியில் வலப்பாதியில் சிவபெருமானும்
இடப்பாதியில் உமையுமாக ஒருவரையொருவர் பிரிக்க இயலாமல் விளங்கும் நிலையே அர்த்த நாரீசுவர
மூர்த்தியாகும். இம்மூர்த்தத்தையே ‘மாதொரு பாகர்’ என்றும் கூறுவார்கள்.
இதனை,
”உமையவனொரு திறனாக வோங்கிய இமையவன்” (சிலம்பு 42-43)
”பெண்ணுரு வொருதிற னாகின் றவ்வுருந்
தன்னுள் அடக்கிக் கரக்கினும் கரக்கும்” (புறம், 17,8)
பாரதம் பாடிய பெருந்தேவனார்,
”நீலமேனி வாலிழை பாகத்து ஒருவன்”
(ஐங்குறுநூறு,
கடவுள் வாழ்த்து)
திருமூலர்,
”மாதுநல் லாளும் மணாளன் இருந்திடப்
பாதிநல் லாளும் பகவனு மானது
சோதிநல் லாளைத் துணைப்பெய்ய வல்லிரேல்
வேதனை தீர்த்தரும் வெள்ளடை யாமே” (திருமந்திரம்,1157)
மேற்கூறிய வற்றிலிருந்து சிவபெருமான் அர்த்த
நாரீசுவரமூர்த்தியாக இருப்பதற்கு இலக்கியங்களில் சான்றுகள் உண்டென்று அறிய முடிகின்றது.
பார்வை நூல்
1.
சங்க கால இறைநெறியும்
வாழ்வியல் நெறியும் – புலவர் சக்தி தரும நடராசன், சரஸ்வதி பதிப்பகம், வேலூர் முதன்மைச்சாலை, ஆர்க்காடு – 632 503, முதற் பதிப்பு, 2017.
Comments
Post a Comment